Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 3


  ஈமான் பற்றிய நூல்

“யார் விசுவாங்கொள்ளவில்லையோ அவருக்கு நற்செயல்கள் பயனளிக்காது” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 41

“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இப்னு ஸத் ஆன் என்பவர் (இஸ்லாத்திற்கு முன்னுள்ள) அறியாமை காலத்தில் சுற்றத்தார்களை சேர்த்து நடக்ககூடியவராகவும் மிஸ்கீனுக்கு (வறியவர்களுக்கு) உணவளிப்பவராகவும் இருந்தார். அது அவருக்கு பயன்தருமா?” எனக் கேட்டேன்.

“அது அவருக்கு பயனளிக்காது. நிச்சயமாக அவர் ஒரு நாளில் கூட, எனது இரட்சகா! மறுமை நாளின்போது எனது குற்றத்தை மன்னித்து அருள்வாயாக!” எனக் கூறவில்லை, என (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா.

“நீங்கள் விசுவாங்கொள்ளும்வரை சுவனத்தில் பிரவேசிக்க முடியாது” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 42

“நீங்கள் விசுவாசங் கொள்ளும்வரை சுவனம் செல்லமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கும்வரை விசுவாங்கொண்டவர்களாக ஆக மாட்டீர்கள் ஒரு செயலை நீங்கள் செய்வீர்களானால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள். அச்செயலை உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? (அதுவே) உங்களுக்கு மத்தியில் ஸலாமைப்1 பரப்புங்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

குறிப்பு: 1 ஸலாம் என்பது ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதைக் குறிக்கும்.

“விபச்சாரம் செய்பவன் விபச்சாரம் செய்யும்போது மூஃமினாக இருக்க விபச்சாரம் செய்வதில்லை” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 43

“விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் செய்யும்போது மூஃமினாக இருக்கும் நிலையில் விபச்சாரம் செய்வதில்லை. திருடன் திருடுகின்ற போது மூஃமினாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை.

மேலும் அவன் (குடிகாரன்) மதுவருந்தும்போது, மூஃமினாக இருக்கும் நிலையில் மதுவருந்துவதில்லை.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

“மரியாதைக்குரிய ஒரு விஷயத்தின் மரியாதையைக் குறைக்கும்போது. மனிதர்கள் அதன்பால் தங்களது பார்வையை உயர்த்தி (அதிருப்தியுற்று) பார்ப்பார்களே அதுபோன்ற விஷயத்தின் மரியாதையை ஒருவன் மூஃமினாக இருக்கும்போது குறைத்துப் பங்கப்படுத்த மாட்டான் ” (மேற்கூறப்பட்ட ஹதீஸோடு) அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் இதையும் சேர்த்து கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

ஹம்மாம் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் ஹதீஸில் “ஒரு விசுவாசி அதைப்பங்கப்படுத்தக் கூடிய நிலையில் மூஃமின்கள் தங்களது கண்களை அதன்பால் உயத்துவார்கள்” என வந்துள்ளது.

“போர்களத்தில் கிடைத்த பொருளை உங்களில் யாரேனும் மூஃமினாக இருக்கும் நிலையில் திருட மாட்டார் உங்களை எச்சரிக்கிறேன்! எச்சரிக்கிறேன்! என்று இதை ஹம்மாம் அவர்கள் அதிகப்படுத்திக் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

ஹதீஸ் எண் : 44

“ஒரே துவாரத்தில் (புற்றில்) விசுவாசி இருமுறை கொட்டுப்படமாட்டான்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

“மனதில் ஏற்படும் ஊசலாட்டம் (ஒருவரின் மனதில் அல்லாஹ்வைப்பற்றி பல எண்ணங்கள் இவன் பார்ப்பவற்றையெல்லாம் நினைத்து இவன் கற்பனையில் வருவதையெல்லாம் முன்வைத்து அல்லாஹ் இப்படி இருப்பானோ? அல்லது அப்படி இருப்பானோ? என்ற ஊசலாட்டங்கள் மனதில் ஏற்பட்டுவிட்டால் அதை அத்தோடு தவிர்த்து விட்டு விடவேண்டும் அதற்கு மேலும் வளர்ந்தால் அதிலிருந்து காக்கத்தேடுவதும் கட்டாயமாகும்) ஈமானில் உள்ளதாகும்” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 45

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் ஸஹாபாக்களில் சிலர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எதைப்பற்றிப் பேசுவதை எங்களில் ஒருவர் மிகப்பெரிதாக கருதிகிறாரோ அத்தகைய விஷயத்தை எங்களது மனங்களில் பெற்றுள்ளோம் (அஃதென்னவென்று) கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் “அதைப் பெற்றுவிட்டீர்களா?” என்றனர். அதற்கவர்கள் ‘ஆம்’ என்றனர். “அதுதான் தெளிவான ஈமான் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

“பெரும்பாவங்களில் மிகப்பெரியது அல்லாஹ்விற்கு இணை வைத்தலாகும்” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 46

நாங்கள் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்தோம். அப்போது அவர்கள், “பெரும்பாவங்களில் மிகப்பெரிய பாவத்தை உங்களுக்கு (எதுவென்று) அறிவித்துத்தரட்டுமா?” என மும்முறை கூறிவிட்டு,

“அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோர்களைக் கொடுமைப்படுத்துவதும், பொய்சாட்சி கூறுவதும் அல்லது பொய்கூற்றை கூறுவதுமாகும் ” என்றனர். சாய்ந்து அமர்ந்திருந்த நபி ஸல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இதைக் கூறும்போது நிமிர்ந்து அமர்ந்து கொண்டனர். அவர்கள் அதைக் கூறுவதை விட்டுவிட்டால் நன்றாக இருக்குமே என கூறும்வரை அதை திரும்ப திரும்பக் கூறிக்கொண்டே இருந்தனர்.

இதை அப்துல் ரஹ்மான் பின் அபிபக்ரா ரளியல்லாஹ் அன்ஹு என்பவர் தனது தந்தை அறிவித்ததாக கூறுகிறார்.

ஹதீஸ் எண் : 47

“அழிவை உண்டாக்கும் ஏழு விஷயங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவைகள் யாவை? எனக் கேட்கப்பட்டது. (அதற்கு)

“அல்லாஹ்விற்கு இணை வைப்பது, சூனியம் வைப்பது, அல்லாஹ் எந்த உயிரை கொலை செய்வதை விலக்கியுள்ளானோ அத்தகைய உயிரை உரிமையின்றி கொலை செய்தல், வட்டியை உண்ணுதல், அனாதைகளின் சொத்தை விழுங்குதல், போர் மூண்டு நிற்கும் நாளில் (புற முதுகு காட்டி) திரும்பி விடுதல், விசுவாசிகளான ( கெட்டவைகளை விட்டும் மறந்து விலகி இருக்கும்) பத்தினிப் பெண்களை அவதூறு பேசுதல் ஆகியவைகளாகும் ” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

“எனக்குப்பின் உங்களில் சிலர் சிலரின் கழுத்தை வெட்டுவதன் நிமித்தம் காஃபிர்களாக திரும்பி விடாதீர்கள்” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 48

உங்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக!1 அல்லது உங்களுக்கு கேடு உண்டாகட்டுமே! எனக்கு பிறகு உங்களில் சிலர், சிலரின் கழுத்துகளை வெட்டும் காஃபிர்களாக திரும்பி விடாதிர்கள்” என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக இறுதி ஹஜ்ஜின் போது கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹுமா

குறிப்பு : 1 இவ்விரு வார்த்தைகளைக் கூறுவதன் நோக்கம் சாபம் அல்ல. ஆபத்தில் சிக்கிக்கொண்டவனுக்கு அல்லாஹ்விடம் அருள் வேண்டி கூறப்படும் வார்த்தைதான் ‘வைஹ்’ அழிவைத்தேடிச் செல்பவருக்கு ‘வைல்’ “கேடு” என்பது உபயோகமாகிறது. அச்செயலில் உம்மத்தவர் விழுந்துவிடாமலிருக்க அருள்கோரியும், விழுந்துவிட்டவருக்கு தண்டனை உண்டு என்பதை எச்சரிக்கவே இரு வார்த்தைகளை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் உபயோகித்திருக்கிறார்கள் என்ற கருத்தை இந்த ஹதீஸிற்கு அடிக்குறிப்பில் இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

“தனது தந்தையை யார் வெறுக்கிறாரோ? அது இறை நிராகரிப்பு” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 49

“இஸ்லாத்தில் தன் தந்தையல்லாத ஒருவரை (யாரைத் தந்தை என்கிறாரோ அவர் இவருக்கு தந்தையில்லை என) நன்கு தெரிந்திருக்க. ‘தனக்கு தந்தைதான்’ என யாரேனும் வாதிட்டால் அவருக்கு சுவனம் விலக்கப்பட்டதாகிவிடும். ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் தன் காதால் கேட்டதாக ஸஅது அபிவக்காஸ் கூற நிச்சயமாக நான் செவியுற்று இருக்கிறேன். அவ்வாறு இருக்க இது போன்ற காரியத்தை செய்து விட்டீர்களே! ஏன்? என ஜியாது1 என்பவரைப் பற்றி விவாதிக்கப்பட்டபோது அபூபக்ராவை நான் சந்தித்து கேட்டேன். அதற்கவர் நானும் அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றேன்.” என்றார்.

அறிவிப்பவர் : அபி உஸ்மான் ரளியல்லாஹ் அன்ஹு

குறிப்பு: 1 உண்மையில் ‘ஜியாத்’ என்பவர் உபைது அத்தகபீயின் புதல்வராவர். பிறகு முஆவியா அவர்கள் ஜியாத் தனது தந்தை அபுசுபியானின் மகன்தான் என அவரையே (ஜியாதையே) கூறவும் வைத்துவிட்டார். இந்த நிலை தவறு என விளக்கி கூறவே இந்த ஹதீஸ் வந்துள்ளது.

ஹதீஸ் எண் : 50

“ஒரு மனிதன் தன் தந்தை அல்லாதவரை (அவருக்கு தான் மகன் இல்லை என) நன்கு தெரிந்திருக்க தன்னை அவர் மகனாக வாதிப்பாரேயானால், அவர் காஃபிராகவிட்டவரே தவிர வேறில்லை.

தன்னுடையதல்லாத ஒன்றை ஒருவர் தனக்குரியதென வாதிப்பாரேயானால் அவர் நம்மைச் சேர்ந்தவரல்லார்.அவர் தனது ஒதுங்குமிடத்தை நரகமாக்கி கொள்ளட்டும்.

ஒருவர் அவ்வாறு இல்லாமல் இருக்க அவரை ஒரு மனிதர் காஃபிர் என்றோ அல்லது அல்லாஹ்வின் எதிரி என்றோ கூறினால் அதை சொன்னவருக்கே அது திரும்பி விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : அபூதர்ரு ரளியல்லாஹ் அன்ஹு

ஹதீஸ் எண் : 51

“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அல்லாஹ்விடத்தில் பாவத்தில் மிகப்பெரிய பாவம் எது?” என ஒரு மனிதர் கேட்டார்.

“அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனு(அல்லாஹ்வு)க்கு சமமாக வேறொன்றை (வணங்குவதற்காக) அழைப்பது.” என்றார்கள்.

“அதற்கு பிறகு எது?” என அம்மனிதர் கேட்டார்.

“உன்னுடன் அவன் உணவருந்துவதைப் பயந்து உன் பிள்ளையை நீ கொல்லுவதாகும்” என்றனர்.

“அதற்குப் பிறகு எது?” என அம்மனிதர் கேட்டார்.

“உனது அடுத்த வீட்டுக்காரரின் மனைவியை விபச்சாரம் செய்வதாகும்” என்றனர்.

அதை உண்மைப்படுத்தும் விதமாக கண்ணியத்திற்கும், மகத்துவத்திற்குமுரியவனான அல்லாஹ் (தன் திருமறையில்) அவர்கள் (ரஹ்மானின் அடியார்கள்) அல்லாஹ்வுடன் வேறொரு வணங்கப்படுபவனை அழைக்கமாட்டார்கள். இன்னும் அல்லாஹ் விலக்கிய எந்த உயிரையும் உரிமையின்றி கொல்லமாட்டர்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இவற்றில் எதையேனும் யாரேனும் செய்வாரேயானால் அப்பாவத்தின் பலனை (நரகத்தில்) சந்திப்பார்கள் ” (அல்குர்ஆன் 25 : 68) என்ற வசனத்தை இறக்கி வைத்தான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹு

“அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காது இறப்பெய்தியவர் சுவனம் புகுந்து விட்டார்” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 52

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் வந்து “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இரண்டையும் (சுவனத்தையும், நரகத்தையும்) கடமையாக்கி வைக்கக்கூடியது (பற்றிய காரியங்கள்) எது ?” எனக் கேட்டார்.

அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்காது யார் இறப்பெய்து விட்டாரோ அவர் சுவனம் புகுந்துவிட்டார். அல்லாஹ்விற்கு எதையும் இணை வைத்தவராக இருக்க ஒருவர் இறப்பெய்து விட்டால் அவர் நரகம் புகுந்து விட்டார்.” எனக் (அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹ் அன்ஹு

ஹதீஸ் எண் : 53

நான் (அபூதர்ரு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தேன். அவர்கள் உறங்கிக்கொண்டு இருந்தனர். அவர்கள் வெள்ளை நிற உடையை அணிந்திருந்தனர். பிறகு (இரண்டாம் முறை) வந்தேன். அப்போதும் அவர்கள் உறங்கிக் கொண்டு இருந்தனர். மற்றொரு (மூன்றாம்)முறையும் வந்தேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூக்கத்திலிருந்து விழித்து விட்டனர். அவர்களுக்கு அருகில் அமர்ந்தேன். (அப்போது) “எந்த அடியானும் லாஇலாஹ இல்லல்லாஹு எனக் கூறி அதன்பிறகு அதிலேயே இறந்துவிட்டாரேயானால் அவர் சுவனம் புகாமல் இருப்பதில்லை” எனக் கூறினார்கள்.

“அவர் விபச்சாரம் செய்தாலும் திருடினாலுமா?” எனக் கேட்டேன். அவர் விபச்சாரம் செய்தாலும் திருடினாலும் தான் என்றனர். இரண்டாம் முறையும் மூன்றாம் முறையும் கேட்டேன். அதே பதிலையே கூறினாhர்கள். நான்காவது முறையாக நான் கேட்கும்போது அபூதர்ரின் மூக்கு மண்ணைத்தொட (அவருக்கு அது இஷ்டமில்லையெனினும்) என்றார்கள். இதைக் கேட்ட நான் அபூதர்ரின் மூக்கு மண்ணைத்தொட்டாலும் (அவருக்கே அது இஷ்டமில்லையெனினும்) என்று கூறிக்கொண்டே நான் (அபூதர்ரு) அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.

இச்சம்பவத்தை அபூதர்ரு ரளியல்லாஹ் அன்ஹு அவர்களே தனக்கு அறிவித்ததாக அபுல் அஸ்வது அத்தீலி ரளியல்லாஹ் அன்ஹு அறிவிக்கிறார்கள்.

“யார் மனதில் அணுவளவு பெருமை இருந்ததோ அவர் சுவனம் புகமாட்டார்” என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 54

“யார் மனதில் அணுவளவு பெருமை இருந்ததோ அவர் சுவனம் புகமாட்டார்” என நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

“நிச்சயமாக ஒரு மனிதன் தனது உடை அழகாக இருக்க வேண்டும் எனவும் தனது காலணி அழகாக இருக்க வேண்டுமெனவும் விரும்புகிறார்” (அது பற்றி என்ன?) என ஒரு மனிதர் கேட்டார்.

(அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். (அவன்) அழகானதையே விரும்புகிறான். பெருமை என்பது அகம்பாவம் கொண்டவன் உண்மையை மறுப்பதும், மனிதர்களைக் கேவலமாக (இழிவாக)க் கருதுவதுமாகும் என்றனர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹு

வம்சாவழியைக் குறைகூறுவதும் ஓலமிட்டு அழுவதும் இறை நிராகரிப்பாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 55

மனிதர்களுக்கு மத்தியில் இரண்டு விஷயங்கள் உள்ளன. இவை இரண்டும் அவர்களிடத்தில் இருப்பின் அது இறை நிராகரிப்பை குறிக்கும். அவை வம்சாவழியைக் குறைகூறுவதும் மையித்தின் நிமித்தம் ஓலமிட்டு அழுவதும் ஆகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

கிழக்கு நட்சத்திரம் விழுந்தால் மழை பெய்தது என யார் கூறினாரோ? அவர் இறை நிராகரிப்பு செய்து விட்டார் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 56

ஹுதைய்பியாவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு பஜ்ரு தொழுகை வைத்தார்கள். அந்த இரவில் மழை பெய்து ஈரமாக இருந்தது. அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு ஜனங்களை நோக்கி வந்தார்கள். “உங்களது இரட்சகன் என்ன கூறினான் என்று உங்களுக்கு தெரியுமா?” எனக் கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்தவர்கள்) “அல்லாஹ்வும் அவனது ரசூலுமே மிகத் தெரிந்தவர்கள்” என்றனர். (அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) “எனது அடியார்களில் என்னை விசுவாசித்தவர்களும் என்னை நிராகரித்தவர்களும் காலைப்பொழுதை அடைந்துவிட்டனர். (அதாவது)” அல்லாஹ்வின் பேரருளாலும், அவனுடைய கிருபையாலும் தான் மழை பொழிவிக்கப்பட்டோம் என யார் கூறினார்களோ அவர் என்னை விசுவாசித்தவரும், நட்சத்திரங்களை நிராகரித்தவரும் ஆவார். எவர் “அதிகாலையில் கிழக்கு பகுதியில் நட்சத்திரம் விழுந்ததினால்தான் மழை பொழிவிக்கப்பட்டோம் எனக் கூறினாரோ அவர் என்னை நிராகரித்து விட்டு நட்சத்திரத்தை நம்பியவராவார் என அல்லாஹ் கூறினான்” என கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜைதுபின்காலிக் அல்ஜுஹைன் ரளியல்லாஹ் அன்ஹு

அடிமை ஓடி ஒளிந்துகொள்வது இறை நிராகரிப்பு என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 57

“எந்த அடிமையாயினும் தனது எஜமானர்களிடமிருந்து ஒடிவிடுவாரேயானால் அவர் மீண்டும் தமது எஜமானர்கள்பால் திரும்பும்வரை காஃபிராகவே இருக்கிறார்.” என்று ஜரீர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் சொல்லும்போது தான் கேட்டதாக ஷஅபீ ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

உறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக (முஸ்லிமில் ‘ருவிய’ என இருப்பதை அடிப்படையாக வைத்து) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை உயர்த்தப்பட்ட நிலையில் தான் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் நான் அறிவித்ததாக இங்கே பஸராவில் அறிவிக்கப்படுவதை நான் வெறுக்கிறேன் என மன்ஸுர் ரளியல்லாஹ் அன்ஹு கூறுகிறார்.

குறிப்பு : இந்த ஹதீஸை மன்ஸுர் ரளியல்லாஹ் அன்ஹுக்கு ஷஅபீ ரளியல்லாஹ் அன்ஹு கூறியதாக ஷஅபீ ரளியல்லாஹ் அன்ஹுக்கு ஜரீர் ரளியல்லாஹ் அன்ஹு கூறியதாக அறிவித்து விட்டு, அறுதியிட்டு சத்தியம் செய்து உறுதியாக சொல்கிறார். இந்த ஹதீஸ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டதுதான் ஆயினும் பஸராவில் ஈமான் உடையவர்கள் பாவம் செய்யின் அவர்கள் “நிரந்தரமாக நரகத்தில் இருப்பர் என முஃதஜிலா கவாரிஜ் ஆகிய குழுவினர் கூறிக்கொண்டு இருந்ததால் இந்த ஹதீஸை பஸராவில் அறிவிப்பதை நான் வெறுக்கிறேன் ” என மன்ஸுர் ரளியல்லாஹ் அன்ஹு கூறுகிறார்.

நூல் ஷரஹ்நவவீ பாகம் 2 பக்கம் 59

ஹதீஸ் எண் : 58

ஒரு அடிமை (தனது எஜமானர்களிடமிருந்து) ஒடிவிட்டால் அவரது தொழுகை அங்கீகரிக்கப்படமாட்டாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜரீர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எனது காரியஸ்தன் அல்லாஹ்வும் விசுவாசிகளில் நல்லவர்களும் ஆவார் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 59

“தெரிந்துகொள்ளுங்கள்! எனது தந்தையின் குடும்பத்தவர்(களில் இன்னவர்) எனது காரியஸ்தர்களல்லர் எனது காரியஸ்தன் அல்லாஹ்வும், விசுவாசிகளில் நல்லவர்களும் ஆவார்” என பகிரங்கமாக ஒளிவுமறைவுமின்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

அறிவிப்பவர் : அம்ரு பின் அல்ஆஸ் ரளியல்லாஹ் அன்ஹு

முஃமினானவருக்கு அவரின் நல்லவை(அமல்)களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி உண்டு. காஃபிரானவர் செய்த நல்லவைகளுக்கு இம்மையிலேயே துரிதமாக கூலி கொடுக்கப்பட்டுவிடும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 60

முஃமினானவருக்கு அவர் செய்த நல்லவை(அமல்)களுக்கு பகரத்தை இவ்வுலகில்(மட்டும்) கொடுத்துவிட்டு மறுமையில் கொடுக்காமல் நிச்சயமாக அல்லாஹ் அநீதி இழைக்க மாட்டான்.

“காஃபிரானவருக்கு அவர் (அல்லாஹ்விற்கென) செய்த நல்லவைகளுக்கு பகரமாக இவ்வுலகிலேயே உணவளிக்கப்படுகிறார். அவர் மறுமையின் பால் சேர்ந்துவிட்டால் (மரணித்துவிட்டால்) நற்கூலி நல்கப்படுவதற்குரிய எந்த ஒரு நன்மையும் அவருக்கு இருக்கவே இருக்காது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அனஸ்பின் ரளியல்லாஹ் அன்ஹு

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்