Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 23

ஜனாஸாவின் சட்டங்கள் பற்றிய நூல்
 
துன்பத்தின்போது சொல்லப்படுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 461

ஒரு அடியார் தனது துன்ப நேரத்தில் “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அல்லாஹும்ம அஜிர்னீ பீமுஸீபத்தி வக்லுப்லீ கைரன் மின்ஹா” என்று சொல்வார். அதன் நிமித்தம் அல்லாஹ் அவரது துன்பத்துக்கு நற்கூலி நல்கி அதைவிட சிறந்ததை அவருக்கு பகரமாக தந்தே தவிர எந்த ஒரு அடியாருக்கும் துன்பம் ஏற்படுவதில்லை என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.

அபூஸலமா இறப்பெய்திவிட்ட சமயம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டது போன்று நான் கூறினேன். அபூஸலாமாவைவிட மிகச்சிறந்தவர்களான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை எனக்கு அல்லாஹ் பகரமாகக் தந்தான் என உம்முஸலமா அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா

மரணம் சம்பவிக்க இருப்பவரிடம் அழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 462

ஸஅது பின் உபாதா தனக்குரிய முறையீட்டைக் கூறினார்கள். அப்துல் ரஹ்மான் பின் அவ்ப், ஸஅது பின் அபீ வக்காஸ், அப்துல்லாஹ் பின் மஸ்ஊது (ரளியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்) உடனிருக்க அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை விசாரிக்க வந்தனர். அவரிடம் வந்தபோது அவர் மயக்கத்தில் இருந்தார். (ஆகவே) அவர் முடிந்து (மரணித்து) விட்டாரா? எனக்கேட்டார்கள். அதற்கு (அங்கிருந்தவர்கள்) இல்லை என்றனர். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அழுததைக் கண்ட கூட்டத்தினரும் அழுதனர். (அப்போது) கேட்க மாட்டீர்களா? தெரிந்து கொள்ளுங்கள்.

கண்கலங்கி நீர் வடிப்பதற்காகவோ, மேலும் மனதால் கவலைப்படுவதற்காகவோ, நிச்சயமாக அல்லாஹ் தண்டிக்க மாட்டான். ஆயினும் இதன் காரணம்- என்று தனது நாவின் பால் சுட்டிக்காட்டி- தண்டிக்கிறான் அல்லது அருள் செய்கிறான் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹுமா

(மய்யித்திற்காக) ‘ஒலமிட்டு அழுவதில் கண்டிப்பு‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 463

‘எனது உம்மத்தில் நான்கு காரியங்கள் அறியாமைக் காலக் காரியங்களில் உள்ளவையாகும். அவைகளை அவர்கள் விடமாட்டார்கள். (அவையாவன) வம்சா வழியைக் கூறி பெருமைப்படுதல், மனிதர்கள் (உயர்வான குடும்பப்) பாரம்பரியங்களை குறை கூறுதல், நட்சத்திரங்களைக் கொண்டு மழைப் பெய்யத் தேடுதல், (ஒப்பாரியிட்டு) ஓலமிட்டு அழுதல் (முதலியவைகளாகும்).

“ஒலமிட்டு அழும் பெண் அவள் மரணத்திற்கு முன்பு தவ்பாச் செய்யவில்லையாயின் மறுமை நாளில் அவளை(க் கொண்டுவந்து) நிறுத்தப்படும். அவள்மேல் தாரினால் வார்க்கப்பட்ட1 சட்டை (அணிவிக்கப்பட்டு) இருக்கும்.” என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுமாலிக் அல் அஷ்அரி ரளியல்லாஹ் அன்ஹீ அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு : 1 இது போன்றே இதே கருத்துப்பட இதற்கடுத்து ‘ஜரப்‘ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது ஆயினும் அதன் மூலத்தை கவனிக்கும்பொழுது இச்சட்டையை அவளுக்கு அணிவிக்கப்பட்ட பிறகு உடலில் ஒரு விதமான அரிப்பு ஏற்பட்டு சிரமப்படுத்தப்படுவாள் என்ற பொருள் உண்டு என்பதும் தெளிவாகிறது.

தன் குடும்பத்தில், பந்தத்தில் யாருக்காவது மரணம் சம்பவித்த போது கன்னங்களில் அடித்துக்கொண்டவர்களும் அல்லது பாக்கெட்(சட்டை)களை கிழித்துக் கொண்டவர்களும் நம்மைச் சார்ந்தவரல்ல என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 464

“கன்னங்களில் அடித்துக் கொண்டவர்களும் அல்லது பாக்கெட்(சட்டை)களை கிழித்துக் கொண்டவர்களும் அல்லது அறியாமை கால வார்த்தைகளைக்கூறி அதன்பால் அழைத்தவரும் நம்மைச் சார்ந்தவரல்லர்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மற்றொரு அறிவிப்பில் கிழித்துக் கொண்டு அழைத்தவன் நம்மைச் சார்ந்தவனல்ல என வந்துள்ளது.

உயிரோடிருப்பவர் அழுவதால் மய்யித்துதண்டிக்கப்படுகிறது என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 465

“உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக நிச்சயமாக மய்யித்து தண்டிக்கப்படுகிறது” என அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள், ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்களுக்கு கூறியதை (தாம்) கேட்டதாக அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் அறிவிக்கிறார். (ஆனால் இதைக் கேட்ட) ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்கள் அபூ அப்துற்ரஹ்மான் அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நிச்சயமாக அவர் பொய் கூறவில்லை, எனினும் அவர் மறந்திருக்கலாம், அல்லது அவர் தவறு செய்திருக்கலாம் என்றனர்.

(நடந்த நிகழ்ச்சி யாதெனில்) ஒரு யூதர் பெண்ணின் கப்ர் அருகாமையில் நபி ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம் அவர்கள் சென்ற பொழுது அவளுக்காக அழப்படுவதை (சிலர் அழுவதைப் பார்த்த) அவர்கள், அவளுக்காக அவர்கள் (அச்சிலர்) அழுகின்றார்கள். நிச்சயமாக அவளது கப்ரில் அவள் தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறாள் என்றார்கள்.

அறிவிப்பவர் : அம்ரா பின்த் அப்துற்ரஹ்மான் ரளியல்லாஹ் அன்ஹுமா

குறிப்பு : ஒலமிட்டு அழுவதாலும், ஒலமிட்டு அழ வேண்டுமென இறந்தவரால் சொல்லி வைக்கப்பட்டு அதை நிறைவேற்ற ஒலம், ஒப்பாரி வைப்பதாலுமே, மய்யித் தண்டிக்கப்படுகிறது (என்பதே இதன் கருத்தாகும்) என்பதை மற்றொரு ஹதீஸ் தெளிவு செய்கிறது

இறப்பெய்தியவர் நல்லவராக முஃமீனாக இருப்பின் உலகத் துன்பங்களிலிருந்து ஒய்வு பெற்றுவிடுகிறார், கெட்டவராக இருப்பின் அவரிலிருந்து மற்றவர்களும் மற்றவைகளும் ஒய்வு பெற்றுவிடுகின்றனர் என்பது பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 466

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் ஒரு ஜனாஸாவை எடுத்துச் செல்லப்பட்ட(பொழு)து, முஸ்தரிஹ், முஸ்தராஹ் மின்ஹு எனக் கூறினார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! அவ்வாறென்ரால் என்ன எனக் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், “முஃமினான அடியார் (இறப்பெய்தியதன் மூலம்) உலகத்துன்பங்களிலிருந்து அவர் ஓய்வு பெற்றுவிடுகிறார். (ஆனால்) கெட்ட அடியார் (இறப்பெய்தியதன் காரணமாக மற்ற) அடியார்(மனிதர்)களும் நகரங்களும், மரமும், கால்நடைகளும் அவரின் (தீமையிலிருந்து) ஓய்வு (விடுதலை) பெற்று விடுகின்றன” என்று கூறினார்கள் என அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்தி அறிவிக்கக்கூடியவராக இருந்தார்.

மய்யித்தை கழுவுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 467

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறப்பெய்திய பொழுது, (அவர்களை குளிப்பாட்டும் விஷயத்தில்) ஒற்றைப்படையில், மூன்று அல்லது ஐந்து (என) அவர்களைக் குளிப்பாட்டுங்கள், ஐந்தாவது முறையில் கற்பூரத்தை அல்லது கற்பூரத்தில் கொஞ்சத்தை ஆக்குங்கள் என எங்களுக்குக் கூறிவிட்டு அவர்களைக் குளிப்பாட்டி முடித்துவிட்டால் எனக்குத் தெரிவியுங்கள் எனவும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (குளிப்பாட்டி முடித்துக் கொண்டதும்) அவர்களுக்கு தெரிவித்தோம். (அதன்பிறகு) அவர்கள், உடலோடு அணிவிக்கக்கூடிய ஒரு துணியைத் தந்தார்கள், அத்துணியை அவர்களுக்கு நாங்கள் அணிவித்தோம்.

அறிவிப்பவர் : உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹு

மய்யித்திற்கு கபனிடுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 468

மிகத்தூய்மையான வெள்ளை நிறமுள்ள மூன்று நூல் துணிகளில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கபனிப்பட்டார்கள். அதில் தலைப்பாகையோ சட்டையோ இல்லை. (ஆயினும்) கீழாடை மேலாடை இரண்டும் ஒரே துணியில் அமைந்த ஒன்றை அதில் அவர்களை கபனிப்படுவதற்காக வாங்கப்பட்டது, ஜனங்களுக்கு ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. அவர்களை கபனிடுவதற்காக வாங்கப்பட்ட கீழாடை மேலாடை இரண்டும் ஒரே துணியில் உள்ள (அதில்) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைக் கஃபனிடுவது கைவிடப்பட்டு மிகத்தூய்மையான வெள்ளைநிறமுள்ள மூன்று துணிகளில் அவர்களுக்கு கபனிடப்பட்டது. ஆகவே ஒரே துணியில் கீழாடை, மேலாடை உள்ள அதை அப்துல்லாஹ் பின் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எடுத்துக்கொண்டு, என்னை அதில் கபனிடப்படும் வரை மிக உறுதியாக அதை நான் தேக்கிவைப்பேன் என்றார். அதன்பிறகு, அல்லாஹ் தனது நபிக்கு பொருத்தப்பட்டிருந்தால் அவர்களை அதில் கபனிடச்செய்திருப்பான் அவ்வாறில்லை என்கின்றபோது அதை எனக்கு கபனிடப்பட்டு கொள்ள நான் விரும்பவில்லை எனக்கூறி அதை விற்று அதன் கிரயத்தை தர்மம் செய்துவிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

மய்யித்திற்குரிய கபனை அழகாக இடவேண்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 469

நிச்சயமாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நாள் பிரசங்கம் செய்தனர். (அப்போது) தனது தோழர்களில் ஒரு மனிதர் இறப்பெய்தி, பற்றாத கபன் அவருக்கு இடப்பட்டு இரவில் அடக்கமும் செய்விக்கப்பட்டு விட்டார் என்ற (விஷயத்தை) கூறிவிட்டு (இரவில் ஒரு மனிதர் இறப்பெய்திவட்டால்) அவருக்கு தொழுகை நடத்தப்படும் வரை (இரவிலேயே) அடக்கப்படுவதைக் கண்டித்தார்கள். அவ்வாறு செய்ய (எந்த) மனிதராவது நிர்பந்திக்கப்பட்டாலே தவிர.

‘உங்களில் ஒருவர் தன் சகோதரருக்கு கபனிட்டால் அவரது கபனை (பற்றாக் குறையாக இடாது, நிறைவாக) அழகாக இடவும்‘ எனவும் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1) இரவில் மய்யித்தை தொழவைக்காமல் அடக்கப்படுவதைத்தான் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டித்தார்கள். ஏனெனில் பள்ளியை சுத்தம் செய்த பெண்ணை அல்லது பையனை இரவில் அடக்கி விட்ட செய்தியைக் கூறியபோது ஏன் இரவில் அடக்கம் செய்தீர்கள் என்றோ அல்லது செய்யக்கூடாது என்றோ கூறவில்லை. ஆகவே தொழ வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.

2) சில மய்யித்தை (அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்) கொஞ்சமும் தாமதம் செய்ய இயலாத நிலைக்கு ஆளாகிவிடுகிறது. அவ்வாறு இருப்பின் அடக்கலாம் என்பது தெளிவு.

3) இரவில் அடக்கம் செய்வதை தவிர்த்தால் பகலில் அதிக எண்ணிக்கையுடையவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்புண்டு என்பதை தெரிவிக்க இரவில் செய்வதை தவிர்க்கவும் எனக் கூறியிருக்கலாம்.

ஜனாஸாவைத் துரிதப்படுத்துதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 470

“ஜனாஸாவைத் துரிதப்படுத்துங்கள்1 அது நல்லதாக இருப்பின் எதன்பால் (கப்ரின் பால்) அதை முற்படுத்துகிறீர்களோ (எனகூறியிருக்கலாம்) அது (அதற்கு) நலவாக இருக்கும் அதல்லாததாக இருப்பின் உங்களது கழுத்து(த்தோல்)களிலிருந்து இறக்கிவைத்து விடுவது (அதற்கு) தீமையாக2 இருக்கும்” என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பு : 1) ஜனாஸாவை எடுத்துசெல்லும் பொழுது நடையில் துரிதம் காட்டுவதாகும் என்பதே இதன் கருத்தாகும்.

2) அது அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்பட்டதாகும் என்பதே இதன் கருத்து.

ஜனாஸாவை பெண்கள் பின் தொடர்ந்து செல்வது தடுக்கப்பட்டதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 471

ஜனாஸாவை பெண்கள் பின் தொடர்வதிலிருந்து நாங்கள் தடுக்கப்பட்டோம். (ஆனால்) எங்களுக்கு கண்டிப்பாக அதை (ஜனாஸாவை பின் தொடர்வதை) செய்யப்பட்ட வேண்டுமென்பதில்லை என உம்மு அதிய்யா கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : உம்மு அதிய்யா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : தடையென்பது சாதாரனமனதாகும், ஹராமல்ல என்பதை அறியவும்.

ஜனாஸாவிற்காக எழுந்து நிற்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 472

ஒரு ஜனாஸா சென்றது (ஒரு ஜனாஸாவை மக்கள் எடுத்துச் சென்றனர்.) அதன் பொருட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (எழுந்து) நின்றனர், (அதைப்பார்த்து) நாங்களும் எழுந்து நின்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! அது யூதப்பெண்ணின் ஜனாஸாவாகும் எனக்கூறினோம். (அதற்கவர்கள்) மரணம் என்பது நிச்சயமாக திடுக்க(ம் தரும் செய்தியாகும்)மாகும். ஆகவே ஜனாஸாவை (எடுத்துச் செல்லக்) கண்டால் அதன் நிமித்தம் எழுந்து நில்லுங்கள் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா

ஜனாஸாவிற்கு எழுந்து நிற்பது மாற்றப்பட்டுவிட்டது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 473

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை (ஜனாஸாவிற்காக) எழுந்திருக்கக்கண்டு நாங்களும் எழுந்தோம். (ஆனால் பின்பு) ஜனாஸாவிற்காக அவர்களும் அமர்ந்தார்கள், நாங்களும் அமர்ந்தோம் என அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மய்யித்திற்கு தொழுகை நடத்தும் சமயம் இமாம் எங்கு நிற்க வேண்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 474

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் நான் (ஜனாஸா தொழுகை) தொழுதேன். உம்மு கஅபு என்பவரின் (பிரவசத் தொடரில்) பிரசவச்சமயத்தின் போது இறப்பெய்தி விட்டனர். அவருக்காக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை நடத்தினர். அப்பொழுது அவரின் (மய்யித்தின்) மத்தியில் நின்றார்கள் என ஸமுரா பின் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஜனாஸாவிற்கு தக்பீர் கூறுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 475

நஜாஷியின் மரணம் பற்றி, என்றைக்கு அவர் இறப்பெய்தினாரோ அன்றைய தினமே மக்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்து விட்டனர். அவர்களோடு தொழுமிடத்திற்குப் புறப்பட்டு வந்தோம். (பிறகு ரஸுல் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) நான்கு தக்பீர்களை கூறி(தொழுகை நடத்தி)னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஐந்து தக்பீர்கள் கூறுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 476

ஜைது (என்பவர்) எங்களது ஜனாஸாக்களுக்கு நான்கு தக்பீர் கூறக்கூடியவராக இருந்தார். ஒரு ஜனாஸாவின் போது ஐந்து தக்பீர் கூறிவிட்டார். (அது பற்றி) அவரிடம் நான் (அறிவிப்பாளர்) கேட்டேன். அதற்கவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு தக்பீர் கூறியிருக்கிறார்கள் எனக் கூறினார்.

அறிவிப்பாளர் : அப்துர்ரஹ்மான் பின் அபூலைலா ரளியல்லாஹு அன்ஹுமா

மய்யித்திற்காக துஆ செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 477

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தினார்கள். அத்தொழுகையில் ஜனாஸாவிற்காக அவர்கள் ஓதிய துஆவை நான் மனனம் செய்து விட்டேன்.

1“அல்லாஹும்மக்பிர்லஹு வர்ஹம்ஹு வஆபிஹி வஅபு அன்ஹு, வஅக்ரிம் நுஜுலஹு வவஸ்ஸிஉ முத்கலஹு, வக்ஸில்ஹு பில்மாஇ வத்தல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா-னக்கைத்தஸ்ஸவ்பல் அப்யழ மினத்தனஸி, வஅப்தில்ஹுதாரன் கைரன் மின்தாரிஹி, வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஜவ்ஜன் மின் ஜவ்ஜிஹி, வஅத்கில் ஹுல் ஜன்னத்த வஅஇத்ஹு மின் அதாபில்கப்ரி அவ்மின் அதாபின்னார்” என அவர்கள் கூறக்கூடியவர்களாக இருந்தனர். முடிவாக நான் அந்த மய்யித்தாக இருக்கவேண்டுமென ஆசைப்பட்டேன்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 யா அல்லாஹ்! அவருக்கு பாவமன்னிப்புச் செய்து, அருளும் செய்து இன்னும் அவருக்கு ஆபியத்தையும் கொடுத்து அவரை, அவர் தங்குகின்ற இடத்தை கண்ணியமானதாக்கி வைப்பாயாக! தண்ணீர் கொண்டும், ஐஸ்கட்டி கொண்டும், ஆலங்கட்டி கொண்டும் அவரை கழுவுவாயாக! மிக வெண்மையான புடவையை அழுக்கிலிருந்து சுத்தப்படுத்துவதைப் போன்று அவரைத் தவறுகளிலிருந்து சுத்தமாக்குவாயாக! அவர் (உலகில் குடியிருந்த) வீட்டை விடச்சிறந்த வீடாக, அவரது குடும்பத்தாரை விடச் சிறந்த குடும்பமாக, அவரது மனைவியை விடச் சிறந்த மனைவியாக, அவருக்கு மாற்றிக் கொடுப்பாயாக! அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக! அவரை கப்ரின் வேதனையிலிருந்து காப்பாற்றுவாயாக! அல்லது நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுவாயாக!

மய்யித்திற்கு பள்ளியில் தொழுகை நடத்துவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 478

ஸஅது பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறப்பெய்திய பொழுது, நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் அவருக்கு அவர்கள் தொழுகை நடத்த வேண்டுமென்பதற்காக அவரது ஜனாஸாவை பள்ளிக்குக் கொண்டு வருமாறு (ஒருவரிடம் சொல்லி) அனுப்பினார். (அவர்கள் கூறியதற்கிணங்க அவ்வாறே) அவர்களும் செய்தனர். நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் (மனைவிமார்கள் ரளியல்லாஹு அன்ஹு அன்ஹுன்ன இருந்த) அறைகளுக்கு அருகாமையில் அவரது (ஜனாஸா கொண்டு வந்து) வைக்கப்பட்டது. அவர்களெல்லோரும் அவரது ஜனாஸாவிற்கு தொழுகை நடத்தினர்.

பள்ளியில் உட்காரும் இடங்கள் (உள்ள) பகுதியிலிருக்கும் ஜனாஸாக்களைக் கொண்டு செல்லும் வாயில் வழியாக வெளியே அவரைக் கொண்டு வரப்பட்டது. (அதற்குப்பிறகு) அவர்களது இச்செயலை (சில) மனிதர்கள் குறைகூறியதாக அவர்களுக்கு செய்தி எட்டியது. (அதாவது) ஜனாஸாக்களை பள்ளியினுள் நுழைவிக்கப்பட (கொண்டுவர) வேண்டியதில்லை என அவர்கள் கூறிய கூற்று ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கும் எட்டியது.

மனிதர்களுக்கு எது பற்றி தெரியவில்லையோ அது விஷயத்தில் குறை கூற அவர்களை அவசரப்படுத்தியது எது? ஜனாஸாவை பள்ளியினுள் கொண்டு வந்ததைப் பற்றி அவர்கள் நம்மீது குறை கூறிவிட்டனர். (ஆனால் ஸுஹைல் பின் பைளாஉ ரளியல்லாஹு அன்ஹு என்பவருக்கு பள்ளியினுள் வைத்தே தவிர அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (வேறெங்கும்) தொழவைக்கவில்லை (என்ற விஷயம் ஏன் அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது) எனக்கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

‘கப்ரின் மீது தொழுகை நடத்தப்படுவது‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 479

பள்ளியை கூட்டிப்பெருக்கிக் கொண்டிருந்த ஒரு கருப்புப்பெண்ணை அல்லது ஒரு வாலிபரை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் காணாததால் அவளை அல்லது அவரைப்பற்றி கேட்டனர். அதற்கு (அங்கிருந்தவர்கள்) அவள் அல்லது அவ்வாலிபர் இறப்பெய்திவிட்டதாக கூறினார்கள். அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (இதைப்பற்றி) எனக்கு நீங்கள் தெரிவித்திருக்க வேண்டாமா? எனக்கூறிவிட்டு அவளின் அல்லது அவ்வாலிபரது கப்ரை எனக்கு காட்டுங்கள் என்றனர். (அங்கிருந்தவர்கள் அப்பெண்ணுடைய அல்லது அவ்வாலிபருடைய மய்யித்து விஷயத்தை பெரிதாகக் கருதாமையால் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறாமல் இருந்துவிட்டனர் என்பதாக அறிவிப்பவர் கூறுகிறார்) (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதற்கிணங்க) அவளது அல்லது அவ்வாலிபரது கப்ரை காண்பித்தனர். அதன்மீது (அக் கப்ருக்கு அருகில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்)அவர்கள் தொழுது விட்டு.

நிச்சயமாகக் இந்தக் கப்ருகள் அதை உடையவர்களுக்கு இருளால் நிரப்பட்டுள்ளது எனது தொழுகையினால் அவர்களது கப்ரில் நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு பிரகாசத்தை நல்குகிறான் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு :

மய்யித்து தொழுகை உரியவருக்கு அத்தொழுகை தவறிவிடுமானால் அம்மய்யித்தின் கப்ருக்கு சென்று மய்யித்துத் தொழுகை நடத்துவது ஆகும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாகும். ஆனால் மற்ற தொழுகைகளை கப்ருகளின்பால் தொழுவது தடுக்கப்பட்டதாகும் என்பதை மற்றொரு ஹதீஸில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்க.

தற்கொலை செய்து கொண்டவர் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 480

“அகலமான அம்புகளால்1 தன்னை (தற்)கொலை செய்து கொண்ட ஒரு மனிதரை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அந்த மனிதருக்கு (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் (ஜனாஸா) தொழுகை தொழ வைக்கவில்லை” என ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பு : 1 குறுக்கில் அகலமில்லாத நீட்டமான அம்பின் கூர்மையைக் கொண்டு என்ற பொருளும் ‘‘மஷ்கஸ்‘‘ என்பதற்கு கையாளப்படுகிறது என்பதை கவனத்தில் கொள்க

தற்கொலை செய்து கொண்டவருக்கு மய்யித்த தொழுகை ஆகுமா? ஆகாதா?

இக்கேள்விக்கு இங்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலைக்கு இப்போது கேள்விகள் எழுந்துள்ளன. ஆகவே கூடாது என்பவர்களின் கூற்றை அலசுவோம்.

அகலமான அம்பினால் தற்கொலை செய்து கொண்ட ஒருவரை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டுவரப்பட்டது. அவர்கள் தொழவைக்கவில்லை.

இந்த ஹதீஸில் எவ்வித அப்பழுக்குமில்லை. (இந்த ஹதீஸை) ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸின் துனுக்கை கையில் எடுத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழவைக்கவில்லை ஆகவே நாங்களும் தொழவைக்க மாட்டோம் என்கின்றனர். வேறு எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

இப்போது தொழுகை நடத்துவது கூடும் என்பது பற்றிய கூற்றின் ஆதாரங்களைப் பார்ப்போம்.

(1) ஸுனன் நஸாயீயில் ‘அம்மா அனபலாஉ ஸல்லீ அலைஹி‘ ஆகவே நான் அவருக்குத் தொழுகை நடத்தவில்லை என்ற வாசகம் பதிவாகியுள்ளது.

அறிவிப்பவர்கள் : ஸிமாக் ரளியல்லாஹு அன்ஹு, ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு

நான் நடத்தவில்லை என்று கூறிய நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் மற்றவர்களை நடத்த வேண்டுமென்றோ? அல்லது வேண்டாமென்றோ? கூறினார்களா? கடன்பட்டவருக்கு மற்றவர்களை தொழவைக்கச் சொன்னது போல- என்ற கேள்வி எழுகிறது.

அக்கேள்விக்கு பதிலாக அதே ஸுனன் நஸாயீயில், (பக்கம் 66ல் பாகம் 4ல்) ‘மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழவைக்கவில்லை. ஆனால் ஸஹாபாக்கள் தொழுகை நடத்தினர் என உள்ளது. ஆகவே மற்றவர்களுக்கு எச்சரிக்க நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழ வைக்கவில்லை. ஆனால் ஸஹாபாக்கள் தொழுததை மறுக்கவுமில்லை. எனவே தொழலாம்.

(2) தற்கொலை செய்து கொண்டு இறந்த அம்மனிதரை துபைல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது கனவில் காண்கிறார்கள். அவர் அழகான தோற்றத்தில் இருக்கிறார். ஆனால் அவர் தனது இரு கைகளையும் மறைத்துக் கொண்டவராக இருக்கக் காண்கிறார். உமது இறைவன் உம்மை என்ன செய்தான் எனக் கேட்கிறார். அதற்கவர் நான் அவனது நபியின் பால் ஹிஜ்ரத் செய்ததன் நிமித்தம் என் பாவத்தைப் பொறுத்துவிட்டான். அவ்வாறெனில் உன் கைகளை நீ மறைத்து வைத்திருக்க உம்மை நான் காண்கிறேனே? என்றார். நீர் தாமதமாக கெடுத்துக் கொண்டதை நாம் சீராக்கப் போவதில்லை என எனக்குக் கூறப்பட்டது எனக் கூறினார். இக்கனவை துபைல், ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார். அதைக் கேட்டதுமே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் யா அல்லாஹ்! அவரது இரு கைகளுக்காக அப்பாவத்தைப் பொறுத்தருள்வாயாக எனக்கூறினார்.

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் துஆ அங்கீகாரத்திற்கு உரியதாகும். ஆகவே தற்கொலை செய்து கொண்டவர் என்று தெரிந்ததும் மன்னிப்புக்காக துஆ செய்கிறார்கள் என்பது தெளிவு. அதோடு இதை ஆதரமாக வைத்து, இறந்தவர்களுக்கு துஆ செய்வது தானே தொழுகை ஆகவே தொழுகை நடத்தலாம். நடத்துவது குற்றமில்லையென ஹதீஸ் கலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்