Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 22

 ஜனாஸாவின் சட்டங்கள் பற்றிய நூல்

‘பிரயாணத்தின் போது நஃபில் தொழுகைகளை விட்டு விடுவது‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 441

மக்காவிற்கு செல்லும் வழியில் இப்னு, உமர் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்களுடன் நான் (ஹஃபஸ் பின் ஆஸிம் ரளியல்லாஹு அன்ஹு) இருந்தேன். எங்களுக்கு அவர் ளுஹர் தொழுகையை இரண்டு ரக்அத்தாக தொழ வைத்தார். அதன்பிறகு வாகனத்திற்கும் அவரும் நாங்களும் முன்னோக்கி வந்தோம். அவரும் அமர்ந்தார். நாங்களும் அமர்ந்தோம். (அவர்) எங்கு தொழுதாரோ அந்த இடத்தின் பக்கம் அவரது கவனம் சென்றது. அப்போது (அவ்விடத்தில்) சில மனிதர்களை நிற்கக் கண்டார்கள். (அதைப்பார்த்து விட்டு) ‘இவர்கள் என்ன செய்கிறார்கள்?‘ எனக்கேட்டார். (அதற்கு அவர்கள்) நஃபில் தொழுகிறார்கள் என நான் கூறினேன். (அதற்கவர் நஃபில் தொழக்கூடியவனாக நான் இருப்பின் என் தொழுகையை நிச்சயமாக நிறைவாக்கியிருப்பேன் எனக்கூறினார்.

என் சகோதரரின் மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் பிரயாணத்தில் இருந்திருக்கிறேன். அவர்கள் இறப்பெய்தும் வரை (பிரயாணத்தில்) இரண்டு (ரக் அத்து)க்கு மேல் தொழவில்லை. அடுத்து அபூபக்ரு ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பிரயாணத்தில் இருந்திருக்கிறேன். அவர்கள் இறப்பெய்தும் வரை அவர்களும் (பிரயாணத்தில் இரண்டு (ரக்அத்துகளு)க்கு மேல் தொழவில்லை. அதன்பின்னர் உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் பிரயாணத்தில் இருந்திருக்கிறேன். அவர்கள் இறப்பெய்தும் வரை இரண்டு ரக்அத்துக்கு மேல் தொழவில்லை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என அல்லாஹ் திட்டமாக கூறியிருக்கிறான் என இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹஃபஸ் பின் ஆஸிம் ரளியல்லாஹு அன்ஹு

பயணத்தில் வாகனத்தின் மீதிருந்தவாறே நஃபில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 442

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், வாகனத்தின் மீதிருந்தவாறே அது எத்திசையிலிருப்பினும் நபில் தொழக்கூடியவர்களாக இருந்தார்கள். ‘வித்ரை‘யும் அதன் மீதிருந்தவாரே தொழுவார்கள். ஆயினும் பர்ளான தொழுகையை அதன் மீதிருந்தவாறு தொழமாட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு, உமர் ரளியல்லாஹு அன்ஹுமா

பயணத்திலிருந்து முன்னோக்கி (திரும்பி) வந்தால் அவர் பள்ளியில் இரண்டு ரக்அத்து தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 443

நான், (ஜாபிர்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் போருக்குப் புறப்பட்டேன். எனது ஒட்டகம் என்னைத் தாமதிக்க வைத்து எனக்கு கஷ்டத்தையும் கொடுத்துவிட்டது. எனக்கு முன்பாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தடைந்து விட்டனர். நான் காலையில் வந்தடைந்து பள்ளிக்கு வந்தேன். (அப்போது அங்கே) பள்ளியின் வாசலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களைப் பெற்றுக் கொண்டேன். நீர் புறப்பட்டது முதல் இப்போது தான் வந்தடைந்தீரா? எனக்கேட்க நான் ‘ஆம்‘ என்றேன்.

‘உனது ஒட்டகத்தை விட்டுவிட்டு (பள்ளியினுள்) நுழைந்து இரண்டு ரக்அத்து தொழுதுவிடு‘ என்றார்கள். நான் நுழைந்து தொழுதுவிட்டு அதன் பிறகு திரும்பி விட்டேன்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா

போரில் பயந்த நிலையில் தொழும் தொழுகை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 444

‘ஜுஹைனா‘ என்ற இடத்தில் ஒரு கூட்டத்தாரோடு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் (சேர்ந்து) போர் செய்தோம். (அப்போது) அவர்கள் (எதிரிகள்) எங்களைக் கடுமையாகக் கொன்று விட்டார்கள். நாங்கள் ‘ளுஹர்‘ தொழுகை தொழுத போது அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது ஒரே அடியாக நாம் அவர்களின் மீது சாய்ந்து (தாக்கி) விட்டால் அவர்களை வேறோடு அழித்துவிடலாம் என இணை வைக்கக்கூடியவர்கள் கூறினர். அது பற்றிய (விபரத்தை) ஜீப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கூறிவிட்டனர். அதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு நினைவுபடுத்தினர். தொழுகை(யை நிறைவேற்ற வேண்டிய) நேரம் வரும், அது அவர்களுக்கு (தங்களின்) மக்களை விட மிக விருப்பமானதாகும். (அப்போது தாக்கி விடலாம்) என நிச்சயமாக அவர்கள் கூறினர்.

அஸர் தொழுகை(யின் நேரம்) வந்த போது இரு அணிகளாக நாங்கள் அணிவகுத்து நின்றோம். இணை வைப்பவர்கள் எங்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீர் கூறினார்கள். நாங்களும் தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉ செய்தார்கள். நாங்களும் ருகூஉ செய்தோம். அதன்பிறகு அவர்கள் ஸஜ்தா செய்தார்கள். அவர்கள் (ஸஜ்தாவிலிருந்து) எழுந்ததும் இரண்டாவது வரிசையில் உள்ளவர்கள் ஸஜ்தா செய்தனர். அதன்பிறகு முந்திய வரிசைகளில் இருந்தவர்கள் பிந்திக்கொள்ள இரண்டாவது வரிசையில் இருந்தவர்கள் முதல் இடத்திற்கு வந்து நின்றுவிடுகிறார்கள். (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீர் கூறினார்கள். நாங்களும் தக்பீர் கூறினோம். அவர்கள் ருகூஉ செய்தார்கள். நாங்களும் ருகூஉ செய்தோம். அதன்பிறகு ஸஜ்தா செய்ய முதல் அணியில் இருந்தவர்கள் அவர்களுடன் ஸஜ்தா செய்கின்றனர். (அப்போது) இரண்டாவது அணியினர் நின்று விடுகின்றனர். இரண்டாவது அணியினர். ஸஜ்தா செய்து முடிக்கும் போது எல்லோரும் அமர்ந்து விடுகின்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இரு அணியினருக்கும் சலாம் கூறிவிடுகின்றனர் என்பதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் அதன்பிறகு இந்த உங்களது தலைவர்கள் தொழுவதை போன்று, என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு பிரத்யோகமாகக் கூறினர் என அபுஜ்ஜுபைர் கூறுகிறார்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா

சூரிய கிரகணத் தொழுகை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 445

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழ ஆரம்பித்து நிலையை மிக நீட்டினார்கள். அதன்பிறகு ‘ருகூஉ‘ செய்தார்கள். ‘ருகூஉஐ‘ மிக நீட்டினார்கள் அதன்பிறகு ‘ருகூஉ‘ விலிருந்து தங்களது தலையை உயர்த்தினார்கள் நிலையில் நீண்ட நேரம் நின்றார்கள். முன் நிலையை விட இது மிக குறைவானதாக இருந்தது. அதன்பிறகு (இரண்டாவது முறையாக) ‘ருகூஉ‘ செய்து ‘ருகூஉவை‘ மிக நீட்டினார்கள். அது முதல் ருகூஉஐவிடக் குறைவானதாக இருந்தது. அதன்பிறகு ‘ஸஜ்தா‘ செய்தனர். ஸஜ்தாவை முடித்துக் கொண்டு எழுந்த நிலையில் நீண்ட நேரம் நின்றனர். முந்திய நிலையை விட அது குறைவாக இருந்தது. அதன்பிறகு ‘ருகூஉ‘ செய்தார்கள். ‘ருகூஉவை‘ நீண்ட நேரம் செய்தார்கள். முந்திய ‘ருகூஉவை‘விட இது குறைவாக இருந்தது. அதன் பிறகு ருகூவிலிருந்த தங்களது தலையை உயர்த்தி நின்றார்கள். நிலையை நீட்டினார்கள். முந்திய நிலையை விட இது குறைவாக இருந்தது. அதன்பிறகு ‘ஸஜ்தா‘ செய்தார்கள். அதன்பிறகு தொழுகையை முடித்துக்கொண்டு திரும்பினார்கள். (கிரகணம் நீங்கி) சூரியனில் வெளிச்சம் ஏற்ப்பட்டுவிட்டது. அப்போது ஜனங்களுக்கு பிரசங்கம் செய்யத் தொடங்கி..... அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றினர். அதன்பிறகு நிச்சயமாக சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவைகளாகும். நிச்சயமாக அவை இரண்டும் யாருடைய மரணத்திற்காகவோ அல்லது யாருடைய பிறப்புக்காகவோ அவைகளில் கிரகணம் ஏற்படாது. அவையிரண்டிற்கும் அந்நிலை ஏற்பட நீங்கள் கண்டால் (அல்லாஹ்வை) உயர்வுபடுத்துங்கள். (தக்பீர் கூறுங்கள்) இன்னும் அல்லாஹ்விடம் (அது நீங்க) துஆ செய்யுங்கள் தொழுகவும்.... செய்யுங்கள். தர்மம் செய்யுங்கள் முஹம்மதின் உம்மத்தவர்களே! அல்லாஹ்வின் அடியான் விபச்சாரம் செய்யின், அவனது அடியாள் விபச்சாரம் செய்யின் அல்லாஹ்வைவிட மிகுந்த ரோஷமுடையவர் முஹம்மதின் உம்மத்தவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் அறிந்தவற்றை நீங்கள் அறிவீர்களானால் நிச்சயமாக அதிகமாக அழுவீர்கள் நிச்சயமாக குறைவாய்ச் சிரிப்பீர்கள். தெரிந்து கொள்(ளுங்கள்) நான் எத்தி வைத்து விட்டேனா? (என பிரசங்கம் செய்தனர்.)

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு : இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளபடி நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சூரிய கிரகணத் தொழுகையை ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டு ருகூஉ செய்து தொழுதுள்ளார்கள் என்பது தெளிவு. ஆக அத்தொழுகையை இரண்டு ரக் அத்து நான்கு ருகூஉகள் கொண்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதையடுத்த 446 ஹதீஸில் வந்துள்ளது போல் அல்ல. அந்த அறிவிப்பு தனிப்பட்டதாகும். 445 வது ஹதீஸில் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிப்பில் உள்ளதே மிகச் சரியானதாகும் என்பதை முன்பே குறிப்பிட்டுள்ளோம்.

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நான்கு ஸஜ்தாக்கள் செய்து எட்டு ரக்அத்துகளை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.

ஹதீஸ் எண் : 446

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நான்கு ஸஜ்தாக்கள் செய்து எட்டு ரக்அத்துகளை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா

‘மழைக்காக தொழும் தொழுகை‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 447

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுமிடத்திற்கு வந்து (மழை பெய்யச் செய்யுமாறு வேண்டினர்.) பிரார்த்தனை செய்ய விரும்பிய போது கிப்லாவை முன்னோக்கி தங்களது மேலாடையை திருப்பினர். என அப்துல்லாஹ் பின் ஜைது அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்.

மற்றொரு அறிவிப்பில், ஜனங்களின் பால் தங்களது முதுகை ஆக்கி கிப்லாவை முன்னோக்கி அல்லாஹ்விடம் துஆ செய்தனர் (அதன்பிறகு) மேலாடையைத் திருப்பினர். அதற்குப்பிறகு இரண்டு ரக்அத் தொழுதனர் என உள்ளது.

ஹதீஸ் எண் : 448

எங்களையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களையும் மழை பிடித்துக் கொண்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது ஆடையை உடலின் சில பகுதிகளிலிருந்து மழை (நீர் நன்றாக)ப்படும் அளவிற்கு நீக்கினர். (அப்போது) ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என நாங்கள் கேட்டோம். தனது இரட்சகனின் படைப்பில் அது (மழையானது) புதியதாகும் என்பதற்காக! என உரைத்தனர்.

அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

‘காற்று, மேகம் ஆகியவற்றின் போது காக்கத் தேடுவதும், மழையின் போதும் மகிழ்ச்சி அடைவதும்‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 449

காற்று கடுமையாகிவிட்டால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘அதன் நன்மையையும் அதனால் ஏற்படும் (அது தாங்கி வரும்) நன்மைகளையும், எந்த நன்மைக்காக அது அனுப்பபட்டதோ, அதையும் உன்னிடம் நிச்சயமாக நான் கேட்கிறேன். இன்னும் அதன் தீமை அதனால் ஏற்படும் தீமைகள், இன்னும் எத்தீமைகளுக்காக அது அனுப்பப்பட்டதோ? அத்தீமை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் காக்கத்தேடுகிறேன் என கூறுவார்கள்.

வானத்தில் மேகம் கூடி இடிமின்னல்களோடு மழை பொழிய தயாராகி விட்டால் அவர்களின் நிறம் மாறிவிடும். (அப்போது) வெளியில் செல்வார்கள். உள்ளே நுழைவார்கள். முன்னே செல்வார்கள். பின்னே வருவார்கள். (இவ்வாறு இருக்க) மழை பெய்துவிட்டால் கவலை போய் மகிழ்ச்சி ஏற்பட்டு விடும் அதை அவர்களின் முகத்தில் தெரிந்து கொள்வேன்.

நான் அதுபற்றிக் கேட்டேன். ஆது கூட்டத்தினர் கூறியது போன்று அது இருக்கலாம் ஆயிஷாவே! என்றனர். அது (மேகங்கள்) அவர்களது பள்ளத்தாக்குகளை நோக்கி குறுக்கிட்டு வந்ததை அவர்கள் பார்த்தபோது வாகனத்தின் உச்சியில் குறுக்கிட்டுவந்த இம்மேகம் எங்களுக்கு மழையைக் கொண்டுவரும் என அவர்கள் (ஆது கூட்டத்தினர்) கூறினர்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு : 1 இம்மாதிரி மேகங்களுக்குப்பிறகு அல்லாஹ் மழையை பெய்யவைக்கிறான் என்பதே இதன் கருத்து.

கிழக்குத் திசைக்காற்று மற்றும் மேற்கு திசைக்காற்று பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 450

‘கிழக்குத் திசைக்காற்றின் மூலம் வெற்றியளிக்கப்பட்டேன். மேற்குத் திசைக்காற்றினால் ஆது கூட்டத்தினர் அழிக்கப்பட்டனர்‘ என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஜனாஸாவின் சட்டங்கள் பற்றிய நூல்

வியாதியஸ்தர்களை வினவுதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 451

நாங்கள் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் வீற்றிருந்தோம். அச்சமயம் அன்ஸாரிகளிலிருந்து ஒரு மனிதர் அவர்களிடம் வந்து ஸலாம் கூறினார். (கூறிவிட்டு) அவர் திரும்பியதும் சென்று விட்டார்.

(அவர்களுடன் இருந்த அன்ஸார்களில் ஒருவரை நோக்கி) அன்ஸாரி சகோதரரே! எனது சகோதரர் ஸஅது பின் உபாதா எவ்வாறு உள்ளார்? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், நன்றாக உள்ளார் எனக்கூறினார். (அப்போது) உங்களில் அவரை நலம் விசாரிக்க செல்பவர் யார்? எனக் கேட்டார்கள். (கேட்டுவிட்டு) அவர்கள் எழவும் செய்தார்கள். நாங்களும் எழுந்தோம். நாங்கள் பத்துக்கும் அதிகமானவர்கள் (அவர்களுடன்) இருந்தோம். எங்களின் கால்களில் செருப்புகளோ, காலுரைகளோ, (தலையில்) தொப்பிகளோ, (உடலில்) சட்டைகளோ, (அணிந்து) இருக்கவில்லை. (இந்நிலையில்) கரடு முரடான அந்தப்பகுதியில் நாங்கள் நடந்து முடிவாக அவரிடம் வந்தடைந்தோம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களுடனிருந்த அவர்களது தோழர்களும், அவர்பால் நெருங்கும்வரை அவரைச் சுற்றியிருந்த அவரது கூட்டத்தவர்கள் பிந்தி(தள்ளி)க் கொண்டனர்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹுமா

மய்யித்தினிடத்திலும் வியாதியஸ்தரிடமும் சொல்லப்பட வேண்டியவைகள் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 452

வியாதியஸ்தரை நலன் விசாரிக்க, இறப்பெய்தியவரை (பார்த்துவர) நீங்கள் சென்றால் நன்மையானவற்றையே (நல்ல துஆக்களையே) கூறுங்கள். நிச்சயமாக அமரர்கள் நீங்கள் கூறுக்கூடியவற்றிற்கு ‘ஆமின்‘! கூறுகிறார்கள்.

அபூஸலமா மரணித்த பொழுது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வ(ந்தேன்)து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! நிச்சயமாக அபூஸலமா இறப்பெய்திவிட்டார் எனக்கூறினேன். யா அல்லாஹ்! எனக்கும் அபூஸலாமாவுக்கும் பாவமன்னிப்புச் செய்வாயாக! அவரிலிருந்து எனக்கு அழகான ஒரு முடிவை அதன்(பின்னனியில்) தந்தருள்வாயாக! எனக்கூறுமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்; கூறினார்கள். (அதற்கொப்ப) அவ்வாறே நானும் கூறினேன். அவரைவிட மிகச்சிறந்தவர்களான முஹம்மது ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை எனக்கு அல்லாஹ் அவருக்குப்பிறகு நல்கினான் என உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

மரணம் சம்பவிக்க இருப்பவர்களுக்கு லாஇலாஹ இல்லல்லாஹுவை சொல்லிக் கொடுத்து நினைவுபடுத்துதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 453

உங்களில் இறப்பெய்தப்போகும் (சக்ராத்) நிலையில் இருப்பவர்களுக்கு “லாயிலாஹ இல்லல்லாஹு (என்ற கலிமா)வை நினைவுபடுத்துங்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 454

அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்பி விட்டாரோ, அவரது சந்திப்பை அல்லாஹ்வும் விரும்பி விடுகிறான், யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுத்து விட்டாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுத்து விடுகிறான் (என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும்) அல்லாஹ்வின் நபியவர்களே! மரணத்தை வெறுப்பது தானா? நாம் அனைவரும் மரணத்தை வெறுக்கிறோமே என நான் கேட்டேன். அதற்கவர்கள் அவ்வாறல்ல எனினும் மூமினானவர், அல்லாஹ்வின் அருளையும் அவனின் பொருத்தத்தையும், அவனது சுவனத்தையும் கொண்டு நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை அவர் விரும்பி விடுகிறார். (அது போன்றே) அல்லாஹ்வும் அவரது சந்திப்பை விரும்பி விடுகிறான்.

நிச்சயமாக நிராகரிப்பவன் அல்லாஹ்வின் தண்டனை பற்றியும், அவனது கோபத்தை பற்றியும் நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை அவனும் வெறுத்து விடுகிறான். (அது போன்றே) அல்லாஹ்வும் அவனை சந்திக்க வெறுப்படைந்து விடுகிறான் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.

ஷுரைஹ் பின் ஹானீ (என்பவர்) அபூஹுரைரா அறிவித்தாக ஒரு அறிவிப்பில் கீழ்வருமாறு அறிவிக்கிறார்கள்.

“அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்பி விட்டாரோ! அவரது சந்திப்பை அல்லாஹ்வும் விரும்பி விடுகிறான், அல்லாஹ்வின் சந்திப்பை யார் வெறுத்து விட்டாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுத்து விடுகிறான்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். (என்ற கூற்றை எடுத்துக்கொண்டு ஷுரைஹ் பின் ஹானீ ரளியல்லாஹு அன்ஹு) கீழ்வருமாறு கூறுகிறார்.)

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நான் வந்து விசுவாசிகளின் தாயே, அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி (மேற்கூறப்பட்ட) ஹதீஸை கூறிவிட்டு, அது அவ்வாறே இருப்பின் நாமெல்லாம் நாசமாகி விட்டோம் என்று கூறினேன். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றின் மூலம் நாசமாகக் கூடியவன் நாசமாகிவிட்டான் என்றீரே அது எந்தக் கூற்று! என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கேட்டனர். அதற்கவர், அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்பிவிட்டாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்பி விடுகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுத்து விட்டாரோ, அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுத்து விடுகிறான். நம்மவர்களில் எவருமில்லை அவர் மரணிப்பதை வெறுக்கக்கூடியவராகவே தவிர எனக்கூறினார். (அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்) அதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தான் கூறியிருக்கிறார்கள். (ஆனால்) அதற்கு நீர் கொண்ட கருத்தைப் போன்றல்ல. எனினும் பார்வை நீண்டு உயர்ந்து விட்டால், மேல் மூச்சு கீழ்மூச்சு ஏற்பட்டு மனதில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டால், முடி நட்டுவிடுமேயானால், விரல்களெல்லாம் மடங்கி சுருங்கி விடுமானால் (இவ்வாறெல்லாம் ஏற்பட்டு மரணம் வந்து விடும் என்பது உறுதியாகி விட்ட நிலையில்) அல்லாஹ்வின் சந்திப்பை யார் விரும்புகிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ் விரும்புகிறான் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள் எனக்கூறுகிறார்.

மரணம் சம்பவிக்கும் போது உயர்வான அல்லாஹ்வைப்பற்றி நல்லெண்ணம் கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 455

“அல்லாஹ்வைக் கொண்டு அவரது எண்ணத்தை அழகானதாக ஆக்கியவராகவே அன்றி நிச்சயமாக உங்களில் எந்த ஒருவரும் மரணிக்க வேண்டாம்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களது மரணத்திற்கு மூன்று (நாட்களு)க்கு முன்பு கூறியதை நான் செவியுற்றேன் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்.

மய்யித் இருக்குமிடத்திற்கு ஆஜரானால் மய்யித்தின் கண்களை மூடி விடுவதும் அதற்காக துஆ செய்வதும் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 456

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அபூஸலமா (மரணத்தருவாயிலிருந்த போது)விடம் நுழைந்(அருகில் வந்)தார்கள். அவரது பார்வை மேல் நோக்கி விட்டது. ஆகவே அதை ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் மூடினார்கள். அதன்பிறகு “நிச்சயமாக உயிர் கைப்பற்றப்பட்டு விட்டால் பார்வை அதை தொடர்கிறது”1 எனக்கூறினார்கள். (உடனே) அவர் குடும்பத்தவர்களிலுள்ள மக்கள் பெரும் சப்தமிட்டனர். அப்போது (உங்களுக்காக) நலவானவற்றைக் கொண்டே தவிர துஆ செய்யாதீர்கள், ஏனெனில் அமரர்கள் உங்களது கூற்றுக்கு ஆமீன் கூறுகிறார்கள் எனக்கூறினார்கள்.

அதன்பிறகு “யா அல்லாஹ்! அபூஸலாமாவிற்கு பாவமன்னிப்புச் செய்வாயாக நேர்வழி பெற்றவர்களில் அவரது தரத்தை உயர்த்துவாயாக. மீதமிருப்பவர்களில் அவருக்குப்பிறகு அவரை (இழந்தற்குரிய) பகரத்தை நல்குவாயாக அகிலங்களின் இரட்சகனே! எங்களுக்கும் அவருக்கும் பாவமன்னிப்புச் செய்வாயாக அவரது கப்ரில் அவருக்கு விஸ்தீரனத்தை நல்கி அதில் ஒளியை ஆக்குவாயாக” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு : 1. உயிர் இறுதியாக உடலிருந்து கண்கள் வழியாகவே வெளியேறுகிறது. அவ்வாறு வெளிப்பட்ட உயிரை கண்கள் பார்த்தவாறு நின்று விடுகிறது.

மய்யித்தை மறைத்து (மூடி) வைப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 457

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இறப்பெய்திய போது (யமன் நாட்டைச் சேர்ந்த போர்வைகளில் ஒரு போர்வையை) துணியைக்கொண்டு மறைத்து (மூடி) வைக்கப்பட்டிருந்தார்கள்” என மூஃமின்களின் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

மூஃமின்களின் உயிர்கள், காஃபிர்களின் உயிர்கள் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 458

மூஃமினான மனிதரின் உயிர் (உடலிருந்து) வெளிப்பட்டுவிட்டால் இருமலக்குகள் அதை பெற்று (வானத்திக் பால்) உயர்த்தி (கொண்டு செல்)கின்றனர். (வானத்தின்பால் அம்மலக்குகள் அந்த உயிரை உயர்த்திக்கொண்டு செல்லும்பொழுது) அவ்வுயிர் நறுமணம் உடையதாக ஆகிறது. (அந்நறுமணம்) கஸ்தூரியின் மணத்தைப்போன்று இருப்பதாக ஹம்மாது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

(அவ்விரு மலக்குகளும் அவ்வுயிரை வானங்களுக்கு எடுத்துச் செல்லும் பொழுது) வானத்திலிருப்பவர்கள் நல்ல உயிர், பூமிப்பகுதியிலிருந்து வந்தது, (ஆகவே உயிரே) உன் மீதும், நீ எந்த உடலிருந்து வாழ்ந்து வந்தாயோ? அதன்மீதும் அல்லாஹ் அருள் செய்வானாக! எனக்கூறுகிறார்கள். (அதன்பிறகு) அதை அவர்கள் அதனின் இரட்சகனின் பால் கொண்டு செல்கின்றனர். (அங்கே) அதை அதற்குரிய கடைசித் தவணையின்பால் கொண்டு செல்லுங்கள் என அவன் (அல்லாஹ்) கூறுவான்.

நிச்சயமாக காஃபிருடைய (உடலிருந்து) உயிர் வெளிப்பட்டு விட்டால், அதன் துர்நாற்றத்தைப் பற்றியும், அதற்கு ஏற்படும் சாபத்தைப் பற்றியும் ஹம்மாது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

“பூமிப்பகுதியிலிருந்து வந்த இது கெட்ட உயிராகும் என வானத்தையுடையவர்கள் (அமரர்கள்) கூறுவர். (அப்போது) அதன் கடைசி தவணை வரை கொண்டு செல்லுங்கள் எனக் கூறப்படும் என (அறிவிப்பாளர்) கூறுகிறார். (அச்சமயத்தில்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் மேலிருந்த மிருதுவான துணியை தங்களின் மூக்கின்மேல்1 இவ்வாறு எடுத்துப் போட்டனர்” என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

குறிப்பு : 1. மூக்கின் மேல் (ரஸுல் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் வைத்தற்குரிய காரணம்:- காஃபிரானவரின் உயிரை எடுத்துச் செல்லும் போது ஏற்படும் கடும் துர்நாற்றத்தின் நிலையை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காட்டப்பட்டது அதை அவர்கள் நுகர்ந்தனர். அதன் காரணமாகவே துணியை மூக்கின் மேல் வைத்தனர்.

மனிதர்கள் வெறுக்கும் துன்பமானது திடீரென்று ஏற்பட்ட பொழுது பொறுத்திருத்தல் அது ஏற்பட்ட முதல் தருணத்திலாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 459

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘தனது குழந்தை இறந்துவிட்டால் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணின்பால் வந்தனர். (அப்போது அப்பெண்ணிடம்) அல்லாஹ்வை பயந்து கொண்டு பொறுத்துக் கொள்வாயாக! எனக் கூறினார்கள். அதற்கு அப்பெண், என் துன்பம் பற்றி நீங்கள் பொருட்படுத்தமாட்டீர்கள் (காரணம் அது உங்களுக்கு ஏற்படவில்லையே) எனக் கூறினாள். (அதன்பின் அங்கிருந்து) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சென்றுவிட்ட போது, அப்பெண்ணிடம் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களாவர் எனக்கூறப்பட்டது. (அதைக்கேட்டதுமே) மரணம் போன்றது (பயம்) அவளை பிடித்துக் கொண்டது. (உடனடியாக) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசலுக்கு வந்தாள் (ஆனால்) ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டு வாசலில் காவல்காரர்கள் யாரையும் அ(ப்பெண்)வள் பெறவில்லை, (இருக்கவில்லை) (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! உங்களை நான் (இன்னாரென்று) தெரிந்து கொள்ளவில்லை எனக் கூறினாள். அதைக் கேட்ட(அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்)அவர்கள், “எதிர்பாரத நிலையில் துன்பங்கள் ஏற்படும் முதல்தருணத்தில்தான் பொறுமையை (கடைபிடிக்க வேண்டும்)” எனக்கூறினர். அல்லது “எதிர்பாரத துன்பங்கள் ஏற்படும் முதல்நேரத்தில் தான் என்றனர்.”

யாருக்காவது பிள்ளைகள் இறந்து அதற்குரிய (பலனை) கணக்கை அவர் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 460

மூன்று பிள்ளைகள் உங்களில் யாருக்கேனும் இறப்பெய்தியதை (அல்லாஹ்விடம் கிடைக்கும் நன்மையை நாடி) அவள் பொறுத்துக் கொண்டாள் (அதன் நிமித்தம்) அவள் சுவனத்தில் நுழைந்துவிடுவதை தவிர வேறில்லை என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அன்ஸார்களின் பெண்களில் சிலரிடம் நிச்சயமாக கூறினார்கள். (அதைக்கேட்ட) அவர்களிலிருந்த ஒரு பெண், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே!, அல்லது இரண்டு (பிள்ளைகளாக) இருந்தாலுமா? எனக் கேட்டார். அல்லது இரண்டுக்கும்தான் எனக்கூறினார்கள்.

முஸ்லிம்களில் யாருக்கேனும் பிள்ளைகளில் மூன்று இறப்பதில்லை, சத்தியத்திற்குப் பரிகாரமாக அவரை நரக நெருப்பு தொடாது இருப்பதை தவிர, என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நபிகள் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வரை உயர்த்தப்பட்ட சரியான தொடரில் வந்துள்ளது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : சத்தியத்திற்கு பரிகாரம் என்பதன் கருத்து

அல்லாஹ் செய்த சத்தியத்தை நிறைவேற்றுகின்றானே அந்த அளவிற்கு நீங்கலாக என்பது கருத்து.

‘உங்களில் ஒவ்வொருவரும் நரகத்திற்கு வந்ததே (நுழைந்தே) தவிர இல்லை‘ என்ற அல்லாஹ்வின் கூற்றுக்கிணங்க ஒவ்வொருவரும் வரும்போது இவரும் வருவார். ஆனால் இவர் விஷயத்தில் நரகம் எந்த தீமையும் செய்யாது மாறாக அவருக்கு குளிராகவும் சாந்தியை நல்கக்கூடியதாகவும் இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இருந்தது போன்று மாறிவிடும்.

மேற்கூறப்பட்ட கருத்தை வலியுறுத்தி அல்லாஹ்வின் கூற்றுக்கொப்ப இவரும் நரகத்தில் நுழைவார். ஆனால் இவருக்கு தண்டனை இருக்காது என்பதே இதன் கருத்தாகும்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்