Social Icons

Saturday 20 October 2012

நிச்சயம் செய்த பெண்ணுடன் இண்டர்நெட்டில் சேட்டிங் செய்யலாமா? தபால் எழுதலாமா? டெலபோனில் பேசலாமா?

    இது பற்றி குறிப்பிடுவதற்கு முன் நம் சமூகத்தில் நிலவி வரும் பழக்க வழக்கங்களையும், ரஸுல் (ஸல்) அவர்கள் காலத்து நடைமுறையையும் அறிந்து கொள்ளுதல் அவசியம்.
    திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் தொடர்பாக நம்மிடையே
    1. சிலர் குடும்பத்தில் குழந்தை பிறந்ததுமே உறவு (சொத்து) விட்டுப் போகக் கூடாதென கருதி இன்னாருக்கு இன்னார் என நிச்சயம் செய்து கொள்கின்றனர்.
    2. சிலர் பெண், ஆண் மக்கள் உரிய தகுதியை அடைந்ததும் படிப்பு, தொழில் காரணமாக நிச்சயதார்த்தத்தை முதலிலும் பின்னர் இரண்டு, மூன்று வருடங்களுக்குப் பின் திருமணத்தை நடத்தவும் செய்கின்றனர்.

    3. தாயகத்தை விட்டு வெளி இடங்களில் குறிப்பாக அரபு தேசங்களில் பணிபுரியும் சிலர், தனக்கோ தனது சகோதரிகளுக்கோ திருமண நிச்சயதார்த்தம் செய்து விட்டு கூடுதல் பொருளாதார தேவைக்காக திருமணத்தை இரண்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு பின் நடத்துகின்றனர்.
    4. வெகு சிலரே (அரபு தேசங்களிலிருந்து விடுமுறையில் செல்பவர் அல்லது வேறு காரணங்களுக்காக) நிச்சயதார்த்தத்தைத் தொடர்ந்து உடனேயே திருமணத்தை அல்லது நிச்சயதார்த்தம் என்ற சடங்கே இல்லாமல் திருமணத்தை நடத்துகின்றனர்.
    5. இன்னும் சிலர் அவசரமாக திருமணத்தை முடித்துக் கொண்ட பின் (நல்ல நேரம் பார்த்துத் தான் கூட (உடலுறவு கொள்ள) வேண்டுமென்று - (மார்க்கத்திற்கு முரணாக) - எண்ணுவதால்) தனித்தனியே இருக்கின்றனர்.
    முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிச்சயதார்த்தம் என்ற ஒரு சடங்கே கிடையாது. இரு தரப்பினரின் சம்மதம் பெறுவதற்கும் திருமணம் நடைபெறுவதற்குமான கால இடைவெளி குறைவு. ஆனால் தற்சமயம் பலரும் புலம் பெயர்ந்து அல்லது தொழில், வாணிபம் காரணமாக தொடர்பின்றி வாழ்வதால் அவரவரின் குணநலன் பற்றி விசாரித்தறிய கால அளவு தேவைப்படுகிறது. என்றாலும், விசாரித்த பின் நிச்சயித்து உடனே மணம் செய்து கொள்வது தான் சிறப்பாகும். அவ்வாறு திருமணம் செய்த பின் கூடாமலும் (உடலுறவுக்கு முன்பே) புறப்பட்டு வெளி இடங்களுக்கு சென்று விட்டால் தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்வது (சேட்டிங் செய்வது) ஆகுமானதாகும்.
    அல்லாமல் வெறுமனே நிச்சயம் செய்து கொள்வதால் மாத்திரம் சேட்டிங் போன்ற வகைகளில் தனியாக ஒரு பெண்ணிடம் பேச அனுமதியில்லை. திருமண ஒப்பந்தம் முடியும் வரை பொறுத்திருப்பதே சிறந்தது.
    இது குறித்து குறிப்பிடும் போது தற்கால மார்க்க அறிஞர் ஷேக் உதைமீன் அவர்கள் 'திருமண ஒப்பந்தத்திற்கு பின்பே ஒரு பெண்ணுடன் தனித்துப் பெசுவது ஆகுமானதாகும். அவ்வாறு இல்லாமல் திருமண ஒப்பந்தத்திற்கு முன்பு - நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தாலும் சரி - பேசிக் கொள்வதற்கு அனுமதியில்லை. எனவே அது ஹராமாகும். ஏனெனில் திருமண ஒப்பந்தத்திற்கு முன் அப்பெண் மற்றவர்களைப் போலவே கருதப்படுவாள்'. எனக் கூறுகின்றார். (ஃபதாவா அல்மர்ஆ - பக்கம் 51)
    எனவே சேட்டிங், தொலைபேசி உரையாடல் போன்றவற்றை தவிர்ந்து கொள்வதே நலம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்