Social Icons

Thursday 22 November 2012

மலஜலம் கழிக்காத பெரியார்.

தொழுகையின் சிறப்புக்களை கூறும் சாக்கில் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்தும் மற்றொரு கதையை கேளுங்கள். 

சூபியாக்களில் பிரபலமான ஷைகு அப்துல் வாஹித் (ரஹ்) என்பவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் இரவு எனக்கு தூக்கம் மிகைத்து நான் வழமையாக ஓதக்கூடிய திக்ருகளையும் ஓதாமல் தூங்கி விட்டேன். அப்போது கனவில் மிக அழகிய மங்கை ஒருத்தியைக் கண்டேன். அவள் பச்சை பட்டாடை அணிந்திருந்தாள். அவளுடைய காலணிகள் கூட தஸ்பீஹ் செய்வதில் ஈடுபட்டிருந்தன.


அவள் என்னை நோக்கி நீர் என்னை அடைய முயற்சிப்பீராக! நான் உம்மை அடைய முயற்சிக்கிறேன்.என்று கூறி சில காதல் கீதங்களை பாடினாள்.


இக்கனவை கண்டு விழித்த நான் இனிமேல் இரவில் தூங்குவது இல்லை என்று சத்தியம் செய்து கொண்டேன். அவ்வாறே நாற்பது ஆண்டுகள்வரை இஷாவுக்குச் செய்த உளுவுடன் சுப்ஹுத் தொழுது வந்தேன் என்று கூறுகிறார்கள்.


இந்தக் தொழுகையின் சிறப்பு எனும் பகுதியில் 118ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. கண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணித்து விட்டு அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதலை அலட்சியம் செய்து விட்டு அதிகப் பிரசிங்கித்தனமாக நடப்பவர் எப்படிப் பெரியாராக இருக்க முடியும்!


இஷாவுக்குச் செய்த உலூவைக் கொண்டு நாற்பது ஆண்டுகள் 14,400 இரவுகள் எப்படி சுபுஹ் தொழமுடியும்? இந்தப் பதினான்கு ஆயிரத்து நானூறு நாட்கள் அவர் உறங்கியேதில்லை என்பதை நம்ப முடியவில்லை. இத்தனை இரவுகளும் அவர் மலஜலம் கழிக்கவில்லை: காற்றுப் பிரியவில்லை: மனைவியுடன் சம்போகம் செய்யவில்லை என்பது அதைவிட நம்ப முடியாததாக உள்ளது.



நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அவர் அறியாத நிலையில் அவர் வரம்பு மீறியதையாவது நம்பலாம். தன்னைப் பற்றிப் பெருமையாக அவரே கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?



சாத்தியமற்ற இது போன்ற சாதனைகளையும் பெரியார்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதைத் தவிர இந்தக் கதையில் ஒரு முஸ்லிமுக்கு எந்தப் படிப்பினையும் காணோம். இதே போன்ற மற்றொரு கதையைப் பாருங்கள்!



அபூபக்கர் ளரீர் (ரஹ்) என்ற பெரியார் கூறுகிறார்கள்:- என்னிடம் வாலிபரான ஓர் அடிமை இருந்தார் அவர் பகல் முழுவதும் நோன்பு வைத்திருப்பார். இரவு முழுவதும் தஹஜ்ஜுத் தொழுகையில் ஈடுபட்டிருப்பார். ஒரு நாள் அவர் என்னிடம் வந்து நான் இன்றிரவு எதிர்பாராத விதமாக தூங்கிவிட்டேன். அப்போது கனவு ஒன்று கண்டேன். அதில் நான் தொழுமிடத்திலுள்ள மிஹராப் சுவர் உடைந்து அதன் வழியாக சில பெண்கள் வந்தனர். அவர்கள் மிக அழகிய தோற்றமுடியவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருத்தி மட்டும் அருவருப்பான தோற்றமுடையவளாக இருந்தாள். நான் அப்பெண்களிடம் நீங்களெல்லாம் யார்? இந்த அருவருப்பான பெண் யார்? என்று கேட்டதற்கு நாங்களெல்லாம் உம்முடைய சென்று போன இரவுகள் இப்பெண் உமது இன்றைய இரவுஎன்று இப்பெண்கள் பதில் அளித்தார்கள்.


இந்தக் கதை 119ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது ஒரு முஸ்லிம், இரவில் தூங்கக் கூடாது என்றும் பகலெல்லாம் நோன்பு வைத்திருக்க வேண்டும் என்றும் இந்தக்கதை மூலம் ஸகரியா சாஹிப் சொல்ல வருகிறாரா? தூங்கிய இரவுகள் பாழாய்ப்போன இரவுகள் என்கிறாரா?


குடும்பத்துக்கும், ஊருக்கும், உலகுக்கும் தனக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு இரவில் உறங்க வேண்டிய அளவுக்கு உறங்கிவிட்டு பின்னிரவில் எழுந்து வணங்கிய நபித் தோழர்கள் எல்லாம் தங்கள் இரவுகளைப் பாழடித்து விட்டதாக ஸகரிய்யா சாஹிப் கூற வருகிறாரா?



இந்தப் பெரியார்களின் வழியில் ஸகரியா சாஹிப் கூட நடந்ததில்லை. அவர் உறங்கியுள்ளார். பகல் காலங்களில் சுவைமிக்க உணவுகளை உண்டு களித்துள்ளார். அவரும் கூட தனது இராப் பொழுதுகளைப் பாழடித்தவர்தானா?


முஸ்லிம்களைப் பண்டார சன்னிதிகளாகவும், துறவிகளாகவும் ஆக்கி அவர்களை முடக்குவதற்காகவே இப்படிபட்ட கதைகளை பொறுக்கி எடுத்து எழுதியுள்ளாரோ என்று என்னத் தோன்றுகிறது அல்லவா?


இரவெல்லாம் தூங்காத பகலெல்லாம் நோன்பு வைத்த கதைகள் ஏராளமாக அந்த நூலில் மலிந்துள்ளன. ஸகரியா சாஹிபுக்குத் தோன்றிய பெயர்களையெல்லாம் பயன்படுத்தி இவ்வாறு கதையளந்துள்ளனர். இதுவரை நாம் செய்த விமர்சனமே இந்த வகையான அனைத்து கதைகளுக்கும் பொருந்தும் என்பதால் வேறு வகையான கதைகளைப் பார்ப்போம்.


No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்