Social Icons

Monday 19 November 2012

தண்ணீரின் சட்டங்கள்

"என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: மாலிக்குப்னுல் ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூற்கள்: புகாரி, முஸ்லிம்

நபி صلى الله عليه وسلم அவர்களின் தொழுகை முறையை நாம் தெரிந்து கொள்வதற்குமுன் , ஒளு செய்யும் முறை, எந்தத் தண்ணீரை ஒளு செய்வதற்கு பயன்படுத்தலாம் என்ற விளக்கம், மலஜலம் கழிக்கும் முறை அதிலிருந்து சுத்தம் செய்யும் முறை, ஒளுவை முறித்துவிடக்கூடிய செயல்கள், மாதவிடாய், பிரசவத்தின் பின் ஏற்படும் உதிரப்போக்கு, குளிப்பு போன்ற பல சட்டங்களை நாம் விளங்கக் கடமைப்பட்டுள்ளோம்.

தண்ணீரின் சட்டங்கள்

மழை நீர்

அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காக அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான். (அல்குர்ஆன் 8:11)

நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கின்றோம். (அல்குர்ஆன் 25:48)

மேற்கூறிய இரண்டு வசனங்களும் மழைநீர் தூய்மையானது, அதன் மூலம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்ளலாம் என்று தெளிவு படுத்துகின்றன. ஆறு, குளம், ஏரிகளில் உள்ள தண்ணீர் மழையினால் கிடைத்தது என்பதால் அவையும் தூய்மையானது என்பது தெளிவு.

கடல் நீர்

"கடல் நீரில் நாங்கள் ஒளு செய்யலாமா?" என்று நபித்தோழர்கள் கேட்டபோது "அதன் தண்ணீர் தூய்மையானது (கடல் பிராணிகளில்) தானே செத்தவைகளும் ஹலாலாகும்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜ்ஜா

கடல் நீரில் ஒளு செய்யலாம் என்பதற்கு இது போதிய சான்றாகும்.

கிணற்று நீர்

"நபி صلى الله عليه وسلم அவர்கள் 'ஜம் ஜம்' கிணற்று நீரைக் கொண்டுவரச் செய்து குடித்தார்கள். அதில் ஒளுவும் செய்தார்கள். அறிவிப்பவர்: அலி رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: அஹ்மத்

இந்த நபிவழி மூலம் கிணற்று நீர், ஊற்று நீர் ஆகியவைகளால் ஒளு செய்யலாம்.

உறைபணி, ஆலங்கட்டி

வானிலிருந்து ஐஸ் கட்டிகளாக விழும் ஆலங்கட்டியினாலும், உறைபனிக் கட்டிகளாலும் ஒளு செய்யலாம் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவாகிறது.

இறைவா! என் தவறுகளைத் தண்ணீராலும், ஆலங்கட்டியினாலும், பனிக்கட்டியினாலும் நீ கழுவிடு! என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் பிரார்த்தித்துள்ளார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜ்ஜா

சுத்தமான பொருள்கள் கலந்துவிட்ட தண்ணீர்

நபி صلى الله عليه وسلم அவர்களின் மகளார் ஜைனபு رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்கள் இறப்பெய்தியபோது, எங்களிடம் அவர்கள் வந்து 'மூன்று முரை அல்லது ஐந்துமுறை கழுவுங்கள், அல்லது அதைவிட (தேவைப்பட்டால்) தண்ணீரில் இலந்தை இலைக்கொண்டு கழுவுங்கள். கடைசி முறையில் கற்பூரத்தில் அல்லது கற்பூரத்தில் சிறிதளவு அதில் சேர்த்துக்கொள்ளுங்கள்' எனக்கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஅதிய்யா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: ஜமாஅத்

நிச்சயமாக நபி صلى الله عليه وسلم அவர்களும், மைமுனா رَضِيَ اللَّهُ عَنْهُ அவர்களும் குழைத்த மாவின் சுவடு இருந்த ஒரு பாத்திரத்தில் குளித்தனர். அறிவிப்பவர்: உம்முஹானீ رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், நஸயீ, இப்னுகுஜைமா

ஆகவே தண்ணீரில் சுத்தமான பொருட்கள் கலந்துவிடுவதால் அத்தண்ணீர் சுத்தமானதாகவே இருக்கும்

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்