Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 1

 ஈமான் பற்றிய நூல்

ஈமானில் முதன்மையானது “லாஇலாஹ இல்லல்லாஹு” எனும் கூற்றாகும்.

ஹதீஸ் எண் : 1

அப்துல்லாஹ்பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஜனங்களுக்கும் மத்தியில் மொழி பெயர்ப்பாளராக நான் (அபிஜம்ரா) இருந்தேன். ஓரு பெண் அவர்களிடம் வந்து ஈத்தம்பழம், திராட்சை ஆகியவற்றின் சாறுகளை ஊறவைக்கப் பயன்படுத்தப்படும் களிமண்ணால் ஆக்கப்பட்ட பானைகளைப் பற்றிக்கேட்டனர். அதற்கவர்கள் (கீழ்கண்ட சம்பவத்தைப் கூறினார்கள்)

நிச்சயமாக அப்துல் கைஸ் கூட்டத்திலிருந்து ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தனர். இக் குழுவினர் (அல்லது இம்மக்கள்) யார்? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர். “ரபிஆ” என அவர்கள் கூறினார்கள். இழிவுபடுத்தப்படாமலும் கைசேதமில்லாத நிலையிலும் இக்குழுவினருக்கு அல்லது இம்மக்களுக்கு நல்வரவு உண்டாகட்டும் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (முகமன்) கூறினார்கள் (அப்போது அக்குழுவினர்)

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் நீண்ட கடுமையான பயணத்தை மேற்கொண்டு உங்களிடம் வருகிறோம். உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் “முளர்” (இனத்தைச் சார்ந்த) காபிர்கள் (தடையாக) உள்ளனர். (ஆகவே) போர் செய்வது தடை செய்யப்பட்ட புனித மாதங்கள் தவிர (மற்ற நேரத்தில்) உங்களிடம் வர இயலாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம். (எனவே) தெளிவான கட்டளைகளை எங்களுக்கு இடுங்கள். எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கும் நாங்கள் அதைப்பற்றிச் சொல்வோம். அதன் மூலம் நாங்களும் சுவனம் புகுவோம் என்றனர்.

(நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் நான்கு காரியங்களை (ச் செய்யுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டனர் நான்கு காரியங்களை (தவிர்த்துக் கொள்ளுமாறு) தடுத்தனர்.

அல்லாஹ்வை அவன் தனித்தவன் என விசுவாசம் கொள்ளுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டனர். அல்லாஹ்வை அவன் தனித்தவன் என விசுவாசம் கொள்வது என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கேட்டனர். அதற்கு (அக்குழுவினர்) “அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள்” என்றனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும் (உறுதியான நம்பிக்கைக் கொண்டு) சாட்சி கூறுவதும், தொழுகையை நிறைவேற்றுவதும், ஜகாத்தை வழங்குவதும், ரமளானில் நோன்பு நோற்பதும், போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை வழங்குவதுமாகும் என்றனர்.

மது தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சுரைக்குடுக்கைகள், பச்சை நிறம் பூசப்பட்ட ஜாடிகள், தார் பூசப்பட்ட பாத்திரங்கள், மரக்கட்டைகளின் அடிபாகங்களை குடைந்து (செய்து எடுக்கப்பட்ட பாத்திரங்கள் (-என அநேகமாக கூறியிருக்கலாம் என ஷுஃபா கூறினார்) ஆகிய நான்கு வகைப் பாத்திரங்களை உபயோகப்படுத்துவதை தடைசெய்தனர்.

மேலும் இவற்றைப் பேணிக்கொள்ளுங்கள், உங்களுக்கு அப்பால் உள்ளவர்களுக்கும் இதுபற்றி தெரிவித்துவிடுங்கள் எனக் கூறினார்கள்.

(மேற் கூறப்பட்ட ஹதீஸைப்பற்றி) இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது ஹதீஸில் தனது தந்தை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அப்துல்கைஸ் கூட்டத்தைச் சேர்ந்த அஷஜ்ஜீ என்பவரை நோக்கி, நிச்சயமாக உம்மிடம் அல்லாஹ் விரும்பும் இரண்டு குணங்கள் உள்ளன. அவை பொறுமையும்1 நிதானமும் ஆகும் என கூறினார்கள் என2 அறிவித்ததாகக் கூறுகிறார்.

அறிவிப்பவர் : அபீஜம்ரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1. “ஹில்மு” என்ற வார்த்தைக்கு “பொறுமை” என்பது பொருளாகும். ஒரு சில அறிஞர்கள் “அறிவு” எனவும் பொருள் கொள்கின்றனர்.

2. இப்னு முஆத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில் இவ்வார்த்தையை அதிகமாகக் கூறியுள்ளார்.

ஹதீஸ் எண் : 2

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனங்களுக்கு மத்தியில் இருந்தார்கள். (அப்போது) ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “ஈமான்” என்றால் என்ன? எனக்கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது (மலக்குகளை) அமரர்களையும், அவனது வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதும், இறுதியாக எழுப்பப்படுவோம் என்பதை நீ நம்பிக்கை கொள்வதுமாகும்” என்றனர்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “இஸ்லாம்” என்றால் என்ன? என (வந்திருந்தவர்) கேட்டார். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வை நீ வணங்குவதும், அவனுக்கு நீ எதையும் கூட்டாக்காமல் இருப்பதும், விதியாக்கப்பட்ட தொழுகைகளை நீ நிறைவேற்றுவதும், விதியாக்கப்பட்ட ஜகாத்தை நீ நிறைவேற்றி வருவதும், ரமளானில் நீ நோன்பு நோற்பதுமாகும்” என்றனர்.

“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இஹ்ஸான் என்றால் என்ன என (வந்திருப்பவர்) கேட்டார். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) நிச்சயமாக நீர் அல்லாஹ்வைக் காண்பது போன்றே வணங்குவதாகும். நிச்சயமாக நீர் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையாயினும், அல்லாஹ் நிச்சயமாக உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்றனர்.

(வந்திருந்தவர்) “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (“கியாமத்” எனப்படும்) இறுதி நாள் எப்போது”? எனக் கேட்டனர். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) “கேட்டவரை விட கேட்கப்படுபவர் இது பற்றி மிக அறிந்தவரல்லர். ஆயினும் அதன் அடையாளங்களைப் பற்றி உமக்கு அடுத்து அறிவிக்கிறேன் (எனக்கூறி) அடிமைப்பெண் தனது எஜமானனைப்பெற்று விடுவாளாயின் அது அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடையில்லாதவர்களும் காலில் செருப்பணியாதவர்களும் மக்களுக்குத் தலைவர்களாக ஆகிவிடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடு மேய்த்துத் திரிபவர்கள் மிக உயர்ந்த நீண்ட கட்டிடங்களுக்கு உரிமையாளர்களாகி விடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில் உள்ளாதாகும். (இன்னும்) ஐந்து விஷயங்கள் - அவைகளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியமாட்டார்கள்” (எனக் கூறிவிட்டு) பிறகு

“நிச்சயமாக அல்லாஹ்விடமே இறுதிநாள் பற்றிய அறிவு உண்டு. அவனே மழையை இறக்கி வைக்கிறான். மேலும் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அவனே அறிகிறான். எந்த ஆத்மாவும் நாளை எதைச் செய்யும் என அதற்கு தெரியாது. எந்த ஆத்மாவும் பூமியில் இறப்பெய்தும் என்பதையும் அது அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் (செய்திகளை) அறிவிப்பவனாகவும் இருக்கிறான்” அல்குர்ஆன் : 31: 34 என்ற வசனத்தை ஒதிக்காட்டினார்கள்.

அதன் பிறகு (வந்திருந்த அந்த ) மனிதர் திரும்பச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அந்த மனிதரை மீண்டும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றனர். அவரைத் திரும்ப அழைத்துவரச் சென்றவர்கள் யாரையும் (அம்மனிதரைக்) காணவில்லை என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவர்கள்தான் (வந்து சென்றவர்தான்) ஜிப்ரீல், மனிதர்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக வந்தனர்” என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 3

அபூதாலிபின் மரணவேளையின்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவரிடம் வந்தார்கள். அவரிடத்தில் அபூஜஹலும், அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் முகிராவும் (அங்கே) இருக்கக் கண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “என் தந்தையின் சகோதரரே! “லாஇலாஹ இல்லல்லாஹ்” எனக் கூறுவீராக! இக்கலிமாவைக் கொண்டு உமக்காக அல்லாஹ்விடம் சாட்சி கூறுவேன்” என்று கூறினார்கள்.

அப்துல் முத்தலிபுடைய மார்க்கத்தை விட்டும் அபூதாலிபே நீர் புறக்கணிக்கிறீரா? என அபூஜஹ்லும், அப்துல்லாஹ் பின் உமைய்யாவும் கூறினர். அவருக்கு அ(க்கலிமாவை)தை எடுத்துக்காட்டி திரும்பத்திரும்ப அக்கூற்றைக் கூறிக்கொண்டே அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இருந்தனர். எதுவரையெனில், அவர்களோடு கடைசியாக அபூதாலிப், அப்துல் முத்தலிப்பின் மார்க்கத்தில் தான் இருப்பதாக கூறிவிட்டு லாஇலாஹ இல்லல்லாஹ்வை கூற மறுத்துவிட்டதாக கூறும்வரையாகும். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம் விஷயத்தில் நான் (இறைவனால்) தடுக்கப்படாத வரையிலும் உமக்காக நான் பாவமன்னிப்புத் தேடுவேன் என்பதை நீர் தெரிந்துகொள்வீராக!” எனக் கூறினார்கள். அப்போது கண்ணியமும் மரியாதைக்குமுரிய அல்லாஹ்,

நிச்சயமாக! அ(இணைவைப்ப)வர்கள் நரகத்தை உடையவர்கள்தான் என்பது தெளிவானபிறகு, நபியவர்களோ, விசுவாசிகளோ அந்த இணைவைப்பவர்களுக்காக - அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருப்பினும் (சரியே) - பாவமன்னிப்பு கேட்பது கூடாது என்ற வசனத்தை இறக்கிவைத்தான். அபூதாலிபின் விஷயத்தில், உயர்வான அல்லாஹ், தனது தூதர் அவர்களுக்கு:

“நீர் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்திட நிச்சயமாக உம்மால் முடியாது. எனினும் அல்லாஹ் தான் விரும்பியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். அவனே, நேர்வழி பெற்றவர்கள் யார்? என்பதை மிகவும் நன்கறிந்தவனாக இருக்கிறான்” என்ற வசனத்தை இறக்கிவைத்தான் என ஸயீது பின் அல்முஸய்யிப் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் தன் தந்தை அறிவித்ததாகக் கூறுகிறார்.

“லாஇலாஹ இல்லல்லாஹ் என அவர்கள் கூறும் வரை ஜனங்களோடு போர் செய்யுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 4

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இறப்பெய்தியபின், அவர்களுக்கு பிறகு அபூபக்கர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் கலீபாவாக நியமிக்கப்பட்டனர். அரபியர்களில் நிராகரிப்பவர்கள் (ஜகாத்தை கொடுக்க மறுத்ததன் மூலம்) நிராகரித்துவிட்டனர்.1

உமர் பின் கத்தாப் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அபூபக்கர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்களைப் பார்த்து, “அல்லாஹ்வின் தூதர் அவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹு (வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறெவருமில்லை) என அவர்கள் கூறும்வரை அவர்களோடு போர் செய்யுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். “யார் லாஇலாஹ இல்லல்லாஹு” எனக் கூறிவிட்டாரோ? அவர் என்னிலிருந்து அவரது பொருளையும் உயிரையும் காப்பாற்றிக் கொண்டவராவார். அந்த உரிமையைக் கொண்டல்லாமல் அவருடைய கணக்கும் அல்லாஹ்விடம் உள்ளது. எனக் கூறியிருக்க நீங்கள் எவ்வாறு ஜனங்களோடு போர் செய்வீர்கள்”? எனக் கேட்டார்கள்.

யார் தொழுகைக்கும், ஜகாத்துக்குமிடையில் வித்தியாசத்தைக் கற்பித்தாரோ, அவரோடு நான் போர் செய்வேன் (காரணம்) நிச்சயமாக ஜகாத், பொருளின் மீதுள்ள உரிமையாகும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் (ஜகாத்தாக) கொடுத்து வந்த ஒட்டகம் கட்டுகின்ற கயிறைக்கூட தடுப்பார்களேயாயின், அதை அவர்கள் தடுத்துக்கொண்டதற்காக போர் செய்வேன்? ” என அபூபக்கர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

இதைக் கேட்ட உமர் பின் கத்தாபு ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள், “அல்லாஹ் மீது சத்தியமாக! அபூபக்கர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்களின் மனதை அல்லாஹ் போர் செய்யத் தெளிவு செய்துவிட்டான் என்பதைத் தவிர வேறெதையும் நான் காணவில்லை. அதோடு அவர்களின் கூற்று உண்மை எனவும் தெரிந்துகொண்டேன் ” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: இறை நிராகரிப்பு செய்து மதம் மாறிவிட்டவர்கள் இரு சாராராக இருந்தனர். மார்க்கத்தை தூக்கி எறிந்து விட்டு மதம் மாறி இறை நிராகரிப்பிற்கே திரும்பிவிட்ட அவர்களைப்பற்றித்தான் “அரபிகளில் நிராகரிப்பவர் நிராகரித்துவிட்டனர்” என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். இவர்களில் இரு கூட்டத்தவர் இருந்தனர்.

1. பனி ஹனிபாவைச் சார்ந்த முஸைலமா என்பவனைச் சார்ந்தவர்கள், அவனது நபித்தத்துவத்தை உண்மை என நம்பியவர்கள்: இவர்கள் ஒரு சாரார்

2 யமனைச் சேர்ந்த அஸ்வது அல் அன்ஸியை நபி என ஏற்றுக்கொண்டவர்கள்: இவர்கள் மற்றொரு சாரார்.

இவ்விரு சாராருமே நபி முகம்மது ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்தை நிராகரித்து காபிர்களாகி விட்டவர்கள்.

அபூபக்கர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள், இவ்விரு சாராரோடு போர் செய்து, முஸைலமாவை அல்லாஹ் யமாமாவில் வைத்தும், அல் அனஸியை, ஸன்ஆவில் வைத்தும் (அபூபக்கர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் மூலமாக) கொன்று விட்டான். அதன் தொடரில் அவ்விருவரை சார்ந்தோர்கள் எல்லோரும் சிதறடிக்கப்பட்டுவிட்டனர்.

மூன்றாவது கூட்டதினர், தொழுகைக்கும் ஜகாத்திற்கும் வித்தியாசம் கற்பித்து தொழுகையை மட்டும் ஏற்றுக்கொண்டு ஜகாத்தை மறுத்தனர். இவர்கள் அனைவரோடும் அபூபக்கர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் போர் செய்து சத்திய இஸ்லாத்தின் சகல கடமைகளையும் நிலைநாட்டிவிட்டனர். அல்லாஹ் அவர்களுக்கு மகத்தான நற்கூலியை நல்குவானாக! ஆமீன்.

ஹதீஸ் எண் : 5

“வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லையென்றும், நிச்சயமாக முகம்மது ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர்கள் சாட்சியம் கூறி (மேலும்) தொழுகையையும் நிறைவேற்றி ஜகாத்தையும் கொடுக்கின்ற வரையிலும் நான் ஜனங்களோடு போர் செய்யும்படியாக கட்டளையிடப்பட்டுள்ளேன். ஜனங்கள் இதைச் செய்வார்களாயின் என்னிலிருந்து அவர்கள், தமது உயிரையும் பொருளையும் பாதுகாத்துக் கொண்டவர்களாவார்கள். அதன் உரிமையைக் கொண்டல்லாது அவர்களின் கணக்கும் அல்லாஹ்விடமே இருக்கிறது.” என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் பின் அல்கத்தாபு ரளியல்லாஹு அன்ஹும

காபிர்களில் உள்ள ஒரு மனிதரை “லாஇலாஹ இல்லல்லாஹு” என அவர் கூறிய பிறகு அவரைக் கொன்றுவிட்டால் அவரின் நிலை என்ன என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 6

“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! காபிர்களில் ஒரு மனிதரை நான் சந்திக்க நேர்ந்தது அவர் என்னை கொலை செய்ய முயற்சித்து, வாளால் எனது இருகைகளில் ஒரு கையையும் அவர் வெட்டிவிடுகிறார். அதன் பிறகு ஒரு மரத்தின்பால் ஒதுங்கி என்னிடம் பாதுகாப்புத் தேடியவராக, “இறைவனுக்காக முற்றிலும் என்னை நான் ஒப்படைத்து (இஸ்லாத்திலாகி)விட்டேன்” என்கிறார். அவ்வாறு அவர் அவ்வார்த்தையை கூறியபிறகு நான் அவரை கொல்லலாமா?. என (அல்மிக்தாது பின் அல் அஸ்வது) நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “அவரைக் கொல்ல வேண்டாம் ” என்றனர். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக அவர் என் கையை அவர் துண்டித்துவிட்டார். அவ்வாறு துண்டித்துவிட்ட பிறகு அவ்வார்த்தையைக் கூறுகிறார். (ஆகவே) நான் அவரைக் கொல்லலாமா? ” எனக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள், “அவரைக் கொல்லக்கூடாது. காரணம் அவரை நீர் கொன்று விட்டால், அவரைக் கொல்வதற்கு முன்பே அவர் உன் ஸ்தானத்திற்கு (இஸ்லாத்திற்கு) வந்துவிடுவார் மேலும் அவர் எந்த வார்த்தையை கூறினாரோ, அதைக் கூறுவதற்கு முன் அவர் இருந்த இடத்தில் (காபிராக) நீர் ஆகிவிடுவீர் ” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்மிக்தாது பின் அல் அஸ்வது ரளியல்லாஹு அன்ஹ

அவ்ஜாஇய்யி, இப்னு ஜுரைஜ் இவ்விருவரின் ஹதீஸில் “இறைவனிடம் என்னை நான் ஒப்படைத்து விட்டேன்” எனவும், மஃ;மரில் ஹதீஸில், “அவரைக் கொல்ல நான் எத்தனித்த போது ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ எனக் கூறினார்” எனவும் வந்துள்ளது.

ஹதீஸ் எண் : 7

மூன்று பேர் கொண்ட ஒரு குழுவாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களை அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அதிகாலையில் ஜுஹைனா என்ற ஊரிலுள்ள ‘ஹுருகாத்‘ என்ற இடத்தை அடைந்தோம். அப்போது ஒரு மனிதரை நான் (உஸாமா) சந்தித்தேன். அவர் ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ எனக் கூறினார். அப்போது அவரை நான் தாக்கினேன். அந்த சம்பவம் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. (பின்னர்) அச்சம்பவத்தை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் நினைவு படுத்தினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ எனக் கூறியவரை கொலை செய்து விட்டீரே! என்றார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஆயுதத்திற்கு பயந்து அவ்வாறு (அதை) அவர் சொல்லியிருக்கலாம் ” என்றேன். “அவர் அதற்காகத்தான் சொன்னாரா? இல்லையா? எனத் தெரிந்துகொள்ள அவர் இதயத்தை நீர் பிளந்து பார்த்திரா? என திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தனர். அன்றைய தினம் நான் முஸ்லிமாகி இருக்கக் கூடாதா? (அவ்வாறு இஸ்லாத்தை ஏற்றிருந்தால் இதற்கு முன் ஏற்பட்ட இப்பாவம் மன்னிக்கப்பட்டு விடுமே) என (நினைத்து) ஆசைப்பட்டேன்.

(அப்போது) ஸஅது அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உஸாமா கொலை செய்யும்வரை ஒரு முஸ்லிமை நான் கொல்லமாட்டேன்”; என்று கூறினார்.

(அப்போது மற்றொரு) மனிதர் “எந்த குழப்பமும் இல்லாமலாகி மார்க்கம் முழுவதும் இறைவனுக்காக ஆகும்வரை அவர்களை கொல்லுங்கள்,” என அல்லாஹ் கூறவில்லையா? எனக் கேட்டார்.

(அதற்கு) எந்த குழப்பமும் இல்லாமல் ஆவதற்காக வேண்டி நாங்கள் கொலை செய்தோம். நீரும் உமது தோழர்களும் குழப்பங்களை உண்டாக்குவதற்கென்றே போர் செய்துள்ளீர்கள்.” என ஸஅது ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் (பதில்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைது ரளியல்லாஹு அன்ஹுமா

ஹதீஸ் எண் : 8

இப்னு ஜுபைரின் குழப்ப காலத்தில் ஜுன்துப் பின் அப்துல்லாஹ் அல் பஜலி என்பவர், அஸ்அஸ் பின் ஸலாமாவின்பால் (ஒருவரைத் தூது) அனுப்பி “உமது சகோதரர்களில் சிலரை அழைத்து ஒன்றாக சேர்ப்பீராக! நான் அவர்களுக்கு ஒரு செய்தியை அறிவிக்க வேண்டும்” என்ற செய்தியை, அறிவிக்க செய்தார். பின்னர் ஒரு தூதரை (தமது சகோதரர்களில் ஒருவரை) அவர்களின்பால் அஸ்அஸ் அனுப்பி வைத்தார். அவர்களெல்லாம் ஒன்றாக கூடியிருந்தபோது, ஜுன்துப் அங்கே வந்தார். அவர் தலையோடு சேர்த்து அணிந்துகொள்ளும் மஞ்சள் நிற ஜிப்பா அணிந்திருந்தார். “ நீங்கள் பேச வேண்டியவைகளை பேசிக்கொள்ளுங்கள் ” என்றார். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது தலையுறையை அகற்றி விட்டு, “நிச்சயமாக உங்கள் நபியவர்களை பற்றியல்லாது வேறெதையும் உங்களுக்கு அறிவிக்க நான் விரும்பவில்லை. (அதற்காகத்தான்) உங்களிடத்தில் வந்தேன்” என்றார். பின்னர் கீழ்கண்டவாறு செய்தி அறிவித்தார்.

“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் முஷ்ரிகீன்களில் ஒரு சாரரின்பால் ஒரு குழுவை அனுப்பிவைத்தனர். நிச்சயமாக அவர்கள் (போர் முனையில்) சந்தித்து கொண்டனர். முஷ்ரிகீன்களில் ஒருவன் முஸ்லிம்களில் யாரைக் கொல்ல வேண்டும் என்று விரும்பினானோ அவரிடம் நெருங்கி அவரைத் தாக்கி, கொன்று விட்டான். (அதைப்போன்றே) முஸ்லிம்களில் ஒருவர் (முஷ்ரிகீன்களில் ஒருவரைத் தாக்க) சந்தர்ப்பம் பார்த்து வாளை உயர்த்துகிறார். அவர்தான் உஸாமா பின் ஸயிது என நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். அப்போது அவன் (முஷ்ரிக்) ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ எனக் கூறினான். (அதன்பிறகு) அவர் (உஸாமா) அவனைக் கொன்று விடுகிறார்”.

“செய்தி சொல்பவர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். அவரிடம் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தி கேட்டபோது அந்த மனிதர் (உஸாமா) எவ்வாறு செய்தாரோ (கொன்றாரோ) அந்த செய்தியை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தெரிவித்தார். அப்போது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த மனிதரை அழைத்து, “நீர் அவரை ஏன் கொலை செய்தீர்? ” எனக் கேட்டார்கள். (அதற்கவர்) “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவன் முஸ்லிம்களில் பலரை சங்கடப்படுதினார். ” சில நபர்களின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லி “இன்னின்னவரை கொலையும் செய்து விட்டார். (எனவேதான்) அவரை நான் உறுதியாகத் தாக்கினேன். வாளைப்பார்த்த பின்னர்தான் ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ எனக் கூறினார். ” என்றுறைத்தார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் “அவரைக் கொலை செய்தீரா?” எனக் கேட்டார்கள். அதற்கவர் ‘ஆம்‘ என்றார். “மறுமை நாளில் (அவர் இஸ்லாம் ஆகிவிட்டார் என்று) ‘லாஇலாஹ இல்லல்லாஹு‘ (வாதம் செய்ய)வருமேயானால் அதனோடு நீ என்ன செய்வாய்? ” என்றார்கள்.

அதற்கவர் “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! எனக்காக பாவமன்னிப்பு கேட்பீர்களாக! ” என்றுறைத்தார்.

“லாஇலாஹ இல்லல்லாஹு‘ என்பது மறுமையில் வந்தால் என்ன செய்வீர் ” என்று கேட்டார்கள் (அதாவது) லாஇலாஹ இல்லல்லாஹு என்பது மறுமையில் வந்தால் அதனோடு என்ன செய்வீர்? ” என்று கூறினார்கள், அதைவிட வேறு எதையும் அதிகமாக சொல்லவில்லை.

அறிவிப்பவர் : ஸஃப்வான் பின் முஹ்ரிஜ் ரளியல்லாஹு அன்ஹு

சந்தேகமின்றி ஈமான் கொண்ட நிலையில் உயர்வான அல்லாஹ்வை யார் சந்திக்கின்றாரோ? அவர் சுவனம் புகுந்து விட்டார் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 9

“வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறெவருமில்லை என உறுதியாக தெரிந்தவராக (விசுவாசம் கொண்டு) யார் இறப்பெய்திவிட்டாரோ, அவர் சுவனம் புகுந்துவிடுவார். ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக உஸ்மான் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண் : 10

‘தபூக்‘ யுத்தம் நடந்தபோது, மக்களுக்கு கடும்பசி ஏற்பட்டது. அப்போது நபித்தோழர்கள் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நீங்கள் அனுமதி அளித்தால் தண்ணீர் சுமக்கும் ஒட்டகைகளை அறுத்து உண்ணலாம். (அதன் கொழுப்பை) எண்ணெய்யாக நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் ” என்று கூறினார்கள். “அவ்வாறே செய்து கொள்ளுங்கள் ” என்று நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். உடனே உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் வந்து “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அவ்வாறு செய்தால் வாகனப் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும் எனினும் அவர்களிடம் எஞ்சியுள்ள உணவுகளை கொண்டு வரச்செய்து, அதில் அவர்களுக்கு பரக்கத் (அபிவிருத்தி) ஏற்படுமாறு அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் அதில் அல்லாஹ் அபிவிருத்தியை ஏற்படுத்தக்கூடும் என (உமர் ரளியல்லாஹ் அன்ஹு ) அவர்கள் கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்‘ என்று கூறிவிட்டு ஒரு தோல் விரிப்பபை எடுத்து வரச் செய்து அதை விரித்தனர். பின்னர் அவர்களிடம் எஞ்சியிருந்த உணவுகளை கொண்டு வருமாறு கூறினார்கள். சிலர் கையளவு முத்துச்சோளம் கொண்டு வந்தனர். சிலர் கையளவு பேரித்தம்பழங்களை கொண்டு வந்தனர். மற்றும் சிலர் ரொட்டித்துண்டுகளைக் கொண்டு வந்தனர். இப்படியாக விரிப்பில் சிறிதளவு உணவுப் பொருட்கள் சேர்ந்தன. அபிவிருத்திக்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘துஆ‘ செய்தனர். “உங்கள் உணவுப்பைகளில் நிரப்பிக்கொள்ளுங்கள் ” என்று கூறினார்கள். எல்லோரும் அவரவர்களின் பாத்திரங்களில் நிரப்பிக்கொண்டனர். எதுவரை எனில் போர்களத்திலிருந்த எந்த பாத்திரத்தையும் நிரப்பாது அவர்கள் விட்டுவைக்கவில்லை. வயிறு நிரம்ப சாப்பிட்டனர். பின்னரும் சிறிது மீதமிருந்தது.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்றும், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்பி, எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் ஒரு அடியான் அல்லாஹ்வை சந்தித்தால் சுவர்க்கத்தைவிட்டும் அவன் தடுக்கப்படமாட்டான். ” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸஈத் அல் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 11

உபாதா பின்ஸாமித் மரணிக்கும் தருவாயில் இருந்தபோது அவரிடம் நான் (அஸ்ஸீனாபிஹி) சென்று அழுதேன். “பொறுத்திரு! ஏன் அழுகிறாய். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் சாட்சியாக்கப்பட்டால், நிச்சயமாக உனக்காக சாட்சி கூறுவேன். நான் பரிந்துரை செய்விக்கப்பட்டால், நிச்சயமாக உனக்காக பரிந்துரைப்பேன். என்னால் முடிந்தால், நிச்சயமாக! உனக்கு பயனாக இருப்பேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்து கேட்ட, எந்த ஹதீஸையும் நான் அறிவிக்காமல் இருந்ததில்லை “ஒரே ஒரு ஹதீஸைத்தவிர. இன்றைய தினம் அதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன். நிச்சயமாக எனக்கு மரணம் நெருங்கிவிட்டது ”.

“வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், நிச்சயமாக முகம்மது ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் யார் சாட்சி கூறினாரோ, அவர் மீது நரகத்தை அல்லாஹுத்தஆலா ஹரமாக்கி விட்டான். இன்று அவர்கள் சொல்லிக்கொண்டிருக்க நான் செவியுற்றேன் ” என்பதாக உபாதா பின்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.

அறிவிப்பவர் : அஸ்ஸீனா பிஹி ரளியல்லாஹு அன்ஹ

ஹதீஸ் எண் : 12

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைச் சுற்றி நாங்கள் அமர்ந்திருந்தோம். சுpல நபர்களோடு எங்களுடன் அபூபக்கருக்கும், உமரும் இருந்தனர். எங்களிடமிருந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து சென்றார்கள். அவர்கள் திரும்பிவர தாமதமானது. எங்களது எதிரிகளினால் அவர்கள் சங்கடப்படுத்தப்படுவார்களோ எனப் பயந்து திடுக்கமுற்று எழுந்தோம். அவ்வாறு திடுக்கிட்டவர்களில் முதலாமவனாக நான் (அபூஹுரைரா) இருந்தேன். ஆகவே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை தேடிக்கொண்டு பனின்னஜ்ஜார் கிளையிலுள்ள அன்சாரி ஒருவருக்குரிய தோட்டத்தை வந்து அடைந்தேன். அதற்கு எங்கேயும் வாசல் இருக்கிறதா? என்று தேடிப்பார்த்தேன். காணவில்லை. வேலியில் இருந்த கிணற்றிலிருந்து கால்வாய் ஒன்று சுவற்றின் துவாரத்தின் வழியாக நுழைவதைக் கண்டேன். குள்ளநரியைப்போன்று என்னை ஒடுக்கிக்கொண்டு (அதில் நுiழுந்து) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தடைந்தேன். “அபூஹுரைராவா? ” எனக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ஆம் என்றேன். ‘என்ன செய்தி?‘ எனக் கேட்டார்கள். “எங்களுக்கு மத்தியிலிருந்து எழுந்து சென்ற நீங்கள் (திரும்பி) வரத் தாமதமானதால் உங்களுக்கு, இணைவைப்பவர்களால் ஏதேனும் சங்கடம் ஏற்பட்டு இருக்குமோ! என்று நாங்கள் பயந்தோம். திடுக்கிட்டு எழுந்தவர்களில் நான் முதலாமவன். ஆகவே இந்த தோட்டத்திற்கு வந்து குள்ளநரி ஓடுங்குவது போன்று ஓடுங்கி உள்ளே நுழைந்து விட்டேன். ஜனங்களெல்லாம் எனக்கு (சுவற்றிற்கு) அப்பால் உள்ளார்கள். ‘அபூஹுரைராவே!‘ என அழைத்து அவர்களது இரு காலணிகளையும் (தம்மைப் பார்த்ததற்கு அடையாளமாக) கொடுத்து இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்வீராக! வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாறுமில்லை என்பதை மனதால் உறுதி கொண்டு சாட்சி கூறும் எவரையாவது நீர் இந்த சுவற்றுக்கப்பால் சந்தித்தால் அவருக்கு சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறுவீராக! என்றனர்.

(அதற்குப் பிறகு) முதலில் நான் சந்தித்த மனிதர் உமராவார். (உமர் அவர்கள் என்னைப் பார்த்ததும்) “அபூஹுரைராவே! இந்த இரு பாதஅணிகள் என்ன? ” என்று கேட்டார்கள். இவை இரண்டும் அல்லாஹ்வின் தூதருடைய காலணிகளாகும். இவ்விரண்டையும் கொடுத்து என்னை அனுப்பினார்கள். ‘லாஇலாஹ இல்லல்லாஹு ’ என மனதால் உறுதிகொண்டு சாட்சி கூறுபவரை நான் சந்தித்தால் சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறுவேன் என்றேன்.

உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எனது நடுமார்பில் அடிக்க நான் பின்புறமாக கிழே விழுந்தேன். “அபூஹுரைராவே! நீர் திரும்பிச்செல்லும் ” என்றனர். அதன்பின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் திரும்பிச் சென்று அழுதவாறு சேர்ந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அபூஹுரைராவே!’ உமக்கு என்ன நேர்ந்தது? என்றனர்.

“உமரை சந்தித்தபோது எதைக் கொண்டு செல்லுமாறு கூறினீர்களோ அதைத் தெரிவித்தேன். என் நடுமார்பில் ஒர் அடி அடித்தார். பின்புறமாய் நான் விழுந்துவிட்டேன்” ‘திரும்பிச் செல்’ என என்னிடம் அவர் கூறினார். உமர் அவர்களைப் பார்த்து “இவ்வாறு செய்ய உம்மைத் தூண்டியது எது? ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கு “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய பெற்றோர் தங்களுக்கு அர்பணமாகட்டும். ‘லாஇலாஹ இல்லல்லாஹு ’ என்பதை மனதில் உறுதிகொண்டு சாட்சி கூறும் யாரைச் சந்தித்தாலும் சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் கூறுவதற்கென்று அபூஹுரைராவிடம் தங்களது காலணிகளை கொடுத்தனுப்பினார்களா?” எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஆம்’ என்றனர். (அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) “அவ்வாறு தாங்கள் செய்ய வேண்டாம். காரணம் ஜனங்கள் அதையே சார்ந்து நின்றுவிடுவர். (ஆகவே) அவர்களை செயல்பட விடுங்கள் ” என்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “அவர்களை(ச் செயல்பட) விட்டுவிடுங்கள் ” என்றனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தாமாக கூறவில்லை, நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கேட்டுவந்துதான் கூறுகிறார்கள் என்பதற்கும், அக் காலணிகள் இல்லாமலே அவர்கள் கூற்று ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருப்பினும், அக் காலணிகளை பார்ப்பவர்களின் மனதில் இது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடையது தான், ஆகவே அவரின் கூற்று நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றேதான் என்பது மனதில் பதிவதற்காகவும் இவ்வாறு கொடுத்தனுப்பினார்கள்.

ஹதீஸ் எண் : 13

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னால் (வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்களுக்கும் எனக்கும் இடையில் வாகனத்தில் கட்டப்பட்டிருக்கும் குச்சியைத் தவிர வேறெதுவும் இல்லை. (அப்போது) “முஆது பின் ஜபல் அவர்களே! ” என்றழைத்தனர். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜர் ஆகியிருக்கிறேன். உங்களுக்கு கீழ்ப்படிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்.” எனக் கூறினேன். பிறகு சிறிது நேரம் சென்றனர். பிறகு “முஆது பின் ஜபல் அவர்களே! ” என்றனர். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜராகியிருக்கிறேன். உங்களுக்கு கீழ்பணிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்” என்றேன். பிறகு சிறிது நேரம் (வாகனத்தில்) சென்றனர். “முஆது பின் ஜபல் அவர்களே!” என்றனர். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களது அழைப்பிற்கு இதோ ஆஜராகியிருக்கிறேன். உங்களுக்கு கீழ்படிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன் ” என்றேன். “அடியார்கள் அல்லாஹ்விற்கு செலுத்த வேண்டிய கடமை என்ன என்பது உனக்கு தெரியுமா? ” என்றார்கள். “அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள் ” என்றேன்.

“நிச்சயமாக அடியார்கள் அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய கடமை, அவனை வணங்குவதும் அவனுக்கு எதையும் இணையாக்காமல் இருப்பதாகும் ” என்றனர். பிறகு சிறிது நேரம் வாகனத்தில் சென்றனர். “முஆது பின் ஜபல் அவர்களே! ” என்றழைத்தனர். “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இதோ உங்கள் அழைப்பிற்கு ஆஜராகியிருக்கிறேன். உங்களுக்கு கீழ்பணிகின்ற மகிழ்ச்சிக்காக ஆவலாக காத்திருக்கிறேன் ” என்றேன்.

“அடியார்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அடியார்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய கடமை என்ன தெரியுமா? ” எனக் கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனது தூதரும் மிகத் தெரிந்தவர்கள் ” என்றேன். “அவர்களை அவன் தண்டிக்காமல் இருப்பதேயாகும். ” என்றனர்.

அறிவிப்பவர் : முஆது பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 14

நான் (மஹ்மூது பின் அர்ரபீஃஉ) வெளியூரிலிருந்து மதினாவிற்கு வந்தேன். இத்பான் பின் மாலிக் அவர்களைச் சந்தித்து “உங்கள் வழியில் எனக்கு ஒரு ஹதீஸ் கிடைத்தது ” எனக் கூறினேன். (அதற்கு இத்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கீழ்கண்டவாறு பதிலுரைத்தார்கள்)

என் பார்வையில் பழுது ஏற்பட்டதால் “என் வீட்டில் வந்து தாங்கள் தொழு வேண்டும். அந்த இடத்தை நான் தொழுமிடமாக ஆக்கி கொள்ள விரும்புகிறேன்.”என்ற செய்தியை ஒருவர் மூலமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனுப்பினேன்.

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களது தோழர்களில் அல்லாஹ் யாரை நாடினானே அவர்களும், என்னிடம் வந்தனர். (அப்போது) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் என் வீட்டில் நுழைந்து தொழுது கொண்டிருந்தனர். தோழர்கள் தங்களுக்கு மத்தியில் பேசிக்கொண்டிருந்தனர். (அப்போது) அவர்கள் நயவஞ்சகம் பற்றியும் அவர்களது அருவருப்பான செயல்கள் பற்றியும், அவர்கள் மூலமாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தீமைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். அதன் பெரும்பகுதி (முக்கியமான பேச்சுகள்) மாலிக் பின் துக்ஷும் என்பவரைப் பற்றியதாக இருந்தது.அவர்கள் பேச்சில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு தீய பிரார்த்தனை செய்து அதன்மூலம் அவர் (மாலிக் பின் துக்ஷும்) அழியட்டும், அல்லது அவருக்கு தீங்கு ஏற்படட்டும் என்பதை விரும்பினர். இதற்கிடையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு “வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை எனவும் அல்லாஹ்வின் தூதர் எனவும் அவர் (மாலிக் பின் துக்ஷும்) சாட்சி கூறவில்லையா?” எனக் கேட்டனர். அதற்கவர்கள் நிச்சயமாகவே “அதை அவர் கூறுகிறார். ஆனால் அவர் மனதில் அது இல்லை ” என்றனர்.

“வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை எனவும், நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் எனவும் யார் சாட்சி கூறுகிறாரோ அவர் நரகத்தில் நுழைய மாட்டார். அவரை நரகம் திண்ணாது.” எனக் கூறினார். எனக்கு இந்த ஹதீஸ் (மிக நன்றாக நினைவில்) ஆச்சரியமாக இருந்தது. எனவே என் மகனிடம் எழுதுமாறு கூறினேன். அவர் அதை எழுதி விட்டதாக கூறினார்.

அறிவிப்பவர்: மஹ்மூது பின் அர்ரபீஃஉ ரளியல்லாஹு அன்ஹு

ஈமான் என்றால் என்ன? என்பது பற்றியும் அதன் காரியங்கள் பற்றிய விளக்கமும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 15

அப்துல் கைஸ் கூட்டத்தைச் சேர்ந்த சில மனிதர்கள் பயணத்தில் இருந்து நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் நபி அவர்களே! நிச்சயமாக நாங்கள் ரபிஆ கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் முளர் (கூட்டத்தைச் சேர்ந்த) காபிர்கள் உள்ளனர். புனிதமான மாதங்களிலாவது உங்களிடம் வர நாங்கள் சக்தியற்றவர்களாக இருக்கிறோம். எங்களுக்கு (சில) கட்டளையை இடுவீர்களாக! எங்களுக்கு அப்பால் இருப்பவர்களுக்கு அக் கட்டளைகளைச் செய்யுமாறு ஏவுவோம். அதன்படி நடந்தால் அதை வைத்து சுவனத்திலும் பிரவேசிப்போம்” என்றனர்.

“உங்களுக்கு நான்கு (விஷயங்களை செய்யுமாறு) கட்டளையிடுகிறேன். நான்கு (விஷயங்களைச் செய்வதிலிருந்தும்) தடுக்கிறேன். அல்லாஹ்வை (மட்டுமே) வணங்குங்கள் அவனுக்கு யாதொன்றையும் இணை வைக்காதீர்கள். தொழுகையை நிலை நாட்டுங்கள். ஜகாத்தைக் கொடுங்கள்.

ரமளான் (மாதத்தில்) நோன்பு வையுங்கள். போர்களத்திலிருந்து கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒன்றை கொடுத்து விடுங்கள். (பழரசங்கள் ஊற வைப்பதற்காக) சுரைக்குடுக்கைகள், மண் (மர) ஜாடிகள், தார்பூசப்பட்ட பாத்திரங்கள் (பீப்பாய்கள்), ஈச்ச மரத்தின் அடிக்கட்டையிலிருந்து குடைந்தெடுக்கப்பட்டவைகள் ஆகிய நான்கை உபயோகிப்பதிலிருந்து உங்களை நான் தடுக்கிறேன்.” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(அதற்கவர்கள்) அல்லாஹ்வின் நபி அவர்களே! “ந(க்)கீரை உங்களுக்கு தெரியுமா? ” எனக் கேட்டனர். “ஆம்! ஈச்சமரத்தின் அடியை குடைந்தெடுப்பீர்கள். பின்னர் அதில் ஈத்தம்பழ வகைகளில் சிறியவைகளை போடுவீர்கள். (ஈத்தம் பழத்தை அதில் போடுகிறீர்கள் எனவும் (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) கூறினார்கள் என்பதாக மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளதாக ஸஈது குறிப்பிடுகிறார்) அதன்பின் அதில் தண்ணீரை ஊற்றுவீர்கள். அதன் கொதிப்பு அடங்கிவிட்டதும் அதை குடிப்பீர்கள். போதை தலைக்கேறியதும் அவர்களில் (அல்லது உங்களில்) ஒருவர் அவரது சிறிய தந்தையின் மகனையும் வாளால் வெட்டிவிடுவார் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்றே காயம் அடைந்த மனிதரும் அந்த கூட்டத்தில் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் வெட்கம் அடைந்தவனாக அதை மறைத்துவிட்டேன் என (பின்னர்) அவர் கூறினார்.

அதன்பிறகு நான் (அறிவிப்பவர்) “எந்த பாத்திரத்தில் நீர் அருந்துவது? எனக் கேட்டேன். “அதன் வாய்கள் கயிற்றினால் கட்டப்பட்டிருக்குமோ அத்தகைய பதனிடப்பட்ட தோல் பைகள் (மூலமாக) ” என்றனர்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! எங்கள் பூமியில் எலிகள் அதிகம் உண்டு. தோல் பைகளை குடிக்கும் பாத்திரங்களாக உபயோகித்தால் நிலைத்திருக்காது (எலிகள் கடித்து வீணாக்கி விடும்.) ” என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் “எலிகள் அதை கடித்து விட்டாலும் சரி! எலிகள் அதை கடித்து விட்டாலும் சரி! எலிகள் அதை கடித்து விட்டாலும் சரி! என உரைத்தனர்.

பின்னர் “அப்துல் கைஸின் அஷஜ்ஜு! ” (என்பவரைப் பார்த்து) “நிச்சயமாக உம்மிடம் இரண்டு குணங்கள் உண்டு. அவ்விரண்டும் அல்லாஹ் விரும்புகிறான். அவை சகிப்பத்தன்மை (அறிவு)ம், நிதானமும் ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபு ஸஈது அல் குத்ரிய்யி ரளியல்லாஹு அன்ஹ

“அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும் செயல்களில் மிக மிகச் சிறந்ததாகும் ” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 16

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! அமல்களில் மிகச் சிறந்தது யாது? ” என நான் (அபுதர்ரு) கேட்டேன்.

“அல்லாஹ்வை நம்புவதும் அவனது பாதையில் அறப்போர் செய்வதும் ஆகும்.” என்றனர்.

“அடிமைகளை உரிமை விடுவதில்1 மிகச் சிறந்தது எது ? ” என நான் கேட்டேன்.

“அதற்குரியவர்களிடம் மிக உயர்ந்ததும் அவற்றில் கிரயத்தால் மிகக் கூடியதும் ஆகும்.” என்றனர்.

“அதை நான் செய்யவில்லையானல் ? ” என நான் கேட்டேன்.

“தொழில் செய்பனுக்கு உதவுவீராக! அல்லது தொழில் இல்லாதவனுக்கு தொழிலை (ஏற்படுத்தி) கொடுப்பீராக! ” என்றனர்.

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! சில செயல்களை செய்வதிலிருந்து நான் பலகீனம் அடைந்து விட்டால்? ” (நான் என்ன செய்ய வேண்டுமெனச் சொல்கிறீர்கள்) என கேட்டேன்.

“மனிதர்களை விட்டும் உன் தீமையை தடுத்துக்கொள். அது உனக்கு செய்து கொள்ளும் தர்மமாகும். ” என்றனர்.

அறிவிப்பவர் : அபுதர் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1. ஒரு கிரயத்தை நிர்ணயம் செய்து அக்கிரயத்தை நிறைவேற்றிவிடின் அவர் உரிமை பெற்றவராக ஆகிவிடுகிறார். இவ்வாறு எழுதப்பட்டவர்களைப் பற்றித்தான் இங்கு கூறப்படுகிறது.

“ஈமானைப் பற்றிய கட்டளையும், ஷைத்தானின் ஊசலாட்டத்தின் போது அல்லாஹ்வைக் கொண்டு காக்கத் தேடுவதும் ”1 என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 17A

ஜனங்கள் அறிவைப் பற்றி உங்களிடம் கேட்டவராக இருப்பர். எதுவரை எனில் “இவன் அல்லாஹ்! (அவ்வாறு எனில்) அல்லாஹ்வைப் படைத்தது யார்? ” எனக் கேட்டும் வரை என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் நான் (ஹதீஸை அறிவிப்பவர்) பள்ளியில் இருந்தேன். அப்போது கிராமத்து அரபிகளில் சிலர் என்னிடம் வந்து, “அபூஹுரைராவே! இதோ அல்லாஹ் நம்மைப் படைத்தான், அவ்வாறெனில் அல்லாஹ்வைப் படைத்தது யார்? ” எனக் கேட்டார்கள்.

(இவ்வாறு அவர்கள்) கேட்டதுமே நான் எனது முன்கையில் பொடிகற்களை எடுத்து அவர்கள் மீது எறிந்துவிட்டு “எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்!! எனது உற்ற நண்பர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் உண்மையே உரைத்தார்கள் எனக் கூறினேன்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: 1 இப்பாடத்தில் கூறப்பட்ட ஹதீஸில் காக்கத்தேடுவது பற்றியோ விசுவாசம் கொள்வது பற்றியோ கூறப்படவில்லை. முஸ்லிமில் வேறொரு அறிவிப்பில் “எனஅவ்வாறு யாருக்கேனும் மனதில் தோன்றினால் ‘ஆமன்(த்)து பில்லாஹு’ எனக் கூறவும் என்பதாக வந்துள்ளது. பிறிதொறு அறிவிப்பில் அந்நிலையை அடைந்து விட்டால் அல்லாஹ்வைக் கொண்டு காக்கத் தேடவும், அதிலிருந்து விலகிக் கொள்ளவும் ” என வந்துள்ளது.

ஹதீஸ் எண் : 17B

ஜனங்கள் உங்களிடம் அறிவைப்பற்றி கேட்பவர்களாகவே இருப்பர். “இதோ அல்லாஹ்! அவன் நம்மைப்படைத்தான். (அவ்வாறு எனில்) அல்லாஹ்வைப் படைத்தது யார்? ” என கேட்கும் வரை

அல்லாஹ்வும், அவனின் தூதரும் உண்மையே உரைத்தனர். (இதற்கு முன்பு ஒருவர் இதுபற்றி) என்னிடம் கேட்டிருந்தார். இவர் இரண்டமானவராவர். வந்தவர்களில் ஒரு மனிதரின் கையை அவர் (அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு) பிடித்தவராக இருக்க கூறினார்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹ

“அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும் அதில் நிலைத்திருப்பதும் ”என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 18

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! இஸ்லாத்தில் ஒரு சொல்லை எனக்கு சொல்லித்தாருங்கள். உங்களுக்கு பிறகு அது பற்றி யாரிடமும் நான் கேட்க மாட்டேன். ” எனக் கேட்டேன்.

(அபீ உஸாமா ரளியல்லாஹ் அன்ஹு அவர்களின் அறிவிப்பில் உங்களைத் தவிர வேறு யாரிடமும் நான் கேட்கவே மாட்டேன் என கேட்டதாக உள்ளது)

“அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டுள்ளேன் எனக் கூறி அதன் பிறகு அதில் நிலைத்திருப்பாயாக” என (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : சுஃப்யான் பின் அப்துல்லாஹ் அத்தகஃபி ரளியல்லாஹு அன்ஹ

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அத்தாட்சி (அற்புதங்)கள் பற்றியும், அவற்றை விசுவாசம் கொள்வதும் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 19

நபிமார்களில் ஒவ்வொரு நபிமீதும் மனிதர்கள் விசுவாசம் கொள்ள வேண்டும் என்பதற்காக அத்தாட்சிகள் (அற்புதங்கள்) கொடுக்கப்பட்டதே தவிர வேறில்லை. இதை மனிதர்கள் விசுவாசித்தனர். (மகத்துவமும் கண்ணியமும் பொருந்திய அல்லாஹ்வால்) எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் வஹீ (எனும் அறிவிப்பாகிய அல்குர்ஆன்) தான். அதை எனக்கு அல்லாஹ் அறிவித்தான். மறுமை நாளின்போது அவர் (அந்த நபிமார்)களையெல்லாம் விட மிகக் கூடுதலான பின்பற்றுபவர்களை (உம்மத்துகளை) உடையவனாக நான் இருக்க (அல்லாஹ்விடம்) ஆதரவு வைக்கிறேன் என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 20

முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ? அவன் மீது சத்தியமாக! “இந்த சமுகத்தில் யூதரோ, கிருஸ்த்தவரோ என்னைப்பற்றி கேள்விபட்ட பின்னரும் நான் எ(ந்த மார்க்கத்)தைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை விசுவாசம் கொள்ளாது, இறந்துவிடுவாராயின் அவர் நரக வாசிகளில் ஒருவராக ஆகிவிட்டவராகவே தவிர வேறில்லை. ” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினாhர்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்