Social Icons

Wednesday 17 October 2012

பிரயாணத் தொழுகை

   கடமையான தொழுகையை குறித்த நேரத்தில் தொழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. எனினும் பிரயாணிகளுக்கு அல்லாஹ் சில சலுகைகளை தந்துள்ளான். இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் தொழலாம். அதைப் போன்று நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக சுருக்கி தொழலாம்.    சுமார் 25 கிலோமீட்டர் தொலைவுக்குப் பிரயாணம் செய்தாலே ஜம்வு (இருநேரத் தொழுகையை சேர்த்து தொழுதல்) கஸ்ர் (நான்கு ரக்அத்கள் தொழுகையை இரண்டு ரக்அத்களாக குறைத்து தொழுதல்) செய்யலாம்.
   “நபி صلى الله عليه وسلم அவர்கள் மூன்று மைலோ அல்லது மூன்று பர்ஸக் அளவோ பயணம் செய்தால் கஸ்ர் செய்வார்கள்” அறிவிப்பவர்: அனஸ்  رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்

 
   இந்த ஹதீஸில் மைலா? பர்ஸக்கா? என்று அறிவிப்பாளர் சந்தேகம் கொள்கிறார். மைலை விட பர்ஸக் என்பது கூடுதலான தூரமாகும். எனவே பேணுதலின் அடிப்படையில் பர்ஸக்கை நாம் எடுத்துக்கொள்வோம். மூன்று பர்ஸக் என்பது 4 மைல்களாகும். அன்றைய அரபியர்களின் கணக்குப்படி இன்றைய அளவு சுமார் 25 கிலோ மீட்டர் ஆகும். எனவே, ஒருவர் 25 கி.மீ பிரயாணம் செய்தால் ஜம்வு-கஸ்ர் செய்யலாம்.
   “தொழுகை ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத் தான் கடமையாக்கப்பட்டது. பிரயாணத் தொழுகை அவ்வாறே நீடித்தது. (சொந்த)ஊரில் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டது.”  அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
   “மதினாவில் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் லுஹர் தொழுகையை நான்கு ரக்அத்களாக தொழுதேன். நபி صلى الله عليه وسلم அவர்கள் மக்கா செல்ல நாடி புறப்பட்டார்கள். (இடயில் உள்ள ஊரான) துல்ஹுவைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்” அறிவிப்பவர்: அனஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
    ஜம்வு (சேர்த்துத் தொழுதல்)
   லுஹர் நேரத்திலேயே  லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழலாம். மக்ரிப் நேரத்திலேயே மக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழலாம். மேலும் வெளியூர் செல்ல நாடினால் உள்ளூரிலேயே இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழலாம். எனினும், குறைக்காமல் முழுமையாகத் தொழவேண்டும்.
   “சூரியன் சாய்வதற்கு முன் நபி صلى الله عليه وسلم அவர்கள் பிரயாணம் மேற்கொண்டால் லுஹரை அஸர் நேரம் வரும்வரை தமதப்படுத்தி அஸர் நேரம் வந்ததும் இரண்டு நேரத் தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். பிரயாணத்தைத் துவங்கு முன் சூரியன் சாய்ந்துவிட்டால் லுஹரைத் தொழுதுவிட்டு புறப்படுவார்கள்” அறிவிப்பவர்: அனஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: புகாரி, முஸ்லிம்
   நபி صلى الله عليه وسلم அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மக்ரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். அறிவிப்பவர்: உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி

   கஸ்ர் (குறைத்துத் தொழுதல்)
   பிரயாணத்திலிருப்பவர்கள் ஜம்வு செய்யும் போது (இரண்டு நேரத் தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுதல்) இரண்டு தொழுகைகளுக்கும் ஒரு பாங்கு சொல்லிவிட்டு, ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியே இகாமத் சொல்ல வேண்டும்.
   “ஒரு பிரயாணத்தில் சூரியன் உச்சிலிருந்து சாய்ந்ததும் நபி صلى الله عليه وسلم அவர்கள் பாங்கு சொல்லி பின்னர் இகாமத் சொல்லி தொழுதார்கள். பின்பு மற்றொரு இகாமத் சொல்லி அஸர் தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்
   பயணியாக இருந்து விரும்பினால் கஸ்ர் செய்யாமல் முழுமையாகவும் தொழலாம்.
   “நான் நபி صلى الله عليه وسلم அவர்களுடன் மதினாவிலிருந்து மக்கா நோக்கி உம்ரா செய்யப் புறப்பட்டேன். நான் மக்காவை அடைந்தபோது, “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். நீங்கள் கஸ்ர் செய்கிறீர்கள். நான் முழுமையாகத் தொழுகிறேன். நீங்கள் நோன்பு நோற்கவில்லை.. நான் நோன்பு நோற்கிறேன்” என்று நான் கேட்டபோது “ஆயிஷாவே! சரியாகச் செய்தீர்” என்றார்கள். என்னைக் குறை காணவில்லை!” அறிவிப்பவர்: ஆயிஷா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: நஸயீ

   பாங்கு – இகாமத்
   ஒரு பிரயாணத்தில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்ததும் நபி صلى الله عليه وسلم அவரகள் பாங்கு சொல்லி இகாமத் சொல்லி தொழுதார்கள். பின்பு மற்றொரு இகாமத் சொல்லி அஸர் தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْ நூல்: முஸ்லிம்

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்