Social Icons

Monday 19 November 2012

ஹதீதுகளின் பாகுபாடுகள்

இன்று இஸ்லாத்தின் பேரால் முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பல ஹதீதுகள் பலவீனமானவை, இட்டுக் காட்டப்பட்டவை என்ற உண்மையை நாம் பலவீனமானவை, இட்டுக்கட்டபட்டவை என்ற உண்மையை நாம் வெளிப்படுத்தும்போது, நாங்களாக இன்று கற்பனை செய்து அவற்றை பலவீனமானவை, இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுவதாக மக்களுக்கு மத்தியில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது. ஆகவே, அவற்றைப்பற்றிய விவரங்களை மக்களுக்கு விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

"நான் சொல்லாததை நான் சொன்னதாகச் சொல்பவர், தன்னுடைய இடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்" என்ற நபி(ஸல்) அவர்களின் அமுதவாக்கு, பொய்யான ஹதீதுகள் இட்டுக்கட்டப்படும் என்ற முன்னறிவிப்பைத் தருகின்றது. ஆகவே, ஹதீது என்று சொன்னவுடன் அதன் தரத்தைப் பற்றி ஆராய நாம் கடமைப்பட்டுள்ளோம். பொய்யான ஹதீதுகள், மறுமையை மறந்து, இவ்வுலக சுகபோகங்களை விரும்பியவர்களால், இட்டுக்கட்டப்பட்டவை என்பது தெளிவான ஒரு விஷயம்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு சில முனாபிக்கீன்கள் இஸ்லாத்தை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடும், நல்லாட்சி நடத்திய 4 கலீபாக்களுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் பேராசையோடும் பொய்யான ஹதீதுகள் புனையப்பட்டு மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டன. அது உருமாறி, மார்க்கத்தை அற்ப உலக ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியவர்களால், பொய்யான ஹதீதுகள் புதுப்பொலிவைப் பெற்று மக்களிடையே சகஜமாக உலாவர ஆரம்பித்தன.

ஹிஜ்ரி 80 லிருந்து 241 வரை, 4 இமாம்களது கால கட்டத்தில் பொய்யான ஹதீதுகள் நடைமுறையில் இருந்து வந்தாலும், அவற்றின் விபரீதப்போக்கு உச்சத்தை அடையவில்லை. ஆகவே, இந்தக் காலகட்டத்தில் ஹதீதுகளைத் தரம் பிரிக்கும் முயற்சி நடைபெறவில்லை, அதற்கடுத்த காலகட்டத்தில் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் தங்கள் சுய ரூபத்தைக் காட்ட ஆரம்பித்தன. பலர் சுய வேட்கையோடு அவற்றை நெய்வார்த்து வளர்த்து வந்தனர். ஆகவே, ஹதீதுகளைத் தரம்பிரிக்கும் அவசியம் அக்காலக்கட்டத்தில் ஏற்பட்டது. இந்தக் கலைக்கு வித்திட்டவர் இமாம்களுள் ஒருவரான ஹிஜ்ரி 241 ல் மரணமடைந்த இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் என்று சொல்லலாம். அவரது மாணவரான இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் அது விஷயத்தில் முழுக் கவனம் செலுத்தி, அவர்கள் திரட்டிய பல இலட்சக்கணக்கான ஹதீதுகளை இரவு பகலென்று பாராமல் அலசி ஆராய்ந்து 7275 ஹதீஸ்களை மட்டுமே பதிவு செய்தனர். அதே போல் இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும், தாங்கள் திரட்டிய லட்சக்கணக்கான ஹதீஸ்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து, உண்மையான ஹதீஸ்கள் என்று கண்ட சில ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் மட்டும் பதிவு செய்தனர்.

இதற்குப் பின் தோன்றிய சில ஹதீஸ்களை வல்லுனர்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களையும் பதிவு செய்து, அந்த ஹதீஸ்கள் விஷயமாக, ராவிகள் விஷயமாக, இஸ்நாது விஷயமாகத் தங்களுக்குக் கிடைத்த விவரஙகளையும் தங்களது நூல்களிலேயே பதிவு செய்து வைத்தனர். அதன் பின் தோன்றிய சில ஹதீஸ்கலை வல்லுனர்கள் தங்களுக்குக் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் அறிவிப்போடு பதிவு செய்தனரே அல்லாமல், அவர்களின் குறை நிறைகளைப் பற்றிக் குறிப்பிடவில்லை. அவ்வாறு அவர்கள் குறிப்பிடாததற்கு "அஸ்மாவுர் - ரிஜால்" கலை வளர்ந்து ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களின் வரிசையில் வரக்கூடிய நபர்கள் அனைவரது சரித்திரங்களும் பெரும்பாலும் திரட்டப்பட்டு சேகரிக்கப்பட்டிருந்தன.

ஒரு ஹதீஸைப்பற்றிய ஐயம் ஏற்பட்டால், உடனடியாக அறிவிப்பாளர்களின் வரிசையையும், அவர்களின் குணாதிசயங்களையும் ஆராய்ந்து அந்த ஹதீஸின் தரத்தை நிர்ணயிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

மர்ஃபூஃ, முஸ்னது, முத்தஸில் போன்ற பிரிவு வாரியான அடிப்படையில் ஸஹீஹான ஹதீதுகளையும், முதல்லஸ், முர்ஸல், முன்கத்தஃ, மவ்கூஃப் போன்ற பிரிவுகளின் அடிப்படையில் லயீஃபான ஹதீதுகளையும், முன்கர் போன்ற அடிப்படையில் மவ்லூவான ஹதீதுகளையும் தரம்பிரித்து பாகுபடுத்தி நிர்ணயம் செய்து காட்டப்படுகின்றன.

ஆக, ஐந்தாம் நூற்றாண்டிலேயே, குர்ஆன் - ஹதீஸ்களுக்கு முரண்பட்ட தக்லீத், தஸவ்வுஃப் தத்துவங்கள் இஸ்லாத்தின் பேரால் நுழைக்கப்படுவதற்கு முன்பே, ஹதீஸ்கலை வல்லுனர்களாலும், 'அஸ்மாவுர் ரிஜால்' கலை வல்லுனர்களாலும் ஹதீஸ்கள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு தெள்ளத் தெளிவாக மேற்கூறியபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

மரியாதைக்குரிய 4 இமாம்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அவாகளின் வழிகாட்டுதலுக்கு விரோதமாக சில சுய நலமிகளால் மத்ஹபுகள், தரீகாக்கள் தோற்றுவிக்கப்படுவதற்கு முன் வாழ்ந்த இஸ்லாமியப் பெரியோர்களால், தெளிவாக ஆராயப்பட்டு, அவர்களது கிதாபுகளில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையில்தான் நாங்கள் ஸஹீஹ், லயீஃப், மவ்லூஃ என்று சொல்லுகிறோமெயல்லாமல், எங்கள் இஷ்டத்திற்கு நாங்களாக கூட்டி குறைத்து எதையும் சொல்லவில்லை என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக ஆராயப்பட்டு, வடித்தெடுக்கப்பட்டு லயீஃப் என்றும் மவ்லூஃ என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி பிரித்திறிவிக்கப்பட்டு அன்றைய கிதாபுகளில் பதிவு செய்யப்பட்டிருந்தும், மீண்டும் எப்படி இந்த லயீஃபான, மவ்லூஃஆன ஹதீஸ்கள் இஸ்லாமிய சமுதாயத்தில் நுழைந்து ஆழவேருன்றிக் கொண்டன?

அதற்கு முன்னால் "பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஏன் செயல்படக்கூடாது?" என்று பலர் ஐயங்களைப் கிளப்புவதால் அது பற்றிய காரணத்தை முதலில் பார்ப்போம்.

அறிவிப்பாளர்களில் எவரேனும் நன்னடத்தை அற்றவராகவோ, நினைவாற்றல் குறைந்தவராகவோ இரண்டு அறிவிப்பாளர்களுக்கிடையில் சந்திப்பு இல்லாமலிருந்தாலோ அத்தகைய ஹதீஸ்களை பலவீனமான ஹதீஸ்கள் என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் நிர்ணயித்துள்ளனர்.

அதாவது அந்த ஹதீஸில் குறிப்பிட்ட விஷயத்தை நபி(ஸல்) சொன்னதாக திட்டவட்டமாகத் தெரியும் போது அவசியம் அதற்குக் கட்டுப்பட வேண்டும்" என்பதில் எவருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்கள் சொல்லி இருப்பார்களா? என்ற சந்தேகம் தோன்றும்போது என்ன செய்வது? நாம் எப்படி நடந்து கொள்வது? அதற்கு திருக்குர்ஆன் நமக்குத் தெளிவான விளக்கத்தைத் தருகின்றது.

"உமக்குத் திட்டவட்டமான அறிவு இல்லாத விஷயங்களை நீர் பின்பற்றக் கூடாது." (அல்குர்ஆன் 17:36)

திட்டவட்டமாக நமக்கு ஒன்றைப் பற்றித் தெரியாதபோது அதனைப் பின்பற்றுவது கூடாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அல்லாஹ் கூறிவிடுகிறான். அவ்வாறு பின்பற்றுவதை தடை செய்கிறான். பலவீனமான ஹதீஸ்களைப் பொருத்தவரை திட்டவட்டமாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சொல்ல முடியாத நிலை, அதனால் பலவீனமான ஹதீஸ்கள் அடிப்படையில் செயல்படுவது கூடாது என்று தெரிகின்றோம்.

நபி(ஸல்) அவர்களும் இதுபற்றிக் குறிப்பிடும்போது "உனக்கு சந்தேகம் தருபவற்றை நீ விட்டுவிடு! சந்தேகமற்ற (உறுதியான) விஷயங்களின் பால் நீ சென்றுவிடு!" என்று கூறியுள்ளார்கள். இதனை இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது புகாரி நூலில் "வியாபாரங்கள்" என்ற பாடத்திலும் இமாம் திர்மிதி(ரஹ்) அவர்கள் "கியாமத்" என்ற பாடத்திலும், இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் (ரஹ்) தனது முஸ்னத்திலும் அறிவிக்கின்றனர்.

இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸும், சந்தேகத்திற்குரியவைகளைப் பின்பற்றுவதை தடைசெய்து விடுகின்றது. இந்தக் கருத்தைச் சொல்லக் கூடிய இன்னும் பல ஹதீஸ்களும் வந்துள்ளன.

எனவே எந்த ஒரு ஸஹீஹான ஹதீஸின் கருத்துடன் மோதாவிட்டாலும் அதில் சந்தேகம் இருக்கின்ற ஒரு காரணத்தினாலேயே அதனைப் பின்பற்றக்கூடாது என்பது தெளிவு.

அவ்வாறிருக்க பலவீனமான சில ஹதீஸ்களை திர்மிதி போன்ற இமாம்கள் ஏன் தங்கள் நூல்களில் பதிவு செய்துள்ளனர்? என்ற ஒரு கேள்வியும் சிலரால் கிளப்பப்படுகிறது. அன்றைய காலத்தில் "பலவீனமான ஹதீஸ்கள்" ஆதாரப்பூர்வமானவை என்ற முத்திரையுடன் உலாவந்தன. அதனை அடையாளம் காட்டி அதன் உண்மை நிலையை உணாத்திடவே அந்த இமாம்கள் தங்கள் நூல்களில் பதிவு செய்து அடையாளம் காட்டுகின்றனர்.

உதாரணமாக "நஜாத்" தனது இதழ்களில் கதைகளின் பின்னணியில் என்று எழுதுகின்றது. அந்தக் கதைகள் ஏதோ ஆதாரமற்றவைபோல் மக்கள் மத்தியில் சித்தரிக்கப்படுகின்றன. அது சரியானாதல்ல என்று அடையாளம் காட்டுவதற்காக அந்தக் கதைகளை எழுதி நாம் விமர்ச்சிக்கவில்லையா? அது போல்தான் சில ஹதீஸ்களை இமாம்கள் பலவீனமானது என்று அடையாளம் காட்டுவதற்காக குறிப்பிடுகின்றனர்.

முன்கரான ஹதீதுகள்:-

அடுத்து முன்கரான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது குறித்து ஆராய்வோம்.

குர்ஆன் வசனங்களுக்கோ, உண்மையான ஹதீதுகளுக்கோ முரண்படுகின்ற ஹதீதுகள் "முன்கரான" - இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகள் என்று கணிக்கப்படுகின்றன. இந்த முன்கரான, மவ்லூஃஆன ஹதீதுகளை வைத்துச் செயல்படும் போது, குர்ஆன் வசனங்களையோ, உண்மை ஹதீதுகளையோ புறக்கணிக்கும் நிலை ஏற்படுகின்றது. இது அறிவுடையோர் செய்யும் செயல் அன்று.

உதாரணமாக, "ரமழான் இரவில் நபி(ஸல்) அவர்கள் 11 ரகஅத்துகளுக்கு மேல் தொழுததே இல்லை" என்ற, ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு உண்மை ஹதீது, 'ஸிஹாஹ்ஸித்தா' முதல் 15 ஹதீது கிதாபுகளில் "ரமழான் இரவுத் தொழுக" பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜாபிர்(ரழி) அவர்களால் அறிவிக்கப்படும் இன்னொரு ஹதீது, நபி(ஸல்) ரமழான் இரவில் 11 ரக அத்துகள் தொழ வைத்தார்கள்", என்று ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்த ஹதீதை ஊர்ஜிதம் செய்கின்றது. மேலும் உபை இப்னு கஃபு(ரழி) ரமழான் இரவில் பெண்களுக்கு 11 ரகஅத்துகள் தொழ வைத்து விட்டு, நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அந்த சம்பவத்தை எடுத்துச் சொன்ன போது நபி(ஸல்) அவர்கள் அதை மெளனமாக அங்கீகரித்த இன்னொரு ஹதீது, ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத் அறிவிப்புக்கு இன்னும் அதிக வலுவைத் தருகின்றது. ஆக இந்த மூன்று உண்மை ஹதீதுகளும், நபி(ஸல்) அவர்களின் ரமலான் இரவுத் தொழுகை 11 ரக்அத்துகள் மட்டுமே என்பதைத் தெளிவாகச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

இந்த நிலையில் பைஹகி, தப்ரானி போன்ற நூல்களில் காணப்படும், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படும் ஒரு ஹதீதில் நபி(ஸல்) ரமழான் இரவில் 23 ரகஅத்துகள் தொழுததாகக் காணப்படுகின்றது. ஆக முன்னால் நாம் பார்த்த மூன்று ஹதீதுகளுக்கும் முரணாக இந்த ஹதீது காணப்படுகின்றது. அதனால் இந்த ஹதீதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம். அப்படி ஆராயும்போது 'அஸ்மாவுர் ரிஜால்' கலை வல்லுனர்கள், இந்த ஹதீதை அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வரிசையில் வரும், அபூஷைபா இப்றாஹிம் இப்னு உதுமான், **ஹனம் இப்னு உதைபா கூபி** ஆகிய இருவரும் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர். பொய்யர்கள் என்று அறிவித்திருப்பது தெரிய வருகின்றது. அதனால் ஹதீதுக் கலை வல்லுனர்கள் இந்த ஹதீதை "முன்கரான ஹதீது' என்று அறிவிக்கின்றனர்.

ஆக சுமார் 10 நூற்றாண்டுகளுக்கு முன்பே, ஆயிஷா(ரழி) அவர்களின் 11 ரகஅத் ஹதீதுக்கு எதிராக இந்த 23 ரகஅத் என்ற ஹதீது இருப்பதால், இந்த 23 ரகஅத் ஹதீதை ஹதீதுக் கலை வல்லுனர்கள் தங்களது ஆதாரப்பூர்வமானன நூல்களில் நிராகரித்துள்ளனர்.

முரண்பட்ட கருத்துக்கள்:-

அடுத்து உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி) தமீமுந்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், மக்களுக்கு 11 ரகஅத்துகள் தொழ வைக்கக் கட்டளையிட்ட, ஸாயிப் இப்னு யஸீதால்(ரழி) அறிவிக்கப்படும் ஒரு சம்பவம் முஅத்தா இமாம் மாலிக்கில் காணப்படுகின்றது. அதற்கு அடுத்து அதே முஅத்தா இமாம் மாலிக்கில், "உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரகஅத்துகள் தொழுது வந்தார்கள்" என்ற சம்பவம் யஸீதுப்னு ரூமானால் அறிவிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர்(ரழி) அவர்கள் 23 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டதாகவும், தொழுததாகவும் ஒரு சில கிதாபுகளில் பதிவாகி உள்ளன. ஆக உமர்(ரழி) அவர்களைத் தொட்டும் முரண்பட்ட இரு கருத்துக்கள் (11 ரகஅத், 23 ரகஅத்) காணப்படுகின்றன.

இவர்களை நிராகரித்தவர்கள்

* அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) யஹி இப்னு முயின் அபூஜர்ஆ, அபூ ஹாதம் ராஸி, தகபி.

** இப்னு ஜெளசி, அபூ ஹாதம் ராஸி, தகபி.

இப்போது இந்த முரண்பட்ட இரு கருத்துக்களை ஆராய்வோம். உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயத். நபி(ஸல்) 11 ரகஅத் தொழுதிருக்க, அதற்கு மாற்றமாக உமர்(ரழி) அவர்கள் மீது நாம் நல்லெண்ணமே கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்களுக்கு மாறு செய்யும் எண்ணத்தை உமர்(ரழி) அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று கனவில் கூட நாம் நினைக்க முடியாது. 23 ரகஅத் சம்பவத்தை ஆராயும் போது அறிவிப்பாளர்களில் பல பலவீனங்களைப் பாாக்க முடிகின்றது. உதாரணமாக, "உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் 23 ரகஅத் தொழுதார்கள்" என்று அறிவிக்கும் யஜீதுப்னு ரூமான், உமர்(ரழி) அவர்களின் காலத்தில் பிறக்கவே இல்லை. பஸீதுப்னு ரூமானின் இறப்பு ஹிஜ்ரி 130 என்று அஸ்மாவுர்ரிஜால் கலை வல்லுனர் இப்னுஹஜர் அஸ்கலானி(ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

உமர்(ரழி) அவர்களின் மரணம் ஹிஜ்ரி 24. யஸீதுப்னு ரூமான் ஒரு நூற்றாண்டு வாழ்ந்திருந்தாலும், உமர்(ரழி) காலத்தில் பிறந்திருக்கவே முடியாது. ஆக தொடர்பு இல்லை. இப்படி உமர்(ரழி) 23 ரகஅத் தொழுதார்கள், தொழ வைக்கும்படி கட்டளையிட்டார்கள், உமர்(ரழி) காலத்தில் 23 ரகஅத் தொழப்பட்டது ஆகிய அனைத்து அறிவிப்புகளும் உண்மைச் சம்பவத்திற்கும், நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கும் மாற்றமாக அமைந்துள்ளன.

அப்படியே, ஒரு வாதத்திற்காக உமர்(ரழி) காலத்தில் மக்கள் 23 ரகஅத் தொழுதார்கள் என்று நாம் ஏற்றுக் கொண்டாலும், அதை நாம் மார்க்கமாகக் கொள்ள முடியாது. காரணம் உமர்(ரழி) காலத்தில் மக்கள் பல தவறான மார்க்க முரணான காரியங்களிலும் ஈடுபட்டிருந்திருப்பர், ஈடுபட்டிருந்திருக்கலாம். இதையெல்லாம் மார்க்கத்திற்குரிய ஆதாரங்கள் என்று எந்த அறிவாளியும் ஏற்றுக் கொள்ள மாட்டான். ஆனால் மக்கள் 23 ரக்அத் நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமாகத் தொழுது வந்ததை மாற்றி, உமர்(ரழி) அவர்கள் உபை இப்னு கஃபு(ரழி), தமீமுந்தாரி(ரழி) ஆகிய இருவருக்கும், மக்களுக்கு நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துப்படி 11 ரகஅத் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பார்கள், என்று நினைக்கப் போதிய ஆதாரம் இருக்கிறது. உமர்(ரழி) நபி(ஸல்) அவர்களின் சுன்னத்துப்படி நடந்தார்கள் என்று நல்லெண்ணம் கொள்ள வேண்டுமேயல்லாது, நபி(ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு விரோதமாக 23 ரக்அத் தொழத் துணை போனார்கள் என்று நாம் ஒரு போதும் எண்ண முடியாது.

நாம் செய்ய வேண்டியது என்ன?

இன்னும் ஒரு வாதத்திற்கு உமர்(ரழி) அவர்களே 23 ரகஅத்துகள் தொழுதார்கள் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்ய வேண்டும்?

நபி(ஸல்) அவர்கள் ரமழானில் 11 ரகஅத் தொழுதார்கள் என்று ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 23 ரகஅத் பற்றிய அறிவிப்பு அதற்கு முரணாகக் காணப்படுகின்றது. 23 ரகஅத்தை விட்டு 11 ரகஅத்தை எடுத்துக் கொள்பவர்கள் உமர்(ரழி) அவர்களை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டுபவர்கள், அதே அடிப்படையில் 11 ரகஅத்தை விட்டு 23 ரகஅத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் நபி(ஸல்) அவர்களையே அவமதிக்கிறார்களே? இது நியாயம் தானா? நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதற்கே முதலில் நாம் கடமைப்பட்டுள்ளோம். நமது கலிமா "லாயிலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" என்பதே அல்லாமல் "லாயிலாஹ இல்லல்லாஹ், உமர் ரஸுலுல்லாஹ்" அன்று. நிச்சயமாக உமர்(ரழி) அல்லாஹ்வின் ரஸுல் அல்லர். நபி(ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தில் இப்படித்தான் நடந்தார்கள் என்பது தெளிவாக இருந்தால், அதை விட்டுவிட்டு நாம் வேறு யாரையும் பின்பற்ற மார்க்கம் நமக்கு அனுமதி தரவில்லை. நபி(ஸல்) அவர்கள் "எனது சுன்னத்தையும், எனது குலாபாயே ராஷித்தீன்களின் சுன்னத்தையும் பின்பற்றி நடங்கள்" என்று சொல்லியிருக்கிறார்களே, என்று யாராவது கேட்டால் அதற்குரிய பதிலாவது,

நபி(ஸல்) அவர்கள்"எனது சுன்னத்தையும், எனது குலாபாயே ராஷிதீன்களின் சுன்னத்தையும் பின்பற்றி நடங்கள்" என்று தனது சுன்னத்திற்கு முன்னுரிமை கொடுத்துச் சொல்லி இருக்கிறார்களே அல்லாமல், "எனது சுன்னத்தை விட்டுவிட்டு, எனது குலபாயே ராஸிதீன்களின் சுன்னத்தைப் பின்பற்றுங்கள்" என்றோ, "எனது சுன்னத்திற்கு மாற்றமாக எனது குலபாயே ராஷிதீன்களின் சுன்னத்தைப் பின்பற்றுங்கள்," என்றோ சொல்லவில்லை. இப்படிச் சொல்லி இருந்தால் நபி(ஸல்) அவர்களின் 11 ரகஅத்தை விட்டு விட்டு உமர்(ரழி) அவர்களின் சுன்னத் (அப்படிச் சொல்லப்படுகிறது, உண்மை அல்ல) 23 ரகஅத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அப்படி நபி(ஸல்) அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் சொல்லியுள்ளபடி நடப்பதாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் எத்தனை ரகஅத்துகள் தொழுதார்கள் என்பது தெளிவில்லாமல் இருந்தால் மட்டுமே, உமர்(ரழி) அவர்களின் சொல்லை ஆதாரமாகக் கொள்ள முடியும். அதாவது ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் எப்படிச் செய்தார்கள் என்ற விபரம் தெரியாமல் இருந்தால் மட்டுமே, குலபாயே ராஷிதீன்கள் சுன்னத்தை எடுத்துக் கொள்ள முடியும். ஒரு விஷயத்தில் நபி(ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள் என்பது தெளிவாக இருக்கும் போது, அந்த விஷயத்தில் குலபாயே ராஷித்தீன்களின் சுன்னத்திற்கு இடமே இல்லை. அதுவும் குலபாயே ராஷிதீன்களின் சுன்னத்து என்று சொல்வதிலிருந்து ஆட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களிலும், நிறைவு செய்யப்பட்ட மார்க்கத்தை அமுல்படுத்துவதில் காலத்திற்குக் காலம் ஏற்படும் சில சிக்கல்களைத் தீர்க்கும் விஷயங்களிலும், இது சாத்தியமே அல்லாமல், வணக்க வழிபாடு அடிப்படையில் அல்ல என்பது தெளிவாகும். காரணம் வணக்க வழிபாடுகளை விதிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். நபி(ஸல்) அவர்களுக்கும் இதில் அதிகாரம் இருந்திருக்கவில்லை. அல்லாஹ்வின் உத்தரவுப்படியே நபி(ஸல்) மார்க்க உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள் என்னும் உண்மையை, குர்ஆனின் பல வசனங்கள் தெளிவு படுத்துகின்றன. (3:20, 5:92, 5:99, 16:35, 16:82, 24:54, 29:18, 6:17, 69:44) நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வோடு வஹியின் தொடர்போடு இருந்ததனால் இது சாத்தியமாயிற்று.

குலபாயே ராஷிதீன்கள் வஹியின் தொடர்புடையவர்கள் அல்லர். ஆகவே குலபாயே ராஷிதீன்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் உட்பட்டே இருந்திருக்க வேண்டும். குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் மாற்றமான முடிவுகளை ஓரிரு சந்தர்ப்பங்களில் அவர்கள் செய்ய நேரிட்ட போது குர்ஆனைக் கொண்டும் ஹதீதைக் கொண்டும் அவர்கள் திருத்தப்பட்டிருக்கிறார்கள். உதாரணமாக, நபி(ஸல்) அவர்கள் வபாத்தானபோது, அதை மறுத்த உமர்(ரழி) அவர்களின் கூற்று குர்ஆனின் வசனங்களைக் கொண்டு நிராகரிக்கப்பட்டது. உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் மஹர் தொகையை மட்டுப்படுத்தி ஆணை பிறப்பித்த போது, ஒரு சாதாரண பெண்மணியால் குர்ஆன் வசனத்தைக் கொண்டு நிராகரிக்கப்பட்டது. இதுபோல் அவர்கள் செய்த தீர்ப்புக்களில் சில, உண்மையான ஹதீதுகள் கொண்டு நிராகரிக்கப்பட்டன. உதுமான்(ரழி), அலி(ரழி) இவர்களின் ஆட்சிக் காலத்திலும் இப்படிச்சில சம்பவங்கள் நடைபெற்று குர்ஆன், ஹதீதைக் கொண்டு நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. விரிவஞ்சி அவற்றின் விபரம் இங்கே தரப்படவில்லை.

தவறுவது மனித இயல்பு

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் குலபாயே ராஷிதீன்களோ, ஸஹாபாக்களோ, இமாம்களோ, மற்றும் பெரியார்களோ, குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக மார்க்கத்தில் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்ற மாபெரும் உண்மையை நமக்குத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இப்படி நாம் எழுதிய மாத்திரத்தில், முன் சென்ற பெரியார்களை நாம் அவமதிப்பதாகவும், எம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். இமாம்களெல்லாம் தவறு செய்திருப்பார்களா? என்று ஆச்சரியத்தோடு கேட்கின்றனர். அப்படியானால் இமாம்களெல்லாம் தவறே செய்யாதவர்கள் என்று அவர்கள் நம்புகின்றனரா? இந்த நம்பிக்கை எவ்வளவு பெரிய குற்றம் என்று அவர்கள் சிந்திப்பதில்லை. தவறே செய்யாத தனித்தன்மையை அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம். அவனுக்குச் சொந்தமான தனித் தன்மையை இமாம்களுக்குக் கொடுப்பதன் மூலம், இமாம்களை அல்லாஹ்வாக்குகின்றனர். மரணிக்காதவன் என்ற, அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான தனித்தன்மையை உமர்(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்குச் சொந்தமாக்கியபோது, அபூபக்கர்(ரழி) அவர்கள் "யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ, அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அந்த முஹம்மது இறந்து விட்டார்" என்று அறிவித்ததன் மூலம், அல்லாஹ்வுக்குச் சொந்தமான தனித்தன்மையை மனிதர்களுக்குக் கொடுப்பதை வணக்கம் என்றே குற்றம் சாட்டுகிறார்கள். இந்த அடிப்படையில், இமாம்கள் தவறே செய்யதவர்கள் என்று நம்புகிறவர்கள் இமாம்களை வணங்குகிறார்கள் என்றே பொருள். காரணம் தவறே செய்யாத தனித் தன்மையை அல்லாஹ் நபிமார்களுக்கும் கொடுக்கவில்லை. அவர்களிலும் சில அசம்பாவிதங்களை இடம் பெறச் செய்து அவற்றை வஹி மூலம் திருத்துவது கொண்டு மக்களுக்கு நேர்வழி காட்டியதோடு, அந்தத் தவறே செய்யாத தனித்தன்மை தனக்கு மட்டுமே சொந்தம் என்பதை நிலை நாட்டியிருக்கிறான். நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் அப்படிச் சில சம்பவங்கள் இடம் பெற்று, அல்லாஹ் திருத்தியுள்ள வசனங்களை இன்று நாம் ஓதிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலிருந்து நாம் படிப்பினை பெறுவதில்லை. "ஆதம்(அலை) தவறு செய்தார். ஆதமுடைய மக்களும் தவறு செய்பவர்களே. தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் தெளபா செய்பவர்கள்" என்ற நபி(ஸல்) அவர்களின் வாக்கும் இதைத் தெளிவுபடுத்துகின்றது. நபிமார்களுக்கே சொந்தப் படுத்தப்படாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான அந்தத் தனித்தன்மையை குலபாயே ராஷிதீன்களுக்கோ, ஸஹாபாக்களுக்கோ, இமாம்களுக்கோ, நாம் சொந்தப்படுத்த முடியுமா என்பதைத் தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்! ஒரு போதும் முடியாது. ஆகவே குர்ஆனுக்கோ, ஹதீதுகளுக்கோ மாற்றமாக யாருடைய சொல் இருந்தாலும், அதைவிட்டுவிட்டு குர்ஆன் ஹதீதைப் பின்பற்றுவதே நேர்வழி நடப்பதாகும். குர்ஆன் ஹதீதுக்கு மாற்றமாக நேர்வழி நடந்த யாரும் சொல்லி இருக்கமாட்டார்கள் என்றே நம்ப வேண்டும்.

இந்த அடிப்படையில், 23 ரகஅத் ரமலான் தொழுகை உமர்(ரழி) அவர்கள் தொழுதிருக்க மாட்டார்கள். தொழ வைக்கக் கட்டளையிட்டிருக்கமாட்டார்கள். அப்படியே உமர்(ரழி) செய்திருந்தால், நபி(ஸல்) அவர்களுக்கு மாற்றமாகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செய்திருக்க மாட்டார்கள். மனித இயல்பின் காரணமாக நடந்த அசம்பாவிதமாக இருக்கும் என்று அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்டு அதை விட்டு விட்டு நபி(ஸல்) அவர்களையே பின்பற்றி 11 ரகஅத் தொழுவதே சிறப்பாகும். - வளரும்.

பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பாலோர் அவைகளை மாாக்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? மக்கள் மனங்களில் அவை ஆழமாக வேரூன்றியது எதனால் என்பதை இந்த இதழில் காண்போம்.

பழமையை, நீண்ட காலமாக நடைமுறையில் இருப்பதை விரும்பக் கூடியதாகவே மக்களின் மனப்பான்மை அமைந்தள்ளது. ஷைத்தான், உண்மைக்கு முரணாணதை மக்கள் மனங்களில் விதைத்துவிடுகிறான். மக்களும் அவற்றில் முழ்கிவிடுகிறார்கள். காலங்கள் சில கடந்தபின் "அவர்கள் செய்யும் காரியங்கள் எவ்வளவு தவறானவை" என்று எவ்வளவு ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்துக் காட்டினாலும், அந்தத் தவறான வழியிலிருந்து விடுபட்டு நல்வழியை நாட அவர்கள் விரும்புவதேயில்லை. தாங்கள் இவ்வளவு காலம் செய்ததே நேர் வழி என்று எண்ணி அதனைத் தொடர்ந்து செய்யவே விரும்புகின்றனர்.

கடந்த காலங்களில் இறைவனின் செய்தியை மக்களுக்கு அறிவித்த நபிமார்களைப் புறக்கணித்ததற்கும் இந்த மனப்பான்மையே காரணமாக அமைந்திருந்தது. இன்றும் குர்ஆன் ஹதீதுகளை எடுத்துச் சொல்லும்போது அதே மனப்பான்மைதான் அவர்களை, குர்ஆன் ஹதீஸ்களைப் புறக்கணிக்கச் செய்து கொண்டிருக்கின்றது. தங்கள் தவறிலேயே அவர்களை நிலைத்திருக்கச் செய்து விடுகின்றது.

உதாரணமாக "பராஅத்" இரவின் விசேஷ அமல்கள் பற்றிய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டதும், பலவீனமானதுமாகும்" என்று அன்றே ஹதீஸ் கலை வல்லுனர்கள் அடையாளம் காட்டி இருந்தும் அதனை அவர்கள் விடுவதற்குத் தயாராக இல்லை. தங்கள் செயலை எப்படியும் நியாயப்படுத்தியே தீருவது என்ற எண்ணத்தை அவர்கள் பெற்றிருப்பதை நாம் காண முடிகின்றது. இந்த மனப்பான்மை மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றியுள்ளதால், "பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் அடையாளம் காட்டப்பட்டிருந்தும் அவர்கள் இன்றளவும் அவற்றை நிராகரிக்க முன்வருவதில்லை.

மக்களின் இந்த மனப்பான்மையைப் புரிந்து கொண்ட மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக் கொண்ட போலி அறிஞர்கள் அந்த, மனப்பான்மையை மேலும் வளாத்தனர். 'கோயபல்ஸ்' தத்துவப்படி அந்தப் பொய்களையே மக்கள் மத்தியில் திரும்பத் திரும்ப சொல்லி அதை உண்மை என்று நம்ப வைத்தனர். வணக்கம் என்ற பெயரால் நன்மை தானே என்ற பெயரால், மறுமையில் நன்மையை மிக அதிகமாக அடைந்து கொள்ளலாம் என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில், பாமர மக்களிடையே இந்த பலவீனமான, இட்டக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. இஸ்லாத்திற்கு, குர்ஆன், ஹதீஸுக்கு முற்றிலும் முரணான சூபிஸ கொள்கையை, இஸ்லாத்தின் பெயரால் மக்கள் மத்தியில் நுழைத்ததால் பலவீனமான இட்டக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் நன்றாக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்திட, இதுவும் ஒரு காரணமாகிறது.

ஒருபுறம் அல்லாஹ்வுக்கு அஞ்சிய அறிஞர்கள் போலி ஹதீஸ்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்க, மறுபுறம் இந்த போலி அறிஞர்கள் அவைகளை மக்கள் மத்தியில் பரவச் செய்து கொண்டிருந்தனர். மக்கள் விருப்பத்தை நிறைவு செய்யும் விதமாக இந்தப் போலிகளின் போலி ஹதீஸ்கள் அமைந்திருந்ததால், உண்மை அறிஞர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இவர்கள் தான் மக்கள் மத்தியில் மதிப்பைப் பெற முடிந்தது. அன்றும், இன்றும் இதே நிலை தான்.

மக்கள் மனோ இச்சைப்படி நடந்தால் தான் அவர்களால் தங்கள் ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்று எண்ணிய முஸ்லிம்(?) மன்னர்களும் இதற்கு ஒரு வகையில் காரணமானார்கள். மார்க்கத்தின் பெயரால் எவ்வளவு அனாச்சாரங்கள் நடந்தாலும், நபி(ஸல்) அவர்கள் பெயரால் எவ்வளவு பொய்கள் கூறப்பட்டாலும், அதனை அவர்கள் கண்டு கொள்ளாமலிருந்தனர். அதற்கு எதிரான முயற்சியை மேற்கொண்டால் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த போலி அறிஞர்களின் எதிர்ப்பையும், பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தின் காரணமாக இதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதிருந்தனர். உலக ஆதாயத்தையே நோக்கமாகக் கொண்ட போலி அறிஞர்களுக்கு உதவி, அதிகாரங்களை வழங்கினர். அந்த அதிகாரத்தின் துணைகொண்டு இந்தப் போலி அறிஞர்கள் நன்றாகவே இட்டுக்கட்டபட்டவைகளை மக்கள் மனங்களில் ஆழமாகப் பதியச் செய்தனர். தீமைகளில் ஒருவருக்கொருவர் துணை போனார்கள். இவையே பொய்கள் மக்கள் மனங்களில் மெய்யென தோன்றியதற்கான காரணங்களாகும்.

நல்லாட்சி நடத்திய நாற்பெரும் கலிபாக்களின் காலத்தில் இது போன்ற பொய்கள் காணப்பட்டபோது உடனுக்குடன் அவற்றுக்கு எதிரான நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர். அனாச்சாரங்கள் தலை தூக்க அவர்கள் இடம் தரவே இல்லை.

நபி(ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் ஒரு மரத்தடியில் உறுதி மொழி வாங்கினார்கள். உமர்(ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த மரம் புனிதமாகக் கருதப்பட்டு சடங்குகள் பல அங்கே நடப்பது உமர்(ரழி) அவர்களுக்குத் தெரிய வந்தபோது ஊடனே அந்த மரத்தை வெட்டி வீழ்த்த உத்தரவிட்டார்கள். அந்தத் தவறுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

அலி(ரழி) அவர்கள் காலத்தில் அலி(ரழி) பற்றி ஏராளமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நுழைக்கப்பட்டபோது , உடனே அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததோடு, அவை அத்தனையும் பொய் என்று தெளிவு படுத்தினார்கள்.

குர்ஆனையும், உண்மையான ஹதீஸ்களையும் நிலை நாட்டப் பாடுபட்டார்கள். அநாச்சாரங்கள்,பொய்கள் தலைதூக்கவிடாமல் காத்தார்கள். தங்களிடமே ஒரு தவறு நிகழ்ந்து, சாதாரண குடிமகன் சுட்டிக் காட்டினாலும், உடனே தங்களைத் திருத்திக் கொண்டார்கள்.

இந்த நேர்மை மனப்பான்மை பிற்காலத்தில் ஆட்சி நடத்திய மன்னர்களிடம் காணப்படாததால், பொய்யான ஹதீஸ்கள் தனது ஆட்சியை நடத்தின. இன்றும் நடத்திக் கொண்டு இருக்கின்றன.

மக்கள் மனப்பான்மை, உலமாக்கள், சிலரின் சுயநலப் போக்கு மன்னர்களின் பதவி ஆசை, இவை தான் போலி ஹதீஸ்கள் இன்றளவும் மக்கள் மனங்களில் மகத்தான இடத்தைப் பெற்றிருப்பதற்கு காரணங்களாகும்.

பலவீனமான (லயீஃப்) இட்டுக் கட்டப்பட்ட (மவ்லுஃ) ஹதீதுகள் பற்றிய விளக்கங்கள், அவற்றைக் கொண்டு அமல்கள் செய்வதால் ஏற்படும் விபரீதங்கள், அவை தெளிவாக அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டிருந்தும், அவை இஸ்லாமிய சமுதாயத்தில் ஆழ வேரூன்றிய காரணங்கள், இவை அனைத்தையும் ஆராய்ந்தோம்.

ஹதீதுகளை நாங்களாக எங்கள் இஷ்டத்திற்கு லயீஃப் என்றும் கூறி வருகிறோம் என்று பரவலாக எங்கள் மீது அவதூறு பரப்பப்பட்டு வந்தது. ஆகவே லயீஃப் மவ்லுஃ ஹதீதுகளின் நிலையையும் எங்களது உண்மையான நிலையையும் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவே இத்தொடரை ஆரம்பித்தோம்.

ஹதீதுகள் சம்பந்நதப்பட்ட முழு விவரங்களையும் தெளிவாக அறியத் தருமாறு வாசகர்கள் நேரிலும் கடிதங்கள் மூலமும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அடுத்த இதழில் 'நபிமொழி வரலாறு' என்ற தொடரில் மெளலவி S. கமாலுத்தீன் மதனி அவர்கள் அவற்றின் விவரங்களைத் தர இருக்கிறார்கள். ஆனவே நாம் இது வரை எழுதி வந்ததை மீண்டும் ஒருமுறை நினைவுக்குள் கொண்டு வந்து இந்தத் தொடரை முற்றுப் பெறச் செய்கிறோம்.

மீண்டும் பார்ப்போம்

1) பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகள் நிறைய இருக்கின்றன. அவையே சமுதாயத்தில் அதிகம் உலா வருகின்றன.

2) ஆயினும் அவை அறிஞர்களால் தெளிவாக அடையாளம் காட்டப்பட்டு, 1000 வருடங்களுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டு இனம் காட்டப்பட்டுள்ளன.

3) அவற்றைத் தெளிவாக அடையாளம் காட்டுவதற்காக அறிஞர்கள் அந்த பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைத் தங்கள் நூல்களில் இடம் பெறச் செய்தனர். ஆனால் உலக ஆதாயம் தேடுவோர் அவை தவறானவை என்பதை தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மக்களிடையே பரப்பி வந்தார்கள்.

4) பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளை வைத்துக் கண்டிப்பாக அமல்கள் செய்யக்கூடாது.

5) மார்க்கத்தில் கூட்டிக் குறைக்க உள்ள அதிகாரம், அல்லாஹ்(ஜல்)வுக்கு மட்டுமே சொந்தமான தனி அதிகாரம் ஆகும். நபிமார்களுக்கும் அதில் பங்கு கொடுக்கப்படவில்லை என்பதைக் குர்ஆனின் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன என்பதை எடுத்துக் காட்டி இருந்தோம்.

6) நாங்கள் பலவீனமான (லயீஃப்) இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் என்று எடுத்துக் காட்டுபவை அனைத்தும் 1000 வருடங்களுக்கு முன்பே அறிஞர் பெருமக்களால் தெளிவான ஆதாரங்களுடன் அடையாளம் காட்டப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடுநிலைக் கண்ணோட்டத்தோடு பாாப்பவர்கள் அந்தக் கிதாபுகளை புரட்டிப் பார்த்து உண்மையை உணாந்து கொள்ளலாம். எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்(ஜல்) அவனால் வஹி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதையும் அதாவது அல்குர்ஆனையும், அவனால் அங்கீகரிக்கப்பட்டவைகளையும் (இது வஹியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும்), அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இம்மூன்றாலும் நிலைநாட்டப்பட்டவற்றையும் மட்டுமே மார்க்கமாக ஏற்றுக் செயல்படும் வெற்றி பெறும் கூட்டத்தில் நம்ைம சேர்த்து வைப்பானாக. ஆமீன். முற்றும்

அந்நஜாத் 1986

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்