Social Icons

Sunday 28 October 2012

இரவில் உறங்காத பெரியார்கள்

 அபூ இதாப் (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் வரை இரவு முழுவதும் தொழுது கொண்டே இருந்தார்கள் பகல் முழுதும் நோன்பு வைத்திருந்தார்கள். (பக்கம் 132)

இமாம் அஹமதுப்னுஹம்பல் (ரஹ்) அவர்கள் தினமும் முன்னூறு ரக்கத்துக்கள் நபில் தொழுபவர்களாக இருந்தர்கள். (பக்கம் 132)


இமாம் ஷாபியீ (ரஹ்) அவர்கள் ரமழான் மாதத்தில் தொழுகையில் அறுபது தடவை குர்ஆன் ஒதி முடிப்பார்கள். (பக்கம் 132)

ஹஜ்ரத் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) அவர்கள் ஐம்பது ஆண்டுகள் இஷாவையும் சுபுஹையும் ஒரே உளுவைக் கொண்டு தொழுது வந்தார்கள். (பக்கம் 132)

அபுல் முஃதமர் (ரஹ்) அவர்கள் நாற்பது ஆண்டுகள் இவ்விதம் தொழுததாக கூறப்பட்டுள்ளது.  (பக்கம் 132)

இமாமுல் அஃளம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகள் அல்லது ஐம்பது ஆண்டுகள் இஷாவுடைய உளுவைக் கொண்டு சுபுஹைத் தொழுததாகக் கூறப்பட்டுள்ளது. (பக்கம் 132)

இமாம் அபூயூசுப் (ரஹ்) அவர்களுக்கிருந்த கல்வி சம்மந்தமான வேலைகள் பளுவைப் பற்றி அனைவருக்கும் தெரியும், அத்துடன் அவர்கள் அந்நாட்டின் பிரதம நீதிபதியாகவும் இருந்து வந்ததால் அது சம்மந்தமான வேலைகளும் ஏராளமாக இருந்தன. அவ்வாறிருந்தும் ஒவ்வொரு நாளும் இருநூறு ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 130)

இப்படிப்பட்ட கதைகள் நூல் நெடுகிலும் மலிந்து காணப்படுகின்றன. மத்ஹபையும், தரீக்காவையும் நியாயப் படுத்துவதற்காக இப்பெரியார்களின் வணக்க வழிபாடுகள் பற்றி மலைப்பூட்டப்படுகின்றன.

உண்ணுதல், உழைத்தல், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் இவைகளை எல்லாம் முடித்து விட்டு 200 அல்லது முன்னூறு ரக்அத்கள் தொழ முடியுமா?

ஒரு இரவுத் தொழுகையில் இரண்டு தடவை குர்ஆனை ஓதி முடிக்க முடியுமா?

இதைச் சிந்தித்தாலே இந்தக் கதைகளின் தரத்தை விளங்கிக் கொள்ளலாம். இதை எல்லாம் தூக்கி சாப்பிடுகிறது மற்றொரு கதை!

ஹஸ்ரத் ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரக்அத்கள் நபில் தொழுது வந்தார்கள். (பக்கம் 160)

ஒரு ரக்அத்துக்கு ஒரு நிமிடம் என்று வைத்துக் கொண்டால் கூட ஒரு இரவுக்கு 1000 ரக்அத் நபில்கள் தொழ முடியுமா? இஷாவிலிருந்து சுபுஹ வரை 500 நிமிடங்கள் கூட இராது.

இந்தச் சாதாரண கணக்கைக் கூட சமுதாயம் கவனிக்கத் தவறுவதால் ஸகரிய் சாஹிப் வாயில் வந்த வாறெல்லாம் கதையளக்கிறார்.

ரக்அத்களின் எண்ணிக்கை பற்றிக் கூறும் போது, 1000 ரக்அத்கள். 200 ரக்அத்கள் என்றெல்லாம் பெரியார்கள் தொழுது வந்ததாக பிரமிப்பூட்டும் ஸகரியா சாஹிப் அவர்கள் எப்படித் தொழுதார்கள் என்பதைக் கூறும் போது மலைப்பின் உச்சிக்கே நாம் சென்று விடுகிறோம்.

ஹஜ்ரத் உவைஸுன் கரனீ (ரஹ்) அவர்கள் பிரபலமான பெரியார் தாபியீன்களின் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் இரவு நேரங்களில் தொழும்போது சில சமயங்களில் ருகூவுச் செய்வார்கள். இரவு முழுவதும் அப்படியே ருகூவிலேயே சென்று விடும். சில சமயங்களில் ஸஜ்தாச் செய்வார்கள். இரவு முழுவதும் ஒரு ஸஜ்தாவிலேயே கழிந்துவிடும். (பக்கம் 161)

இப்படியெல்லாம் தொழவேண்டுமென்பதற்காக இந்த சம்பவத்தையும் ஸகரியா சாஹிப் எழுதுகிறார். தொழுகை இப்படித்தான் அமைந்திருக்க வேண்டுமென்றால் 1000 ரக்அத்து சமாச்சாரமெல்லாம் பொய்யென்று ஆகின்றது.

தொழுகையின் சிறப்பு என்ற பெயரில் ஸகரியா சாஹிபுடைய புருடாக்கள் சிலவற்றைக் கண்டோம். பலவீனமான ஹதீஸ்கள் பல இடம் பெற்றிருந்தாலும் அவற்றை நாம் விமர்சனம் செய்யவில்லை கதைகளை மட்டுமே விமர்சித்துள்ளோம்.

இந்தக் கதைகளை எழுதிய ஸகரியா சாஹிபுக்கே இதில் சந்தேகம் வந்துவிட்டது போலும் யாரும் நம்ப மாட்டார்களே என்ற சந்தேகத்தில் ஒரு முடிவுரையும் தந்து நியாயப்படுத்துகிறார். அவர் கூறுவதையும் கேளுங்கள்!

ஆனால் இப்படிப்பட்ட சம்பவங்களை நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் முதலாவதாக, இந்தச் சம்பவங்கள் எல்லாம் சரியான ஆதாரங்களுடன் அதிகமான அறிவிப்புத் தொடருடன் கூறப்பட்டுள்ளன. நாம் இவற்றைச் சந்தேகிப்போமானால் சரித்திரம் முழுவதுமே நம்பிக்கை அற்றதாகிவிடும். ஒரு நிகழ்ச்சி உண்மை என்பதற்கு அது அதிகமாக பல நூற்களில் பல ஆசிரியர்களால் கூறப்பட்டிருப்பது சான்றாகும்.

இவ்வாறு ஸகரியா சாஹிப் பக்கம் 167ல் நியாயப்படுத்துகிறார்.

பல நூற்களில் எழுதப்பட்டது உண்மை என்பதற்கு சான்றாக ஒரு போதும் ஆகாது. இதிலும் குர்ஆன் ஹதீஸுக்கு மாற்றமாக இந்தக் கதைகள் அமைந்திருக்கும் போது ஒரு போதும் அது உண்மையாக இராது. சமாதி வழிபாட்டை ஸகரிய்யா சாஹிப் எதிர்த்து வந்தவர் ஆனால் சமாதி வழிபாட்டை நியாயப்படுத்தும் கதைகள் பல நூல்களில் எழுதப்பட்டுள்ளதை அவர் ஏற்கவில்லையே அது ஏன்?

சரியான ஆதாரங்களுடன் அதிகமான அறிவிப்புத் தொடருடன் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற கூற்றிலும் பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கற்பனைக் கதைகளின் பல அறிவிப்புத் தொடர்களையும் வெளியிட்டு அதன் அறிவிப்பாளர்களின் நம்பகத் தன்மையையும் நிரூபிக்க வேண்டும். ஸகரியா சாஹிப் இன்று இல்லாததால் தப்லீகின் தலைமைப் பிரச்சாரர்களாக திகழும் அறிஞர்கள் இதை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இந்தக் கதைகளை நியாப்படுத்த அவர் கூறும் மற்றொரு நியாயத்தையும் கேளுங்கள்.

இரண்டாவதாக, சில மனிதர்களை நாம் காண்கிறோம். அவர்கள் சினிமா தியேட்டர்களிலும் வீண் வேடிக்கைகளிலும், இரவு முழுவதையும் விழித்திருந்து கழிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு எவ்விதச் சிரமமும் தெரிவதில்லை. தூக்கம் விழிப்பதால் துன்பங்கள் ஏதும் தெரிவதில்லை.

இதுவும் அறியாமையில் எழுந்த வாதமே! இந்தக் கதைக்கு உதாரணமாக இவற்றைக் கூறவே முடியாது.

சினிமாவிலேயே இரவைக் கழிக்கும் ஒருவர் பற்றி ஒரு இரவில் 20 சினிமா பார்த்தார் என்று கூறப்படுவதில்லை. ஒரு இரவில் எத்தனை சினிமா பார்க்க முடியுமோ அத்தனை சினிமா பார்த்ததாகத்தான் கூறப்படுகின்றது. ஆனால் ஸகரியா சாஹிபின் கதையில் ஒரு இரவில் எத்தனை ரக்அத்கள் அதிகபட்சம் தொழ முடியுமோ அது போல் ஐம்பது மடங்கு கூடுதலாகக் கூறப்படுகின்றது.

நாற்பது ஆண்டுகள், ஐம்பது ஆண்டுகள் இரவு முழுவதும் சினிமா பார்த்துக் கொண்டே இருந்தார். பகலிலும் அவர் உறங்கி விடவில்லை என்று எவரைப் பற்றியும் கூறப்படுவதில்லை ஏதோ சில திருநாட்களில் இரவில் விழித்துவிட்டு அதற்குப் பகரமாக பகலில் அவர்கள் உறங்குவதாகவே கூறப்படுகின்றது. அப்படித் தான் நடந்தும் வருகின்றது. அந்த நாட்களில் கூட இரவு முழுவதும் மலஜலம் கழிக்கவில்லை என்று கூறப்படுவதில்லை. ஸகரிய்யா சாஹிபின் கதையில் இவையெல்லாம் கூறப்படுகின்றன.

அப்படி யாராவது நாற்பது ஆண்டுகள் இரவில் விழித்து சினிமா பார்த்து விட்டு பகலிலோ, இரவிலோ உறங்காமலிருந்தால் அவர்கள் கீழ்பாக்கத்துக்கு அனுப்பப்படுவதை காண்கிறோம். எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை என்பது ஆதாரமற்றதாகும்.

இவற்றையெல்லாம் விட ஸகரியா சாஹிபின் கதைகள் தீனுடைய போர்வையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. சினிமா பார்ப்பவனின் கதைக்கு தீனுடைய முத்திரை எதுவும் குத்தப்படுவதில்லை.

எவ்வகையிலும் நியாயப்படுத்திட இயலாத இந்தப் பொய்கள் தான் தொழுகையின் சிறப்பு பகுதி முழுவதும் மலிந்துள்ளன.

மாதிரிக்காக ஒரு சில நிகழ்ச்சிகளை மட்டும் இங்கே நாம் இனம் காட்டியுள்ளோம். சிந்தனையுடைய மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.

குர்ஆனும், நபிவழிக்கும் முரணான - தப்லீகின் ஸ்தாபகர் காலத்திற்குப் பின்னர் உள்ளங்களால் தயாரிக்கப்பட்ட இந்த நூலை தப்லீக் ஜமாஅத்தினரும் பொது மக்களும் புறக்கணிப்பார்கள் என்று நம்புவோமாக! அடுத்து ரமலானின் சிறப்புகள் பகுதியில் இடம் பெற்றுள்ள கற்பனைக் கதையைப் பார்ப்போம்.

மவ்லானா ஷாஹ அப்துர்ரஹீம் ஸாஹிப் ராய்ப்பூரி (ரஹ்) அவர்களிடத்திலோ ரமலான் மாதத்தின் இரவு பகல் முழுவதும் குர்ஆன் ஓதுவதாகவே இருந்தது. அதில் கடிதம் எழுதுவதையும் நிறுத்தி விடுவார்கள். அன்பர்களைச் சந்திப்பதையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் தராவீஹ்க்குப் பின்னால் இரண்டு கோப்பை வெறும் தேநீர் அருந்துகிற நேரத்தில் மட்டும் அவர்களின் சமூகத்துக்கு வந்து செல்லலாம் என்ற அனுமதி சில குறிப்பான பணிவிடையாளர்களுக்கு மட்டும் வந்தது. (ரமழானின் சிறப்பு பக்கம் 17)

புனித ரமளான் சிறப்பான மாதம் என்பதிலோ அதில் இயன்ற அளவுக்கு நன்மைகளில் ஈடுபட வேண்டுமென்பதிலோ எந்த சந்தேகமுமில்லை.

ஆனால் இந்தப் பெரியார் நடந்து கொண்டது போல் நடக்க வேண்டுமா? என்பது தான் கேள்வி. இந்தக் கதையை எழுதிவிட்டு தொடர்ந்து ஸகரியா சாஹிப் பின் வருமாறு எழுதுகிறார்:-

பெரியார்களுடைய இந்தப் பழக்க வழக்கங்களெல்லாம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துப் படிப்பதற்கு மட்டுமோ அல்லது அவர்களுக்குப் புகழ் வார்த்தைகள் கூறப்பட வேண்டுமென்பதற்காகவோ எழுதப்படுவதில்லை, எனினும் தன் முயற்சிக்குத் தக்கவாறு அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே எழுதப்படுகின்றன. இயன்ற அளவு பூர்த்தியாக்குவதில் முயற்சி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இந்தக்கதையைப் பின்பற்றி நடக்க வேண்டு மென்பதற்காகவே எழுதியுள்ளதாக ஸகரியா சாஹிப் வாக்கு மூலம் தருகிறார்.

இவரை பின்பற்றினால் என்னவாகும்? மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை இம்மாதம் முழுவதும் செய்யக் கூடாது. தன் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. கணக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக்கூடாது. தொழில் வியாபாரம் செய்யக் கூடாது. பிள்ளை குட்டிகளைக் கவனிக்கக்கூடாது, நண்பர்களை, அண்டை வீட்டாரைச் சந்திக்கக்கூடாது அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் செய்யக் கூடாது. நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கவும் கூடாது. எந்தநேரமும் குர்ஆனை ஓதிக்கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு நடக்குமாறுதான் ஸகரிய்யா சாஹிப் உபதேசிக்கிறார். முஸ்லிம்கள் ஆகிவிட வேண்டும் என்கிறார்.

புனித ரமளானில் போர்க்களங்களில் நபி (ஸல்) பங்கெடுத்துக் கொண்டாலும், சமூகத்தில் அவர்கள் கலந்துரையாடியதும் தம்தோழர்களை அவர்கள் சந்தித்ததும் நன்மையை ஏவி தீமையைத் தடுத்ததும் இல்லறத்தில் அவர்கள் ஈடுபட்டு குளிப்புக் கடமையானவர்களாக நோன்பு நோற்றதும் பின்பற்றத் தக்கதல்ல என்கிறார்.

நபி (ஸல்) அவர்கள் புனித ரமளானை எப்படிக் கழித்தார்கள் என்பதைச் சொல்லியிருந்தால் அது நியாயமானதாக இருக்கும். நபிவழிக்கு மாற்றமாக நடந்தவர்களை பெரியார்கள் என்று அறிமுகப்படுத்தி அவர்கள் வழியில் செல்ல சமூதாயத்தையும் தூண்டுகிறார்.

இவர் சொல்லக் கூடிய பெரியார்களுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகி இருக்கலாம். ஏனெனில், அவர்கள் உழைத்து உண்பவர்களாக இருந்ததில்லை. பிறரிடமிருந்து காணிக்கைகள் ஹதியாக்களில் காலத்தை ஓட்டியவர்கள். எது எக்கேடு கெட்டாலும் கிடைக்க வேண்டியது கிடைத்து விடும். தனக்குப் பணியாட்களை நியமித்துக் கொள்ளும் அளவுக்கு (அந்தக் கதையில் இதை விளங்கலாம்) உழைக்காமலேயே செல்வத்தைப் பெருக்கிக் கொண்டவர்கள்.

எவ்வித வியாபாரமோ, விவசாயமோ, தொழிலோ செய்யத் தேவையில்லாத அளவுக்கு இஸ்லாமே பிழைப்புக்கு வழியாகவும் சொகுசு வாழ்க்கைக்குச் சாதனமாகவும் ஆகிவிட்ட ஸகரியா சாஹிப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது சாத்திய மாகாலாம். (ஆனால் அவருக்கும் இது சாத்தியமாகவில்லை என்பதை அவரை நேரில் கண்ட என்னைப் போன்றவர்கள் அறிவார்கள்)

அன்றாடம் கூலி வேலை செய்தே தன் வயிற்றையும் தன் குடும்பத்தார் வயிற்றையும் கழுவக் கூடிய சராசரி மனிதனுக்கு இது சாத்தியமாகுமா?

தங்கள் தொழிலை நேரடியாக மேற்பார்வை செய்தால் தான் இலாபம் அடைய முடியும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இது சரிப்பட்டு வருமா?

இந்தப் பெரியார்களுக்குக் கிடைத்தது போன்று இந்த சாமான்ய மக்களுக்கு காணிக்கைகள் குவியுமா என்ன? இஸ்லாமியர்களின் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யவே இந்தக் கதைகள் உதவும் என்பதை சமுதாயம் கண்டு கொள்ள வேண்டும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கதைக்கு முரணான போதனையையும் வேறொரு இடத்தில் செய்கிறார்.

இது பிறருடைய சுக, துக்கங்களில் பங்கு கொள்ளும் மாதம் என்று கூறியுள்ளார்கள். அதாவது ஏழை, எளியோருடன் கலந்துறவாடி நடந்து கொள்ளுதல் என்பதாகும். (ரமழானின் சிறப்பு பக்கம் 20)

ஏழை எளியோருடன் கலந்துறவாடாமல் அவர்களது கஷ்டத்தில் பங்கு கொள்ளாமல் மேற்படி பெரியார் நடந்துள்ளார் எனும் போது அவர் எப்படி பின்பற்றத்தக்கவராவார்?

இஸ்லாத்திற்குத் தவறான வடிவம் தந்து இஸ்லாம் நடைமுறை சாத்தியமற்ற மார்க்கம் என்று காட்டுவதும் பெரியார்கள் மீது மலைப்பூட்டும் வகையில் பக்தியை ஏற்படுத்துவதும் தான் இவரது நோக்கமோ என்னவோ?

புனித ரமழானின் சிறப்பைக் கூறப் புகுந்த ஸகரிய்யா சாஹிப் ஆங்காங்கே செய்யும் போதனைகளையும் நாம் அலச வேண்டியுள்ளது.

நோன்பு திறக்கும் பொழுது ஹலாலான உணவானாலும் வயிறு புடைக்க அதிகமாகச் சாப்பிடாமலிருப்பது. ஏனெனில், இதனால் நோன்பின் நோக்கம் தவறி விடுகின்றது. நோன்பு வைப்பதன் நோக்கம் மனோ இச்சைகளையும் மனிதனிலுண்டாகும் மிருக இச்சைகளையும் குறைத்து ஒளிமயமான சக்திகளையும், மலக்குகளின் தன்மைகளையும் வளர்த்துக் கொள்வதாகும். பதினொரு மாதங்கள் வயிறு நிறையச் சாப்பிட்டிருக்கிறோம். ஒரு மாதம் அதில் கொஞ்சம் குறைத்துக் கொண்டால் உயிரா போய் விடப்போகிறது? (பக்கம் 62)

தவறி விட்ட உணவையும் சேர்த்துச் சாப்பிட்டு மனிதன் நோன்பு திறந்தால் நோன்பின் நோக்கமாகிய இப்லீஸை அடக்குதல், நப்ஸின் இச்சையை முறியடித்தல் ஆகியவை எவ்வாறு சாத்தியமாகும்? என்பதாக இமாம் கஸ்ஸ்லி (ரஹ்) எழுதுகிறார்கள். (பக்கம் 62)

பிஷ்ருல் ஹாபி (ரஹ்) என்ற பெரியாரிடம் ஒரு மனிதர் சென்றார். அப்பொழுது அவர்கள் குளிரினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். அருகில் அவர்களுடைய உடைகள் கழற்றி வைக்கப்பட்டிருந்தன. இதனைக் கண்ட அம்மனிதர் இந்த நேரத்தில் உடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர்கள் ஏழைகள் பலர் ஆடையின்றி இருக்கின்றனர். அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ள எனக்கு சக்தியில்லை. ஆகையால், அவர்களைப் போன்றாவது நானிருந்து அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளவே இவ்வாறு நான் இருக்கிறேன் என்று கூறினார்கள். (பக்கம் 64)

சுகவாசிகளின் வழக்கத்தைப் போன்று ஸஹர் நேரத்தில் அதிகமாகச் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது நோன்பின் நோக்கத்தைத் தவறச் செய்து விடுகின்றது. என்று மராகில் பலாஹ் என்ற நூலின் ஆசிரியர் எழுதுகிறார்கள். (பக்கம் 64)

என்னுடைய ஷைகு மெªலானா கலீல் அஹமது சாஹிப் (ரஹ்) அவர்களை ரமழான் மாதம் முழுதும் நான் கவனித்திருக்கிறேன். இப்தார் ஸஹர் இரண்டு நேரத்துக்கும் சேர்த்து ஒன்றரை ரொட்டியை விட அதிகமாக அவர்கள் சாப்பிட்டதே இல்லை. இதனைப் பற்றி அவர்களின் சீடர் ஒருவர் கேட்டதற்கு எனக்குப் பசி ஏற்படுவதில்லை. நண்பர்களை கவனத்தில் கொண்டு தான் அவர்களுடன் சேர்த்து உட்கார்ந்து இதனையும் சாப்பிடுகிறேன் என்று கூறினார்கள். (பக்கம் 65)

மவ்லானா - ஷாஹ அப்துர் ரஹீம் ராய்ப்பூரி (ரஹ்) அவர்கள் சம்மந்தமாக இதைவிட இன்னும் மேலாக கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் பல நாட்கள் தொடராக இரவு நேரத்தில் ஸஹருக்கும் இப்தாருக்கும் சேர்ந்து சில கோப்பைகள் பாலில்லாத தேநீரைத் தவிர வேறு எதையும் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்கள். ஒரு தடவை ஹஜ்ரத் அவர்களின் பிரதமச் சீடர் மவ்லானா ஷாஹ் அப்துல் காதில் ஸாஹிப் அவர்கள் “ஹஜ்ரத் எதுவும் சாப்பிடாமலிருந்தால் பலவீனம் அதிகமாகி விடுமே? என்று பரிவுடன் கூறியதற்கு அல்ஹம்து லில்லாஹ்! சொர்க்கத்தின் இன்பம் உண்டாகிக் கொண்டிருக்கிறது என்று பதிலளித்தார்களாம்.” (பக்கம் 65)

இப்படி ஏராளமான போதனைகளை ஸகரியா சாஹிப் செய்கிறார். சாப்பிடுவது சம்மந்தமாக அவர் கூறியுள்ள போதனைகளை குர்ஆன், ஹதீஸ் ஒளியில் அலசுவோம் இதற்கு முன்னால் குளிரில் நடுங்கிய பெரியார் பற்றி அவர் கூறும் கதையைப் பார்ப்போம்.

ஏழைகள் ஆடையின்றி இருக்கிறார்கள் என்பதற்காக தனது ஆடைகளைக் களைந்து விட்டு குளிரில் அப்பெரியார் நடுங்கியதாக கதை விடுகிறார்.

நபிகள் (ஸல்) காலத்திலும் ஏழைகள் பலர் இருந்துள்ளனர். போதுமான ஆடையின்றி சிரமப்பட்டவர்கள் பலர் இருந்தனர். கபனிடுவதற்கு கூட போதிய ஆடையின்றி மரணித்தவர்கள் பலர் இருந்துள்ளனர். அதில் உலக மாந்தரை விடவும் இரக்க குணம் கொண்ட நபியவர்கள் இருக்கின்ற ஆடையைக் கழற்றி வைக்கவில்லை. ஏழைகள் மலிந்துள்ளார்கள் என்பதற்கு பரிகாரம் இதுவென்றால் நபியவர்கள் அவ்வாறு நடந்திருப்பார்கள். முட்டாள்தனமான காரியத்தைச் செய்தவர்களை எல்லாம் பெரியார்கள் என்று முத்திரைக் குத்தி விளம்பரப்படுத்துகிறார்.

ஸகரியா ஸாஹிப் காலத்திலும் குளிருக்கு நடுங்குமளவுக்கு ஏழைகள் இருந்தனர். இன்றும் உள்ளனர் இந்த போதனையை ஸகரியா ஸாஹிபும் பின்பற்றவில்லை அவரது ஸஹாரன்பூர் மதரஸாவின் ஆசிரியர்களும், மாணவர்களும் பின்பற்றவில்லை. தப்லீக் மராஸாக்களும் பின்பற்றவில்லை.

ஏனைய மதரஸாக்களை விட தப்லீக் மதரஸாக்களில் தான் முட்டுக்கால்களுக்கும் கீழே தொங்குமளவுக்கு ஜிப்பாக்கள் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நாட்டில் துணிப் பஞ்சும் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுமளவுக்கு மூன்று சட்டைகள் தைக்கும் அளவுக்கு ஒரு ஜிப்பாவுக்கு துணி தேவைப்படுகிறது.

ஏழைகளைக் கருத்தில் கொண்டு ஒரு ஜுப் பாதைக்கும் செலவில் ஒரு ஏழைகளுக்கு இரு சட்டைகள் தைத்துக் கொடுக்கலாமே! இதுபோதாதென்று பத்து முழம் துணியில் தலைப்பாகை வேறு. அதில் ஐந்து ஏழைகளுக்கு உடை வழங்கலாம். பிஷ்ருல் ஹாபியைப் போல் எல்லாவற்றையும் கழற்றி எறியாவிட்டாலும் ஏழைகளைக் கருத்தில் கொண்டு இதையாவது செய்யலாம் அல்லவா? இதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்று தெரிந்தேதான் அவர் எழுதியுள்ளார் என்பதற்காகவே இதைக் கூறவேண்டியுள்ளது.

மனதை அடக்குவதே நோன்பின்! நோக்கம் என்று காரணம் கற்பித்துக் கொண்டு மற்ற நாட்களை விடவும் குறைவாக உண்ணச் சொல்கிறார். ஸகரியாஸாஹிப். அல்லாஹ்வோ அவனது தூதரோ இந்தக் காரணத்தைக் கூறவில்லை.

யார் பொய்யான பேச்சையும், அதைச் செயல் படுத்துவதையும் விடவில்லையோ அவன் தனது உணவையும், தண்ணீரையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை இது நபிமொழி புகாரி உட்பட பல நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

பசியையும், தாகத்தையும் அடக்குவது அல்ல. நோன்பின் நோக்கம் அதனால் இறைவனுக்கு ஏதும் ஏற்பட போவதில்லை. மாறாக, இறைவன் தடுத்ததற்காக உணவையும் தண்ணீரையும் சிறிது நேரம் தியாகம் செய்தது போல் இறைவன் தடுத்த அனைத்தைவிட்டும் விலகவேண்டியதே நோன்பின் நோக்கம் என்பதை இந்த நபிமொழி விளக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த போது வெப்பம் தாளாமல் தமது தலையில் தண்ணீர் ஊற்றியதை நான் பார்த்திருக்கிறேன் என நபித்தோழர் ஒருவர் அறிவிக்கும் ஹதீஸ் அஹமத், அபூதாவூத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

மலக்குகளின் தன்மையை அடைவதுதான் நோன்பின் நோக்கம் என்றால் அந்த வெப்பத்தையும் சிரமத்துடன் நபி (ஸல்) சகித்திருப்பார்கள். தலையில் தண்ணீர் ஊற்றியிருக்கமாட்டார்கள்.

நோன்பு நோற்றிருக்கும் போது தன்னை நபிகள் முத்தமிடுவார்கள் என்று உம்மு ஸலாமா அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், அஹமத்)

ஹலாலான இச்சையையும் அடக்கிக் கொள்வதே நோன்பின் நோக்கம் என்றால் நபியவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள்.

விரைந்து நோன்பு துறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் உள்ளனர் என்பதும் நபிமொழி, ஸஹல் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி முஸ்லிம் அஹமத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

உணவின் மேல் உள்ள நாட்டத்தை அகற்றுவதே நோன்பின் நோக்கம் என்றால் நோன்பைத் தாமாகத் துறக்குமாறு வழிகாட்டியிருப்பார்கள். அவசரமாக நோன்பு துறக்கச் சொன்னதன் மூலம் உணவில் மேல் உள்ள நாட்டத்தை மனிதன் துறந்து விடலாகாது என்று கற்றுத் தருகிறார்கள்.

ரமழான் காலங்களில் உண்பதைப்பற்றி இறைவன் கூறும்போது,

இரவிலிருந்து பஜ்ர் வரை உண்ணுங்கள்! பருகுங்கள் என்று கூறுகிறான்.(2:187)

இரவு வந்தது முதல் பஜ்ர் வரையிலும் உண்ணலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான். இவ்வளவு நேரமும் ஒருவன் சாப்பிட்டுக் கொண்டே இருந்ததால் கூட நோன்பின் நோக்கத்தை அவன் மீறியவனாக மாட்டான் என்று இந்த வசனம் கூறுகின்றது.

உண்மையில் நோன்பின் நோக்கம், எவ்வளவு உண்கிறான் என்று கணக்கெடுப்பதன்று. உணவின் மீது இவ்வளவு ஆசை உள்ள மனிதன், இறைவன் சொன்னதற்காக பகல் பொழுதில் தியாகம் செய்கிறானா என்று கணக்கெடுப்பதுதான்.

எவ்வளவு உணவை தியாகம் செய்கிறோம் என்பதை விட எதற்காக தியாகம் செய்கிறோம் என்பதே நோன்பின் நோக்கமாகும்.

பாலில்லாத தேநீரை அருந்தி விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களும், தனக்குப் பசிப்பதேயில்லை என்று கூறி மனித தன்மைக்கு அப்பாற்பட்டவராகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்பவர்களும் ஒருக்காலும் பெரியார்களாக முடியாது.

உழைக்காமல் வயிறு வளர்க்கும் ஹஜ்ரத் மார்களுக்கே சாத்தியப்படாத இந்தப் போதனை அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு எப்படிச் சாத்தியமாகும்?

திண்ணை தூங்கிகளுக்குரிய மார்க்கமாக இஸ்லாத்தை அறிமுகம் செய்யத்தான் இந்நூல் எழுதப்பட்டதோ என்ற எண்ணம் உறுதியாகின்றதல்லவா?

பெரியார்கள் மீது மலைப்பையும், மதிப்பையும் ஏற்படுத்துவதே ஸகரியா சாஹிபின் நோக்கம் என்பதைப் பின்வரும் அவரது போதனை ஊர்ஜிதம் செய்கின்றது.

எனவே நோன்பு நோற்றிருக்கும் நிலையில் நோன்பு திறப்பதற்காக பொருள் ஏதேனும் இருக்கிறதா இல்லையா? என்ற சிந்தனை அவர்களுக்கு வருவதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் கூட குற்றமெனக் கூறியுள்ளனர். நோன்பின் மாலை, நோன்பு திறப்பதற்காக ஏதேனும் பொருளைத் தயார் செய்ய வேண்டுமென எண்ணங்கொள்வதும் குற்றமென சில பெரியார்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் அவ்வாறு எண்ணுவது உணவளிப்பது பற்றி அல்லாஹ் வாக்களித்திருக்கும் நம்பிக்கையைத் குறைத்து விடுகிறது என்பதற்காக. (நோன்பின் சிறாப்பு பக்கம் 67, 68)

நோன்பு திறப்பதற்கு முன் எங்கிருந்தாவது ஏதாவது பொருள் அவர்களுக்கு வந்தால் மனதின் கவனம் அதன் பக்கம் செல்லாமலிருப்பதற்காகவும், தவக்குல் என்ற இறை நம்பிக்கையில் குறை ஏதும் ஏற்படாமலிருப்பதற்காகவும் அந்தப் பொருளை மற்றவர்களுக்குக் கொடுத்து விடுவார்கள். (நோன்பின் சிறப்பு பக்கம் 68)

எனினும் இக்காரியங்கள் பெரும் ஆத்மீக வலிமையுடைய மனிதர்களுக்கு உள்ளவையாகும். நம் போன்றோர் இவ்விஷயங்களைச் சிந்திப்பதும் தகுதியில்லாததாக இருக்கின்றது மேலும் அந்த நிலையை அடையாமல் நாம் அதனைத் தேர்ந்தெடுப்பது நம்மை அழிவின் பக்கம் சேர்த்து விடுவதாகும். (நோன்பின் சிறப்பு பக்கம் 68)

ஸகரியா சாஹிபின் மேற்கண்ட போதனைகளை ஊன்றிக்கவனிக்கும் போது அதில் மலிந்து கிடக்கும் தவறுகளையும் இவரது நோக்கத்தையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

நோன்பு துறப்பதற்காக உணவுகளைத் தயார் செய்வதும் அது பற்றி சிந்திப்பதும் தவக்குல் எனும் இறை நம்பிக்கைக்கு மாற்றமென்றால்.

அல்லாஹ்வின் ரிஸ்கைத் தேடுங்கள்! ஹலாளான முறையில் பொருளீட்டுங்கள்! என்றெல்லாம் இறைவன் போதிப்பது ஏன்? ஜகாத், ஸதகா போன்ற நல்லறங்களை இறைவன் வலியுறுத்துவது ஏன்? நோன்பு வைப்பதற்கான நேரம் முடிந்ததும் உண்ணுங்கள் பருகுங்கள் என்று இறைவன் போதிப்பது ஏன்? இவையெல்லாம் கூட தவக்குலுக்கு எதிரான போதனைகள் தானா?

திருக்குர்ஆன் போதனைகளையும் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதலையும் அறியாத அறிவீனர்கள் தான் இப்படியெல்லாம் கூற முடியும்.

பெரும் ஆத்மீக வலிமையுடையவர்களுக்குத் தான் இந்த போதனைகள் என்றும் சரடு விடுகிறார். இப்படிச் சரடு விடாவிட்டால் வேளாவேளைக்கு உண்டு வந்த ஸகரியா சாஹிப் மாட்டிக் கொள்ள வேண்டி வருமல்லவா? அதனால் தான் ஆத்மீக வலிமை பற்றிப் பேசுகிறார்.

கிடைக்கும் போது சுவையான உணவுகளை உட்கொண்ட நபியவர்கள், உண்பதற்கு ஏதும் உண்டா என்று தன் குடும்பத்தாரிடம் கேட்ட நபியவர்கள், ஆட்டுத் தொடைக் கறியைக் கேட்டு வாங்கிச் சாப்பிட நபியவர்கள் ஆத்ம வலிமையுடையவர்கள் அல்ல. தவக்குல் உடையவர்கள் அல்ல. என்று ஜகரியா சாஹிப் அவர்கள் கூறுகிறார் போலும்.

பெரும் வணிகர்களாகத் திகழ்ந்த அபூபக்கர் சித்தீக் (ரலி) அப்துர் ரலிமான் அவ்பு (ரலி) போன்றவர்களும், யாரேனும் தங்களை உண்ண அழைக்கமாட்டார்களா என்று எதிர்பார்த்த அபூஹுரைரா (ரலி) போன்ற திண்ணைத் தோழர்களும் ஆத்மீக வலிமை,  தவக்குல்  அற்றவர்களா?.

தவக்குலை போதிக்கும் இறைவன் தான், பொருள் தேடுவதையும் போதிக்கிறான் என்ற சாதாரண உண்மை கூடதெரியாத அறிவீனர்கள்தான் பெரும் ஆத்மீக வலிமையுடையவர்களாம்.

இஸ்லாமிய சட்டங்களில் இப்படியெல்லாம் இரண்டு நிலைகள் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகள் அனைவருக்கும் பொதுவானது என்ற சாதாரண உண்மை கூட தெரியாத ஸகரியா சாஹிப் போன்றவர்கள் தான் ஷைகுல் ஹதீஸ்களாம்!

ஆத்மீக வலிமை பெற்றவர்களுக்குத் தான் இது சாத்தியம் என்றால், ஆன்மீக வலிமை பெறாத அப்பாவி தப்லீக் ஜமாஅத்தினருக்கு இதை ஏன் போதிக்க வேண்டும்? ஆன்மீக வலிமை உள்ளவர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு இதை சொல்ல வேண்டியதுதானே!

ஆத்மீக வலிமை பெறாத பாமரமக்களிடம் இதைக் கூறுவதற்கு காரணம் அந்தப் பெரியார்கள் மீது மலைப்பை ஏற்படுத்துவது தான் இதைத்தவிர வேறு எந்தக் காரணமும் இருக்க முடியாது.

தொழுகையில் சிறப்பு, ரமழான் சிறப்பு ஆகிய பகுதிகளில் மட்டுமன்றி தொகுப்பு முழுவதும் அபத்தங்கள் நிரம்பியுள்ளன. சிந்திக்கும் மக்களுக்கு இதுவே போதுமாகும்.

நல்ல நோக்கத்தில் தப்லீக் இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கற்பனைத் தொகுப்பை தூக்கி எறிந்தால் வெற்றியடைவார்கள்.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.


No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்