Social Icons

Thursday 29 November 2012

ஒரு ஹதீஸ் ளயீஃபானது தான் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றதா?

ஒரு ஹதீஸ் ளயீஃபானது தான் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை இருக்கின்றதா? மேலும் ளயீஃபான ஹதீஸின் அடிப்படையில் ஒருவர் அமல் செய்தால் அவை இறைவனால் நிராகரிக்கப்படுமா?
ஒரு ஹதீஸ் பலவீனமானது என்பதை அதன் அறிவிப்பாளர் தொடர் மற்றும் அவர்களின் தரத்தை வைத்தே முடிவு செய்கிறோம். எனவே ஓர் அறிவிப்பாளர் பலவீனமானவர் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமை உள்ளதா? என்று கேட்பதே சரியானதாகும்.
அறிவிப்பாளர்களைப் பொறுத்த வரை பொய்யர் என்று எல்லா அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் சிலரைப் பற்றி கூறியிருப்பார்கள். அல்லது பலீவனமானவர் என்று கூறியிருப்பார்கள்.
ஆனால் அதே சமயம் எல்லா அறிவிப்பாளர்களைப் பற்றியும் எல்லா அறிஞர்களிடமும் ஒருமித்த கருத்து இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அறிவிப்பாளரின் தரம் என்பது, அவரது வாழ்க்கை வரலாற்றை ஆராய்ந்து முடிவெடுக்கப்படுகின்றது. இவ்வாறு ஆராயும் போது ஒரு அறிவிப்பாளரைப் பற்றி ஒரு ஹதீஸ் கலை அறிஞருக்குத் தெரிந்த செய்தி மற்றவருக்குத் தெரியாமல் போகலாம். அல்லது அவரை விட இவருக்குக் கூடுதலாகத் தெரிந்திருக்கலாம். இது போன்ற காரணங்களால் ஒரு அறிவிப்பாளரைப் பற்றி இமாம்களிடத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு குறைவு.
பல ஹதீஸ் கலை அறிஞர்கள் ஓர் அறிவிப்பாளரை நல்லவர் என்று கூறியிருப்பார்கள். ஒரே ஒருவர் மட்டும் அந்த அறிவிப்பாளரைப் பலவீனமானவர் என்று கூறி அதற்குத் தக்க சான்றையும் கூறுகின்றார் என்றால் இந்த ஒருவரின் விமர்சனத்தையே நாம் ஏற்க வேண்டும். ஏனெனில் ஒருவரை நல்லவர் என்று கூறுபவர்களுக்கு அவரது குறையைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்கலாம். அவரைக் குறை கூறுபவர் தக்க சான்றின் அடிப்படையில் கூறும் போது அந்த விமர்சனத்தின் அடிப்படையில் அவரைப் பலவீனமானவர் என்றே முடிவு செய்ய வேண்டும். இது பெரும்பான்மை அடிப்படையிலோ, அல்லது ஒருமித்த கருத்தின் அடிப்படையிலோ முடிவு செய்யப்படும் விஷயமல்ல என்பதே இதற்குக் காரணம்.
பலவீனமான அறிவிப்பு என்று தெரிந்த பின்னரும் அதைப் பின்பற்றி அமல் செய்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? என்று கேட்டுள்ளீர்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? இலலையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய செய்திகள் தான் பலவீனமான ஹதீஸ்களாகும்.
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
(அல்குர்ஆன் 17:36)
உனக்குச் சந்தேகமானதை விட்டு விட்டு சந்தேகமற்றதன் பால் சென்று விடு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் பின் அலீ (ரலி)
நூல்: திர்மிதீ 2442
நபி (ஸல்) அவர்கள் கூறினார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் அதைப் பின்பற்றுவது தடை செய்யப் பட்டுள்ளது என்பதை மேற்கண்ட குர்ஆன் வசனமும்  ஆதாரப் பூர்வமான ஹதீசும் தெளிவாகக் கூறுகின்றன. எனவே பலவீனமான ஹதீஸ்களைப் பின்பற்றி அமல் செய்யக் கூடாது. அது குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமானதாகும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்