Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 4


  ஈமான் பற்றிய நூல்

இஸ்லாம் என்றால் என்ன? என்பது பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் உள்ள பாடம்

ஹதீஸ் எண் : 61

“நஸ்த்” (மாகாண) வாசி ஒருவர் தலைவிரிகோலமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார். அவரது உரத்த சப்தத்தை (சப்தமிட்டு பேசுவதை) நாங்கள் செவியுற்றோம். (ஆனால்) அவர் என்ன கூறுகிறார் என்பது எங்களுக்கு (சரியாக) விளங்கவில்லை. (வந்தவர்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பக்கத்தில் நெருங்கி வந்து அப்போது இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இரவிலும் பகலிலும் ஐந்து தொழுகைகள் என்கிறார்கள் (அதைக்கேட்டுவிட்டு வந்தவர்) அதல்லாத மற்ற (கடமை) ஏதேனும் என்மீது உண்டா? எனக் கேட்டார். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உபரியாகச் செய்தாலே தவிர வேறு இல்லை” என்றனர். அடுத்து “ரமளான் மாத நோன்பு” என்றார்கள் ”அதல்லாது வேறு ஏதேனும் என்மீது உண்டா?” என (வந்திருந்தவர்) கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உபரியாகச் செய்தாலே தவிர வேறு இல்லை” என்றார்கள். அவருக்கு “ஐகாத்தைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.” அப்போது அதல்லாத ஏதேனும் என்மீது உண்டா? என (வந்திருந்தவர்) கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உபரியாகச் செய்தாலே தவிர வேறு இல்லை எனறார்கள்.” (அதைக்கேட்ட) அந்த மனிதர், அல்லாஹ்வின மீது சத்தியமாக இதைவிட அதிகமாக செய்யவும் மாட்டேன் அதிலிருந்து எதையும் குறைக்கவும் மாட்டேன் என சொல்லிக்கொண்டு திரும்பிச் சென்றார் (அதைக்கேட்ட) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர் உண்மையாகவே (இதை போன்றே) நடந்து கொண்டாரேயானால் வெற்றி பெற்று விட்டார் என்றார்கள்.

மற்றொரு அறிவிப்பில் அவரது தந்தையின் மீது சத்தியமாக அவர் உண்மையாக நடந்து கொண்டால் அவர் வெற்றி பெற்று விட்டார் எனவும் அல்லது அவரது தந்தையின் மீது சத்தியமாக அவர் உண்மையாக நடந்து கொண்டால் அவர் சுவனம் புகுந்து விட்டார் எனவும் உள்ளது.

குறிப்பு : பெற்றோர்களைக்கூறி சத்தியம் செய்வது விலக்கப்படாமலிருந்த காலத்தில் தந்தையின் மீது சத்தியமாக என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அவ்வாறு சத்தியம் செய்வது விலக்கப்பட்டுவிட்டதால் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தெளிவு.

அறிவிப்பவர்: தல்ஹாபின் உபைதுல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு

இஸ்லாம் ஐந்து அடிப்படைகள் மீது அமைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பாடம்

ஹதீஸ் எண் : 62

இஸ்லாம் ஐந்து மீது அமைக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் ஒருவன் என (உறுதி) கொண்டு தொழுகையை நிறைவேற்றி, ஜகாத்தும் கொடுத்து, நோன்பு (நோற்று)ம் ஹஜ்ஜும் (செய்ய) வேண்டும் என்ற ஐந்து அடிப்படைகள் மீது அமைக்கப்பட்டுள்ளது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் அப்போது ஒரு மனிதர், ஹஜ்ஜையும் ரமளான் நோன்பையுமா? எனக்கேட்டார். அதற்கவர்கள் இல்லை ரமளான் நோன்பும், இன்னும் ஹஜ்ஜும் என்றனர் இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதரிடம் நான் செவியுற்றேன் என இப்னு உமர் ரளியல்லாஹ் அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

எந்த இஸ்லாம் சிறந்தது என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 63

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எந்த இஸ்லாம் சிறந்தது? எனக் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவை உண்ணக் கொடுப்பாய் உனக்கு தெரிந்தவர் தெரியாதவர் (யாவருக்கும்) நீ ஸலாம் கூறுவாய் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு ரளியல்லாஹ் அன்ஹுமா

இஸ்லாம், ஹஜ்-ஹிஜ்ரத் ஆகிய(இ)வை அதற்கு முன்புள்ளவற்றை (பாவங்களை) அழித்து விடுகிறது என்பது பற்றி பாடம்

ஹதீஸ் எண் : 64

மரணத்தருவாயிலிருந்த அம்ருபின் அல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் ஆஜரானோம். அவர் நீண்ட நேரம் அழுதவாரக அவர் முகத்தை சுவற்றின்பால் திருப்பிக்கொண்டார். அதைக் கண்ட அவர் மகன். என் தந்தையே! இன்னதையெல்லாம் கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களுக்கு நற்செய்தி கூறவில்லையா? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இன்னதையெல்லாம் கொண்டு நன்மாறாயம் கூறவில்லையா? என அவரின் மகனார் கூற ஆரம்பித்தார். அதைக் கேட்ட அவர் தனது முகத்தை (எங்கள்பால்) திருப்பினார்.

நிச்சயமாக நாம் சேகரித்து வைத்திருப்பதில் மிகச்சிறந்தது வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை, நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார் என சாட்சி கூறுவதேயாகும். நிச்சயமாக நான் மூன்று நிலைகளில் இருந்தேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (விஷயத்தில்) மீது என்னைவிட கடும் கோபம் கொண்டவர் எவரும் இல்லை என்றும், எந்த விதத்திலாவது அவர்களிலிருந்து நான் சக்தி பெற்றுவிட்டால் (என் கையில் அகப்பட்டுக் கொண்டால்) நான் அவர்களைக் கொலை செய்து விடுவதும் எனக்கு மிக விருப்பமானதாக இருந்தது என்றும் என்னை நான் கண்டேன். அந்நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக நான் நரகவாசிகளில் இருந்திருப்பேன் கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ். இஸ்லாத்தை என் இதயத்திலாக்கிய பிறகு நான் நபி ஸல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து உங்களின் வலக்கரத்தை விரியுங்கள் நான் உங்களிடம் உடன் படிக்கை செய்து கொள்கிறேன் எனக்கூறினேன். அவர்கள் வலக்கரத்தை நீட்டியதும் என் கரத்தை இழுத்துக்கொண்டேன.; அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டார்கள். நான் நிபந்தனையிட விரும்புவதாக கூறினேன். என்ன நிபந்தனையிடப்போகிறாய்? எனக் கேட்டார்கள். எனது பாவம் பொறுக்கப்படவேண்டும் என்றேன்.

நிச்சயமாக இஸ்லாம்: அதற்கு முன்னுள்ளவற்றை(பாவங்களை)யும், ஹிஜ்ரத், அதற்கு முன்னுள்ளவற்றை(பாவங்களை)யும் ஹஜ் அதற்கு முன் உள்ளவற்றை (பாவங்களை)யும், அழித்துவிடுகிறது என உங்களுக்கு தெரியாதா? எனக் கேட்டார்கள். (அவ்வாறு அவர்கள் கூறியதுமே) அல்லாஹ்வின் தூதரைவிட எனக்கு விருப்பமானவர்களோ, அவர்களைவிட என்கண்ணில் மிகுந்த கண்ணியத்தை உடையவர்களாகவோ (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர) வேறொருவருமில்லை என என் நிலை ஆகிவிட்டது.

அதைப்பற்றி எவ்வாறு சொல்வதென்றால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட மிக விருப்பமானவர்களோ, அவர்களைவிட என் கண்ணில் மிகுந்த மகத்துவமுடையவர்களோ வேறு எவரும் இல்லை என ஆகிவிட்டது, அவர்களின் கண்ணியத்தை எனது இரு கண்களில் நிரப்பிக் கொள்ள நான் சக்தியற்றவனாக ஆகிவிட்டேன். அதை வர்ணணை செய்துகாட்ட என்னிடம் கூறப்பட்டால் எனக்கு அதை வர்ணிக்க சக்தியற்றவனாகி இருப்பேன் காரணம் அவர்கள் பற்றிய கண்ணியத்தை எனது இரு கண்களிலும் நிரப்பிக் கொள்ளவே என்னால் இயலவில்லை. அந்நிலையில் நான் இறப்பெய்திருந்தால் சுவனவாசிகளில் நான் ஆகியிருப்பேன் என உறுதியாக ஆதரவுவைக்கிறேன். (அதன்பிறகு) என்னைப் பல விஷயங்கள் தொடர்ந்தன. அவற்றில் என் நிலை என்னவென்று எனக்கே தெரியவில்லை. அந்நிலையில் (இஸ்லாத்தில்) நான் இறப்பெய்திருந்தால் எனக்காக ஒப்பாரியிட்டு அழுபவளோ நெருப்போ என்னுடன் இருந்திருக்காது.

ஆகவே, நான் இறப்பெய்திவிட்டால் என்னை நீங்கள் அடக்கம் செய்துவிட்டு மண்ணைப்போட்டு (மேடுகட்டாது) உதரிவிடுங்கள். அதன்பிறகு எனது கப்ரடியில் ஒரு ஒட்டகையை அறுத்து பங்கீடு செய்யுமளவு (நேரத்து)க்கு நில்லுங்கள் எனது ரட்சகனின் (மலக்கு)கள் (முன்கர், நகீர்) எதைக் கொண்டு திரும்புகிறார்கள் என்று நான் பார்க்கும் வரை (நான்) உங்களைக் கொண்டு அமைதி பெறுவேன்.

அறிவிப்பவர்: இப்னு ஷுமாசா அல்மஹஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : இந்த ஹதீஸின் மூலம் பல விஷயங்கள் நமக்கு தெளிவாகிறது.

1) இறக்கும் (மரண) தருவாயிலிருப்பவர்க்கு மன சாந்தியை (அமைதி) கிடைக்க, அவரது வாழ்நாளில் அவர் அல்லாஹ்விற்கு பொருத்தமாக செய்தவற்றையும், அந்த நல்ல காரியங்களுக்கு அல்லாஹ்விடம் கிடைக்க இருக்கும் மகத்தான கூலிகளையும் அவருக்கு நினைவுபடுத்துவது விரும்பத்தக்கது.

2) ஜனஸாவுடன் அடக்கஸ்தலம்வரை நெருப்புப்பந்தம் நெருப்புச்சட்டி ஆகியவற்றை எடுத்துச் செல்வது அறியாமை காலவழக்கமாகும் எனவே அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

3) ஓலமிட்டு அழுவதும் அறியாமை கால வழக்கமாகும் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

4. கப்ருக்கு அருகில் உட்காருவதும் தவிர்க்கப்படவேண்டும்.

5. கப்றில் முன்கர், நகீர் என்ற இரு மலக்குகள் மையத்திடம் கேள்வி கேட்பதால் நீண்ட நேரம்வரை நின்றவாறு அவர் நாக்குளராது அக்கேள்விகளுக்கு பதில் கூற அவருக்கு பிரார்த்தனை செய்யுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ள கூற்றுக்கொப்ப நீண்ட நேரம் நிற்குமாறு கூறுகிறார். ஆனால் வழக்கத்தில் உள்ளவாறு அடக்கஸ்தலத்தில் (மய்யவாடியில்) கூட்டு பிரார்த்தனைகள் எதுவும் இல்லையென்பதையும் இதன்மூலம் காண்கிறோம்.

இஸ்லாத்தில் (வந்தபிறகு) யார் அழகாக நடந்து கொண்டாரோ அவர் அறியாமை காலத்தில் செய்தவற்றைக் கொண்டு குற்றம் பிடிக்கமாட்டார் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் என் : 65

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அறியாமைக்காலத்தில் இஸ்லாத்திற்கு வருமுன் செய்த(தீய)வற்றைக் கொண்டு நாங்கள் தண்டிக்கப்படுவோமா? என சிலமனிதர்கள் கேட்டனர். அதற்கு இஸ்லாத்தில் யார் அழகுற இருந்தனரோ அவர் அறியாமைக்காலத்தில் செய்தவற்றைக் கொண்டு தண்டிக்கப்படமாட்டார் யார் தவறாக நடக்கிறாரோ அவர் அறியாமைக்காலத்திலும் இஸ்லாத்திலும், செய்தவைகளைக் கொண்டு தண்டிக்கப்படுவார் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 66

முஸ்லிமை ஏசுவது (திட்டுதல்) பாவமாகும். அவரைக் கொல்வது, இறை நிராகரிப்பாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு

உங்களில் எவர் இஸ்லாத்தில் அழகான(நன்மையான)வற்றைக் செய்தாரோ அவர் தான் செய்யக்கூடிய ஒவ்வொறு நன்மைக்கும் அதைப்போன்று பத்து நன்மைகள் எழுதப்படும் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 67

எனது அடியான் ஒரு நன்மையை செய்வதாக் கூறினால் (மனதில் நினைத்தால்) செய்யாதவரை அவனுக்காக ஒரு நன்மையை எழுதிவிடுகிறேன் அவன் அக்காரியத்தைச்செய்து விடுவானேயானால் அதை அதைப்போன்றே பத்து நன்மைகளாக எழுதிகிறேன். அவன் ஒரு தீயதை செய்வதாக கூறினால் (மனதில் நினைத்தால்) அவன் அதை செய்யாதவரை அவனை நான் மன்னித்துவிடுகிறேன். அவன் அ(த்தீய)தை செய்துவிட்டால் அவனுக்கு அதைப்போன்றதாகவே (ஒரு தீமைக்கு ஒரு தீமை) எழுதுகிறேன் என மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ் கூறுகிறான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 68

எனது சமூகத்தவர்கள் தங்களது மனங்களில் நினைத்தவை(தீமை)களைப் பற்றிப் பேசாமலும், அல்லது செயல்படுத்தாமலும் இருக்கும்வரை அல்லாஹ் (குற்றம் பிடிக்காமல்)விட்டுவிடுகிறான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

முஸ்லிம்கள் யாரி(ன் தீமையி)லிருந்து அமைதியும் ஈடேற்றமும் பெற்றுவிட்டார்களோ அவர்தான் முஸ்லிம் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 69

ஒரு மனிதர் அல்லஹ்வின் தூதரிடம் முஸ்லிம்களில் மிகச்சிறந்தவர் யார்? எனக்கேட்டார் அதற்கு பிற முஸ்லிம்கள் எவரின் நாவு, கரம், ஆகியவற்றின் தீமையிலிருந்து பாதுகாப்பு பெற்றார்களோ, அவர்தான் (சிறந்த) முஸ்லிம் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

குறிப்பு: தனது கையினாலும், நாவினாலும் பிறருக்கு தீங்கிழைக்காதவரே சிறந்த முஸ்லிமாவார் என்பதே இதன் கருத்தாகும்.-

ஓருவர் அறியாமைக் காலத்தில் நன்மையானவற்றைச் செய்து அதன் பிறகு இஸ்லாமாகி விடுகிறார் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 70

தர்மம் செய்தல், உரிமைவிடுதல், சுற்றத்தாரை சேர்த்து நடத்தல் ஆகிய பல வணக்கங்களை, அறியாமைக் காலத்தில் நான் செய்துவந்துள்ளேன். அவைகளுக்கு நற்கூலி உண்டா என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஹக்கீம் பின் ஹிஜாம் கேட்டதற்கு, நன்மையான காரியங்களில் இஸ்லாத்திற்கு முன்பு எவைகளை செய்துள்ளீரோ, அத்துடன் இஸ்லாத்தை ஏற்றுள்ளீர் என அவருக்கு கூறினார்கள் இச்சம்பவத்தை நிச்சயமாக ஹக்கீம் பின் ஹிஜாம் என்பவர் உர்வாவிற்கு அறிவித்ததாக, உர்வா அறிவிக்கிறார்.

கருத்து : இரண்டு நிலையிலும் செய்த நன்மைகளுக்கு நற்கூலி உண்டு என்பதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவு செய்தார்கள்.

சோதனையிலிருந்து எச்சரிக்கை என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 71

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் இஸ்லாத்தைச் சொன்ன(ஏற்றுக் கொண்ட)வர்கள் எத்தனைபேர்? என்பதைக் கணக்கிடுங்கள் என்றனர்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! எங்களைப் பற்றிப் பயப்படுகிறீர்களா? நாங்கள் ஆறுநூறிலிருந்து எழுநூறுவரை இருப்போம் எனக் கூறினோம்.

நிச்சயமாக நீங்கள் சோதனைக்குள்ளாக்கப்படலாம் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள் என (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) கூறினார்கள்.

எங்களில் ஒவ்வொருவரும் தனித்தனியே நின்று மறைவாகத் தொழுகின்ற நிலைவரை நாங்கள் (அல்லாஹ்வின்) சோதனைக்குள்ளாக்கப்பட்டு விட்டோம்.

அறிவிப்பவர்: ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு

இறையறிவிப்பின் நிமித்தம் எதைக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு துவக்கப் பட்டதோ அது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 73

வஹீயின் நிமித்தம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எதைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதோ அது தூக்கத்தில் வரும் உண்மையான கனவாக இருந்தது. அது நிஜவாழ்க்கையில் காலைபொழுது (வருவது எவ்வளவு உறுதியோ அது) போன்று நடந்தேறிய தவிர எந்தக்கனவையும் அவர்கள் காண்பதில்லை. அதன்பிறகு தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாக்கப்பட்டது. ஆகவே ஹிராகுகையில் தனித்திருந்து வழிபாடு செய்து வந்தனர். தன் குடும்பத்தினர்பால் திரும்புமுன் எண்ணிக்கையுள்ள பல இரவுகளை வணக்க வழிபாட்டில் கழித்து வந்தனர். அதற்காக தங்களை தயார் செய்து கொள்ளக்கூடியவர்களாக இருந்தனர். அதன்பிறகு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்பால் திரும்பி வந்து அதுபோன்ற (பலநாட்களுக்குரிய) உணவை தயார் செய்து கொள்வர். ஹிராகுகையில் (இவ்வாறாக) இருந்து வந்த போது திடீரென(ஒரு நாள்) இறையறிவிப்பு வந்துவிட்டது (அதன்காரணமாக) அவரிடம் அமரர்(மலக்கு) வந்து ஓதுவீராக! எனக்கூறினார். அதற்கு நபி தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நான் ஓதக்கூடியவன் அல்லன்! என்றனர். (ஆகவே) அவர் (மலக்கு) என்னைப்பிடித்து எனக்குசிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகிற அளவிற்கு என்னை இறுகக்கட்டித்தழுவி தம்மோடு அணைத்துப்பிறகு விடுவித்து விட்டு ஓதுவீராக! என்றனர். நான் ஓதக்கூடியவன் அல்லன்! என்று நான் கூறினேன். (அதன்பிறகு) அவ(அமர)ர் இரண்டாம் முறையாக என்னைப்பிடித்து எனக்குசிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகிற அளவிற்கு என்னை இறுகக்கட்டித்தழுவி தம்மோடு அணைத்துப்பிறகு விடுவித்து விட்டு ஓதுவீராக! என்றனர். அதற்கு நான் ஓதக்கூடியவன் அல்லன்! எனக்கூறினேன் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதன்பிறகு மூன்றாம் முறையாக என்னைப்பிடித்து எனக்குசிரமம் ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகிற அளவிற்கு என்னை இறுகக்கட்டித்தழுவி தம்மோடு அணைத்துப்பிறகு விடுவித்து விட்டு

“படைத்தவனாகிய உமது இரட்சகனின் பெயர் கொண்டு ஓதுவீராக! (அவன்) மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான். மிகுந்த கண்ணியம் வாய்ந்தவன் உமது இரட்சகன் (என) ஓதுவீராக! அவனே எழுதுகோலின் மூலம் கற்றுத் தந்தான் அவனே (மனிதனுக்கு) அவனுக்கு தெரியாதவற்றையெல்லாம் கற்றுத் தந்தான்” என்று அவர் கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இறை அறிவிப்பாகிய) அதைப்பெற்றுக்கொண்டு அவர்களது தோல்புஜங்களுக்கும் கழுத்துக்கும் இடையில் உள்ள சதைப்பகுதி நடுங்க, அங்கிருந்த திரும்பி கதீஜா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களது (வீட்டில்) வந்து நுழைந்தனர். (நுழைந்த அவர்கள்) என்னைப் போர்த்துங்கள்! என்னைப் போர்த்துங்கள்! எனக்கூறினர். நடுக்கம் நீங்குகின்ற வரையில் (கதீஜா ரளியல்லாஹ் அன்ஹா) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு போர்த்தினர். அதன்பிறகு கதீஜா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களைப்பார்த்து கதீஜாவே! எனக்கு என்ன நேர்ந்தது? எனக்கூறிவிட்டு அவர்களுக்கு (நடந்த) செய்தியை தெரிவித்துவிட்டு “நான் நிச்சயமாக என்னைப்பற்றியே பயந்து விட்டேன்” என்றனர் அதைக்கேட்ட கதீஜா ரளியல்லாஹ் அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பார்த்து (விஷயம்) அவ்வாறல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான். நிச்சயமாக நீங்கள் ரத்த சொந்தத்தை சேர்த்து (அரவணைத்துக்) கொள்கீறீர்கள்! செய்தியில் உண்மையே பேசுகிறீர்கள்! (அனாதைகள், விருந்தினர், குடும்பத்தார் ஆகியோர்க்கு பொறுப்பேற்று அவர்களுக்காக செலவு செய்து, அவர்களது) சுமையைதாங்கிக் கொள்கிறீர்கள். மற்றவர்களால் இயலாத அளவுக்கு பெரும் பொருளை ஈட்டி (அவற்றை நன்மையானவற்றில் மனிதர்களுக்காக) செலவு செய்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். உண்மையான கஷ்டத்திலிருப்பவருக்கு உதவியும் செய்கிறீர்கள். எனக்கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்துக் கொண்டு வராகபின் நவ்பல்பின் அஸத் பின் அப்துல் உஜ்ஜாவிடம் வருகின்றனர்.

(வரகா எனக்கூறப்படும்) இவர் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது தந்தையின் உடன் பிறந்த சகோதரரின் மகனாவார். அவர் அறியாமை காலத்தில் கிறிஸ்தவராக இருந்தார். அரபியில் நூல் எழுதும் திறமை மிக்கவராக இருந்தார். உயர்வான அல்லாஹ் அவர் எந்த அளவு எழுத வேண்டுமென நாடியிருந்தானோ, அந்த அளவு அரபி மொழியில் இன்ஜீலை எழுதினார். அவர் அப்போது வயது முதிர்ந்தவராகவும், கண்பார்வையிழந்தவராகவும் இருந்தார்.

இவரிடம் வந்தடைந்த கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், எனது மரியாதைக்குரியவரே! உமது சகோதரரின் மகனிடமிருந்து (அவர் கூறுவதைக்) கேட்பீராக! என்றனர். அதற்கவர் என் சகோதரரின் மகனாரே! என்ன கண்டிர்? எனக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதைக்கண்டார்களோ? அதை அவருக்கு தெரிவித்தனர். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து, உங்களுக்கு (இறையறிவிப்பைக் கொண்டு) வந்த, இந்த ஜிப்ரில் தான் மூஸாபின் இம்ரான் அவர்களுக்காக (வானத்திலிருந்து அறிவிப்பைக் கொண்டு) இறக்கப்பட்டவர். (அந்த நபித்துவத்தை மக்களுக்கு நீங்கள் பிரச்சாரம் செய்யும் காலத்தில்) அப்போது நான் முறுக்கான வாலிபனாக இருக்க வேண்டுமே! உமது சமூகத்தவர் உம்மை (பிறந்த மண்ணிலிருந்து) வெளியேற்றுகின்ற போது நான் உயிரோடு இருக்க வேண்டுமே எனக் கூறினார். (இதைக்கேட்ட) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

“அவர்கள் என்னை (ஊரைவிட்டு) வெளியேற்றி விடுவார்களா?” எனக்கேட்க, வரகா அவர்கள் ஆம்! நீங்கள் கொண்டு வந்ததை எந்த மனிதரும் கொண்டுவரவில்லை: அவர் பகைக்கப்பட்டே தவிர!. உம்முடைய (அந்த) நாள் என்னை அடைந்துவிட்டால் (நான் அதுவரை உயிரோடு இருப்பின்) மிகக் கடுமையான உதவியாக உங்களுக்கு நான் உதவுவேன்!, எனக் கூறினார்.

இந்தச் செய்தியை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் அன்னை ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்கள் அறிவித்ததாக உர்வாபின் ஜுபைர் அவர்கள் அறிவித்தார்கள்.

ஒரு முக்கிய குறிப்பு:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்துவம் கிடைக்கும் முன்பு ஹிராமலையின் குகையினுள் சென்று தனித்திருந்து சிந்தித்தனர், என்பது மிகச்சரியான உண்மை. ஆனால் நபித்துவம் கிடைத்தபின் மக்களை விட்டுப் பிரிந்து எந்த மலையின் குகைக்கோ, அல்லது தனிப்பட்ட இடத்திற்கோ சென்று பல நாட்கள் அல்லது பல இரவுகள் இருந்துவிட்டதாக எவ்வித ஆதாரமும் இல்லை. உண்மை நிலைமை இவ்வாறு இருக்க: அல்லாஹ் இருபத்து மூன்று வருட காலம் இப்புனிதமான மார்க்கத்தின் அனைத்து விஷயங்களையும் அவர்கள் மூலம், சொல்லாக, செயலாக, சம்மதமாகத்தான் அல்லாஹ் கற்றுத்தந்தான். ஆனால் நபித்துவத்திற்குப்பிறகு எந்த மலையையும் எந்த குகையையும் தேடி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செல்லவில்லை என்பதை மிகத் தெளிவாக நாம் விளங்கிகொள்ள வேண்டும்.

ஹதீஸ் எண் : 74

அபூஸலமாவிடம், “முதலாவது இறக்கி வைக்கப்பட்ட குர்ஆன் (வசனம்) எது?” என நான் (அறிவிப்பாளர்) கேட்டேன். அதற்கவர் யா அய்யுஹல் முத்தஸ்ஸிர் எனக் கூறினார். நான் “இக்ரஉ” இல்லையா? எனக் கேட்டேன்.

அதற்கவர், ‘நான் (அபூஸலமா) ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுவிடம் முதலாவது இறக்கி வைக்கப்பட்ட குர்ஆன் (வசனம்) எது?’ எனக் கேட்டேன். “யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்” எனக் கூறினார். நான் “இக்ரஉ” அல்லவா? எனக் கேட்டேன். அதற்கு ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு எதை அறிவித்தார்களோ, அதை உங்களுக்கு நான் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு;

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “நான் ஹிரா(க் குகையில்)வில் ஒரு மாதமிருந்தேன். எனது இருக்கையை முடித்துக்கொண்டு இறங்கி பள்ளத்தாக்கின் நடுப்பகுதியில் நடந்தேன். அப்போது நான் அழைக்கப்பட்டேன். (அதனால்) எனக்கு முன்னும், எனக்கு பின்னும், என் வலப்புறமும், என் இடப்புறமும் நோட்டமிட்டேன். ஒருவரையும் காணவில்லை. அதன்பிறகும் நான் அழைக்கப்பட்டேன். ஒருவரையும் காணவில்லை. அதன்பிறகும் நான் அழைக்கப்பட்டேன். (அதனால்) என் தலையை நான் உயத்தினேன். அப்போது அவர் அதாவது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காற்றில் ஒரு சிம்மாசனத்தின் மீது இருந்தார். (அதிலிருந்து) எனக்கு கடுமையான நடுக்கம் பிடித்துக் கொண்டது. (அதன் காரணமாக) கதீஜா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களிடம் வந்து எனக்கு போர்த்துங்கள்! என்றேன். என்மீது தண்ணீரையும் ஊற்றினார்கள். அப்போதுதான் “போர்வை போர்த்திக்கொண்டிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உமது இரட்சகனை (அவனது திருநாமத்தை) உயர்த்துவீராக! உமது உடையைச் சுத்தப்படுத்திக் கொள்வீராக! அசுத்த (விக்கிர)ங்களை வெறுப்பீராக! ” என்ற வசனத்தை அல்லாஹ் இறக்கி வைத்தான், எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: எஹ்யா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு: முதன்முதலாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு “ஹிரா” குகையில் “இக்ரஉ” என்பதுதான் இறை அறிவிப்பாக வந்தது. அதன்பிறகு சில நாட்கள் வரை வஹீ வரவில்லை. அது எவ்வளவு காலம் என்பது பற்றி அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உண்டு. அதன்பின்னர் தான் ஒருநாள் மேற்கூறப்பட்ட சம்பவத்தொடரில் “யா அய்யுஹல் முத்தஸ்ஸிர் ” என்ற வசனத்தொடர் இறங்கியது. வஹீ வருவது சில நாட்கள் நின்று அதன்பிறகு தொடங்கிய வாசகம், “ யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்” என விளங்கிக் கொள்ளவேண்டும். இதற்கு மாறாக இறை அறிவிப்பின் தொடக்கமே “யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்” தான் எனக் கூறுவதும், “அல்ஃபாத்திஹா” அத்தியாயம் எனக் கூறுவதும் ஆதரமற்றதாகும் என இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்.

வஹி அதிகமாக, அது தொடர்ந்து வந்தது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 75

நிச்சயமாக எல்லாவற்றையும் மிகைத்தவனும், மகத்துவத்திற்கு உரியவனுமாகிய அல்லாஹ் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறப்பெய்துவதற்கு முன்பும் இறப்பெய்தும் வரையும் வஹீயைத் தொடரச் செய்தான். என்றைய தினம் இறப்பெய்தினார்களோ? அன்று தான் வஹீ மிக அதிகமாக இருந்தது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இரவின் ஒரு பகுதியில் வானங்களின் பால் அழைத்துச்செல்லப்பட்டது பற்றியும் தொழுகைகள் கடமையாக்கப்பட்டது ” பற்றியுமுள்ள பாடம்.

ஹதீஸ் எண் : 76

“புராக்”1 எனக்காக கொண்டுவரப்பட்டது. (“புராக்” என்பது) வெண்மையானதாகவும், கழுதையைவிட பெரியதாக - நீண்டதாகவும், கோவேறு கழுதையைவிட சிறியதாகவும் உள்ள ஒரு பிராணியாகும். அதன் (மறு) ஓரம் முடிவடைகின்ற இடத்தில் அதன் பாதத்தை வைக்கும். அதன்மீது நான் ஏறி (அமர்ந்து) பைத்துல் முகத்தஸை வந்தடைந்தேன். நபிமார்கள் தங்கள் வாகனங்களை எந்த வளையத்தில் கட்டுவார்களோ அந்த வளையத்தில் கட்டினேன். அதன்பின்னர் அப்பள்ளியினுள் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுது விட்டு வெளியேறினேன். அப்போது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மதுவை ஒரு பாத்திரத்திலும் பாலை ஒரு பாத்திரத்திலும் என்னிடம் கொண்டு வந்தனர். நான் பாலை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் இயற்கையை 2தேர்ந்தெடுத்தீர் எனக் கூறினார்கள். பிறகு நம்மை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்தின் பால் உயர்த்தினார். வானத்தை அடைந்த அவர் (கதவை) திறக்குமாறு கூறினார். அப்போது “நீ யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனக் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக வாசல் திறக்கப்பட்டது. அப்போது நான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். என்னை (ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ) வரவேற்று எனக்காக நல்லவைகளுக்காக பிராத்தித்தனர்.

அதன்பிறகு எங்களை இரண்டாவது வானத்தின் பால் அவர் உயர்த்தினார். ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் திறக்குமாறு வேண்டினார். “நீ யார்? ” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனக் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக வாசல் திறக்கப்பட்டது. அப்போது நான் சிறிய தாய்வழி மக்களாகிய ஈசாபின் மரியம், யஹ்யாபின் ஜக்கரியா அவர்களுடன் இருக்கிறேன். அவ்விருவரும் என்னை வரவேற்று எனது நன்மைக்காக பிராத்தித்தனர்.

அதன் பிறகு எங்களை மூன்றாவது வானத்தின் பால் உயர்த்தினார். ஜிப்ரீல் திறக்குமாறு கேட்டார்கள். “நீர் யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனவும் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். “அவர்களின் பால் அழைப்பு (அனுமதி) அனுப்பப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவருக்கு அனுமதி அனுப்பப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அப்போது நான் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். உலகத்தவர்களுக்கெல்லாம் கொடுக்கப்பட்ட அழகில் சரிபாதியை கொடுக்கப்பட்டவராக இருந்தார். எனக்கு வரவேற்பு கூறி எனக்காக-சிறந்தவைகளுக்காக-பிராத்தித்தனர்.

அதன்பிறகு நம்மை நான்காவது வானத்தின் பால் அவர் (ஜிப்ரீல்) உயர்த்தினார். ஜிப்ரீல் திறக்குமாறு கூறினார். “நீ யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனவும் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். அவர்களின் பால் அழைப்பு (அனுமதி) அனுப்பப்பட்டதா? எனக் கேட்கப்பட்டது. “அவருக்கு அனுமதி அனுப்பபட்டது என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக கதவு திறக்கப்பட்டது. அப்போது நான் இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். அவர்கள் என்னை வரவேற்று எனக்காக-சிறந்தவைகளுக்காக-பிராத்தித்தனர். வல்ல அல்லாஹ் “உயர்வான ஸ்தானத்திற்கு அவரை (இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை) உயர்த்தி இருக்கின்றோம்” எனக் கூறினாhன்.

நம்மை ஐந்தாவது வானத்தின் பால் உயர்த்தினார். ஜிப்ரீல் திறக்குமாறு கூறினார். அப்போது “நீ யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் இருப்பவர் யார்?” எனக் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவர்களையும் இங்கு அழைத்துவர அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக வாசல் திறக்கப்பட்டது. அப்போது நான் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். அவர்கள் என்னை வரவேற்று எனக்காக சிறந்தவைகளுக்காக பிராத்தித்தனர்.

அதன்பிறகு ஆறாவது வானத்தின் பால் நம்மை உயர்த்தினார். ஜிப்ரீல் திறக்குமாறு கூறினார். அப்போது “இவர் யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “உம்முடன் யார்?” எனக் கேட்கப்பட்டது. “முஹம்மது” என்றார். “அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக வாசல் திறக்கப்பட்டது. அப்போது நான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். எனக்கு வரவேற்பு கூறி நன்மைக்காக பிராத்தனை செய்தார்கள்.

அதன்பிறகு ஏழாவது வானத்தின் பால் அவர் எங்களை உயர்த்தினார். ஜிப்ரீல் திறக்குமாறு கூறினார். அப்போது “நீ யார்?” எனக் கேட்கப்பட்டது, “ஜிப்ரீல்” என்றார். “இவர் யார்?” எனக் கேட்கப்பட்டது. “முஹம்மது” எனக் கூறினார். “அவருக்காக அழைப்பு(அனுமதி) அனுப்பப்பட்டதா?” எனக் கேட்கப்பட்டது. “அவருக்கு அழைப்பு(அனுமதி) வழங்கப்பட்டது” என (ஜிப்ரீல்) கூறினார். எங்களுக்காக வாசல் திறக்கப்பட்டது. அப்போது நான் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருக்கிறேன். பைத்துல் 3மஃமூரின் பால் அவர்கள் முதுகை சாய்த்தவர்களாக இருக்கிறார்கள். அப்போது அந்த வீட்டினுள் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்கு (அமரர்கள்) நுழைகிறார்கள். அதன்பால் ஒரு தடவை நுழைந்தவர் மீண்டும் நுழைவதில்லை. ( அவர்கள் திரும்புவதில்லை). பிறகு சித்தரத்துல் 4முன்(த்)தஹா வின்பால் என்னை கொண்டு சென்றார். அப்போது அதன் இலைகள் யானையின் காதுகளை போல் இருந்தது. அதன் பழங்கள் பெரிய பானைகள் போன்று இருந்தன. அல்லாஹ்வின் கட்டளையின் நிமித்தம் அதைச் சூழ வேண்டியது சூழ்ந்து கொண்டபொழுது அது மாறிவிட்டது. அதன் அழகைப்பற்றி அல்லாஹ்வின் படைப்புகளில் யாரும் வர்ணித்து சொல்ல சக்தி பெற மாட்டார்.

என்பால் எதை அறிவிக்க வேண்டுமோ அதை அல்லாஹ் அறிவித்தான். ஒவ்வொரு இரவிலும், பகலிலும் ஐம்பது தொழுகைகளை என்மீது அவன் கடமையாக்கினான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பால் நான் இறங்கினேன் “உமது உம்மத்தினர் மீது உமது இரட்சகன் எதைக் கடமையாக்கினான்?” எனக் கேட்டார்கள். (ஒவ்வொரு இரவுபகலுக்கும்) ஜம்பது தொழுகைகள் என்றேன் (அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்) “உமது இரட்சகனின் பால் திரும்பிச் சென்று குறைக்குமாறு கேட்பீராக!. நிச்சயமாக உமது உம்மத்தவர் அதற்கு சக்தி பெறமாட்டார்கள். காரணம் நிச்சயமாக நான் இஸ்ரவேலர்களின் மக்களை சோதித்தேன். அதில் நான் தோல்வியடைந்தேன்” எனக் கூறினார்கள். எனது இரட்சகன்பால் திரும்பி எனது இரட்சகா! எனது உம்மத்தவர்களுக்காக குறைப்பாயாக! எனக் கூறினேன். எனக்கு ஐந்தைக் குறைத்தான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பால் திரும்பி “எனக்கு ஐந்து குறைக்கப்பட்டது” என்றேன். “நிச்சயமாக உமது உம்மத்தவர் அதற்கு சக்தி பெறமாட்டார்கள்” எனக் கூறி “உமது இரட்சகனின் பால் திரும்பிச் சென்று குறைக்குமாறு கேளுங்கள்” என்றார்.

உயர்வான அபிவிருத்திகளை நல்கும் எனது இறைவனுக்கும், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் மத்தியில் திரும்ப திரும்பச் சென்றேன். இறுதியாக அவன் (மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்) முஹம்மதே! நிச்சயமாக ஒவ்வொறு பகலிலும், இரவிலும் ஐந்து தொழுகைகள் ஆகும். ஓவ்வொறு தொழுகைக்கும் பத்து உண்டு அதுதான் ஐம்பது. யாராவது ஒரு நன்மையை(நன்மையான காரியத்தை) எண்ணி, அதை செய்யாவிட்டாலும் கூட அதற்காக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படும். அதை அவர் செய்துவிட்டால் அதற்காக அவருக்கு பத்து (நன்மைகள்) எழுதப்படும். ஒருவர் ஒரு தீமையை நாடி (பின்னர்) அதை செய்யாமல் விட்டுவிட்டால் அவர்மீது எதையும் எழுதப்பட மாட்டாது. அவர் அதை (அத்தீமையை) செய்து விட்டால் ஒரு தீமை மட்டுமே எழுதப்படும் எனக் கூறினான். அதைப்பெற்று மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இறங்கினேன். அவர்களிடம் விஷயத்தை கூறினேன். அதற்கவர், “மீண்டும் உங்கள் இரட்சகனிடத்தில் சென்று குறைக்க கேளுங்கள்” என்றார்கள். “எனது இரட்சகனிடத்தில் வெட்கப்படும் அளவுக்கு நான் திரும்பிவிட்டேன்” என்பதாக அவரிடம் கூறினேன் என்பதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு :

1. “புராக்” என்னும் சொல் “பர்க்” என்பதிலிருந்து ஈண்டு எடுக்கப்பட்டதாகும். பர்க் என்றால் மின்னல் என்பது பொருளாகும். இவ்வாகனம் மின்னல் போன்று மிகத் துரிதமாக பாய்ந்து செல்லக்கூடிய நிலையை அல்லாஹ் அதற்கு நல்கி இருந்தான். மக்கள் மத்தியில் படம் பிடித்து வைக்கப்பட்டுள்ளதைப் போன்றதல்ல.

2. இஸ்லாமிய மார்க்கத்தையும், அதன்மீது நிலைத்து இருப்பதையும் என்ற கருத்தே “ஃபித்ரத்” இயற்கை என்பதற்குரியதாகும். ஷரஹ்நவவீ பாகம் 2, பக்கம் 212

3. பைத்துல் மஃமூர்: ஏழாவது வானத்தில் பூமியில் உள்ள திருக்கஃபாவை போன்ற ஒரு வீடு உள்ளது. அதன் பெயர் “பைத்துல் மஃமூர்” ஆகும்.

4. சித்ரத்துல் முன்(த்)தஹா சித்ரத் என்பதற்கு இலந்தை மரம் என்பது பொருளாகும். முன்(த்)தஹா என்பதற்கு கடைசி எல்லை - முடிவு - என்பது பொருளாகும்.

நபிமார்கள் அலைஹிமுஸ்ஸலாம் அவர்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது பற்றி பாடம்

ஹதீஸ் எண் : 77

“மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு பள்ளத்தாக்கிற்கு அருகாமையில் நடந்து கொண்டிருந்தோம். “இது என்ன பள்ளத்தாக்கு?” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். நீல நிறப்(அஜ்ரக்) பள்ளத்தாக்கு என நாங்கள்(ஸஹாபாக்கள்) கூறினோம். அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் நிறம், அவர்களின் முடியைப்பற்றிக் கூறினார்கள். (தாவூத் என்ற ஹதீஸ் அறிவிப்பவர் அதை மனனம் செய்யவில்லை) அல்லாஹ்வின் பால் “தல்பிய்யா” கூறுவதனால் உயர்ந்த சத்தம் உடையவர்களாகவும், அவரது இரு விரல்களை தனது காதில் வைத்தவராகவும் இந்த பள்ளத்தாக்கில் நடப்பவராக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நிச்சயமாக நான் உற்று நோக்குபவனை போன்று இருக்கிறேன். எனக் கூறினார்கள்.

அதன் பிறகு ஒரு கீழப்பகுதிக்கு வந்தோம். இது எந்த கீழ்ப்பகுதி என (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கேட்க ஹர்ஷா என்ற ( மதீனாவுக்கும், ஷாம் நாட்டுக்கும் இடையிலுள்ள) ஒரு மலைப்பகுதி என்றோம். அல்லது “லஃப்து” என்றோம்.

யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை, சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது அமர்ந்தவர்களாக கம்பளி ஜிப்பா அவர்கள் மீ(தனிந்)திருக்க, அவர்களின் ஒட்டகக்கயிறு ஈச்சம்பாளை நார் கொண்டு தயாரிக்கப்பட்டதாக இருக்க, அது தொய்வாக விடப்பட்ட நிலையில், இந்தப் பள்ளத்தாக்கில் “தல்பிய்யா” கூறியவர்களாக நடந்து கொண்டிருக்க, நான் உற்றுநோக்குபவனை போன்று இருக்கிறேன் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு, அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

ஹதீஸ் எண் : 78

எந்த இரவில் என்னை (மிஃராஜுக்கு) அழைத்துச்செல்லப்பட்டதோ அந்த இரவில் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நான் சந்தித்தேன். உடலில் சதைப்பற்று அதிகமில்லாத நீண்ட மனிதராக, தலைவாரியவர்களாக, ‘ஷனூஆ’ (அழுக்குகளை விட்டும் தூய்மையானவர்) கூட்டத்தைச் சார்ந்த ஆடவர்களில் உள்ளவர்களைப் போன்று இருந்தனர். என்பதாக வர்ணித்து காட்டினார்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சந்தித்தேன் ‘உயரமோ, குள்ளமோ இல்லாத சராசரி உயரத்தைக் கொண்ட உருவத்தை உடையவராக, குளித்துவிட்டு குளியல் அறையிலிருந்து வெளியேறுபவரைப் போன்றிருந்தார்’ என அவர்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வர்ணித்துக் கூறினார்கள்.

“இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நான் கண்டேன். நான்தான் அவர்களது மக்களில் அவர்களுக்கு மிக ஒப்பானவனாக இருக்கிறேன்” எனக் கூறினார்கள்.

இரு பாத்திரங்களை எனக்காக கொடுக்கப் பெற்றேன். அதில் ஒன்றில் பால் இருந்தது. மற்றொன்றில் மது இருந்தது. இரண்டில் எதை விரும்புகிறீரோ? அதை எடுத்துக் கொள்வீராக! என எனக்குக் கூறப்பட்டது. பாலை எடுத்து நான் குடித்து விட்டேன். “இயற்கைக்கு (மார்க்கத்திற்கு) வழி காட்டப்பட்டீர்! அல்லது இயற்கையை (மார்கத்தை) எடுத்து கொண்டுவிட்டீர்” என அவர் (ஜிப்ரீல்) கூறினார். “நிச்சயமாக நீங்கள் மதுவை எடுத்திருந்தால் உமது உம்மத்தவர்கள் வழி கெட்டிருப்பர். எனத் தெரிந்து கொள்வீராக” எனவும் (ஜிப்ரீல்) கூறினார்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் தஜ்ஜாலையும் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய பாடம்.

ஹதீஸ் எண் : 79

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ஒரு நாள் மக்களுக்கு மத்தியில் மஸீஹுத்தஜ்ஜாலை பற்றி நினைவுபடுத்திக் கொண்டிருந்தனர். நிச்சயமாக அபிவிருத்திகளை நல்கும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணையுடையவனல்லன் எனக் கூறினார்கள். மஸீஹுத்தஜ்ஜால் வலக்கண் குருடன். 1நிச்சயமாக அவனுக்கு கண் துருத்திக் கொண்டு இருக்கும். திராட்சையைப் போன்றிருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கடந்த இரவு (அல்லாஹ்) கஃபாவில், கனவில் எனக்கு காட்டினான். அப்போது மிகவும் சிகப்பில்லாத மாநிறத்தையுடைய நீங்கள் பார்க்க கூடிய மனிதர்களின் நிறத்தில் மிக அழகான நிறத்தையுடைய ஒரு மனிதர், அவரின் முடி அவரது இரு தோள் புஜங்களுக்கிடையில் இருக்க, தலைவாரியவாறு, அவர் தலையிலிருந்து தண்ணிர் சொட்டிய நிலையில், அவரது இரு கைகளையும் இரு மனிதர்களின் தோள் புஜங்களின் மீது வைத்தவராக, அவ்விருவருக்கு மத்தியில் அவர் இருக்க, அல்லாஹ்வின் வீட்டை தவாஃப் செய்யக்கூடியவராக இருந்தார். “இவர் யார்? ” எனக் கேட்டேன். இவர்தான் “மர்யமுடைய மகன் மஸீஹ்’ என எனக்கு கூறினர்.

“வலதுகண் இல்லாத ஒற்றைக்கண்ணை உடையவனாக2 இருக்க வலிமைமிகுந்த உடல் கட்டுடைய, ஒரு மனிதனை அவர்களுக்கு அப்பால் பார்த்தேன். நான் பார்த்த மனிதர்களில் இப்னு க(த்)தன் என்ற மனிதரை போன்று இருந்தார். அவன் தனது இரு கைகளையும் இரு மனிதர்களின் தோள் புஜங்களின் மீது வைத்தவாறு, (அல்லாஹ்வின்) வீட்டை தவாஃப் செய்து செய்து கொண்டிருக்க நான் கண்டு விட்டு “இவர் யார்? ” எனக் கேட்டேன். இவன்தான் “அல்மஸீஹுத்தஜ்ஜால்” என கூறினர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு

குறிப்பு: 1, 2 கோணல் கண் உடையவனான, அவனது ஒரு கண் மறைக்கப்பட்டிருக்கும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நபிமார்களுக்கெல்லாம் இமாமாக இருந்து தொழுகை நடத்தியது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 80

நான் ஹிஜ்ரில் (கஃபாவில் உள்ள ஹஜர் இஸ்மாயில் என்ற இடத்தில்) என்னை நான் கண்டவனாக இருந்தேன் குறைஷியர் என் இரவுப்பயணம் (மிஃராஜ்) பற்றி என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். பைத்துல் முகத்தஸில் உள்ள அநேக விஷயங்கள் பற்றி என்னிடம் (சந்தேகத்தோடு கேள்வி) கேட்டுக் கொண்டிருந்தனர். அவைகளை நான் மனதில் இருத்திக் கொள்ளவில்லை. (அக்கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல்) மிகுந்த கடுமையான சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டேன். (அதற்கு முன்பு) அதுபோன்ற சிரமத்திற்கு நான் ஆளாகவேயில்லை. (அப்போது) அல்லாஹ் அதையே (கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க உதவியாக பைத்துல் முகத்தஸையே) எனக்கு உயர்த்திக் காட்டினான். நான் அதன் பால் உற்று நோக்குகிறேன். அதன்பிறகு அவர்கள் எதைப்பற்றிக் கேட்டாலும் நான் அதுபற்றி (சரியாக) அறிவித்துக் கொடுக்காமலில்லை. நபிமார்களின் ஒரு கூட்டத்தில் நான் என்னைக் கண்டேன். அப்போது மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நின்று தொழக்கூடியவர்களாக இருந்தனர். நிச்சயமாக அவர்கள் “ஷனூஆ” கூட்டத்தைச் சார்ந்த ஆடவர்களில் உள்ளவரைப்போன்று கட்டான உடலுடன் சதைகுறைந்த மனிதராக இருந்தனர். (அதற்கடுத்து) அதே நேரத்தில் மர்யமின் மகன் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தனர். ஜனங்களில் அவரைப் போன்ற தோற்றத்தில் இருப்பவர் உர்வா பின் மஸ்ஊது அத்தகபீயாவார். (அதற்கடுத்து) அதே நேரத்தில் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நின்று தொழுது கொண்டிருந்தனர். மனிதர்களில் அவர்களுக்கு மிக ஒப்பானவர் உங்கள் தோழர்(ஆகிய நான்தான் என்று தன்னைக் காட்டினர்) என்றனர். தொழுகை நேரம் வந்துவிட்டது. அவர்களுக்கெல்லாம் இமாமாக நின்று தொழ வைத்தேன். தொழுகையை நான் முடித்துக் கொண்டபோது, “முஹம்மதே! நரகத்திற்கு பொறுப்பாளர் “மாலிக்” இவர்தான். இவருக்கு சலாம் கூறுங்கள்” என்று ஒருவர் கூறினார். ஆகவே அவரின் பால் திரும்பினேன். அவரே எனக்கு சலாம் கூற ஆரம்பித்து விட்டார் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்

குறிப்பு: ஹதீஸ் எண் : 76 முதல் 80 வரையில் நபிமார்களின் நிலைகளைக் கண்டதாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய கூற்றின் விளக்கம் வருமாறு:

நபிமார்கள் (அலைஹிமுஸ்ஸலாம்) இறப்பெய்தி விட்டவர்களாக இருக்க, மறுமையில் செயல்பாடுகளுக்கு நற்கூலி பெறும் இடமாக இருக்க் அவர்கள், தல்பிய்யாக் கூறியவர்களாக, தவாஃபு சுற்றக் கூடியவர்களாக, தொழுபவர்களாக இருக்கும் நிலையை, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எவ்வாறு கண்டார்கள்; அதன் உண்மை நிலை என்ன? என்பதன் விளக்கம் பற்றி ஷரஹ் நவவீயில் காழி இயாழ் அவர்களின் கூற்றை நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹிமுஸ்ஸலாம் அவர்கள் நகல் செய்கிறார்கள். அதிலிருந்து சிலவற்றை இங்கே தருகிறோம்:

1. இவ்வாறு நடந்த நிகழ்ச்சிகள் யாவையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவின் மூலம் கண்டார்கள். இதற்கு ஆதாரம் உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்; “நான் உறங்கிக் கொண்டிருந்த பொழுது, தவாஃபு செய்வதாக கனவு கண்டேன்.” அந்தத் தொடரில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விஷயத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே இது கனவில் காட்டப்பட்ட நிலையாகும்.

2. நபிமார்கள் (அலைஹிமுஸ்ஸலாம்) அவர்களின் ஜீவிய காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை, நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காட்டப்பட்டது; அதனால்தான்,

“மூஸாவின் பால் பார்ப்பவனைப் போன்று இருக்கிறேன்”

“ஈஸாவின் பால் பார்ப்பவனைப் போன்று இருக்கிறேன்”

“யூனூசின் பால் பார்ப்பவனைப் போன்று இருக்கிறேன்”

எனக் கூறினார்கள். ஆகவே இது ஏற்கனவே நடந்தவற்றை காட்சியாக வைத்துக் காட்டப்பட்டது என்பது தெளிவாகிறது.

3. அல்லாஹ் ஏனைய நபிமார்களையெல்லாம்பற்றி தன் அறிவிப்பின் மூலமாக அறிவிக்க, அறிவிக்க இவர்கள் சொல்லிக்கொண்டே இருந்திருக்கலாம் எனவே இது இறை அறிவிப்பு என்பது தெளிவு.


No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்