Social Icons

Thursday 22 November 2012

திருமணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட, ‘சீர்திருத்தத் திருமணங்கள்’ என்னும் பெயரில், இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் சிலர், இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!


மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து, மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்’ வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவனுக்குச் சமமான மகிமை அளிப்பதும் திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும், அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும், மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும், பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும், ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும், ஆகிய இவை யாவும் அந்நிய கலாச்சார ஊடுருவல்தான் என்பதில் ஐயமில்லை.
சமுதாயம் சீர் பெற, இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும்.
நீங்கள் மணம் (செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்து விடுங்கள்” (அல்குர்ஆன் 4:4)
என்னும் இறைவசனம் “மஹர் கொடையைக் கொடுத்து மணம் முடியுங்கள்” என்று தெளிவாகக் கூறும்போது இதற்கு நேர் முரணாகப் பெண் வீட்டாரிடம் பணம் கேட்கும் இழி செயலாகிய – தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்ட வரதட்சணை என்னும் வன்கொடுமை ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.
இந்தக் கலாச்சாரச் சீர்கேட்டினால் எண்ணற்ற இஸ்லாமிய இளம் பெண்கள் வாழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பல பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் வரதட்சணை கொடுக்க முடியாமல் வருடங்கள் பல கடந்தும் தம் பெண்மக்களை வாழ வைக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.
இறையச்சமுள்ள இஸ்லாமிய இளைஞர்களே! நீங்கள் எங்கே சென்றீர்கள்? வரதட்சணை வாங்கித்தான் மணம் முடிக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் பெற்றோர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லுங்கள். மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவு படுத்துங்கள்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்