Social Icons

Monday 1 October 2012

மரணத்தை நெருங்கியவர் இறுதியாகச் செய்ய வேண்டியது



மரணத்தை நெருங்கியவர் கடைசியாக லாயிலாஹ இல்லலல்லாஹ் என்ற கலிமாவைக் கூறிக் கொண்டே இருக்க வேண்டும். கடைசிச் சொல்லாக இந்தக் கொள்கைப் பிரகடனம் அமையுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணத்தை நெருங்கிய போது தமது கைகளைத் தண்ணீருக்குள் விட்டு முகத்தில் தடவிக் கொண்டு லாயிலாஹ இல்லல்லாஹ், மரணத்தினால் கடும் துன்பம் ஏற்படுகிறது எனக் கூறினார்கள். பின்னர் தமது கைகளை ஊன்றி ஃபிர் ரஃபீகில் அஃலா (மிகச் சிறந்த நண்பனை நோக்கி...) என்று கூறிக் கொண்டிருக்கும் போது உயிர் கைப்பற்றப்பட்டது. அவர்களின் கை சாய்ந்தது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 4449, 6510

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது ஃபிர் ரஃபீகில் அஃலா என்று கூறலானார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 4436

நபிகள் நாயகம் ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் அல்லாஹும்ம ஃபிர்லீ வர்ஹம்னீ வஅல்ஹிக்னீ பிர்ரஃபீக் என்று கூறியதை நான் காது கொடுத்துக் கேட்டேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 4440
இறைவா என்னை மன்னித்து அருள் புரிவாயாக! நண்பனுடன் என்னைச் சேர்ப்பாயாக! என்பது மேற்கண்ட துஆவின் பொருள்.

மரணத்திற்கு அஞ்சி ஓட்டம் பிடித்தல்
நாம் வசிக்கும் ஊரில் வயிற்றுப் போக்கு, பேதி, காலரா, பிளேக் போன்ற கொடிய நோய் பரவி அங்குள்ள மக்கள் அதிக அளவில் மரணிக்க நேர்ந்தால் நமது ஊரை விட்டு ஓட்டம் பிடிக்கக் கூடாது.
மற்றொரு ஊரில் இது போன்ற நோய்களால் மக்கள் மரணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தால் அவவூருக்குப் பயணம் செய்யக் கூடாது.

ர் ஊரில் பிளேக் நோய் இருப்பதைக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் வாழும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டால் ஊரை விட்டு ஓட்டம் பிடிக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உஸாமா பின் ஸைத் (ரலி)
நூல்: புகாரி 3473, 5728, 6974

பிளேக் நோய் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் தான் நாடியவர்களைத் தண்டிப்பதற்காக அல்லாஹ் அனுப்பும் வேதனை தான் அது என்று கூறிவிட்டு மூமின்களுக்கு (இறை நம்பிக்கையாளருக்கு) அல்லாஹ் அதை அருளாக ஆக்கியுள்ளான். ஒருவர் வசிக்கும் ஊரில் பிளேக் நோய் ஏற்பட்டு, அல்லாஹ் நாடியதைத் தவிர வேறு எதுவும் நமக்கு ஏற்படாது என்று சகித்துக் கொண்டும் நன்மையை எதிர் பார்த்தும் தங்கி விட்டால் அவருக்கு ஷஹீத் - உயிர்த் தியாகி - உடைய கூலி கிடைக்காமல் இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)  நூல்: புகாரி 3474, 5734, 6619

அலலாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் வைத்தல் அவசியம்
மரணத்தை நெருங்கும் போது நாம் செய்த தவறுகள் நினைவுக்கு வரும். இதற்காக இறைவன் நம்மிடம் கொடூரமாக நடந்து கொள்வானோ என்று எண்ணாமல் அவனிடம் மன்னிப்புக் கேட்டால் நம்மை மன்னித்து அரவணைப்பான் என்று நல்லெண்ணம் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வைப்பற்றி நல்ல எண்ணம் கொண்டவராகவே தவிர உங்களில் எவரும் மரணிக்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன் கூறினார்கள்.    அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)  நூல்: முஸ்லிம் 5124, 5125

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்