Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 7

 குளிப்பது பற்றி நூல்

தலைப்பாகையின் மீது மஸ்ஹு (தடவுவது) பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 141

இரு காலுறைகளின் மீதும் தலைப்பாகையின் மீதும் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஹு செய்தார்கள்.

அறிவிப்பவர்: பிலால் ரளியல்லாஹு அன்ஹு

பல தொழுகைகளை ஓரே ‘ஒளுவில்‘ தொழுவது பற்றியுள்ள பாடம்.

ஹதீஸ் எண் : 142

(மக்கா) வெற்றி நாளன்று நிச்சயமாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே ஒளுவில் பல தொழுகைகளை தொழுதார்கள். தங்களது இரு காலுறைகளின் மீதும் ‘மஸ்ஹு‘ம் செய்தார்கள் என புறைதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

நபியவர்களைப் பார்த்து உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “இன்று நீங்கள் செய்ததைப்போன்று இதற்கு முன்பு செய்ததில்லையே?” எனக்கேட்டனர். (அதற்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) உமரே! அதைவேண்டுமென்றெ (மனமொப்பித்தான்) செய்தேன்” என்றனர்.

அறிவிப்பவர்: புரைதா ரளியல்லாஹு அன்ஹு

ஒளுவிற்குப்பிறகு சொல்லவேண்டிய (துஆ) கூற்று பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 143

ஒட்டகம் மேய்க்க வேண்டிய பொறுப்பு எங்களின் மீது இருந்தது. அதன்படி என் முறை வந்தது. அந்த ஒட்டகையை மாலையில் எங்கே கட்டவேண்டுமோ? அங்கே அதைத்திருப்பி கொண்டுவந்து விட்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், நின்று கொண்டு ஜனங்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருப்பவர்களாக இருக்கக் கண்டேன்.

எந்த ஒரு முஸ்லிமாயினும் ஒளு செய்து அதை அழகாக நிறைவாகச் செய்துவிட்டு அதன்பிறகு இரண்டு ரக்அத்து தொழுது. அவ்விரண்டு ரக்அத்திலும் அவரது மனதாலும் அவரது முகத்தாலும், அத்தொழுகையில் முன்னோக்கியவாறு பிற கவனமின்றி (நிறைவாகச்) செய்தால் அவருக்கு சுவனம் கடமையாகியேயல்லாது தவிர இல்லை என்ற கூற்றை அவர்களுடைய உபதேசத்திலிருந்து அறிந்து கொண்டேன்.

இது எவ்வளவு சிறந்ததாக உள்ளது? என்று நான் கூறினேன். எனக்கு எதிரிலிருந்த ஒருவர் இதற்கு முன்னால் கூறப்பட்ட ஒரு வார்த்தை இதை விட மிகச் சிறந்தது என்கிறார். நான் நோட்டமிட்டேன் அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், சிறிது நேரத்துக்கு முன்புதான் நீ வந்தாய் என்பதை நான் பார்த்துக் கொண்டுதானிருந்தேன் எனக்கூறி விட்டு “உங்களில் யாராயினும் ஒளுவை அதை முழுமையாகவும் நிறைவாகவும் செய்துவிட்டு (அதன்)பிறகு அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு எனக்கூறினால் எட்டு சுவனங்களின் வாயில்கள் அவருக்காக திறக்கப்படாமல் இருப்பதில்லை. அவற்றில் எதில் அவர் பிரவேசிக்க விரும்புகிறாரோ அதில் பிரவேசிப்பார்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உகுபா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு

இச்சைக்கசிவைக் கழுவிக்கொண்டு அதன் நிமித்தம் ஒளு செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 144

மிக அதிகமான இச்சைக்கசிவுடையவனாக நான் இருந்தேன் (ஆகவே அது பற்றி) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்க அவர்களது மகளாரின் ஸ்தானத்திற்காக வெட்கமடைந்து, அல்மிக்தாத் பின் அல் அஸ்வது என்பவரை (இது பற்றிக் கேட்க) நான் கட்டளையிட்டேன் (ஆகவே) அவர் அவர்களிடம் கேட்டார் (அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் “அவரது ஆண்குறியைக் கழுவிக்கொண்டு ஒளுவும் செய்து கொள்வார்” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலி ரளியல்லாஹு அன்ஹு

இச்சைக்கசிவு என்பதற்கு அரபியில் ‘மதி‘ எனக்கூறுகின்றனர். ஒரு மனிதருக்கு அது வெளிப்பட்டால் மார்க்க ரீதியாக ஆண் குறியைக் கழுவிக்கொண்டு அதன்பிறகு ஒளுவும் செய்து கொள்ள வேண்டும் என்பது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலாகும்.

குறிப்பு: ‘மதி‘ மிருதுவான வெண்மையான நீர். கடுமையான ஆசையின்போது வெளிப்படும். அது வருவதை அநேகமாக உணர்ந்து கொள்ள முடியாது. ஆண் பெண் இருசாராருக்குமே இந்நிலை ஏற்படும். ஆண்களை விட பெண்களுக்கு இந்நிலை மிக கூடுதலாக ஏற்படும்.

(அமர்ந்து) இருந்த நிலையில் ஏற்படும் உறக்கம் ஒளுவை முறிக்காது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 145

தொழுகைக்காக இகாமத்து சொல்லப்பட்டுவிட்டது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதருடன் மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தனர். (அப்துல் வாரிஸின் ஹதீஸில் அல்லாஹ்வின் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு மனிதரோடு (பொறுமையாகப்) பேசிக் கொண்டிருந்தனர் என உள்ளது) மக்களெல்லாம் தூங்கும் வரை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்கு நிற்கவில்லை.

ஷுஃபாவின் ஹதீஸில், ஸஹாபாக்களெல்லாம் (இருந்தவாறு) தூங்கிவிடும்வரை அவரோடு பேசிக்கொண்டிருந்தனர். அதன்பிறகு வந்து அவர்களுக்கு தொழுகை நடத்தினர்.

அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

ஒட்டக இறைச்சி சாப்பிட்டபின் ஒளு செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 146

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் “ஆட்டு இறைச்சி (சாப்பிட்டதன்) நிமித்தம் ஒளுச் செய்ய வேண்டுமா?” எனக்கேட்டார்.

“விரும்பினால் ஒளுச் செய்து கொள் விரும்பாவிட்டால் ஒளுச்செய்யாமலும் இருந்து கொள்” என்றனர்.

“ஒட்டக இறைச்சியை (சாப்பிட்டதன்) நிமித்தம் நான் ஒளுச்செய்ய வேண்டுமோ?” என நான் கேட்டேன் அதற்கு ‘ஆம்‘ என்றனர். ஒட்டக இறைச்சி சாப்பிட்டபின் (நபியவர்களும்) ஒளுவும் செய்தனர்.

“ஆடு கட்டுமிடத்தில் நான் தொழலாமா?” என (அந்த மனிதர்) கேட்டார். அதற்கு ‘ஆம்‘ என்றனர்.

“ஒட்டகம் படுக்கும் இடத்தில் நான் தொழலாமா?” என்றேன். அதற்கு ‘கூடாது‘ (இல்லை) என்றனர்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு

நெருப்பு தொட்ட(சமைக்க காய்ச்சப்பட்ட)வைகளை (உண்ட பிறகு) ஒளு செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 147

அப்துல்லாஹ் பின் இப்ராஹிம் பின் காரிள் ரளியல்லாஹு அன்ஹு என்பவர். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களை பள்ளியில் ஒளு செய்யக் கண்டார்கள். (அப்போது) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்,

“காய்ச்சி எடுக்கப்பட்ட பால்கட்டித்துண்டு ஒன்றை சாப்பிட்டதன் காரணமாகவே ஒளுச் செய்தேன்” என்றனர். காரணம் “நெருப்பு தொட்டவை (சமைக்கப்பட்டவை)களிலிருந்து (அவைகளை உண்டபின்) ஒளு செய்து கொள்ளுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் என்ற செய்தியை உமர் பின் அப்துல் அஜீஜ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அறிவித்தவர் அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் பின் காரிள் ரளியல்லாஹு அன்ஹு

அறிவிப்பவர்: உமர் பின் அப்துல் அஜீஜ் ரளியல்லாஹு அன்ஹு

நெருப்பினால் சமைக்கப்பட்டவைகளை உண்டபிறகு ஒளு செய்வது மாற்றப்பட்டுவிட்டது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 148

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், ஆட்டு சப்பையை கத்தியால் வெட்டி, அதிலிருந்து உண்டபின் தொழுகைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதும் அங்கிருந்து எழுந்து கத்தியை எறிந்து விட்டுச் சென்று தொழுதார்கள் ஒளு செய்யவில்லை” என்பதை பார்த்ததாக, தமது தந்தை அறிவிப்பதாக ஜஃபர் பின் அம்ர் பின் உமய்யா அழ்ழம்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

ஹதீஸ் எண் : 149

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பால்குடித்துவிட்டு தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வாய் கொப்பளித்துவிட்டு, நிச்சயமாக பாலுக்கு அதற்கென்று ஒரு வழுவழுப்பு உண்டு எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

தொழுகையில் ஏதோ ஏற்பட்டுவிட்டது என (சந்தேகத்துடன்) எண்ணுகின்ற வரைப் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 150

உங்களில் ஒருவர் தனது வயிற்றில் ஏதோ ஏற்பட்டு அதனால் ஏதும் வெளிப்பட்டிருக்குமோ என்று எண்ணி முடிவெடுப்பது சங்கடமாகிவிட்டால் சப்தத்தைக் கேட்கும் வரை அல்லது காற்றின் நாற்றத்தை நுகரும் வரை பள்ளியிலிருந்து வெளியேறிச் செல்ல வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

“தண்ணீரிலிருந்து தான் தண்ணீர்” என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 151

அபூஸயீது அல்குத்ரியின் தந்தையாகிய நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் திங்கள் கிழமையன்று குபாவிற்கு புறப்பட்டேன். (வழியில்) பனீஸாலிம் கூட்டத்தவரை நாங்கள் வந்தடைந்தோம். (அங்கே வந்ததும்) இத்பான் என்பவரின் வீட்டுவாசலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நின்று (உரத்த சப்தத்தில்) அவருக்காக குரல் கொடுத்தனர். அவர் தனது கீழ் ஆடையை இழுத்தவாறு வெளியில் வந்தார். (அவரை அந்நிலையில் கண்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அம்மனிதரை நாம் அவசரப்படுத்தி விட்டோம் எனக் கூறினர். (அப்போது) இத்பான், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! ஒரு மனிதர் தன் மனைவியுடனிருக்கும்போது அவசரப்படுத்தப்பட்டு வெளியேறுகிறார். (ஆயினும்) அவருக்கு விந்து வெளிப்படவில்லை. இந்நிலையில் அவர் மீது கடமை என்ன?1 என்பதை எனக்கு கூறுங்கள் என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “தண்ணீரிலிருந்து தான் தண்ணீர்” எனக் கூறினர்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபூஸயிது அல் குத்ரி தன் தந்தை அறிவித்ததாக கூறுகிறார்

குறிப்பு 1.ய “தண்ணீரிலிருந்து தான் தண்ணீர்” என்ற ஹதீஸிற்கு இப்னு அப்பாஸ் ரளியல்லாஹ் அன்ஹுமா அவர்கள்; கனவில் ஒருவர் இது போன்ற ஒரு சம்பவம் நடப்பதாக கண்டு விந்து வெளியாகி இருப்பின் குளிப்பது கடமை. இல்லாது வெறும் கனவாக இருந்தால் இல்லையென்பதே எனக் கூறுகிறார்கள்.

டி. ஒருவர் தன் மனைவிடம் தாம்பத்திய உறவு நீங்கலாக மற்றதைச் செய்திருப்பின் அவருக்குரிய சட்டம் அவரது ஆண்குறியை கழுவிவிட்டு ஒளுச் செய்து கொண்டால் மட்டும் போதும், என்பதை உபைபின் கஅபு ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ் தெளிவு செய்கிறது.

உ. இந்த நபிமொழி பின்வரும் நபிமொழியால் மாற்றப்பட்டுவிட்டது என்பது ஒரு சிலரின் கருத்தாகும்.

ஹதீஸ் எண் : 152

151 வது ஹதீஸில் வந்துள்ள சட்டம் மாற்றப்பட்டு இரு குறிகளும் ஒன்றை ஒன்று சந்தித்துவிடின் குளிப்பது கடமை என்பது பற்றிய பாடம்.

அதுபற்றி முஹாஜிர்கள், அன்சார்களில் ஒரு கூட்டத்தினர் கருத்து வேறுபட்டு விட்டனர். துள்ளிக்குதித்து தண்ணீர் வெளிப்பட்டாலோ அல்லது சாதாரணமாக நீரைக்கண்டாலோ தவிர குளிப்பது கடமை இல்லை என அன்சார்கள் கூறினர். “மாறாக கலவை ஏற்பட்டு விட்டால் கண்டிப்பாக குளிப்பு கடமையாகிவிட்டது” என முஹாஜிர்கள் கூறினர். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளாராகிய) அபூமூஸா (குறுக்கிட்டு) இதிலிருந்து உங்களை நான் தெளிவு படுத்துகிறேன் எனக் கூறி நான் (அங்கிருந்து) எழுந்து ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களிடம் (இதுபற்றி பேச) அனுமதி கோரினேன். எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனது தாயே! ( அல்லது விசுவாசிகளின் தாயே!) எனக் கூறி ஒரு விஷயத்தைப்பற்றி உங்களிடம் நான் கேட்க விரும்புகிறேன். அதே சமயம் உங்களிடம் அதை கேட்பதிலிருந்து வெட்கம் அடைகிறேன் என நான் கூறினேன், அதற்கவர்கள் “எதைப்பற்றி நீர் கேட்கக்கூடியவராக உள்ளீரோ! அதைப்பற்றி உன்னை ஈன்டெடுத்த தாயிடம் கேட்பதற்கு நீர் வெட்கப்படவேண்டாம் நான் உன் தாய் தான்”, எனக் கூறினார்கள். (அப்போது) குளிப்பு கடமையாக்கி வைக்கக்கூடியது எது என கேட்டேன். (அதற்கவர்கள்) “இதுபற்றி நன்கு தெரிந்தவரிடம்தான் நீர் வந்து இருக்கிறீர்” அ(ப்பெண்ணின்)வளின்1 நான்கு கிளைகளுக்கு மத்தியில் அ(ஒரு)வர் அமந்து ஆண்குறி பெண்குறியை தொட்டுவிட்டால் (கத்னா) செய்யப்பட்ட பகுதி அளவிற்கு ஒன்றில் ஒன்று மறைந்து விட்டால்) குளிப்பது கடமையாகி விட்டது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1. கத்னா செய்யப்பட்ட பகுதி பெண்குறியில் மறைந்துவிட்டால் குளிப்பது கடமை என்பதே ஹதீஸின் கருத்தாகும்.

ஹதீஸ் எண் : 153

ஒரு மனிதர் தனது மனைவியோடு தாம்பத்திய உறவு கொள்கிறார். அதன்பிறகு அவருக்கு விந்து வெளியாகவில்லை (அவ்வாறாயின்) அவ்விருவரின் மீதும் குளிப்பது கடமையா? என ஒரு மனிதர் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். அப்போது ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களும் அங்கிருந்தனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் , “நிச்சயமாக நானும் இப்பெண்ணும் அவ்வாறு செய்து விட்டு அதன்பிறகு குளித்துக்கொள்கிறோம்” எனக்கூறினார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியார் ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களும் உம்முகுல்ஸும் ரளியல்லாஹு அன்ஹா அறிவித்ததாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹ் அன்ஹு அவர்களும் அறிவிக்கிறார்கள்.

ஆண்மகன் பார்ப்பது போன்று கனவில் ஒரு பெண்ணும் பார்கிறாள் (பார்த்தபின்) அவள் குளிப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 154

(இந்த ஹதீஸை அறிவிக்கும்) இஸ்ஹாக்கின் பாட்டியராகிய உம்மு சுலைம் அல்லாஹ்வின் தூதர்பால் வந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! கனவில் ஆண் காண்பதை பெண் காணுகிறாள். ஓரு ஆண் மகன் தனக்கு கனவில் என்ன நடந்தாகக் காணுகிறரோ, அது தனக்கு ஏற்பட்டு விட்டதாக (ஒரு பெண்) காண்கிறாள். (இதைக்கேட்ட போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இருந்தனர். (ஆகவே இதைச் செவியுற்ற ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள், “உம்மு சுலைமே! உனது வலக்கரம் மண்ணைத் தொடட்டும்? நீர் பெண்ணினத்தை அசிங்கப்படுத்திவிட்டீர்” என்றார்கள். (அதற்கு நபி ஸல்லல்hஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை(ப் பார்த்து) மாறாக உனது வலக்கரம் மண்ணைத் தொடட்டும், ஆம்! உம்மு சுலைமே! பெண் அதைக்கண்டால் அவள் குளித்துக் கொள்ளவும்” என்றார்கள்.

அறிவிப்பவர் : இஸ்ஹாக் பின் அபீ தல்ஹா ரளியல்லாஹு அன்ஹுமா

ஜனாபத்து கடமையான குளிப்புமுறை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 155

“நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஜனாபத்திலிருந்து குளிப்பதற்குரிய பாத்திரத்தை நெருக்கி (சமீபமாக்கி) வைத்தேன். தங்களது முன்கையை இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பிறகு தங்களது மர்மஸ்தானத்தின் மீது ஊற்றி அதை தங்களது இடது கையால் கழுவினர். அதன்பின் தங்களது இடதுகையை தரையில் அடித்து அக்கையை நன்கு தரையில் தேய்த்தார்கள். பிறகு தொழுகைக்கு ஒளு செய்வது போன்று ஒளு செய்தார்கள். பிறகு தங்களது தலையின் மீது முன்கை நிறைய (தண்ணீரை அள்ளி) மும்முறை ஊற்றினார்கள். அதன் பிறகு தங்களின் உடல் முழுவதையும் கழுவினார்கள். அதன்பின் நின்ற அந்த இடத்திலிருந்து நகர்ந்து தங்களது இரு கால்களையும் கழுவினார்கள். பிறகு (அவர்கள் துடைத்துக் கொள்ள) துண்டை அவர்களுக்காக நான் கொண்டு வந்தேன் அதை (வாங்க) மறுத்துவிட்டாhகள், என அறிவிப்பவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் மைமூனா ரளியல்லாஹு அன்ஹா ஆவார்கள்.

ஜனாபத்துக் குளியலுக்குரிய தண்ணீரின் (குறைந்த) அளவு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 156

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நானும் அவர்களது பால்குடி சகோதரரும் சென்றோம். (அப்போதவர்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஜனாபத்து (குளியல்முறை) பற்றிக் (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம்) கேட்டார்? ‘ஸாஉ‘ அளவிற்குரிய ஒரு பாத்திரத்தை கொண்டு வரச்சொல்லி, எங்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் திரை இருக்க குளித்தனர். தங்களது தலையின் மீது மும்முறை நீரை ஊற்றினர் எனக்கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியர்கள் (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்கு பிறகு) தங்களின் தலைகளிலிருந்து முடியை இரு காதுகளைத் தாண்டிவிடாத அளவிற்கு இருப்பது போன்று குறைத்துக் கொண்டனர் எனக்கூறுகிறார்.

அறிவிப்பவர் : அபூஸலாமா பின் அப்துர்ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு

குளிக்கக் கூடியவருக்கு துணியினால் மறைக்கச் செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண்: 157

(மக்கா) வெற்றி (பெற்ற) ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவின் மேல்பகுதியிலிருந்தபோது அவர்களிடம் உம்முஹானி பின்த் அபூதாலிப் ரளியல்லாஹு அன்ஹா வந்தனர். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குளிக்க நின்று விட்டனர். பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை (திரைகொண்டு) மறைத்துக் கொண்டனர் (குளிப்பை முடித்துக் கொண்டு) பிறகு தங்களது உடையை எடுத்து அதை (உடம்பில்) சுற்றிக் கொண்டு அதன்பின் ளுஹா (நஃபில்) தொழுகையை எட்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : உம்முஹானி பின்த் அபூதாலிப் ரளியல்லாஹு அன்ஹு

ஆண், பெண் (இரு சாராரின்) மறைக்கப்பட வேண்டியவற்றை பார்பது விலக்கப்பட்டதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 159

ஒரு ஆடவர் மற்ற ஆடவரின் மறைக்கப்பட வேண்டிய பகுதியை (மர்மஸ்தானத்தை)யும் ஒரு பெண் மற்ற பெண் மறைக்கப்பட வேண்டிய பகுதியை (மர்மஸ்தானத்தை)யும் நோட்டமிட (பார்க்க) வேண்டாம். ஒரு துணியில் (இடையில் மறைப்பின்றி) ஒரு ஆடவர் மற்ற ஆடவருடன் (தன் உடலைச்) சேர்க்க வேண்டாம். ஒரு பெண் மற்ற பெண்ணுடன் (இடையில் மறைப்பின்றி தன் உடலைச்) சேர்க்க வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீது அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு

மனிதன் ஆடையின்றி பார்க்கப்படாமலிருக்க உடலை மறைத்துக் கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 160

(கஃபாவை கட்டுவதற்காக) கற்களை சுமந்து கொண்டு வந்து சேர்ந்தவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், கஃபாவின்பால் கற்களை சுமந்து கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் ஆடைஅணிந்திருந்தனர். அப்போது அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், என் சகோதரரின் மகனாரே! உனது ஆடையை அவிழ்த்து கற்களுக்கு கீழ் அதை நீ ஆக்கிக் கொள்வாய் என அவர்களுக்கு கூறினார். (அதற்கினங்க) அவர்களது ஆடையை அவிழ்த்து தங்களது தோல் புஜங்களின் மீது ஆக்கிக் கொண்டனர். (அவ்வாறு செய்ததுமே) மயக்கமுற்ற நிலையில் விழுந்துவிட்டனர். அந்நாளைக்குப்பிறகு நிர்வாணமாக அவர்கள் காணப்படவில்லை எனக்கூறுகிறார்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்