Social Icons

Sunday 28 October 2012

தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

தப்லீக் ஜமாத் என்ற பெயரில் உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இயக்கம் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை உண்மை முஸ்லிம்களாக வாழச்செய்யும் உயர் நோக்கில் தோற்றுவிக்கப்பட்ட இயக்கமாகும்.
 
 பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வை மறந்து வாழ்ந்த மக்களையும், சமாதி வழிபாடுகளிலும் தனிநபர் வழிபாட்டிலும் மூழ்கிக்கிடந்த மக்களையும், இஸ்லாமியக்கடமைகள் இன்னதென்று அறியாமல் அவற்றை அலட்சியப்படுத்தி வாழ்ந்த மக்களையும் கண்டு பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலைப்பட்டு துவக்கிய இயக்கமே தப்லீக் இயக்கமாகும்.
 இந்த இயக்கம் புத்துயிர் பெற்ற பிறகு சமாதிகளில் மண்டியிட்டவர்கள் அல்லாஹ்வின் சன்னதியில் சிரம் பணியலானார்கள். பூட்டிக்கிடந்த இறையில்லங்கள் தொழுகையாளிகளால் நிரப்பப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் பற்றிய மதிப்பு மக்களின் உள்ளங்களில் அதிகமாகியது.
 இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் தங்களின் பொருளையும், உழைப்பையும் தியாகம் செய்கின்ற நிலை ஏற்பட்டது. மவ்லவிகள் மட்டுமே மார்க்கத்தைச் சொல்லத்தக்கவர்கள் என்ற நிலை இந்த ஜமாத்தின் எழுச்சியினால் ஓரளவாவது மாறியது. இதெல்லாம் இந்த இயக்கத்தினால் சமுதாயத்திற்கு கிடைத்த நற்பயன்கள். அதில் ஈடுபாடு கொண்ட மக்களின் நோக்கத்தில் இன்றளவும் குறைகாணமுடியாது.
 ஆனாலும் பெரியார் இல்யாஸ் (ரஹ்) அவர்களின் புதல்வர் யூசுப் (ரஹ்) ஆகியோரின் மறைவிற்குப்பிறகு இந்த இயக்கத்தின் மார்க்க அறிஞர்கள் தப்லீகின் உயர் நோக்கத்திலிருந்து அதைத் திசை திருப்பும் பணியில் ஈடுபடலானார்கள்.
 மனிதர்களுக்கும், பெரியார்களுக்கும் அளவு கடந்த மரியாதை செய்யும் அளவுக்கு மக்களின் மூளைகளை சலவை செய்யலானார்கள். மீண்டும் சமாதிவழிபாட்டுக்கும் தனிமனித வழிபாட்டுக்கும் மக்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபடலானார்கள்.
 இந்தபணியைச் செய்தவர்களில் முதலிடத்திலிருப்பவர் உ.பி மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஸகரிய்யா சாஹிப் என்பவர் காலம் சென்ற இவர் தனக்கும் அப்போதைய ஹஜ்ரத்ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீகின் தஃலீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.
 குர்ஆனையும், நபிவழியையும் கற்பிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் இவர் எழுதிய கற்பனைகளும்,கதைகளும் படிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது.
 குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற இவரது தஃலீம் தொகுப்பு, தப்லீக் ஜமாத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது.
 தப்லீக் ஜமாத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக ​இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.
 தொழுகையின் சிறப்பு,ஸதகாவின் சிறப்பு, ரமலானின் சிறப்பு என்றெல்லாம் பலவேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இவரது நூலில் மிகவும் தந்திரமாக எவருக்கும் சந்தேகம் வாரத வகையில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன. ஸகரியா சாகிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன்பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை விற்க ஆரம்பித்து விடுவார்.
 ஆரம்பத்தில் உள்ள சில பக்கங்களில் இவர் மக்கள் உள்ளங்களில் நல்ல இடத்தைப் பெற்று விடுவதால் அடுத்தடுத்து இவர் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் கண்டு கொள்வதில்லை எனவே தான் தஃலீம் தொகுப்புகளில் மலிந்துள்ள அபத்தங்களை நாம் இனம் காட்ட வேண்டியுள்ளது. அதிலுள்ள அபத்தங்கள் அனைத்தையும் எழுதுவதென்றால் பல ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டும். ஆகவே சிந்தனையாளர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சில அபத்தங்களை மட்டும் நாம் இனம் காட்டுகிறோம்.
தொழுகையா? சொர்க்கமா?
 இப்னு ஸீரின் (ரஹ்) கூறுகிறார்கள்; சொர்க்கம் செல்லுதல், இரண்டு ரக்அத்கள் தொழுதல். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத்தேர்ந்தெடுத்துக் கொள்ள எனக்கு அனுமதியளித்தால் இரண்டு ரக்அத்கள் தொழுவதையே நான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். ஏனெனில் சொர்க்கம் செல்வது என்னுடைய மகிழ்ச்சிக்காக வேண்டியதாகும். இரண்டு ரக்அத்கள் தொழுவதோ என்னுடைய எஜமானனின் திருப்திக்காக வேண்டியதாகும்.
 தொழுகையின் சிறப்பு என்ற பகுதியில் பக்கம் 25 ல் இவ்வாறு கதையளக்கிறார் ஸகரிய்யா சாஹிப்.
 மேலோட்டமாகப்  பார்க்கும் போது தொழுகையின் சிறப்பைக் கூறுவது போல் இது தோற்றமளித்தாலும் சிந்தித்துப் பார்க்கும் போது இதில் மலிந்துள்ள அபத்தங்கள் தெரியவரும்.
 இப்னு ஸீரின் என்பவர் மிகவும் சிறந்த மார்க்க அறிஞர் ஆவார். ஹிஜ்ரி 110 ல் மரணமடைந்த இப்பெரியார் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அதன் வார்த்தைகளில் கூட மாற்றம் செய்யாமல் அறிவிக்கும் அளவுக்குப் பிடிப்புள்ளவர்.
 இது போன்ற பெரியார்களின் பெயரைப் பயன்படுத்தினால் தான் மக்களிடம் எடுபடும் என்பதற்காக அந்தப் பெரியாரின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார் ஸகரிய்யா சாஹிப். இப்னு ஸீரின் இவ்வாறு கூறினால் எந்த நூலில் இது இடம் பெற்றுள்ளது? அந்த நூல் எந்த ஆண்டில் யாரால் எழுதப்பட்டது? ஹிஜ்ரி 110 ல் மரணமடைந்த அப்பெரியார் இவ்வாறு கூறுயிருந்தால் அந்தக்காலக்கட்டத்திலோ அதற்கடுத்த காலகட்டத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இது இடம் பெற்றுள்ளதா? என்று எந்த விபரத்தையும் ஸகரிய்யா சாஹிப் கூறவில்லை. இப்னு ஸீரின் என்னவோ இவரது வகுப்புத் தோழர் போலவும் அவர் வந்து நேரில் கூறியது போலவும், 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பற்றி சித்தரிக்கிறார் ஸகரிய்யா சாஹிப். இந்தப் பெரியார் இவ்வாறு கூறியிருக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு இதன் தவறுகளை ஆராய்வோம்.
 அல்லாஹ்வோடு அவனது அடியார்கள் நடந்து கொள்வதற்கு சில ஒழுங்குகள் உள்ளன. அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்பது போலவோ, அல்லாஹ் சொன்னதைவிட சிறந்ததை அல்லாஹ்வுக்குச் சொல்லிக் கொடுப்பது போலவோ ஒரு அடியான் பேசினால் அவன் அல்லாஹ்வின் மதிப்பை உணரவில்லை என்று பொருள்.
 தொழுகை மற்றும் ஏனைய வணக்கங்களை நிறைவேற்றினால் அதன் பரிசு சுவர்க்கம் என்பது இறைவனின் எற்பாடு. இந்த ஏற்பாட்டை குறை காண்பது உண்மை முஸ்லிமுக்கு அழகல்ல.
 “முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஆக்குவதற்குப் பதில் என்னை நபியாக அவன் ஆக்கியிருந்தால் இப்படிச் செய்திருப்பேன்” என ஒருவன் கூறினால் அதை எந்த முஸ்லிம் ஜீரணிக்கமாட்டான். இறைவன் அவ்வாறு ஆக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது “அவ்வாறு ஆக்கியிருந்தால்...” எனக்கூறுவது ஆணவப்போக்காகவே கருதப்படும். சொர்க்கத்தையும், இரண்டு ரக்அத் தொழுவதையும் எதிரெதிரே நிறுத்தி இதில் எது வேண்டும் என இறைவன் கேட்க மாட்டான்.  
 இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல. ஒன்றுக்கு பரிசு மற்றொன்று என்ற வகையில் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இறைவனுடன் மரியாதைக்குறைவாக நடக்கும் இது போன்ற வார்த்தைகளை ஸகரிய்யா சாஹிப் சொல்ல முடியுமே தவிர பெரியார் இப்னு ஸீரின் சொல்லியிருக்க மாட்டார்கள்.
 இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு இறைவன் கூறினால் நான் தொழுவதையே தேர்ந்தெடுப்பேன் என்பதில் மற்றொரு தவறும் உள்ளது.
 ஒரு பேச்சுக்காக இப்படி இறைவன் கேட்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படிக் கேட்கும்போது இவர் இதைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்று எப்படிக் கூற முடியும்?
 அந்த நேரத்தில் இறைவன் எத்தகைய முடிவு எடுக்கும் வகையில் நம் உள்ளத்தைப் புரட்டுகின்றானோ அந்த முடிவைத் தான் எடுக்க முடியுமே தவிர இந்த முடிவைத் தான் எடுப்பேன் என்று கூற முடியாது. அவ்வாறு கூறுவதும் ஆணவப்போக்காகும். எவரும் தான் நினைத்தவாறெல்லாம் முடிவெடுப்பேன் என்று கூறமுடியாது.
 “சொர்க்கம் செல்வது என்னுடைய மகிழ்ச்சிக்காக வேண்டியதாகும். இரண்டு ரக்அத்கள் தொழுவது என்னுடைய எஜமானனின் திருப்திக்காக வேண்டியதாகும்” என்ற வாசகமும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்றது.
 இந்த வாசகத்தில் இறைவன் தொழுகையின்பால் தேவையுள்ளவன் போன்று சித்தரிக்கப்படுகின்றான். இறைவன் எதை எப்போது செய்யச் சொல்கின்றானோ அப்போது அது இறைவனின் திருப்திக்கு உரியதாகின்றது. இறைவன் தொழச்சொல்லும் போது தொழுவதும் தொழாதே என்று சொல்லும் போது தொழாமலிருப்பதும் தான் இறைவனின் திருப்திக்குரியதாகும்.
 நோன்பு வைப்பது இறைவனின் திருப்திக்காக. பெருநாள் எனது திருப்திக்காக. எனவே நான் இறைவன் திருப்திக்காக பெருநாள் அன்று நோன்பு வைப்பேன் என்று ஒருவன் கூறினால் அவனை விட அறிவிலி எவனும் இருக்க முடியாது. இப்படிச் செய்வதால் இறைவனின் கடுமையான கோபத்திற்கு அவன் ஆளாகுவான். இறைவனின் திருப்தியைப் பெறமுடியாது.
 இறைவன் சுவர்க்கத்துக்குப் போகச் சொல்லும் போது “எனக்கு சுவரக்கம் வேண்டாம் தொழப் போகிறேன்” என்று கூறுபவனுக்கும் பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பவனுக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை.
 தொழுகையின் சிறப்பை விளக்க, குர்ஆனில் எத்தனையோ வசனங்கள் உள்ளன. ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அதை விடுத்து இது போன்ற அபத்தங்களைக் கூறி தொழுகையின் சிறப்பை விளக்க எந்த அவசியமும் இல்லை.
 “பெரியார்கள் எவ்வளவு ஈடுபாடுடன் இருந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று புருவத்தை உயரச்செய்வதே இதன் நோக்கம்.
 பாவங்களைப் பார்க்காத பெரியார்
 கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த நல்லோர்களைப் பற்றி பொய்களையும் மிகையான புகழுரைகளையும் தப்லீகின் தஃலீம் தொகுப்பில் ஏராளமாக நாம்காண முடிகிறது. இந்த வகையிலமைந்த பொய் ஒன்றைக் காண்போம்.
 உளூ செய்பவர் கழுவப்பட வேண்டிய உறுப்புக்களை கழுவும் போது அவ்வுறுப்புகளால் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதால் உண்மை முஸ்லிம்களுக்கு இதில் எந்த சந்தேகமும் ஏற்படப் போவதில்லை. இது பற்றி வந்துள்ள ஹதீஸ்களை விளக்கவுரை ஏதுமின்றி மொழிமாற்றம் செய்தாலே உளூவின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
 ஸகரிய்யா சாஹிப் இது பற்றி வந்துள்ள ஒரு ஹதீஸை எழுதிவிட்டு அதற்கு விளக்கவுரை என்ற பெயரில் கதையளந்திருக்கிறார்.
 “கஷ்ப் என்னும் அகப்பார்வை உடைய பெரியோர்களுக்கு உறுப்புகளிலிருந்து பாவங்கள் நீங்குவது புலப்படுகிறது. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய சம்பவம் பிரபலமானதாகும். உளூச் செய்யும் போது அதன் மூலம் எந்தப்பாவம் கழுவப்படுகிறது என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.”
(பார்க்க தொழுகையின் சிறப்பு பக்கம் 27)
 உளூவின் சிறப்பு பற்றி விளக்குவதற்கு இந்த இடத்தில் இந்தக்கதை அவசியமில்லாமலிருந்தும் வலுக்கட்டாயமாக இந்த இடத்தில் நுழைக்கப்படுகிறது. இதை நாம் பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்க வேண்டியது அவசியம்.
 ஸகரிய்யா சாஹிப் கூறுவது போல் கஷ்பு எனும் அகப்பார்வை என்று ஒன்று உண்டா: திருக்குர்ஆனிலோ ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ இதற்கு உண்டா? நிச்சயமாக இல்லை. சூபியாக்கள் என்ற வழி கேடர்களும் முரீது வியாபாரிகளும் கண்டுபிடித்த தத்துவமே கஷ்பு என்பது.
மற்றவர்களுக்கு இருப்பதைவிட கூடுதலான மரியாதையை மக்களிடமிருந்து பெறுவதற்காக தங்களுக்கு அகப்பார்வை உண்டு என்று கூறி மக்களை இவர்கள் மிரளச் செய்தார்கள். இந்தப் போலி ஞானத்தையே ஸகரிய்யா சாஹிப் அவர்கள் இங்கே இஸ்லாத்தின் பெயரால் அறிமுகம் செய்கிறார்.
 இறைவனுடன் வஹீ எனும் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களுக்குத்தான் இறைவன் புறத்திலிருந்து மற்றவர்களுக்கு கிடைக்காத ஞானம் கிடைக்குமே தவிர மற்றவர்களுக்கு விசேஷ ஞானம் எதுவுமில்லை.
 கஷ்பு எனும் அகப்பார்வை இருப்பது உண்மையானால் அந்த அகப்பார்வை இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு இருந்தது உண்மையானால் அவர்களை விட பலமடங்கு உயர்வான மதிப்புடைய நபித்தோழர்களுக்கு அந்த ஞானம் இருந்திருக்க வேண்டும். ஆனால் நபித்தோழர்களில் எவருமே எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அறிந்திருந்தார்கள் என்று காணமுடியவில்லை. நபித்தோழர்கள் கஷ்பு எனும் ஞானத்தின் வாயிலாக இதை அறிந்திருப்பார்களானால் பாவங்கள் கழுவப்படுகின்றன, என்ற விபரத்தை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கூற வேண்டிய அவசியமில்லை.
 நபித்தோழர்களை விட்டு விடுவோம். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் எத்தனையோ நபித்தோழர்கள் உளூச் செய்திருக்கிறார்கள். அது போன்ற சந்தர்ப்பங்களில் இவரது இந்தப் பாவம் கழுவப்படுகின்றது என்று நபி (ஸல்) கூறியதுண்டா? நிச்சயமாக இல்லை. ஸகரிய்யா சாஹிப் நபித்தோழர்களை விடவும் நபி (ஸல்) அவர்களை விடவும் உயர்வானவர்களாக, தான் பின்பற்றும் இமாமைக் கருதுகிறார். இது போன்ற மிகைப்படுத்தப்பட்ட பொய்யான புகழுரைகள் தான் மத்ஹபுகளையும் தரீக்காக்களையும் தாங்கிப் பிடித்து கொண்டிருக்கின்றன.
 மறைவான ஞானம் இறைவனுக்கு மாத்திரமே உரியது எனபதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒருவன் எவருக்கும் தெரியாமல் ஒரு பாவம் செய்கின்றான் என்றால் அதுபாவம் செய்தவனுக்கும் இறைவனுக்கும் மட்டும் தெரிந்த விஷயமாகும். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் கஷ்பு என்பது, அந்த ஞானத்தில் மற்றவர்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. கஷ்பு என்னும் ஞானம (?) பெற்றவர்கள் இறைவனுக்கு மாத்திரமே தெரிந்த இந்த இரகசியத்தையும் அறிந்து கொள்வார்கள் என்ற நச்சுக் கருத்து இதன் மூலம் இஸ்லாத்திற்குள் நுழைக்கப்படுவதை சிந்திக்கும் போது உணரலாம். இவர்கள் மதிக்கும் பெரியார்களுக்கு இறைத்தன்மையில் பங்கு போட்டுக் கொடுக்கும் இந்தக் கதையை எப்படி நம்ப முடியும்?
 மற்றொரு வழியிலும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம் உளூச் செய்யும்போது எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கண்டதை அவர்களைத் தவிர மற்ற எவரும் அறிந்து கொள்ள முடியாது. அபூஹனீபா (ரஹ்) அவர்களே தன்னைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தால் மட்டுமே மற்றவர்களால் அதை அறிய முடியும்.
அபூஹனீபா (ரஹ்) அவர்கள் எந்த நூலிலாவது தன்னைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்களா? நிச்சயமாக இல்லை. அல்லது இவர்கள் தமது மாணவர்களில் எவரிடமாவது கூறி அந்த மாணவர்களாவது எழுதி வைத்திருக்கின்றார்களா? அதுவும் இல்லை.
 அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் – அவர்கள் கூறாமல் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத இந்த விஷயம் – ஸகரிய்யா சாஹிபுக்கு எப்படித் தெரிந்தது? அபூஹனீபா (ரஹ்)  அவர்களின் காலத்திற்குச் சுமார் 1200 ஆண்டுகள் பின்னர் வாழ்ந்த ஒருவர் இதை எப்படி அறிய முடியும்? இந்த தஃலீம் தொகுப்பை தங்களின் வேதப்புத்தகமாகக் கொண்டாடுவோர் இதை விளக்குவார்களா?
 இறந்தவர்கள் பெயரால் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற அசட்டுத் துணிவில் மார்க்கத்துடன் விளையாடிப்பார்க்கிறது இந்த தஃலீம் தொகுப்பு.
 ஸஹாரன்பூர் அரபிக் கல்லூரியில் பல்லாண்டுகள் ஹதீஸ் வகுப்பு நடத்தி, தனக்குத் தானே ஷைகுல் ஹதீஸ் (ஹதீஸ் கலை மேதை) என்று பட்டம் சூட்டிக் கொண்ட ஸகரிய்யா சாஹிப் ஒரு ஆதாரமும் இல்லாமல் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சம்பவம் பிரபலமானதாகும் என்று மொட்டையான முத்திரையுடன் இதைப் பதிவு செய்தது எப்படி என்பது தான் விந்தையாக உள்ளது.
 அமல்களின் – வணக்க வழிபாடுகளின் சிறப்புகளைக் கூறுவது போன்ற பாணியில் பெரியார்களுக்கு தெய்வீக அம்சம் வழங்கி தங்களுக்கும் அதில் ஒரு பாதியை பங்கு போட்டுக்கொள்வதே இவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
 பணக்காரராகும் வழி என்ன?
 அல்லாஹ்வுடைய தனித்தன்மையைப் பெரியார்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாகவும், நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தில் மற்றவர்களையும் பங்காளிகளாக்கும் விதமாகவும் பலவேறு கப்ஸாக்களை தப்லீகின் தஃலீம் தொகுப்பில் நாம் காணமுடிகின்றது. இந்த வகையில் அமைந்த கப்ஸா ஒன்றைக் காணுங்கள்!
 ஹஜ்ரத் ஷகீக் பல்கீ (ரஹ்) என்பவர்கள் பிரபலமான சூபியும் பெரியாருமாவார்கள். அவர்கள் கூறியதாவது; நாம் ஐந்து விஷயங்களைத் தேடினோம். அவற்றை ஐந்து இடங்களில் பெற்றுக் கொண்டோம்.
1.      இரணத்தில் பரக்கத்து, லுஹாத் தொழுகையில் கிடைத்தது.
2.      கப்ருக்கு ஒளி, தஹஜ்ஜுத் தொழுகையில் கிடைத்தது.
3.      முன்கர் நகீரின் கேள்விக்கு பதில், கிராஅத்தில் கிடைத்தது.
4.      சிராத்துல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக்கடப்பது நோன்பிலும் சதகாவிலும் கிடைத்தது.
5.      அர்ஷுடைய நிழல் தனிமையிலிருப்பதில் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
 தொழுகையின் சிறப்புகள் பகுதியில் பக்கம் 37 ல் இந்தத் தத்துவம் (?) இடம் பெற்றுள்ளது. பயபக்தியுடன் இந்த கப்ஸாக்கள் பள்ளிவாசல்களில் வைத்துப் படிக்கப்பட்டு வருகின்றன். இதைப் பல கோணங்களில் நாம் அலசுவோம்.
 ஐந்து விஷயங்களை பல இடங்களில் தேடியதாகவும் அவற்றை ஐந்து இடங்களில் பெற்றுக் கொண்டதாகவும் ஷகீக் பல்கீ என்பவர் கூறியதாக ஸகரிய்யா சாஹிப் கூறுகிறார்.
 இரணத்தில் பரக்கத் லுஹாத் தொழுகையில் கிடைத்தது என்பது முதல் விஷயம். அவருக்கு இரணத்தில் பரக்கத் கிடைத்திருக்கலாம். அது லுஹாத் தொழுகையினால் தான் கிடைத்தது என்று அவருக்கு எப்படி தெரிந்தது? அவர் செய்த வேறு நல்ல அமல்களுக்காக அது கிடைத்திருக்க முடியாதா? அல்லது வேறு எந்த நல் அமலும் அவர் செய்ததேயில்லையா?
 இந்த அமல் செய்தால் இது கிடைக்கும் என்று அறிவிப்பது அல்லாஹ்வின் முடிவில் உள்ளது. அதை நபி (ஸல்) அவர்கள் வழியாக தவிர வேறு எவரும் அறிய முடியாது. லுஹாத் தொழுகையினால் இரணத்தில் பரக்கத் கிடைக்கும் என்று இவருக்கு வஹீ ஏதேனும் வந்ததா? ஸகரிய்யா சாஹிபுக்கே வெளிச்சம். இதையாவது அனுபவத்தின் வாயிலாக அறிந்ததாகக் கூறி சமாளிக்கலாம். ஏனைய நான்கு விஷயங்களை இவர் தெரிந்து கொண்டது தான் மிகப் பெரிய ஆச்சரியம்!
 கப்ருக்கு ஒளி தஹஜ்ஜுத் தொழுகையில் கிடைத்தது என்கிறார் ஸகரிய்யா சாஹிப், கப்ரில் ஒளி கிடைக்கும் என்றுகூட இவர் சொல்லவில்லை. கிடைத்தது என்கிறார். கப்ரில் ஒளி கிடைத்தது என்று கூறுவதென்றால் இவர் செத்துப் பிழைத்து இதைக் கூறினாரா? கப்ரில் ஒளி கிடைத்ததை இவர் வேறு எந்த வழியில் அறிந்து கொண்டார்? தப்லீக் அறிஞர்கள் விளக்குவார்களா?
 முன்கர் நகீரின் கேள்விக்கு பதில் கிராஅத்தில் கிடைத்தது என்கிறார். அப்படியானால் முன்கர் நகீரின் கேள்விகளை இவர் சந்தித்த பிறகு இதை கூறினாரா? அதாவது இறந்த பிறகு உயிர்த்தெழுந்தாரா? அல்லது இறப்பதற்கு முன்பே முன்கர் நகீரைச் சந்தித்து விட்டாரா? இதையும் அவர்கள் விளக்கட்டும்!
 சிராதுல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக் கடப்பது நோன்பிலும் சதகாவிலும் கிடைத்தது என்று கூறுகிறார். சிராதுல் முஸ்தகீம் என்ற பெயரில் பாலம் எதுவும் உண்டா என்பது தனியாக இருக்கட்டும்! இவர் எப்போது அந்தப் பாலத்தைக் கடந்தார்? பாலத்தைக் கடந்து விட்டால் உடனே சுவர்க்கத்தில் நுழைந்திருப்பாரே! ஒருவேளை சுவர்க்கத்திலிருந்து கொண்டு தான் ஷகீக் பல்கீ இதைக் கூறினாரா?
 ஏட்டில் எழுதப்பட்டு விட்டால் நம்பித் தொலைக்க வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் நிலவுவதால் இவ்வாறெல்லாம் மக்களில் பலர் சிந்திப்பதில்லை.  
 குண்டாந்தடியைத் தூக்கிக் கொண்டு கொசுபறக்கிறது என்று கூறினாலும் ஆமாம் என்று தலைளாட்டுபவர்களாக மக்கள் இருப்பதால் ஸகரிய்யா சாஹிபுக்கு இந்தக் கதைகளை மார்க்கம் என்ற பெயரால் வியாபாரம் செய்ய முடிகிறது.
 லுஹா, தஹஜ்ஜுத், கிராஅத், நோன்பு, ஸதகா ஆகிய நல்லறங்களை வலியுறுத்தி எத்தனையோ ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இது போன்ற பொய்கள் மூலம் அதற்கு சிறப்பு சேர்க்க என்ன அவசியம்? என்பதை தப்லீக் ஜமாஅத்தினர் சிந்திக்க வேண்டும். பெரியார்கள் என்பவர்கள் கப்ரில் நடப்பதை எல்லாம் அறியும் திறனுள்ளவர்கள் என்ற நம்பிக்கையை மக்கள் உள்ளங்களில் பதியச் செய்வதே இக்கதையின் நோக்கம் என்பதை இனியாவது உணர வேண்டும்.
 மேற்கூறிய நான்கு விஷயங்களாவது செய்யத்தக்க நல்லறங்களாகவே உள்ளன. அவற்றின் பலன்கள் பற்றி மட்டுமே பொய் புனையப்பட்டுள்ளது. இவர் கடைசியாகக் குறிப்பிடும் விஷயம் மார்க்கத்துடன் எந்த விதத்திலும் சம்மந்தமில்லாததாகும். குர்ஆன், ஹதீஸ் போதனைகளுடன் நேரடியாக மோதக் கூடியதுமாகும்.
 அர்ஷுடைய நிழல் தனிமையிலிருப்பதில் கிடைத்தது என்கிறார். அர்ஷுடைய நிழலில் அமர்ந்து கொண்டு தான் இதைக் கூறினாரா? இதை எப்படி கண்டு பிடித்தார்? என்பது போன்ற கேள்விகளை விட்டு விடுவோம்.
 தனிமையில் இருப்பது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட அல்லது வரவேற்கப்பட்ட அல்லது அனுமதிக்கப்பட்ட காரியமாக நிச்சயமாக இல்லை. இது இஸ்லாத்தில் முழுமையாக தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
 நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்று அடிக்கடி போதனை செய்யும் தப்லீக் ஜமாஅத்தினர் எப்படி இதை ஜீரணிக்கிறார்கள் என்பது தான் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதென்றால் சமுதாயத்தில் கலந்து வாழ்வதன் மூலமே இது சாத்தியமாகும்.
 தப்லீகின் ஸ்தாபகர் மரியாதைக்குரிய முஹம்மது இல்யாஸ் (ரஹ்) அவர்கள் தனிமையை நாடிச்சென்றிருந்தால் தப்லீக் இயக்கமே தோன்றியிருக்க முடியாது. தனிமையின் மூலம் அர்ஷுடைய நிழலை அடையமுடியும் என்பது உண்மையானால் தப்லீக் ஜமாஅத்தினர் ஏன் ஊர்ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து தொழுகைக்கு அழைக்க வேண்டும்? பல்வேறு பகுதிகளில் கல்விக்கூடங்களை ஏன் அவர்கள் துவக்க வேண்டும்? தப்லீக் ஜமாஅத்துடைய அடிப்படையையே தகர்க்கும் நோக்கில் தான் ஸகரிய்யா சாஹிப் அவர்கள் இவ்வாறு கதைக்கட்டி விட்டிருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
 கல்வத் என்று கூறப்படும் இந்தத் தனிமைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன என்பதைக் காணுவோம்.
 நன்மையை ஏவுதல், தீமையை தடுத்தல், ஒருவொருக்கொருவர் உறுதுணையாக இருத்தல், முஸ்லிம்களின் தேவைகளில் உதவி செய்தல், அவர்களுக்கிடையே சமரசம் செய்தல், மனைவி, மக்கள், தாய், தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகள், ஜமாஅத் ஜும்ஆ,பெருநாள் தொழுகையில் பங்கெடுத்தல், தனது வயிற்றுக்காக உழைத்தல், அமானிதம் பேணுதல், வாக்குறுதியை நிறைவேற்றல், ஸலாம் கூறுதல், நோயுற்றவர்களை விசாரிக்கச் செல்லுதல், மரணித்தவரை அடக்கம் செய்தல், ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல், அறப்போரில் பங்கெடுத்தல் மற்றும் பல்லாயிரம் கடமைகள் முஸ்லிம்கள் மீது உள்ளன.
 இந்தத் தனிமை, மேற்கண்ட கடமைகள் அனைத்தை விட்டும் ஒரு முஸ்லிமை அப்புறப்படுத்தி விடுகின்றன. இவ்வளவு கடமைகளை முஸ்லிம்கள் மீது சுமத்தியுள்ள இஸ்லாம் தனிமையை ஒரு போதும் அங்கீகரிக்காது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரக் கடமைப்பட்டுள்ளனர்.
 ஒரு நபித்தோழர், சுவை மிகுந்த நீரூற்று அமைந்த ஒரு கணவாயைக் கடந்து சென்றார். அது அவரை மிகவும் கவர்ந்தது. நான் மக்களை விட்டு விலகி இந்தக் கணவாயிலேயே தங்கி விடலாமே என்று தனக்குள் அவர் கூறிக்கொண்டார். இது பற்றி அவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறிய பொழுது அவ்வாறு செய்யாதே! ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஈடுபடுவது 70 ஆண்டுகள் அவர் தொழுததை விட மேலானது. அல்லாஹ் உங்களை மன்னித்து உங்களை சுவர்க்கத்தில் சேர்ப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! ஒரு ஒட்டகத்தின் பால் கறக்கும் நேரம் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தால் சுவர்க்கம் அவருக்கு கடமையாகிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : திர்மிதீ
 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சிறு படையாக புறப்பட்டோம். எங்களில் ஒருவர் தண்ணீரும் தாவரங்களும் நிறைந்த குகைக்கருகே சென்றார். அந்த இடத்தில் தங்கிக் கொண்டு உலகை விட்டும் தனிமைப்பட அவர் மனம்விரும்பியது. இது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களிடம் அவர் அனுமதி கேட்டார். அப்ப்போது நபி (ஸல்) அவர்கள் “நான் யூத மார்க்கத்தையும் கிறித்தவ மார்க்கத்தையும் கொண்டு அனுப்பப்படவில்லை. தெளிவான நேரான மார்க்கத்தைக்கொண்டு அனுப்பப்பட்டுள்ளேன். யாருடைய கையில் இந்த முஹம்மதுவின் உயிர் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக அல்லாஹ்வின் பாதையில் காலையில் சிறிதுநேரம் அல்லது மாலையில் சிறிதுநேரம் செலவிடுவது இவ்வுலகை விடவும், அதில் உள்ளவற்றை விடவும் மிகவும் மேலானதாகும். (போர்) அணியில் ஒருவர் சற்று நேரம் நிற்பது அவர் அறுபது ஆண்டுகள் தொழுததை விட சிறந்ததாகும் என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி),  நூல் : அஹ்மத்
 கல்வத் என்ற தனிமைக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அது யூத, கிறித்தவ மார்க்கத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட சித்தாந்தமாகும் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. இந்த இறக்குமதி சரக்குக்குத் தான் இஸ்லாமிய முத்திரை குத்த முயல்கிறார் ஸகரிய்யா சாஹிப்.
 அர்ஷுடைய நிழல் தனிமையில் இருப்பதில் கிடைத்தது என்ற வாசகம் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் மாற்று மதச்சித்தாந்தம் என்பதை இனியேனும் தப்லீக் ஜமாஅத்தினர் உணர்வார்களா?
 “தனது நிழலைத் தவிர வேறு நிழலேதும் இல்லாத அந்நாளில் ஏழு நபர்களுக்கு அல்லாஹ் தனது நிழலில் நிழல் தருவான் என்று நபி (ஸல்) கூறிவிட்டு அவர்களை வரிசைப்படுத்தினார்கள்.
 1.       நீதியாக நடந்த தலைவன்:
சமுதாயத்தில் கலந்து அவர்களுக்குத் தலைமை தாங்கி அவர்களிடையே நீதியுடன் நடந்து கொண்ட தலைவனுக்கு அர்ஷின் நிழல் கிடைக்கும் என்று நபி (ஸல்) உத்தரவாதம் தருகிறார்கள். ஸகரிய்யா சாஹிபோ தனிமையில் நிழலைத் தேடுகிறார்.
2.       அல்லாஹ்வின் வணக்கத்தில் ஊறித் திளைத்த இளைஞன்:
இளம் வயதிலேயே வணக்க வழிபாடுகளில் பேணுதலாக நடந்து கொண்ட இளைஞனுக்கும் அர்ஷின் நிழல் உண்டு என நபி (ஸல்) உறுதியளிக்கிறார்கள்.
வணக்கத்தில் ஊறித் திளைப்பது என்றால் அல்லாஹ்வின் அனைத்து ஏவல் விலக்கல்களையும் பேணி நடப்பதுதான்.
  3,4     அல்லாஹ்வுக்காகவே ஒருவரை ஒருவர் நேசித்து அல்லாஹ்வுக்காகவே பகைத்துக் கொண்ட இருவர்:
     சமுதாயத்தில் கலந்து வாழ்வதன் மூலமே இது சாத்தியமாகும்.
5.       அழகும், குணமும் உடைய பெண்மணி அழைக்கும் போது “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” என்று கூறி (தன்னைக்) காத்துக்கொண்ட மனிதன்:
சமூகத்தில் கலந்து வாழும் போதே இந்த நிலையை ஒருவன் அடைய முடியும்.
6.       வலது கையால் கொடுப்பதை இடது கை அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவன்:
தர்மம் செய்வதென்றால் காடோ, செடியோ என்று மக்களை விட்டு விலகிவிட்டால் அது சாத்தியமாகாது.
7.       தனித்திருக்கும்போது அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் வடித்தவன்:
இது கூட காடோ, செடியோ என்று போவதைக் குறிப்பிடவில்லை. சமூகத்தில் கலந்து வாழும் போது சிறிதளவு தனிமையைப் பெறும் போது அப்போதும் அல்லாஹ்வை நினைத்து அஞ்சுவதையே குறிப்பிடுகிறது.
 அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் காணக் கிடைக்கின்றது.
 அர்ஷுடைய நிழலைத் தேடும் வழிகளை அல்லாஹ்வின் தூதர் மிகத் தெளிவாக அறிவித்த பிறகு ஷகீக் பல்கி என்பவர் யூத மார்க்கத்திலும் கிறித்தவ மார்க்கத்திலும் அந்த நிழலைத் தேடினார் என்பதை அறிவுடையவர்கள் நம்ப முடியுமா?
 இது போன்ற போதனைகள் நாளடைவில் மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்ததால் நாளைக்கு தப்லீக் இயக்கமும் அழிந்து விடும். தொழுகைக்கு அழைப்பதை விட்டு விட்டு தனிமையை நோக்கி அவர்கள் ஓடி விடக் கூடும். இதை உணர்ந்தாவது இந்த தஃலீம் தொகுப்பைத் தூக்கி எறிவார்களா?
 சொர்க்கத்தில் தொழுகையா?
 ஹஜ்ரத் முஜத்தித் அல்பதானி (ரஹ்) அவர்களைப் பற்றி அறியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. அவர்களுடைய கலீபாக்களில் ஒருவரான மௌலானா அப்துல் வாஹித் லாஹீர் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் சொர்க்கத்தில் தொழுகை இருக்காதா? என்று கவலையுடன் கேட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் ஹஜ்ரத் சொர்க்கத்தில் தொழுகை எவ்வாறு இருக்க முடியும்? அது அமல்களுக்குப் பிரதி பலன்கள் வழங்கப்படும் இடமாயிற்றே! அமல் செய்யும் இடமல்லவே என்று கூறியவுடன், ஆஹ் என்று ஒரு பெருமூச்சு விட்டு அழ ஆரம்பித்து விட்டார்கள். பிறகு சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்று கூறினார்கள்.
 இப்படிப்பட்ட நல்லடியார்களினால்தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது. உண்மையில் வாழ்க்கையின் இன்பத்தைச் சம்பாதித்துக் கொள்பவர்கள் இப்படிப்பட்ட பெரியார்கள் தான்.
 இது தப்லீக் தஃலீம் தொகுப்பு நூலில் பக்கம் 45 ல் இடம் பெற்றுள்ளது.
 என்னே பக்தி! என்னே தக்வா? என்று அப்பாவிகள் மூக்கில் விரலை வைத்து வியப்படையுமளவுக்கு இந்தக் கதை பெரியார்கள் (?) மீது போலிமதிப்பை ஏற்படுத்துவதுடன் இஸ்லாத்தை தவறான வடிவத்திலும் அறிமுகப்படுத்துகின்றது.
 தொழுகையாகட்டும்! இன்ன பிற வணக்க வழிபாடுகளாகட்டும்! ஒவ்வொரு முஸ்லிமும் அதை விரும்பியாக வேண்டும். அதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆயினும் அதற்கு ஒரு வரையறை உண்டு என்பதை மறந்துவிடக் கூடாது. இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்ற ஒரே காரணத்துக்காக அவற்றை விரும்ப வேண்டுமே தவிர இறைவன் விரும்பாவிட்டாலும் அவற்றை விரும்புவேன் என்று அடமபிடிக்க முடியாது.
 எப்போது அவற்றை நிறைவேற்ற வேண்டும் என இறைவன் நிர்ணயித்துள்ளானோ அப்போது அதைச் செய்ய வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்று வழிகாட்டியுள்ளானோ அப்படிச் செய்ய வேண்டும்.
 தொழுகை நல்லது தானே என்று எண்ணிக் கொண்டு நான்கு ரக்அத்களுக்கு பதிலாக ஆறு ரக்அத்கள் ஒருவன் தொழுதால் அவன் பக்தனல்ல. அகம்பாவம் கொண்டவனாகவோ அல்லது மார்க்கத்தை அறியாத மூடனாகவோ அவன் இருக்க வேண்டும்.
 பக்தி எனும் பெயரில் ஒருவன் பகலில் நோன்பு நோற்பதற்குப் பதிலாக இரவிலும் நோன்பு நோற்க முயன்றால், தொழக் கூடாத நேரங்களில் ஒருவன் தொழுதால் அவன் தக்வாதாரியாக விட முடியாது. இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு இந்தக் கதையை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! இதன் போலித்தனம் பளிச்சிடும்.
 சொர்க்கத்தில் தொழுகை கிடையாதா? என்று அஷ்ரப் அலி தானவியின் கலீபா அப்துல் வாஹித் என்பார் மேற்கொண்ட கதையில் கேட்கிறார். சொர்க்கத்தில் தொழுகை உட்பட எந்தவிதமான வணக்கமுறைகளும் கிடையாது என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது. எல்லா முஸ்லிம்களும் அறிந்துள்ள இந்த சாதாரண விஷயம் கூட இந்தப் பெரியாருக்குத் தெரியவில்லை.
 அதுதான் போகட்டும்! எத்தனையோ பேரறிஞர்களுக்கு சில நேரங்களில் சாதாரண விஷயம் தெரியாமலிருப்பது இயற்கையே என்பதால் விட்டுவிடுவோம். ஒரு விபரமறிந்த மனிதர் இந்த பெரியாருக்கு சொர்க்கத்தில் தொழுகை கிடையாது என்பதை விளக்கிய பிறகும் கூட அவர் தனது அறியாமையை நீக்கிக் கொள்ள முன் வரவில்லை. தனது அறியாமையில் மேலும் பிடிவாதம் காட்டுகிறார். அவர் எதிரொலி தான் சொர்க்கத்திலும் தொழுகையில்லாமல் எவ்வாறு வாழ முடியும்? என்ற அவரது கேள்வி.
 இந்தக் கேள்வியில் அவரது முரட்டு அறியாமை மட்டும் வெளிப்படவில்லை. இறைவனது ஏற்பாட்டில் நம்பிக்கையின்மையும் சேர்ந்து வெளிப்படுகின்றது.
 தொழுகை மற்றும் வணக்கங்கள் எதுவுமின்றி சொர்க்கத்தில் வாழ முடியும் என இறைவன் ஏற்பாடு செய்திருக்கும்போது அது எப்படிச் சாத்தியமாகும்? என்று இவர் ஐயம் தெரிவிக்கிறார் இறைவனது ஏற்பாட்டில் குறை காண்கிறார்.
 ஸகரிய்யா சாஹிப் பார்வையில் வேண்டுமானால் அந்தப் பெரியாரின் மகாத்மியம் தென்படலாம். நடுநிலையோடு சிந்திப்பவர்கள் இறைவனின் மகாத்மியத்திற்கு இவர் மாசு கற்பிக்கிறார் என்றே முடிவுக்கு வருவார்கள்.
 எந்த இறைவனது மேன்மையை அடியான் ஒப்புக்கொள்வதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டதோ, இறைவன் எஜமான் என்பதையும், தான் அவனது அடிமை என்பதையும் பறைசாற்றுவதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டதோ, அந்தத் தொழுகையை வைத்தே இறைவனை ஸகரிய்யா சாஹிபும் இந்தப் பெரியாரும் தூர எறிகிறார்கள்.
 மார்க்கத்தைப் பற்றிய அறிவு இல்லாதவராகவும், இறைவனது ஏற்பாட்டில் குறை கண்டவராகவும் அறிமுகம் செய்யப்பட வேண்டிய இப்பெரியார் இங்கே மகானாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.
இதுபோன்ற கதைகளை தொழுகையைச் சிறப்பிப்பதற்காக கூறுவது போல் மேலோட்டமாகத் தோன்றினாலும் உண்மையான நோக்கம் அதுவல்ல. பெரியார்களைப் பற்றிய மதிப்பு மக்களிடம் இடம் பெற வேண்டும் என்பதுவே இவரது நோக்கம். இது ஆதாரமற்ற கற்பனை அல்ல. இந்த நோக்கத்தை ஸகரிய்யா சாஹிப் அவர்களே அவரையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்.
 இந்தக் கதையை எழுதிவிட்டு, பார்த்தீர்களா தொழுகையின் சிறப்பை? என்று ஸகரிய்யா சாஹிப் விமர்சனம் செய்திருந்தால் கதை சரியாக இல்லாவிட்டாலும் ஸகரிய்யா சாஹிபின் நோக்கத்தையாவது சந்தேகிக்காமலிருக்கலாம். இவரோ கதையை எழுதிவிட்டு இப்படிப்பட்ட நல்லடியார்களினால் தான் இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது என்று கூறுகிறார். அதாவது அந்தப் பெரியாரின் மதிப்பைக் கூட்டிக்காட்டுவது தான் அவரது நோக்கம் என்பதற்கு இந்த விமர்சனமே சான்று.
 பெரியார்களை இப்படி உயர்த்தி அவர்களைப் பற்றி புனிதர்கள் என்ற நம்பிக்கையை வேரூன்றச் செய்தால் தன்னையும் மற்றவர்கள் புனிதாரக மதிப்பார்கள் என்ற திட்டமே இந்தக் கதைகளை அறிமுகப்படுத்துவதன் நோக்கம். ஸகரிய்யா சாஹிப் அறிமுகப்படுத்தும் வாஹிதும் இந்த ஸகரிய்யா சாஹிபும் முஜத்திதே அல்பதானி அவர்களின் சீடர்கள், தனது சகாவின் மகிமையை உயர்த்தினால் தனக்குப் பிற்காலத்தில் அதுபோன்ற உயர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பே கதையின் பின்னணி.
 தங்களைப் பற்றி இமேஜை உயர்த்திக் கொண்டு முரீது வியாபாரத்தை தடங்கலின்றி நடத்திட இது போன்ற கதைகள் இவருக்குத் தேவைப்படுகிறது.
 பிறர் மெச்சுவதற்காக வணங்குதல்
 திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் அனுமதி உண்டா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கடுகளவும் அக்கறை கொள்ளாமல் தனி நபர்களை அளவுக்கதிகமாக உயர்த்தும் வகையில் அமைந்துள்ள மற்றொரு கதையைப் பாருங்கள்.
 முஹம்மது ஸிமாக் (ரஹ்) என்பவர்கள் கூறுகிறார்கள். கூபா நகரில் என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒருவர் குடியுருந்தார். அவருடைய மகன் ஒருவர் பகலெல்லாம் நோன்பு வைத்திருப்பார் இரவெல்லாம் தொழுகையிலும் இறைக்காதல் பாடல்கள் பாடுவதிலும் கழிப்பார். இதனால் அவர் இளைத்து எலும்பும், தோலுமாகக் காட்சியளித்தார். அவருடைய தந்தை என்னிடம் வந்து தன் மகனுக்கு அறிவுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
 நான் ஒரு தடவை என் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்திருந்த போது அவருடைய மகன் அவ்வழியே சென்றார். நான் அவரை அழைத்தேன். அவர் என்னருகில் வந்து ஸலாம் சொல்லி உட்கார்ந்தார். நான் அவர் சம்மந்தமாக பேச ஆரம்பித்தவுடனேயே, எனது சிறிய தந்தை அவர்களே! நான் என்னுடைய உழைப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டுமெனத் தாங்கள் ஆலோசனை சொல்லப் போகிறீர்கள் இல்லையா? சிறிய தந்தையாரே! இந்த மஹல்லாவை சேர்ந்த சில வாலிபர்களாகிய நாங்கள் இபாதத் செய்வதில் அதிகம் முயற்சிப்பவர்கள் யார் என்பதைப் பார்க்கலாம் என்று எங்களுக்கிடையே ஒரு போட்டியை ஏற்படுத்தினோம். என்னுடைய நண்பர்களாகிய அவர்கள் தங்களால் இயன்ற அளவு முயற்சித்து வணக்கங்கள் புரிந்தனர். இறுதியில் அவர்கள் அல்லாஹுதஆலாவின் பால் அழைக்கப்பட்டுக் கொண்டார்கள். அவர்கள் செல்லும் போது மிக்க மகிழ்ச்சியுடனும், ஆனந்தத்துடனும் சென்றார்கள்.
 இப்பொழுது அவர்களில் என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை என்னுடைய அமல்கள் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படும் பொழுது அதில் அவர்கள் குறை கண்டால் என்னைப்பற்றி அவர்கள் என்ன கூறுவார்கள்.
 இப்படிப் போகிறது கதை, இது தப்லீகின் தஃலீம் தொகுப்பில் தொழுகையின் சிறப்பு எனும் பாடத்தில் பக்கம் 43,44 ல் இடம் பெற்றுள்ளது.
 முகவரியில்லாத ஒருவர் பகலெல்லாம் நோன்பு வைத்து இரவெல்லாம் நின்று வணங்கியதாகக் கூறப்படுகின்றது. நல்லடியார்கள் என்பதற்கு இதுவே அளவு கோலாகவும் அப்பாவி முஸ்லிம்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
 இஸ்லாம் இந்த நம்பிக்கையை மறுக்கின்றது. ஒரு முஸ்லிம் பகலெல்லாம் நோன்பு வைத்துக்கொண்டும் இரவெல்லாம் நின்று வணங்கிக் கொண்டும் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது.
 உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், ஊருக்கு ஆற்றவேண்டிய பணிகள், அண்டை அயலாருக்குச் செய்யும் கடமைகள், குடும்பத்திற்கு ஆற்றும் கடமைகள் என்று ஏராளமான கடமைகள் முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இறைவணக்கத்தை நிறைவேற்றும் அதே நேரத்தில் இந்தக் கடமைகளையும் நிறைவேற்றியாக வேண்டும். இரண்டில் எதனையும் எதன் காரணமாகவும் விட்டுவிட முடியாது. இது தான் இஸ்லாத்தின் போதனை. வணக்கம் என்ற பெயரில் கூட அளவு கடந்து செல்வதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். இது பற்றிய சான்றுகளைக் காண்போம்.
 நபித் தோழர்களில் ஒருவர் திருமணமே செய்யமாட்டேன் என முடிவு செய்தார். மற்றொருவர் நான் தூங்காமல் தொழுது கொண்டே இருப்பேன் என்றார். வேறொருவர் விடாமல் நோன்பு வைப்பேன் என்றார்.இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்த போது இவ்வாறெல்லாம் கூறியவர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? நான் (சில போது) நோன்புவைக்கிறேன் (சில போது) விட்டு விடுகிறேன். தொழவும் செய்கிறேன் உறங்கவும் செய்கிறேன். பெண்களைத் திருமணமும் செய்து உள்ளேன். யார் எனது (இந்த) வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரல்லர் என்று கூறினார்கள். அனஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கருத்து புகாரி, நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. எத்தகையவர்கள் என்னைச் சேர்ந்தவரல்லர் என்று நபி (ஸல்) அடையாளம் காட்டினார்களோ அவர்கள் இங்கே மகான்களாக அறிமுகம் செய்யப்படுகின்றனர்.
 நான் காலமெல்லாம் நோன்பு வைப்பவனாகவும், இரவெல்லாம் குர்ஆன் ஓதுபவனாகவும் இருந்தேன். என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களுக்கு கூறப்பட்டதோ அல்லது அவர்களாகவே அறிந்தார்களோ நான் அவர்களின் அழைப்புக்கேற்ப வந்தேன்.  
நீ காலமெல்லாம் நோன்பு நோற்பதாகவும் இரவெல்லாம் குர்ஆன் ஓதுவதாகவும் எனக்குக் கூறப்படுகிறதே எனக் கேட்டார்கள். நான் ஆம் இதன் மூலம் நல்லதையே நாடுகிறேன் என்றேன். அதற்கவர்கள் மாதம் தோறும் மூன்று நோன்புகள் நோற்பது உனக்குப் போதுமாகும் என்றார்கள். அதற்கு நான் “இதை விட சிறப்பாக (கூடுதலாக) செய்ய நான் சக்தி பெற்றவன்” என்றேன். அதற்கவர்கள் “உன் மனைவிக்கு நீ செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. உன் விருந்தினருக்குச் செய்ய
வேண்டிய கடமைகளும் உள்ளன என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுள் ஆஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. இந்தக் கருத்து புகாரி, நஸயியிலும் இடம் பெற்றுள்ளது. மற்றொரு அறிவிப்பில் இதைவிட சிறந்தது இல்லை எனவும் கூறப்படுகிறது.
 உலகுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து விட்டு வணக்கங்களில் வரம்பு மீறலாகாது என்பதற்கு இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் சான்றுகளாக உள்ளன. வணக்கத்தில் ஈடுபடுகிறேன் என்ற பெயரில் உடம்பை வருத்திக் கொள்வது இஸ்லாம் காட்டும் வாழ்க்கை நெறிக்கு முற்றிலும் எதிரானதாகும். இந்த கருத்துக்கொண்ட கதைகளைத் தான் ஸகரிய்யா சாஹிப் தனது நூல் நெடுகிலும் கூறுகிறார்.
 ஸகரிய்யா சாஹிபாகட்டும்! இன்றைக்கு தப்லீகின் தலைமைப் பீடத்தில் இருப்பவர்களாகட்டும்! இந்தக் கதையின் போதனைகள் அவர்களே கூட கடைப்பிடிக்காத கடைப்பிடிக்க முடியாததாகும். இந்தக் கதை கூறும் போதனைப்படி எவரும் எலும்பும் தோலுமாகக் காட்சி தந்ததில்லை. அறுசுவை உணவுகளை விரும்பி உண்ணக் கூடியவர்களாகவே காண்கிறோம். நடைமுறைச் சாத்தியமற்ற இஸ்லாம் விரும்பாத போதனைகளை உள்ளடக்கியது தான் தஃலீம் தொகுப்பு நூல்.
 கதையின் நாயகரான முகவரியில்லாத அந்த வாலிபர் தன்னுடைய அமல்கள் தினமும் இரண்டுமுறை தன்னுடைய நண்பர்களுக்கு எடுத்துக்காட்டப்பட்டால் அவர்கள் என்ன சொல்வார்கள் என்று ஆதங்கப்படுகிறார்.
 முன்னரே இறந்தி விட்ட இவரது நண்பர்களுக்கு இவரது அமல்கள் இரண்டு தடவை எடுத்துக் காட்டப்படும் என்பதற்கு என்ன ஆதாரம்? நல்லடியார்கள் கியாம நாள் வரையில் மண்ணறையில் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதாக ஏராளமான ஹதீஸ்கள் கூறுகின்றன. அதற்கு மாற்றமாக மற்றவர்களின் அமல்கள் எடுத்துக் காட்டப்படும் என்று எப்படிக் கூறமுடியும்?
 ஷைகுமார்கள் என்ற போர்வையில் முரீதுகளை ஏமாற்றும் எண்ணம் படைத்தவர்கள் தான் இதுபோன்ற நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் முரீதுகளின் செயல்கள் தங்களுக்கு எடுத்துக்காட்டப்படும் என்று பயமுறுத்தி மக்களை அடிமைப்படுத்தவே இது போன்ற கதைகள்.
 முரீது வழங்கிய ஸகரிய்யா சாஹிபுக்கு இந்தக் கதைகள் தேவைப்பட்டிருக்கலாம். முஸ்லிம்களுக்கு இது தேவையில்லாததாகும். இப்படிக் கூறிய வாலிபர் அவர் பார்வையில் மகானாக இருக்கலாம். அல்லாஹ்வின் தூதருடைய பார்வையில் அவர் ஒரு வழிகேடர்.
 அந்த வாலிபர் இப்படி நடந்து கொண்டது ஒரு புறம் தவறு என்றால், அவரது எண்ணம் அதைவிட மோசமானது. தன்னுடைய நண்பர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவே இப்படிக் கூடுதல் அமல் செய்வதாகக் கூறுகிறார். இந்த எண்ணமே அவரது அமல்கள் நல்லதாக இருந்தால் அதனை அழித்துவிடப் போதுமானதாகும். மூடர்களையும், வழிகேடர்களையும் மகான்களாக சித்தரித்து இஸ்லாத்திற்கு தவறான வடிவம் தரும் கதைகள் இவை.
 இருநூறு ரக்அத்கள் தொழுத பெரியார்
 பெரியார்கள் மேல் அளவுக்கதிகமான மதிப்பையும், மலைப்பையும் ஏற்படுத்தும் மற்றொரு கதையைப் பாருங்கள்.
 முஹம்மதுப்னு ஸிமாஆ (ரஹ்) என்ற பெரியார் சிறந்த ஆலிமாக இருந்தார்கள். இவர் இமாம் அபூயூசுப் (ரஹ்), இமாம் முஹம்மது (ரஹ்) ஆகிய இரு இமாம்களின் மாணவராவார். அன்னார் தங்களுடைய நூற்றிமுப்பதாவது வயதில் காலமாகும் வரை ஒவ்வொரு நாளும் இரு நூறு ரக்அத்கள் நபில் தொழுது கொண்டிருந்தார்களாம், அவர்கள் கூறுகிறார்கள்: நாற்பது ஆண்டுகள்வரை தொடர்ந்து முதல் தக்பீர் தவறாமல் நான் தொழுது வந்திருக்கிறேன் ஒரே நேரத்தை தவிர...... இப்படிப் போகிறது கதை!
 இந்தக் கதை தப்லீகின் தஃலீம் தொகுப்புநூலில் தொழுகையின் சிறப்புகள் என்ற பகுதியில் 86ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
 ஒரு நாளைக்கு 200 ரக்அத்கள் நபில் தொழுவது சாத்தியப்படக்கூடியது தானா? இதை முதலில் நாம் ஆராய்வோம்.
 ஒரு நாளைக்கு மொத்தம் 24 மணி நேரங்களே உள்ளன. இந்த இருபத்திநான்கு மணி நேரங்களில் ஏறத்தாழ மூன்று மணிநேரங்கள் தொழக்கூடாத நேரங்களாகும்.
 சூரியன் உதிக்கத் துவங்கி முழுமையாக உதிப்பதற்கு 20 நிமிடங்கள். சூரியன் உச்சிக்கு வரத் துவங்கி உச்சி சாய்வதற்கு 20 நிமிடங்கள். சூரியன் மறையத் துவங்கி முழுமையாக மறைவதற்கு 20 நிமிடங்கள். இந்த மூன்று நேரங்களிலும் தொழக்கூடாது என்று ஹதீஸ்களில் தடைவந்துள்ளது. இந்த வகையில் 24 மணிநேரங்களில் ஒரு மணிநேரம் குறைகின்றது.
 அஸர் தொழுத பிறகு உபரியான தொழுகை தொழுவதற்கும் ஹதீஸ்களில் தடை வந்துள்ளது. இந்தப் பெரியார் முதல் தக்பீரிலேயே தொழுதுவிடும் வழக்கமுடையவர் என்று இந்தக் கதையில் கூறப்படுகின்றது. அஸர் தொழுகையை நான்கு மணிக்கு அவர் நிறைவேற்றினால் மஃரிப் வரை குறைந்தது இரண்டு மணி நேரங்கள் தொழக் கூடாத நேரங்கள். இந்த வகையில் இரண்டு மணி நேரங்கள் கழிந்து விட்டால் எஞ்சியிருப்பது 21 மணி நேரங்களே.
 ஒரு நாளைக்கு இரண்டு தடவை மலம் கழிப்பது நான்கு தடவை சிறுநீர் கழிப்பது என்று வைத்துக் கொண்டாலும், குறைந்தது அரைமணி நேரமாவது தேவைப்படும். இவ்வாறு ஆறு தடவை வுளூ செய்யவேண்டும். இந்த வகையில் குறைந்தது அரைமணி நேரமாகும்.இப்போது எஞ்சியிருப்பது 20 மணி நேரங்களே.
 மனிதன் என்ற முறையில் சில மணி நேரங்களாவது தூங்க வேண்டும். நபியவர்களும் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பற்றி வலியுறுத்துகிறார்கள். மனித உடலும் இயற்கையாகவே தூக்கத்தின் பால் நாட்டம் கொண்டதாகவே உள்ளது. குறைந்த பட்சம் ஐந்து மணி நேரங்கள் தூக்கத்தில் கழித்தால் எஞ்சியிருப்பது பதினைந்து மணிநேரங்களே.
 எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும் பசி உயர்வு இல்லாத மலக்குகளாக அவர்கள் ஆக முடியாது. டீ, காபி, டிபன் என்று பல தடவை உண்ணாவிட்டாலும் குறைந்தது இரண்டு தடவைகளாவது உண்ணவேண்டும். இதற்கு குறைந்தபட்சமாக அரைமணி நேரமாவது தேவைப்படும். இப்போது எஞ்சியிருப்பது பதினான்கரை மணி நேரங்களே.
 இந்த பதினான்கரை மணி நேரங்களில் இந்தப் பெரியார் ஐவேளைக் கடமையான தொழுகைகளையும் தொழுதுவிட்டு சுன்னத்தான தொழுகைகளையும் தொழுதுவிட்டு உபரியாக 200 ரக்அத்கள் நபில் தொழுதுள்ளார்களாம்.
 ஜமாஅத்துடன் ஐவேளைத் தொழுகையையும் தொழ சுமார் ஒரு மணி நேரம். அதன் பின் ஓதவேண்டிய சுன்னத்தான திக்ருகள் துஆக்கள் ஆகியவற்றுக்கு அரை மணிநேரம், தொழுகையின் முன்பின் சுன்னத்துகளுக்காக ஒரு மணிநேரம், இரவுத் தொழுகை, லுஹாத் தொழுகை ஆகியவற்றுக்கு ஒரு மணிநேரம். இப்போது எஞ்சுயிருப்பது பதினொரு மணி  நேரங்களே.
 இந்தப் பதினொரு மணி  நேரங்களில் அதாவது 660 நிமிடங்களில் 200 ரக்அத் நபில் தொழ முடியுமா? பெரியார்கள் நம்மைப் போல் அவசர அவசரமாகத் தொழமாட்டார்கள். நிறுத்தி நிதானமாகத் தொழுவார்கள். இந்தப் பெரியார் இதில் விதிவிலக்கானவர். நம்மைப் போல் வேகமாகத் தொழுபவர் என்று வைத்துக் கொண்டாலும் ஒரு ரக்அத்துக்கு ஐந்து நிமிடங்களாவது ஆகும். 200 ரக்அத்துகளுக்கு 1000 நிமிடங்கள் தேவை.
 மிக முக்கியமான தேவைகளுக்குப் போக எஞ்சியிருக்கும் 660 நிமிடங்களில் 200 ரக்அத்கள் தொழுவது எப்படி சாத்தியமாகும்? அப்படித் தொழுதால் அது தொழுகையாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.
 இது போக இன்னும் பல அலுவல்களைக் கணக்கில் நாம் சேர்க்கவில்லை. அவற்றுக்கு மழுப்பலான பதில்களை ரெடிமேடாக வைத்துள்ளனர்.
 மனைவி மக்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நேரம் தேவை என்று நாம் சொன்னால் இந்தப் பெரியார் அந்த உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று அவர்கள் கூறலாம். அவர் வேண்டுமானால் அப்பாற்பட்டவராக இருக்கலாம், அவரது மனைவியும் அப்பாற்பட்டவராக இருந்திருப்பாரா? என்று நாம் கேட்டால் அவர் பிரம்மச்சாரியாக இருந்திருக்கலாம் என அவர்கள் கூறலாம்.
 தான் உண்பதற்காகவும், தனக்குச் சமைத்துப் போடுவோர்கள் உண்பதற்காகவும், உழைக்க நேரம் தேவை என்று நாம் சொன்னால் பூர்வீகச் சொத்துக்கள் ஏராளமாக இருந்துருக்கலாம் அல்லவா என்பர்.
 மார்க்க அறிஞராக அவர் இருப்பதால் மார்க்கத்தை கற்றுக் கொடுப்பதற்கும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதற்கும் நேரம் தேவை என்று நாம் கூறினால் அந்தக் காலத்தில் எல்லாருமே மார்க்க அறிஞர்களாக இருந்துருக்கலாம் என்பர்.
 திருமணம், ஜனாஸா போன்ற சுன்னத்தான காரியங்களுக்கும் நேரம் தேவை என்று நாம் கூறினால் அந்தக் காலத்தில் பித்அத்கள் மலிந்திருந்ததால் அவற்றை புறக்கணித்திருக்கலாம் என்பர். முன்னர் கூறியதற்கு இது முரணாக உள்ளதே என்று இவர்கள் சிந்திப்பதில்லை.
 நியாயப்படுத்தவே முடியாத பணிகளுக்கு மட்டுமே நேரம் ஒதுக்கியுள்ளோம். இவற்றையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தாலும் 200 ரக்அத்கள் தொழுவதற்கு நிச்சயமாக நேரம் கிடைக்காது.
 பெரியார்களைப் பற்றி மலைப்பை ஏற்படுத்தி அவர்களை வழிபடுவதற்காகவே இது போன்ற கதைகளை கட்டியுள்ளனர். ஸகரிய்யா சாஹிபும் இதற்கு விதிவிலக்கல்ல. அதனால்தான் தன் நூல் நெடுகிலும் இது போன்ற நம்ப முடியாத அபத்தமான கதைகளை அள்ளி விடுகிறார்.
 மலஜலம் கழிக்காத பெரியார்
 தொழுகையின் சிறப்புக்களைக் கூறும் சாக்கில் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்தும் மற்றொரு கதையைக் கேளுங்கள்!
 சூபியாக்களில் பிரபலமான ஷைகு அப்துல் வாஹித் (ரஹ்) என்பவர்கள் கூறுகிறார்கள்: ஒரு நாள் இரவு எனக்கு தூக்கம் மிகைத்து நான் வழமையாக ஓதக்கூடிய திக்ருகளையும் ஓதாமல் தூங்கி விட்டேன். அப்போது கனவில் மிக அழகிய மங்கை ஒருத்தியைக் கண்டேன். அவள் பச்சைப் பட்டாடை அணிந்திருந்தாள். அவளுடைய காலணிகள் கூட தஸ்பீஹ் செய்வதில் ஈடுபட்டிருந்தன.
 அவள் என்னை நோக்கி “நீர் என்னை அடைய முயற்சிப்பீராக! நான் உம்மை அடைய முயற்சிக்கிறேன்” என்று கூறி சில பேரின்பக் காதல் கீதங்கள் பாடினாள்.
 இக்கனவைக் கண்டு விழித்த நான் இனிமேல் இரவில் தூங்குவது இல்லை என்று சத்தியம் செய்து கொண்டேன். அவ்வாறே நாற்பது ஆண்டுகள்வரை இஷாவுக்குச் செய்த உளூவுடன் சுப்ஹுத் தொழுது வந்தேன் என்று கூறுகிறார்கள்.
 இந்தக் கதை தொழுகையின் சிறப்பு எனும் பகுதியில் 118ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைப் புறக்கணித்து விட்டு அல்லாஹ்வின் தூதருடைய வழிகாட்டுதலை அலட்சியம் செய்துவிட்டு அதிகப் பிரசங்கித்தனமாக நடப்பவர் எப்படிப் பெரியாராக இருக்க முடியும்!
 இஷாவுக்குச் செய்ய உளூவைக் கொண்டு நாற்பது ஆண்டுகள் 14,400 இரவுகள் எப்படி சுபஹ் தொழமுடியும்? இந்தப் பதினான்கு ஆயிரத்து நானூறு நாட்கள் அவர் உறங்கியதே இல்லை என்பதை நம்பமுடியவில்லை. இத்தனை இரவுகளும் அவர் மலஜலம் கழிக்கவில்லை: காற்றுப் பிரியவில்லை: மனைவியுடன் சம்போகம் செய்யவில்லை என்பது அதைவிட நம்ப முடியாததாக உள்ளது.
 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அவர் அறியாத நிலையில் அவர் வரம்பு மீறியதையாவது நம்பலாம். தன்னைப் பற்றிப் பெருமையாக அவரே கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
 சாத்தியமற்ற இது போன்ற சாதனைகளையும் பெரியார்கள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதைத் தவிர இந்தக் கதையில் ஒரு முஸ்லிமுக்கு எந்தப் படிப்பினையும் காணோம். இதே போன்ற மற்றொரு கதையைப் பாருங்கள்!
 அபூபக்கர் ளரீர் (ரஹ்) என்ற பெரியார் கூறுகிறார்கள்:- என்னிடம் வாலிபரான ஓர் அடிமை இருந்தார்? அவர் பகல் முழுவதும் நோன்பு வைத்திருப்பார். இரவு முழுவதும் தஹஜ்ஜுத் தொழுகையில் ஈடுபட்டிருப்பார். ஒரு நாள் அவர் என்னிடம் வந்து நான் இன்றிரவு எதிர் பாராத விதமாக தூங்கிவிட்டேன். அப்போது கனவு ஒன்று கண்டேன். அதில் நான் தொழுமிடத்திலுள்ள மிஹ்ராப் சுவர் உடைந்து அதன் வழியாக சில பெண்கள் வந்தனர். அவர்கள் மிக அழகிய தோற்றமுடியவர்களாக இருந்தனர். அவர்களில் ஒருத்தி மட்டும் அருவருப்பான தோற்றமுடையவளாக இருந்தாள். நான் அப்பெண்களிடம் “நீங்களெல்லாம் யார்? இந்த அருவருப்பான பெண் யார்?” என்று கேட்டதற்கு “நாங்களெல்லாம் உம்முடைய சென்று போன இரவுகள். இப்பெண் உமது இன்றைய இன்றைய இரவு” என்று இப்பெண்கள் பதில் அளித்தார்கள்.
 இந்தக் கதை 119ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. ஒரு முஸ்லிம் இரவில் தூங்கக் கூடாது என்றும் பகலெல்லாம் நோன்பு வைத்திருக்க வேண்டும் என்றும் இந்தக் கதை மூலம் ஸகரிய்யா சாஹிப் சொல்ல வருகிறாரா? தூங்கிய இரவுகள் பாழாய்ப்போன இரவுகள் என்கிறாரா?
 குடும்பத்துக்கும், ஊருக்கும், உலகுக்கும், தனக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு இரவில் உறங்க வேண்டிய அளவுக்கு உறங்கிவிட்டு பின்னிரவில் எழுந்து வணங்கிய நபித்தோழர்கள் எல்லாம் தங்கள் இரவுகளைப் பாழடித்துவிட்டதாக ஸகரிய்யா சாஹிப் கூற வருகிறாரா?
 இந்தப் பெரியார்களின் வழியில் ஸகரிய்யா சாஹிப் கூட நடந்ததில்லை. அவர் உறங்கியுள்ளார். பகல் காலங்களில் சுவைமிக்க உணவுகளை உண்டுகளித்துள்ளார். அவரும் கூட தனது இராப் பொழுதுகளை பாழடித்தவர்தானா?
 முஸ்லிம்களைப் பண்டார சன்னிதிகளாகவும், துறவிகளாகவும் ஆக்கி அவர்களை முடக்குவதற்காகவே இப்படிப்பட்ட கதைகளை பொறுக்கி எடுத்து எழுதியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா?
 இரவெல்லாம் தூங்காத பகலெல்லாம் நோன்பு வைத்த கதைகள் ஏராளமாக அந்த நூலில் மலிந்துள்ளன. ஸகரிய்யா சாஹிபுக்குத் தோன்றிய பெயர்களையெல்லாம் பயன்படுத்தி இவ்வாறு கதையளந்துள்ளனர். இதுவரை நாம் செய்த விமர்சனமே இந்த வகையான அனைத்து கதைகளுக்கும் பொருந்தும் என்பதால் வேறு வகையான கதைகளைப் பார்ப்போம்.
 கடமை மறந்த கூலிக்காரர்
 ஷைகு அபூ அப்தில்லாஹ் ஜலாவு (ரஹ்) என்பவர்கள் கூறுவதாவது: ஒரு நாள் என்னுடைய தாயார், என் தந்தையாரிடம் மீன் வாங்கி வரும்படியாகக் கூறினார். என் தந்தை கடைத்தெருவிற்குச் சென்றார்கள். நானும் அன்னாருடன் சென்றிருந்தேன். அங்கு மீனை வாங்கி அதனை வீட்டுக்குக் கொண்டுவர ஒரு கூலிக்காரரைத் தேடினார்கள். அப்பொழுது எங்களுக்கருகில் நின்றிருந்த ஒரு வாலிபர், “பெரியவரே இதனைத் தூக்கி வர கூலியாள் வேண்டுமா?” என்று கேட்டார். ஆம் என்று என் தந்தை பதில் கூறியதும் அவர் அதனை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டு எங்களுடன் நடந்து வந்தார்.
 சென்று கொண்டிருக்கும் போது வழியில் பாங்கு சப்தம் கேட்டதும் அந்த வாலிபர், “நான் உளூச் செய்ய வேண்டியிருக்கிறது. உளூச் செய்து தொழுத பின்னர்தான் இதனை எடுத்து வர முடியும். உங்களுக்கு விருப்பமிருந்தால் சற்று நேரம் காத்திருங்கள். இல்லையானால் தங்களுடைய மீனை எடுத்துச் செல்லலாம் என்று கூறி மீனை வைத்து விட்டுச் சென்று விட்டார்.
 ஒரு கூலிக்காரப் பையன் இவ்வளவு பக்தியுடன் இருக்கும் பொழுது, நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதற்கு இவரை விட மிக மிகத்தகுதியுள்ளவர்கள் என்பதற்காக என் தந்தையார் எண்ணியவராக அந்த மீன் கூடையை அங்கேயே வைத்துவிட்டு மஸ்ஜிதுக்குச் சென்று விட்டார்கள். நாங்கள் தொழுகையை முடித்து திரும்பி வந்த போது அந்த மீன் அங்கேயே அப்படியே இருந்தது. அந்த வாலிபர் அதனைத் தூக்கி எங்களுடைய வீட்டில் கொண்டு வந்து விட்டார்.
 வீட்டுகுச் சென்று தந்தை இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியை என் தாயாரிடம் கூறினார். அதற்கு என் தாயார், “அவரை இருக்கச் சொல்லுங்கள். அவரும் மீன் சாப்பிட்டுச் செல்லட்டும்” என்று கூறினார். இதனை அவ்வாலிபரிடம் கூறியதும், “நான் நோன்பு வைத்திருக்கிறேன்” என்றார் அவர். சரி மாலையிலாவது இங்கு வந்து நோன்பு திறக்க வேண்டும் என்று என் தந்தையார் வற்புறுத்திக் கூறியதும், “நான் போய்விட்டுத்திரும்பி வர முடியாது. வேண்டுமானால் இங்கு அருகிலுள்ள மஸ்ஜிதில் தங்கி இருக்கிறேன். மாலையில் உங்களுடைய விருந்தைச் சாப்பிட்டுச் செல்கிறேன்.” என்று கூறிவிட்டு அருகிலுள்ள மஸ்ஜித்துக்கு சென்று விட்டார்.
 மாலை நேரமானதும் மஃரிபிற்குப் பின் அவர் வந்தார். சாப்பிட்டு முடித்த பின் அவர் இரவில் தங்குவதற்காக தனிமையான ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் அவர் தங்கினார். எங்களுக்குப் பக்கத்து வீட்டில் நடக்க முடியாத சப்பாணிப்பெண் ஒருத்தி இருந்தாள். அவள் மறுநாள் முற்றிலும் சுகம் உடையவளாக - நன்கு நடக்கக் கூடியவளாக இருப்பதைப் பார்த்தோம். நாங்கள் அவளிடம் ‘உனக்கு எப்படிச் சுகம் ஏற்பட்டது’ என்று கேட்டதற்கு உங்கள் வீட்டுக்கு வந்திருந்த விருந்தாளியின் பொருட்டால் நான் அல்லாஹுதஆலாவிடம் துஆ கேட்டேன். “யா அல்லாஹ் இந்த விருந்தாளியின் பரக்கத்தால் எனக்கு சுகமளிப்பாயாக என்று கேட்டதும் உடனே எனக்குச் சுகம் எற்பட்டுவிட்டது.” என்று அப்பெண் கூறினாள். பிறகு நாங்கள் அவ்வாலிபர் தனிமையில் இருந்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது கதவு மூடியே இருந்தது. ஆனால் அவரை அங்கு காணவில்லை. எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.
 இந்தக்கதை மேற்படி நூலில் 124ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. கூலியாள் வேண்டுமா என்று இவ்வாலிபர் வந்து கேட்கிறார். மீனைத்தூக்கி வருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு பொறுப்பேற்றுக் கொண்டவர் இடையிலேயே ஒப்பந்தத்தை முறிக்கிறார். இப்படி நடக்க வேண்டும் என்று இஸ்லாம் போதிக்கவில்லை. கூலிக்கு வேலை கேட்கும் போதே அவர் யோசித்திருக்க வேண்டும். அல்லது பாங்கு சப்தம் கேட்கும் வரை நான் தூக்கி வருவேன் என்று அவர் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். ஆனால் அவர் இடையில் கழுத்தறுக்கிறார். இத்தகைய ஒப்பந்தத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
 பாங்கோசை கேட்டவுடன் ஒப்புக் கொண்ட வேலையைக் கூட உதறித் தள்ளிய இந்த வாலிபர் மஃரிபுக்குப் பின் சாப்பிட்டு விட்டு தனியறைக்குச் சென்று விட்டதாக இந்தக் கதை கூறுகிறது. இவ்வளவு பேணுதலுள்ளவர் இஷா ஜமாஅத்துக்காக ஏன் புறப்படவில்லை? இந்தக் கதை பொய்யாகப் புனையப்பட்டது என்பதை இந்த முரண்பாடு காட்டிக் கொடுத்து விடுகின்றது.
தொழுகையின் சிறப்பைச் சொல்லும் சாக்கில் ஸகரிய்யா சாஹிப் தூவுகின்ற விஷக்கருத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.      
 எவரது பொருட்டாலும் இறைவனிடம் எதையும் கேட்கலாகாது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கொள்கை. ஒவ்வொருவரும் தத்தமது நல்லறங்களின் பொருட்டாலேயே இறைவனிடம் உதவி தேட வேண்டும். ஸகரிய்யா சாஹிப் பின்பற்றுகின்ற இமாம் அபூஹனீபா அவர்கள் கூட இதை மிகவும் தெளிவாக அறிவித்துள்ளார்கள்.
 இதற்கு மாற்றமாக அந்த வாலிபரின் பொருட்டால் அப்பெண்மணி குணமடைந்தாள் என்று கதை விடுகிறார். தனது இமாமுடைய போதனைக்கு மாற்றமாகவும் இவர் கதையளந்திருப்பது இது போன்ற மரியாதையை மற்றவர்களிடமிருந்து பெறுவதற்கே.
 நல்லடியார்களை ஷைகுமார்களை மக்கள் இவ்வளவு உயரத்தில் வைத்துப் போற்ற வேண்டும் என்ற போதனை தான் இந்தக்கதையின் முக்கிய அம்சமாக உள்ளது.
 மண்ணறை நெருப்பைக் கண்ட பெரியார்
 அல்லாமா இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஜவாஹிர் என்ற நூலில் எழுதியுள்ளதாவது:
 ஒரு பெண் இறந்து விட்டாள். அடக்கம் செய்யும் போது அப்பெண்ணின் சகோதரரும் உடனிருந்தார். அப்பொழுது அவருடைய பணப்பை அக்கப்ரில் விழுந்து விட்டது. அது அவருக்குத் தெரியவில்லை. பிறகு அது அவருக்கு நினைவு வந்த பொழுது மிகவும் கவலையடைந்தார். யாருக்கும் தெரியாமல் கப்ரை தோண்டி அதனை எடுத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குச் சென்று கப்ரை தோண்டியபோது அந்தக் கப்ரு நெருப்புக் கங்குகளால் நிரம்பி இருக்கக் கண்டு பயந்து போய் அழுதவராக தன் தாயாரிடத்தில் வந்து விபரத்தைக் கூறி விளக்கம் கேட்டார். அதற்கு அவருடைய தாயார், “அவள் தொழுகையில் சோம்பல் செய்பவளாக அதனைக் களா செய்பவளாக இருந்தாள்” என்று கூறினார்.
 இந்த கதை தப்லீகின் தஃலீம் தொகுப்பில் பக்கம் 76ல் இடம்பெற்றுள்ளது.
தொழுகையை விடுவது மிகப்பெரும் பாவம் என்பதும் கப்ருடைய வேதனை உண்டு என்பதும் முழு உண்மைதான். இந்த இரண்டையும் வலியுறுத்த எண்ணற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. இந்தக்கதை உண்மையா என்பதே இங்கு ஆராயப்பட வேண்டிய உண்மை.
 கப்ரில் நடக்கும் வேதனைகளை உலகில் வாழும் மனிதர்கள் அறிய முடியுமா? என்பதை முதலில் ஆராய்வோம்.
 அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 23:)
 மனிதர்கள் மரணித்துவிட்டால் அவர்கள் முன்னே திரை போடப்படுகின்றது என்று இவ்வசனம் கூறுவதால் உயிருடனிருப்பவர்கள் கப்ரில் நடப்பதையும், கப்ரில் இருப்பவர்கள் இவ்வுலகில் நடப்பதையும் அறிய முடியாது என்பதை அறிகிறோம். அறிய முடியும் என்றால் திரை போடப்படுகின்றது என்ற இறைவனின் வார்த்தைக்கு அர்த்தமில்லாது போய்விடும்.
 இந்த சமுதாயம் கப்ரில் சோதிக்கப்படுகின்றது. நீங்கள் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்யமாட்டீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நான் செவியுறுகின்ற கப்ரின் வேதனையை நீங்கள் செவியுறுமாறு அல்லாஹ்விடம் துஆ செய்திருப்பேன் என்பது நபிமொழி.
அறிவிப்பவர் : ஸைத் இப்னு ஸாபித் (ரலி)
நூல் : முஸ்லிம்
 கப்ரில் நடந்ததை நீங்கள் அறிந்து கொண்டால் ஒருவரை ஒருவர் அடக்கம் செய்ய முன்வரமாட்டீர்கள் என்ற தகுந்த காரணத்தைக் கூறி, அதனால் கப்ரில் நடப்பதை நீங்கள் அறிய முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.
 கப்ரில் நடக்கும் வேதனையை மனித – ஜின் இனத்தைத் தவிர கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட அனைத்தும் செவியுறும் என்பது நபிமொழி.   
அறிவிப்பவர் : பரா (ரலி)   நூல்கள் : அஹ்மத், அபூதாவூத்
 இந்த ஹதீஸும் கப்ரில் நடப்பதை எந்த மனிதனும் அறிய முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.
 இந்த நபிமொழிகளுக்கும், மேற்கண்ட குர்ஆன் வசனத்துக்கும் முரணாக இந்தக் கதை அமைந்துள்ளது.
 தொழுகையை விட்ட எத்தனையோ நபர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் திரும்பவும் தோண்டி எடுக்கப்படுகின்றன. எத்தனையோ காபிர்களின் சடலங்களும் தோண்டி எடுக்கப்படுகின்றன. இவ்வாறு தோண்டி எடுக்கப்படும்போது தீக்கங்குகளால் கப்ரு நிரம்பியிருந்ததை எவருமே கண்டதில்லை.
 ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சில நாட்களுக்குப் பின் மற்றொருவர் அடக்கம் செய்யப்படுகிறார். இப்படி ஒரு இடத்தில் பல நூறு நபர்கள் அடக்கம் செய்யப்படுகின்றனர். மற்றொருவரை அடக்கம் செய்வதற்காக ஒரு அடக்கத்தலம் தோண்டப்படும் போது எந்த சந்தர்ப்பத்திலும் எவரும் கப்ரில் தீக்கங்குகள் நிரம்பி இருந்ததை காணவில்லை.
 இந்த நடைமுறையும் அந்தக் கதை பொய் என்பதற்கு போதுமான ஆதாரமாக உள்ளது.
 இந்தக் கதை பொய்யானது என்பதற்கு இந்தக் கதையே சான்று கூறுவதையும் சிந்திக்கும் போது உணரலாம்.
 அந்தக் கதையில் உலகில் எவருமே காணாத ஒரு காட்சியை ஒருவர் காண்கிறார். இக்கதை உண்மை என்று வைத்துக் கொண்டால் இவ்வளவு முக்கியமான நிகழ்ச்சியைக் கண்டவர் யார் என்பது பிரசித்தமாக இருக்க வேண்டும்.
 இதைக் கண்டவரின் பெயரோ அவரின் தந்தையின் பெயரோ, அவர் நம்பகமானவர் என்பதற்கான சரித்திரக் குறிப்புகளோ எதுவுமே இக்கதையில் இல்லை.
 இவ்வளவு அதிசயமான நிகழ்ச்சி நடந்த காலம் என்ன? எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாடு, எந்த ஊர் என்ற விபரமும் இல்லை.
 இக்கதையில் வரும் சகோதரிக்கும் முகவரி இல்லை. தாயாருக்கும் முகவரி இல்லை.
 இது உண்மை என்றிருக்குமானால் இவ்வளவு விபரங்களும் தெரிந்திருக்கும். அவை பதிவு செய்யப்பட்டிருக்கும்.
 இந்தக் கதை ஏற்படுத்தும் தீய விளைவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
 ஒருவன் தான் மதிக்கின்ற பெரியாரின் புகழை மேலோங்கச் செய்ய எண்ணி அப்பெரியாரின் கப்ரு ஒளிமயமாக இருந்தது என்று கதை விடலாம். மறுமையில் இறைவன் வழங்கக் கூடிய தீர்ப்பை இங்கேயே வழங்க சிலர் முற்படலாம். தனக்கு பிடிக்காதவர்களின் கப்ரில் தீக்கங்குகளை கண்டதாக கதை விடலாம். இது தான் இந்தக் கதையினால் ஏற்படும் விளைவாகும்.
 இந்த விளைவை ஏற்படுத்துவதே இந்தக் கதையை எழுதியவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று நமக்குத் தோன்றுகிறது.
 சில பெரியார்களின் கப்ரு வாழ்க்கைப் பற்றி கட்டிவிடப்பட்டுள்ள கதைகள் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துகின்றது.
 கப்ரில் தொழுத பெரியார்
 ஸாபித் பன்னானி (ரஹ்) அவர்கள் இறந்தபின் அன்னாரை அடக்கம் செய்யும்போது நானும் உடனிருந்தேன். அடக்கம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு செங்கல் கீழே விழுந்து உள்ளே துவாரம் ஏற்பட்டது. அதன் வழியாக நான் பார்த்த போது அவர் கப்ருக்குள் நின்று தொழுது கொண்டிருக்கக் கண்டேன். அருகிலிருந்தவரிடம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பாருங்கள் என்று கூறினேன். அதற்கு அவர் பேசாமலிரு என்று என்னிடம் கூறிவிட்டார்.
 தப்லீகின் தஃலீம் தொகுப்பு பக்கம் 129 ல் இந்தக் கதை இடம்பெற்றுள்ளது.
 கப்ரில் நடப்பதை எவரும் அறியமுடியாது என்பதற்குப் பல ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம். அந்த ஆதாரங்களுடன் இந்தக் கதையும் நேரடியாக மோதுகிறது.
 ஸாபித் பன்னானி அவர்கள் உண்மையில் நல்லடியாராக இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம். நல்லடியாராக இருந்தால் கப்ரில் எத்தகைய நிலையில் இருப்பார் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.
நல்லடியார்கள் மண்ணறையில் வைக்கப்பட்டதும் முன்கர் நகீர் எனும் இரு வானவர்கள் அவரிடம் கேள்வி கேட்பர். அவர் கேள்விக்கு சரியான விடையளிப்பார். அந்த நிகழ்ச்சியை நபி (ஸல்) விளக்கும் போது,
 “கேள்வி கேட்கப்பட்ட பின் 70 X 70 என்ற அளவில் அவரது அடக்கத் தலம் விரிவாக்கப்படும். பின்னர் அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பின்னர் அவரிடம் ‘உறங்குவீராக’ எனக் கூறப்படும். “நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இச்செய்தியைக் கூறிவிட்டு வருகிறேன்” என்று அவர் கூறுவார். அப்போது இரு மலக்குகளும் “புது மணமகனைப் போல் உறங்குவீராக!” எனக் கூறுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். (திர்மிதி)
 நல்லடியார்கள் கியாமத் நாள் வரை மண்ணறையில் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்று இந்த நபிமொழி கூறுகிறது. இந்த நபிமொழிக்கு மாற்றமாக ஸாபித் என்ற பெரியார் தொழுது கொண்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.    
 அது மட்டுமன்றி கப்ரிலிருந்து செங்கல் ஒன்று விழுந்துவிட்டது. அதன் மூலம் ஓட்டை ஏற்பட்டது என்று கூறப்படுவதும் நம்பும்படி இல்லை. கப்ரில் செங்கல்லுக்கு வேலை இல்லை. அதுவும் ஸாபித் பன்னானி அடக்கம் செய்யப்படும் போதே இது நிகழ்ந்துள்ளது. செங்கல்லால் கட்டடம் கட்டத் தடை இருந்தும் தொழும் காட்சியைக் கண்டு அறிவித்த இந்த மகான் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார்.
 எனவே இந்தக் கதையும் உண்மை கலக்காத பச்சைப் பொய் என்பதில் சந்தேகமில்லை.
 இரவில் உறங்காத பெரியார்கள்
 அபூ இதாப் ஸல்மீ (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இரவு முழுவதும் தொழுது கொண்டே இருந்தார்கள் பகல் முழுவதும் நோன்பு வைத்திருந்தார்கள். (பக்கம் 132)
 இமாம் அஹ்மதுப்னுஹம்பல் (ரஹ்) அவர்கள் தினமும் முன்னூறு ரக்அத்கள் நபில் தொழுபவர்களாக இருந்தார்கள். (பக்கம் 132)
 இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுகையில் அறுபது தடவை குர்ஆனை ஓதி முடிப்பார்கள். (பக்கம் 132)
ஹஜ்ரத் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) ஐம்பது ஆண்டுகள் இஷாவையும், சுபுஹையும் ஒரே உளூவைக் கொண்டு தொழுது வந்தார்கள். (பக்கம் 131)
 அபுல் முஃதமர் (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இவ்விதம் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 131)
 இமாமுல் அஃளம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள் முப்பது ஆண்டுகள் அல்லது நாற்பது ஆண்டுகள் அல்லது ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளூவைக் கொண்டு சுபுஹைத் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 132)
 இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களுக்கிருந்த கல்வி சம்மந்தமான வேலைகள் பளுவைப் பற்றி அனைவருக்கும் தெரியும், அத்துடன் அவர்கள் அந்நாட்டின் பிரதம நீதிபதியாகவும் இருந்து வந்ததால் அது சம்மந்தமான வேலைகளும் ஏராளமாக இருந்தன. அவ்வாறிருந்தும் ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 130)
 இப்படிப்பட்ட கதைகள் நூல் நெடுகிலும் மலிந்து காணப்படுகின்றன. மத்ஹபையும், தரீக்காவையும் நியாயப்படுத்துவதற்காக இப்பெரியார்களின் வணக்க வழிபாடுகள் பற்றி மலைப்பூட்டப்படுகின்றன.
 உண்ணுதல், உழைத்தல், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் இவைகளை எல்லாம் முடித்து விட்டு 200 அல்லது முன்னூறு ரக்அத்கள் தொழ முடியுமா?
 நாற்பது, ஐம்பது ஆண்டுகள் உறங்காமல், மனைவியுடன் கூடாமல், மலஜலம் கழிக்காமல் இஷாவுக்குச் செய்த உளூவைக் கொண்டு சுபுஹ் தொழ முடியுமா?
 ஒரு இரவுத் தொழுகையில் இரண்டு தடவை குர்ஆனை ஓதி முடிக்க முடியுமா?
இதைச் சிந்தித்தாலே இந்தக் கதைகளின் தரத்தை விளங்கிக் கொள்ளலாம். இதை எல்லாம் தூக்கி சாப்பிடுகிறது மற்றொரு கதை!
 ஹஜ்ரத் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 160)
ஒரு ரக்அத்துக்கு ஒரு நிமிடம் என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு இரவுக்கு 1000 ரக்அத் நபில்கள் தொழ முடியுமா? இஷாவிலிருந்து சுபுஹ் வரை 500 நிமிடங்கள் கூட இராது.
இந்தச் சாதாரண கணக்கைக் கூட சமுதாயம் கவனிக்கத் தவறுவதால் ஸகரிய்யா சாஹிப் வாயில் வந்தவாறெல்லாம் கதையளக்கிறார்.
ரக்அத்களின் எண்ணிக்கை பற்றிக் கூறும் போது 1000 ரக்அத்கள், 200 ரக்அத்கள் என்றெல்லாம் பெரியார்கள் தொழுது வந்ததாக பிரமிப்பூட்டும் ஸகரிய்யா சாஹிப் அவர்கள் எப்படித் தொழுதார்கள் என்பதைக் கூறும்போது மலைப்பின் உச்சிக்கே நாம் சென்று விடுகிறோம்.
ஹஜ்ரத் உவைஸுன் கரனீ (ரஹ்) அவர்கள் பிரபலமான பெரியார். தாபியீன்களின் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் இரவு நேரங்களில் தொழும்போது சில சமயங்களில் ருகூவுச் செய்வார்கள். இரவு முழுவதும் அப்படியே ருகூவிலேயே சென்று விடும். சில சமயங்களில் ஸஜ்தாச் செய்வார்கள். இரவு முழுவதும் ஒரு ஸஜ்தாவிலேயே கழிந்துவிடும். (பக்கம் 161)
இப்படியெல்லாம் தொழவேண்டுமென்பதற்காக இந்த சம்பவத்தையும் ஸகரிய்யா சாஹிப் எழுதுகிறார். தொழுகை இப்படித்தான் அமைந்திருக்க வேண்டுமென்றால் 1000 ரக்அத்து சமாச்சாரமெல்லாம் பொய்யென்று ஆகின்றது.
தொழுகையின் சிறப்பு என்ற பெயரில் ஸகரிய்யா சாஹிபுடைய புருடாக்கள் சிலவற்றைக் கண்டோம். பலவீனமான ஹதீஸ்கள் பல இடம் பெற்றிருந்தாலும் அவற்றை நாம் விமர்சனம் செய்யவில்லை. கதைகளை மட்டுமே விமர்சித்துள்ளோம்.
இந்தக் கதைகளை எழுதிய ஸகரிய்யா சாஹிபுக்கே இதில் சந்தேகம் வந்துவிட்டது போலும் யாரும் நம்ப மாட்டார்களே என்ற சந்தேகத்தில் ஒரு முடிவுரையும் தந்து நியாயப்படுத்துகிறார். அவர் கூறுவதையும் கேளுங்கள்!
ஆனால் இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் முதலாவதாக, இந்தச் சம்பவங்கள் எல்லாம் சரியான ஆதாரங்களுடன் அதிகமான அறிவிப்புத் தொடருடன் கூறப்பட்டுள்ளன. நாம் இவற்றைச் சந்தேகிப்போமானால் சரித்திரம் முழுவதுமே நம்பிக்கை அற்றதாகிவிடும். ஒரு நிகழ்ச்சி உண்மை என்பதற்கு அது அதிகமாக பல நூற்களில் பல ஆசிரியர்களால் கூறப்பட்டிருப்பது சான்றாகும்.
இவ்வாறு ஸகரிய்யா சாஹிப் பக்கம் 167 ல் நியாயப்படுத்துகிறார்.
பல நூற்களில் எழுதப்பட்டது உண்மை என்பதற்கு சான்றாக ஒரு போதும் ஆகாது. இதிலும் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இந்தக் கதைகள் அமைந்திருக்கும் போது ஒரு போதும் அது உண்மையாக இராது. சமாதி வழிபாட்டை ஸகரிய்யா சாஹிப் எதிர்த்து வந்தவர். ஆனால் சமாதி வழிபாட்டை நியாயப்படுத்தும் கதைகள் பல நூல்களில் எழுதப்பட்டுள்ளதை அவர் ஏற்கவில்லையே அது ஏன்?
சரியான ஆதாரங்களுடன் அதிகமான அறிவுப்புத் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற கூற்றிலும் பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார்.
இந்தக் கற்பனைக் கதைகளில் பல அறிவுப்புத் தொடர்களையும் வெளியிட்டு அதன் அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையையும் நிரூபிக்க வேண்டும். ஸகரிய்யா சாஹிப் இன்று இல்லாததால் தப்லீகின் தலைமைப் பிரச்சாரர்களாக திகழும் அறிஞர்கள் இதை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இந்தக் கதைகளை நியாயப்படுத்த அவர் கூறும் மற்றொரு நியாயத்தையும் கேளுங்கள்.
இரண்டாவதாக, சில மனிதர்களை நாம் காண்கிறோம். அவர்கள் சினிமா தியேட்டர்களிலும் வீண் வேடிக்கைகளிலும் இரவு முழுவதையும் விழித்திருந்து கழிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எவ்விதச் சிரமும் தெரிவதில்லை. தூக்கம் விழிப்பதால் துன்பங்கள் ஏதும் தெரிவதில்லை.
இதுவும் அறியாமையில் எழுந்த வாதமே! இந்தக் கதைக்கு உதாரணமாக இவற்றைக் கூறவே முடியாது.
சினிமாவிலேயே இரவைக் கழிக்கும் ஒருவர் பற்றி ஒரு இரவில் 20 சினிமா பார்த்தார் என்று கூறப்படுவதில்லை. ஒரு இரவில் எத்தனை சினிமா பார்க்க முடியுமோ அத்தனை சினிமா பார்த்ததாகத்தான் கூறப்படுகின்றது. ஆனால் ஸகரிய்யா சாஹிபின் கதையில் ஒரு இரவில் எத்தனை ரக்அத்கள் அதிகபட்சம் தொழ முடியுமோ அது போல் ஐம்பது மடங்கு கூடுதலாகக் கூறப்படுகின்றது.
நாற்பது ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள் இரவு முழுவதும் சினிமா பார்த்துக் கொண்டே இருந்தார். பகலிலும் அவர் உறங்கிவிடவில்லை என்று எவரைப் பற்றியும் கூறப்படுவதில்லை. ஏதோ சில திருநாட்களில் இரவில் விழித்துவிட்டு அதற்குப் பகரமாக பகலில் அவர்கள் உறங்குவதாகவே கூறப்படுகின்றது. அப்படித் தான் நடந்தும் வருகின்றது. அந்த நாட்களில் கூட இரவு முழுவதும் மலஜலம் கழிக்கவில்லை என்று கூறப்படுவதில்லை. ஸகரிய்யா சாஹிபின் கதையில் இவையெல்லாம் கூறப்படுகின்றன.
அப்படி யாராவது நாற்பது ஆண்டுகள் இரவில் விழித்து சினிமா பார்த்து விட்டு பகலிலோ, இரவிலோ உறங்காமலிருந்தால் அவர்கள் கீழ்பாக்கத்துக்கு அனுப்பப்படுவதை காண்கிறோம். எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்பது ஆதாரமற்றதாகும்.
இவற்றையெல்லாம் விட ஸகரிய்யா சாஹிபின் கதைகள் தீனுடைய போர்வையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. சினிமா பார்ப்பவனின் கதைக்கு தீனுடைய முத்திரை எதுவும் குத்தப்படுவதில்லை.
எவ்வகையிலும் நியாயப்படுத்திட இயலாத இந்தப் பொய்கள் தான் தொழுகையின் சிறப்பு பகுதி முழுவதும் மலிந்துள்ளன.
மாதிரிக்காக ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே நாம் இனம் காட்டியுள்ளோம். சிந்தனையுடைய மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.
குர்ஆனும், நபிவழிக்கும் முரணான – தப்லீகின் ஸ்தாபகர் காலத்திற்குப் பின்னர் உள்ளவர்களால் தயாரிக்கப்பட்ட இந்த நூலை தப்லீக் ஜமாஅத்தினரும் பொது மக்களும் புறக்கணிப்பார்கள் என்று நம்புவோமாக! அடுத்து ரமலானின் சிறப்புகள் பகுதியில் இடம்பெற்றுள்ள கற்பனைக் கதையைப் பார்ப்போம்.
மவ்லானா ஷாஹ் அப்துர்ரஹீம் ஸாஹிப் ராய்ப்பூரி (ரஹ்) அவர்களிடத்திலோ ரமலான் மாதத்தின் இரவு பகல் முழுவதும் குர்ஆன் ஓதுவதாகவே இருந்தது. அதில் கடிதம் எழுதுவதையும் நிறுத்தி விடுவார்கள். அன்பர்களைச் சந்திப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் தராவீஹுக்குப் பின்னால் இரண்டு கோப்பை வெறும் தேநீர் அருந்துகிற நேரத்தில் மட்டும் அவர்களின் சமூகத்துக்கு வந்து செல்லலாம் என்ற அனுமதி சில குறிப்பான பணிவிடையாளர்களுக்கு மட்டும் இருந்து வந்தது.
(ரமலானின் சிறப்பு பக்கம் 17)
மனித ரமலான் சிறப்பான மாதம் என்பதிலோ அதில் இயன்ற அளவுக்கு நன்மைகளில் ஈடுபட வேண்டுமென்பதிலோ எந்த சந்தேகமுமில்லை.
னால் இந்தப் பொரியார் நடந்து கொண்டது போல் நடக்க வேண்டுமா? என்பது தான் கேள்வி. இந்தக் கதையை எழுதிவிட்டு தொடர்ந்து ஸகரிய்யா சாஹிப் பின்வருமாறு எழுதுகிறார்:-
 பெரியார்களுடைய இந்தப் பழக்கவழக்கங்களெல்லாம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துப் படிப்பதற்கு மட்டுமோ அல்லது அவர்களுக்குப் புகழ் வார்த்தைகள் கூறப்பட வேண்டுமென்பதற்காகவோ எழுதப்படுவதில்லை, எனினும் தன் முயற்சிக்குத் தக்கவாறு அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகின்றன. இயன்ற அளவு பூர்த்தியாக்குவதில் முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
 இந்தக் கதையைப் பின்பற்றி நடக்க வேண்டுமென்பதற்காகவே எழுதியுள்ளதாக ஸகரிய்யா சாஹிப் வாக்கு மூலம் தருகிறார்.
 இவரை பின்பற்றினால் என்னவாகும்? மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை இம்மாதம் முழுவதும் செய்யக் கூடாது. தன் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. தொழில் வியாபாரம் செய்யக் கூடாது. பிள்ளை குட்டிகளைக் கவனிக்கக் கூடாது. நண்பர்களை, அண்டை வீட்டாரைச் சந்திக்கக் கூடாது. அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. நன்மையை ஏவி, தீமையத் தடுக்கவும் கூடாது. எந்நேரமும் குர்ஆனை ஓதிக்கொண்டே இருக்கவேண்டும். இவ்வாறு நடக்குமாறுதான் ஸகரிய்யா சாஹிப் உபதேசிக்கிறார். சுருங்கச் சொன்னால் பண்டாரங்களாகவும், பரதேசிகளாகவும் முஸ்லிம்கள் ஆகிவிட வேண்டும் என்கிறார்.
 புனித ரமலானில் போர்க்களங்களில் நபி (ஸல்) பங்கெடுத்துக் கொண்டதும், சமூகத்தில் அவர்கள் கலந்துரையாடியதும் தம்தோழர்களையும் அவர்கள் சந்தித்ததும் நன்மையை ஏவி தீமையத் தடுத்ததும் இல்லறத்தில் அவர்கள் ஈடுபட்டு குளிப்புக் கடமையானவர்களாக நோன்பு நோற்றதும் பின்பற்றத் தக்கதல்ல என்கிறார்.
 நபி (ஸல்) அவர்கள் புனித ரமலானை எப்படிக் கழித்தார்கள் என்பதைச் சொல்லியிருந்தால் அது நியாயமானதாக இருக்கும். நபிவழிக்கு மாற்றமாக நடந்தவரகளை பெரியார்கள் என்று அறிமுகப்படுத்தி அவர்கள் வழியில் செல்ல சமுதாயத்தையும் தூண்டுகிறார்.
 இவர் சொல்லக் கூடிய பெரியார்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகி இருக்கலாம். ஏனெனில், அவர்கள் உழைத்து உண்பவர்களாக இருந்ததில்லை. பிறரிடமிருந்து காணிக்கைகள் ஹதியாக்களில் காலத்தை ஓட்டியவர்கள். எது எக்கேடு கெட்டாலும் கிடைக்கவேண்டியது கிடைத்து விடும். தனக்குப் பணியாட்களை நியமித்துக்கொள்ளும் அளவுக்கு (அந்தக் கதையில் இதை விளங்கலாம்) உழைக்காமலேயே செல்வத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள்.
 எவ்வித வியாபாரமோ, விவசாயமோ, தொழிலோ செய்யத் தேவையில்லாத அளவுக்கு இஸ்லாமே பிழைப்புக்கு வழியாகவும் சொகுசு வாழ்க்கைக்குச் சாதனமாகவும் ஆகிவிட்ட ஸகரிய்யா சாஹிப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம். (ஆனால் அவருக்கும் இது சாத்தியமாகவில்லை என்பதை அவரை நேரில் கண்ட என்னைப் போன்றவர்கள் அறிவார்கள்)
 அன்றாடம் கூலி வேலை செய்தே தன் வயிற்றையும், தன் குடும்பத்தார் வயிற்றையும் கழுவக் கூடிய சராசரி மனிதனுக்கு இது சாத்தியமாகுமா?
 தங்கள் தொழிலை நேரடியாக மேற்பார்வை செய்தால் தான் இலாபம் அடைய முடியும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது சரிபட்டு வருமா?
 இந்தப் பெரியார்களுக்குக் கிடைத்தது போன்று இந்த சாமான்ய மக்களுக்கு காணிக்கைகள் குவியுமா என்ன? இஸ்லாமியர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யவே இந்தக் கதைகள் உதவும் என்பதை சமுதாயம் கண்டு கொள்ளவேண்டும்.
 இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கதைக்கு முரணான போதனையையும் வேறொரு இடத்தில் செய்கிறார்.
 இது பிறருடைய சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும் மாதம் என்று கூறியுள்ளார்கள். அதாவது ஏழை, எளியோருடன் கலந்துறவாடி நடந்து கொள்ளுதல் என்பதாகும். (ரமலானின் சிறப்பு பக்கம் 20)
 ஏழை, எளியோருடன் கலந்துறவாடாமல் அவர்களது கஷ்டத்தில் பங்கு கொள்ளாமல் மேற்படி பெரியார் நடந்துள்ளார் எனும் போது அவர் எப்படி பின்பற்றத்தக்கவராவார்?
 இஸ்லாத்திற்குத் தவறான வடிவம் தந்து இஸ்லாம் நடைமுறை சாத்தியமற்ற மார்க்கம் என்று காட்டுவதும் பெரியார்கள் மீது மலைப்பூட்டும் வகையில் பக்தியை ஏற்படுத்துவதும் தான் இவரது நோக்கமோ என்னவோ?
 புனித ரமலானின் சிறப்பைக் கூறப் புகுந்த ஸகரிய்யா சாஹிப் ஆங்காங்கே செய்யும் போதனைகளையும் நாம் அலச வேண்டியுள்ளது.
 நோன்பு திறக்கும் பொழுது ஹலாலான உணவானாலும் வயிறு புடைக்க அதிகமாகச் சாப்பிடாமலிருப்பது ஏனெனில், இதனால் நோன்பின் நோக்கம் தவறி விடுகின்றது. நோன்பு வைப்பதன் நோக்கம் மனோ இச்சைகளையும் மனிதனிலுண்டாகும் மிருக இச்சைகளையும் குறைத்து ஒளிமயமான சக்திகளையும், மலக்குகளின் தன்மைகளையும் வளர்த்துக் கொள்வதாகும். பதினொரு மாதங்கள் வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கிறோம். ஒரு மாதம் அதில் கொஞ்சம் குறைத்துக்கொண்டால் உயிரா போய் விடப்போகிறது? (பக்கம் 62)
 தவறி விட்ட உணவையும் சேர்த்துச் சாப்பிட்டு மனிதன் நோன்பு திறந்தால் நோன்பின் நோக்கமாகிய இப்லீஸை அடக்குதல், நப்ஸின் இச்சையை முறியடித்தல் ஆகியவை எவ்வாறு சாத்தியமாகும்? என்பதற்காக இமாம் கஸ்ஸாலி (ரஹ்) எழுதுகிறார்கள். (பக்கம் 62)
 பிஷ்ருல் ஹாபி (ரஹ்) என்ற பெரியாரிடம் ஒரு மனிதர் சென்றார். அப்பொழுது அவர்கள் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் அவர்களுடைய உடைகள் கழற்றி வைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்ட அம்மனிதர் இந்த நேரத்தில் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர்கள் “ஏழைகள் பலர் ஆடையின்றி இருக்கின்றனர். அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ள எனக்கு சக்தியில்லை. ஆகையால், அவர்களைப் போன்றாவது நானிருந்து அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளவே எவ்வாறு நான் இருக்கிறேன் என்று கூறினார்கள். (பக்கம் 64)
 சுகவாசிகளின் வழக்கத்தைப் போன்று ஸஹர் நேரத்தில் அதிகமாகச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது நோன்பின் நோக்கத்தைத் தவறச்செய்து விடுகின்றது என்று மராகில் பலாஹ் என்ற நூலின் ஆசிரியர் எழுதுகிறார்கள். (பக்கம் 64)
 என்னுடைய ஷைகு மௌலானா கலீல் அஹ்மது சாஹிப் (ரஹ்) அவர்களை ரமலான் மாதம் முழுவதும் நான் கவனித்திருக்கிறேன். இப்தார் ஸஹர் இரண்டு நேரத்துக்கும் சேர்த்து ஒன்றரை ரொட்டியை விட அதிகமாக அவர்கள் சாப்பிட்டதே இல்லை. இதனைப் பற்றி அவர்களின் சீடர் ஒருவர் கேட்டதற்கு எனக்குப் பசி ஏற்படுவதில்லை. நண்பர்களை கவனத்தில் கொண்டுதான் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து இதனையும் சாப்பிடுகிறேன். (பக்கம் 65)
 மவ்லானா – ஷாஹ் அப்துர் ரஹீம் ராய்ப்பூரி (ரஹ்) அவர்கள் சம்மந்தமாக இதைவிட இன்னும் மேலாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் பல நாட்கள் தொடராக இரவு நேரத்தில் ஸஹருக்கும் இப்தாருக்கும் சேர்ந்து சில கோப்பைகள் பாலில்லாத தேநீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள். ஒரு தடவை ஹஜ்ரத் அவர்களின் பிரதமச் சீடர் மவ்லானா ஷாஹ் அப்துல் காதிர் ஸாஹிப் அவர்கள் “ஹஜ்ரத் எதுவும் சாப்பிடாமலிருந்தால் பலவீனம் அதிகமாகி விடுமே? என்று பரிவுடன் கூறியதற்கு அல்ஹம்துலில்லாஹ்! சொர்க்கத்தின் இன்பம் உண்டாகிக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தார்களாம். (பக்கம் 65)
 இப்படி ஏராளமான போதனைகளை ஸகரிய்யா சாஹிப் செய்கிறார். சாப்பிடுவது சம்மந்தமாக அவர் கூறியுள்ள போதனைகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நாம் அலசுவோம். இதற்கு முன்னால் குளிரில் நடுங்கிய பெரியார் பற்றி அவர் கூறும் கதையைப் பார்ப்போம்.
 ஏழைகள் ஆடையின்றி இருக்கிறார்கள் என்பதற்காக தனது ஆடைகளைக் களைந்து விட்டு குளிரில் அப்பெரியார் நடுங்கியதாக கதை விடுகிறார்.
 நபிகள் (ஸல்) காலத்திலும் ஏழைகள் பலர் இருந்துள்ளனர். போதுமான ஆடையின்றி சிரமப்பட்டவர்கள் பலர் இருந்தனர். கபனிடுவதற்கு கூட போதிய ஆடையின்றி மரணித்தவர்கள் பலர் இருந்துள்ளனர். அதில் உலக மாந்தரை விடவும் இரக்க குணம் கொண்ட நபியவர்கள் இருக்கின்ற ஆடையைக் கழற்றிவைக்கவில்லை. ஏழைகள் மலிந்துள்ளார்கள் என்பதற்கு பரிகாரம் இதுவென்றால் நபியவர்கள் அவ்வாறு நடந்திருப்பார்கள். முட்டாள்தனமான காரியத்தைச் செய்தவர்களை எல்லாம் பெரியார்கள் என்று முத்திரைக் குத்தி விளம்பரப்படுத்துகிறார்.
 ஸகரிய்யா சாஹிப் காலத்திலும் குளிருக்கு நடுங்குமளவுக்கு ஏழைகள் இருந்தனர். இன்றும் உள்ளனர். இந்த போதனையை ஸகரிய்யா சாஹிபும் பின்பற்றவில்லை. அவரது ஸஹாரன்பூர் மதரஸாவின் ஆசிரியர்களும், மாணவர்களும் பின்பற்றவில்லை. தப்லீக் மதரஸாக்களும் பின்பற்றவில்லை.
 ஏனைய மதரஸாக்களை விட தப்லீக் மதரஸாக்களில் தான் முட்டுக்கால்களுக்கும் கீழே தொங்குமளவுக்கு ஜிப்பாக்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் துணிப்பஞ்சம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுமளவுக்கு மூன்று சட்டைகள் தைக்கும் அளவுக்கு ஒரு ஜிப்பாவுக்கு துணி தேவைப்படுகிறது.
 ஏழைகளைக்கருத்தில் கொண்டு ஒரு ஜுப்பா தைக்கும் செலவில் ஒரு ஏழைக்கு இரு சட்டைகள் தைத்துக் கொடுக்கலாமே! இதுபோதாதென்று பத்து முழம் துணியில் தலைப்பாகை வேறு. அதில் ஐந்து ஏழைகளுக்கு ஆடை வழங்கலாம்.
 பிஷ்ருல் ஹாபியைப் போல் எல்லாவற்றையும் கழற்றி எறியாவிட்டாலும் ஏழைகளைக் கருத்தில் கொண்டு இதையாவது செய்யலாம் அல்லவா? இதெல்லாம் நடைமுறைசாத்தியமில்லை என்று தெரிந்தேதான் அவர் எழுதியுள்ளார் என்பதற்காகவே இதைக் கூறவேண்டியுள்ளது.
 மனதை அடக்குவதே நோன்பின் நோக்கம் என்று காரணம் கற்பித்துக் கொண்டு மற்ற நாட்களை விடவும் குறைவாக உண்ணச் சொல்கிறார் ஸகரிய்யா சாஹிப். அல்லாஹ்வோ அவனது தூதரோ இந்தக் காரணத்தைக் கூறவில்லை.
 யார் பொய்யான பேச்சையும், அதைச் செயல்படுத்துவதையும் விடவில்லையோ அவன் தனது உணவையும், தண்ணீரையும் விட்டு விடுவதில் அல்லஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. இது நபிமொழி. புகாரி உட்பட பல நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.
 பசியையும், தாகத்தையும் அடக்குவது அல்ல நோன்பின் நோக்கம். அதனால் இறைவனுக்கு ஏதும் ஏற்படப் போவதில்லை. மாறாக இறைவன் தடுத்ததற்காக உணவையும் தண்ணீரையும் சிறிது நேரம் தியாகம் செய்தது போல் இறைவன் தடுத்த அனைத்தை விட்டும் விலகவேண்டியதே நோன்பின் நோக்கம் என்பதை இந்த நபிமொழி விளக்குகின்றது.
 நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது வெப்பம் தாளாமல் தமது தலையில் தண்ணீர் ஊற்றியதை நான் பார்த்திருக்கிறேன் என நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
 மலக்குகளின் தன்மையை அடைவதுதான் நோன்பின் நோக்கம் என்றால் அந்த வெப்பத்தையும் சிரமத்துடன் நபி (ஸல்) சகித்திருப்பார்கள். தலையில் தண்ணீர் ஊற்றியிருக்கமாட்டார்கள்.
 நோன்பு நோற்றிருக்கும் போது தன்னை நபிகள் முத்தமிடுவார்கள் என்று உம்மு ஸலமா அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
ஹலாலான இச்சையையும் அடக்கிக் கொள்வதே நோன்பின் நோக்கம் என்றால் நபியவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.
 விரைந்து நோன்பு துறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பதும் நபிமொழி, ஸஹ்ல் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
 உணவின் மேல் உள்ள நாட்டத்தை அகற்றுவதே நோன்பின் நோக்கம் என்றால் நோன்பைத் தாமதமாகத் துறக்குமாறு வழிகாட்டியிருப்பார்கள். அவசரமாக நோன்பு துறக்கச் சொன்னதன் மூலம் உணவின் மேல் உள்ள நாட்டத்தை மனிதன் துறந்து விடலாகாது என்று கற்றுத் தருகிறார்கள்.
 ரமலான் காலங்களில் உண்பதைப்பற்றி இறைவன் கூறும்போது,
இரவிலிருந்து பஜ்ர் வரை உண்ணுங்கள்! பருகுங்கள் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:187)
 இரவு வந்தது முதல் பஜ்ர் வரையிலும் உண்ணலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். இவ்வளவு நேரமும் ஒருவன் சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் கூட நோன்பின் நோக்கத்தை அவன் மீறியவனாக மாட்டான் என்று இந்த வசனம் கூறுகின்றது.
 உண்மையில் நோன்பின் நோக்கம், எவ்வளவு உண்கிறான் என்று கணக்கெடுப்பதன்று. உணவின் மீது இவ்வளவு ஆசை உள்ள மனிதன், இறைவன் சொன்னதற்காக பகல் பொழுதில் தியாகம் செய்கிறானா என்று கணக்கெடுப்பதுதான்.
 எவ்வளவு உணவை தியாகம் செய்கிறோம் என்பதை விட எதற்காக தியாகம் செய்கிறோம் என்பதே நோன்பின் நோக்கமாகும்.
 பாலில்லாத் தேநீரை அருந்தி விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களும், தனக்குப் பசிப்பதேயில்லை என்று கூறி மனித தன்மைக்கும் அப்பாற்பட்டவராகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்பவர்களும் ஒருக்காலும் பெரியார்களாக முடியாது.
 உழைக்காமல் வயிறு வளர்க்கும் ஹஜ்ரத்மார்களுக்கே சாத்தியப்படாத இந்தப் போதனை அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்?
 திண்ணை தூங்கிகளுக்குரிய மார்க்கமாக இஸ்லாத்தை அறிமுகம் செய்யத்தான் இந்நூல் எழுதப்பட்டதோ என்ற எண்ணம் உறுதியாகின்றதல்லவா?
 பெரியார்கள் மீது மலைப்பையும், மதிப்பையும் ஏற்படுத்துவதே ஸகரிய்யா சாஹிபின் நோக்கம் என்பதைப் பின்வரும் அவரது போதனை ஊர்ஜிதம் செய்கின்றது.
 எனவே நோன்பு நோற்றிருக்கும் நிலையில் நோன்பு திறப்பதற்காக பொருள் ஏதேனும் இருக்கிறதா இல்லையா? என்ற சிந்தனை அவர்களுக்கு வருவதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் கூட குற்றமெனக் கூறியுள்ளனர்.  நோன்பின் மாலை, நோன்பு திறப்பதற்காக ஏதேனும் பொருளைத் தயார் செய்ய வேண்டுமென எண்ணங்கொள்வதும் குற்றமென சில பெரியார்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் அவ்வாறு எண்ணுவது உணவளிப்பது பற்றி அல்லாஹ் வாக்களித்திருக்கும் நம்பிக்கையைக் குறைத்து விடுகிறது என்பதற்காக. (நோன்பின் சிறப்பு பக்கம் 67,68)
 நோன்பு திறப்பதற்கு முன் எங்கிருந்தாவது ஏதாவது பொருள்ள அவர்களுக்கு வந்தால் மனதின் கவனம் அதன் பக்கம் செல்லாமலிருப்பதற்காகவும், தவக்குல் என்ற இறை நம்பிக்கையில் குறை ஏதும் ஏற்படாமலிருப்பதற்காகவும் அந்தப் பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். (நோன்பின் சிறப்பு பக்கம் 68)
 எனினும் இக்காரியங்கள் பெரும் ஆத்மீக வலிமையுடைய மனிதர்களுக்கு உள்ளவையாகும். நம் போன்றோர் இவ்விஷயங்களைச் சிந்திப்பதும் தகுதியில்லாததாக இருக்கின்றது மேலும் அந்த நிலையை அடையாமல் நாம் அதனைத் தேர்ந்தெடுப்பது நம்மை அழிவின் பக்கம் சேர்த்து விடுவதாகும். (நோன்பின் சிறப்பு பக்கம் 68)
 ஸகரிய்யா சாஹிபின் மேற்கண்ட போதனைகளை ஊன்றிக்கவனிக்கும் போது அதில் மலிந்து கிடக்கும் தவறுகளையும் இவரது நோக்கத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம்.
 நோன்பு துறப்பதற்காக உணவுகளைத் தயார் செய்வதும் அது பற்றி சிந்திப்பதும் தவக்குல் எனும் இறை நம்பிக்கைக்கு மாற்றமென்றால்
 அல்லாஹ்வின் ரிஸ்கைத் தேடுங்கள்! ஹலாலான முறையில் பொருளீட்டுங்கள்! என்றெல்லாம் இறைவன் போதிப்பது ஏன்? ஜகாத், ஸதகா போன்ற நல்லறங்களை இறைவன் வலியுறுத்துவது ஏன்? நோன்பு வைப்பதற்கான நேரம் முடிந்ததும் உண்ணுங்கள் பருகுங்கள் என்று இறைவன் போதிப்பது ஏன்? இவையெல்லாம் கூட தவக்குலுக்கு எதிரான போதனைகள் தானா?
 திருக்குர்ஆன் போதனைகளையும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதலையும் அறியாத அறிவீனர்கள்தான் இப்படியெல்லாம் கூற முடியும்.
 பெரும் ஆத்மீக வலிமையுடையவர்களுக்குத் தான் இந்த போதனைகள் என்றும் சரடு விடுகிறார். இப்படிச் சரடு விடாவிட்டால் வேளாவேளைக்கு உண்டு வந்த ஸகரிய்யா சாஹிப் மாட்டிக் கொள்ள வேண்டி வருமல்லவா? அதனால் தான் ஆத்மீக வலிமை பற்றிப் பேசுகிறார்.
 கிடைக்கும் போது சுவையான உணவுகளை உட்கொண்ட நபியவர்கள், உண்பதற்கு ஏதும் உண்டா என்று தன் குடும்பத்தாரிடம் கேட்ட நபியவர்கள், ஆட்டுத் தொடைக் கறியைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்ட நபியவர்கள் ஆத்மவலிமையுடையவர்கள் அல்ல. தவக்குல் உடையவர்கள் அல்ல என்று ஸகரிய்யா சாஹிப் அவர்கள் கூறுகிறார் போலும்.
 பெரும் வணிகர்களாகத் திகழ்ந்த அபூபக்கர் சித்தீக் (ரலி) அப்துர் ரஹ்மான் பின் அவ்பு (ரலி) போன்றவர்களும், யாரேனும் தங்களை உண்ண அழைக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்த அபூஹுரைரா (ரலி) போன்ற திண்ணைத் தோழர்களும் ஆத்மீக வலிமை பெற்றவர்கள் அல்லர் தவக்குல் உடையவர்கள் அல்லர் என்கிறார் ஸகரிய்யா சாஹிப்.
 தவக்குலை போதிக்கும் இறைவன் தான், பொருள் தேடுவதையும் போதிக்கிறான் என்ற சாதாரண உண்மை கூடதெரியாத அறிவீனர்கள்தான் பெரும் ஆத்மீக வலிமையுடையவர்களாம்.
 இஸ்லாமிய சட்டங்களில் இப்படியெல்லாம் இரண்டு நிலைகள் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகள் அனைவருக்கும் பொதுவானது என்ற சாதாரண உண்மை கூட தெரியாத ஸகரிய்யா சாஹிப் போன்றவர்கள் தான் ஷைகுல் ஹதீஸ்களாம்!
ஆத்மீக வலிமை பெற்றவர்களுக்குத் தான் இது சாத்தியம் என்றால், ஆன்மீக வலிமை பெறாத அப்பாவி தப்லீக் ஜமாஅத்தினருக்கு இதை ஏன் போதிக்க வேண்டும்? ஆன்மீக வலிமை உள்ளவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு இதை சொல்ல வேண்டியதுதானே!
ஆத்மீக வலிமை பெறாத பாமரமக்களிடம் இதைக் கூறுவதற்கு காரணம் அந்தப் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்துவது தான் இதைத்தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது.
தொழுகையில் சிறப்பு, ரமலான் சிறப்பு ஆகிய பகுதிகளில் மட்டுமின்றி தொகுப்பு முழுவதும் அபத்தங்கள் நிரம்பியுள்ளன. சிந்திக்கும் மக்களுக்கு இதுவே போதுமாகும்.
நல்ல நோக்கத்தில் தப்லீக் இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கற்பனைத் தொகுப்பை தூக்கி எறிந்தால் வெற்றியடைவார்கள்.
அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக
நூலின் பெயர் : தப்லீக் த்ஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு 
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் 

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்