Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 21

  இரு பெருநாட்கள், பிரயாணியின் தொழுகை

அவர்கள் வியாபாரத்தை அல்லது வீண் காரியத்தை பார்த்து விடுவார்களானால் உங்களை நின்ற நிலையில் விட்டு விடுவர் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 421

நிச்சயமாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஜும்ஆ‘ தினத்தன்று நின்றவாறு குத்பா ஓதிக்கொண்டிருந்தார்கள். (அப்பொழுது) ஷாம் தேசத்திலிருந்து (தானியங்களைச் சுமந்த) ஒட்டகங்கள் வந்து சேர்ந்தன. (அச்சமயத்தில்) பனிரெண்டு ஆடவர்களைத் தவிர (மற்ற) ஜனங்களெல்லாம் அதன்பால் சென்று விட்டனர். (அப்பொழுது தான்) “அவர்கள் வியாபாரத்தை அல்லது வீண் காரியத்தை பார்த்து விடுவார்களானால், உங்களை நின்ற நிலையில் விட்டு விட்டு அதன்பால் சென்று விடுவர்” என்ற ‘அல்ஜும்ஆ‘ அத்தியாயத்திலுள்ள இவ்வசனம் இறக்கப்பட்டது.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லா ரளியல்லாஹு அன்ஹுமா

குறிப்பு : 1 வெளிநாட்டிலிருந்து வியாபார பொருட்களை சுமந்து வந்த ஒட்டகங்களைக் கண்டதும் வியாபார நோக்கில் அவர்கள் சென்றுவிட்ட நிலையைக் குறிக்கவே. தானியங்களை சுமந்த ஒட்டகங்கள் வந்து சேர்ந்தன என ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

‘ஜும்ஆ‘ தொழுகையில் (எதை) ஓதப்பட வேண்டுமென்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 422

இரண்டு பெருநாட்களிலும், ‘ஜும்ஆ‘ விலும் “ஸப்பிஹிஸ்ம ரப்பி(க்)கல் அஃலா” (என்ற அத்தியாத்தை)தையும் “ஹல் அதாக்க ஹதீஸில் ஃகாஷியா” (என்ற அத்தியாத்தையும்)வையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதக்கூடியவர்களாக இருந்தனர். ‘ஜும்ஆ‘வும், ‘ஈதுப்பெருநாளும்‘ ஓரே தினத்தில் ஒன்று சேர்த்து (வந்து) விட்டாலும் அவ்விரண்டு அத்தியாயங்களை(க் கொண்டே)யே அவ்விரு தொழுகைகளிலும் அவர்கள் ஓதக்கூடியவர்களாகவும் இருந்தனர்.

அறிவிப்பவர் : நுஃமான், பின் பஷீர் ரளியல்லாஹ் அன்ஹுமா

ஜும்ஆவிற்குப் பிறகு பள்ளியில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 423

“ஜும்ஆவிற்குப் பிறகு, நீங்கள் தொழுதால் நான்கு (ரக்அத்) தொழுங்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

உம்மை ஏதாவதொன்று அவசரப்படுத்தினால் பள்ளியில் இரண்டு (ரக் அத்துகளை) தொழுவீராக! (வீட்டிற்கு) திரும்பினால் இரண்டு ரக் அத்து தொழுவீராக என ஸுஹைல் கூறினார் என மற்றொரு அறிவிப்பில் வந்துள்ளது

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

ஜும்ஆவிற்குப் பிறகு வீட்டில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 424

அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் ‘ஜும்ஆ‘ தொழுகையைத் தொழுதுவிட்டால் (அங்கிருந்து வீட்டிற்கு) திரும்பி(ச் சென்று) இரண்டு ரக்அத்துகள் வீட்டில் தொழுவார்கள் அதன்பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு தான் செய்தார்கள் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹ் அன்ஹு

‘ஜும்ஆவிற்குப் பிறகு பேசும் வரை அல்லது வெளியாகும் வரை தொழுக வேண்டாம்‘ என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 425

ஸாயிப் பின் உக்த் நமிர் என்பவருக்கு தொழுகையில் ஏற்ப்பட்ட ஒரு விஷயத்தை, முஆவியா பார்த்திருந்தாரே அது பற்றி கேட்க நிச்சயமாக நாஃபிஉ பின் ஜுபைர் என்பவர் (அம்ருபின் நாபிஐ) அனுப்பி வைத்தார்.

(அப்போது அஸ்ஸாயிப் அவர்கள்) மக்ஸூராவில் (பள்ளியில் கல்லால் கட்டப்பட்ட அறையில்) ‘ஜும்ஆ‘வை நான் தொழுதேன். இமாம் ஸலாம் கொடுத்ததும் என்னிடத்திலிருந்து எழுந்து (அடுத்த தொழுகையைத்) தொழுதேன். ஆவர் (முஆவியா) உள்ளே நுழைந்ததும் என்பால் (ஒருவரை அனுப்பி தம்மிடம் வருமாறு கூறி) அனுப்பினார். (நான் அவரிடம் சென்றதும்) நீ செய்ததை மீண்டும் செய்யாதே! என்றார். ‘ஜும்ஆவை நீ தொழுதால் நீ பேசும் வரை அல்லது நீ வெளியாகும் வரை(வேறு) தொழுகையைக் கொண்டு அதோடு நீர் சேர்க்க வேண்டாம்‘. காரணம், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அதைக் கொண்டு (அவ்வாறு செய்யுமாறு) கட்டளையிட்டார்கள். (அதாவது) எத்தொழுகையாயினும் பேசும்வரை அல்லது வெளியாகும் வரை வேறொரு தொழுகையைக் கொண்டு நாங்கள் சேர்க்க வேண்டாமென (கட்டளையிட்டார்கள்)

அறிவிப்பவர் : உமர் பின் அதாஉ ரளியல்லாஹு அன்ஹு

ஜும்ஆவை விட்டு விடும் விஷயத்தில் கடுங்கண்டனம் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 426

‘ஜும்ஆ‘ களை விட்டு விடுகிறார்களே அவர்கள் அவ்வாறு விடுவதிலிருந்து கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளவும். அல்லது (அவ்வாறு செய்யவில்லையெனில்) அல்லாஹ் அவர்களது இதயங்களின் மீது முத்திரையிட்டு விடுவான். அதன்பிறகு அவர்கள் மறதியாளர்களில் ஆகிவிடுவார்கள் என மிம்பரின் கட்டளைகளின் மீது இருந்தவாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறக்கேட்டதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஹக்கம் பின் மீனாஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அறிவித்தனர்.

இரு பெருநாட்கள்

இரு பெருநாட்களில் பாங்கையும் இகாமத்தையும் விட்டுவிடுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 427

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒருமுறை இருமுறையல்லாத (பல சந்தர்பங்களில்) பாங்கும் இகாமத்துமின்றி இரு பெருநாள் தொழுகைகளை நான் தொழுதிருக்கிறேன் என ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இரு பெருநாள் தொழுகையும் குத்பாவுக்கு முன்பு தொழவேண்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 428

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், அபூபக்ரு, உமரு, உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹும் அஜமஈன்) ஆகியோருடன் நான் நோன்பு பெருநாள் தொழுகைக்கு ஆஜராகியிருக்கிறேன். அவர்களனைவரும் அத்தொழுகையை குத்பாவுக்கு முன் தொழக் கூடியவர்களாக இருந்தனர். அதன் (தொழுகையை முடித்துக் கொண்ட) பிறகு குத்பா ஓதக்கூடியவர்களாக இருந்தனர்.

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘குத்பா‘வை முடித்துக் கொண்டு இறங்கி, தங்களது கையினால் சைக்கிணை செய்து ஆடவர்களை அமரச்செய்யும் போது நான் (அதனைப்) பார்க்க கூடியவனைப் போன்று இருக்கிறேன். அதன்பிறகு அவர் (ஆண்)களுக்கு மத்தியில் (இருந்து) புறப்பட்டு பெண்களை முன்னோக்கி (பெண்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு) வந்து சேர்ந்தனர். (அப்பொழுது) அவர்களுடன் பிலால் ரளியல்லாஹு அன்ஹும் இருந்தனர்.

“நபியவர்களே! மூஃமினான பெண்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணையாக்கமாட்டார்கள் என உங்களிடம் உடன்படிக்கை செய்து கொள்ள வருவார்களாயின்” என்ற வசனத்தை முடியும் வரை ஓதிவிட்டு, நீங்கள் (அவ்வாறு) அதன்மீது தானே இருக்கீறிர்கள் எனக்கேட்க, அப்பெண்களில் ஒருவர் அல்லாஹ்வின் நபியவர்களே! ஆம்! என்றார். அப்பெண்ணைத்தவிர மற்றெவரும் அவர்களில் பதில் கூறவில்லை. அப்பெண் யாரென்று அச்சமயத்தில் அறியப்படவுமில்லை அப்போது (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம); அவர்கள் “தர்மம் செய்யுங்கள்” என்றனர். (அப்போது) பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களது (புடவை) ஆடையை விரித்து, எனது தாய் தந்தையர் உங்களுக்கு அர்பணமாகட்டும். வாருங்கள், (தாருங்கள்) என்றனார்கள். அப்பெண்கள் (தாங்களணிந்திருந்த) பெரும் மோதிரங்களையும் (சாதாரண சிறிய) மோதிரங்களையும் பிலால் ரளியல்லாஹு அன்ஹு விரித்திருக்க ஆடையில் போட்டனர்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு

இரு பெருநாள் தொழுகையில் ஓதப்பட வேண்டியவை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 429

(ஈதுல்)அள்ஹா, பித்ரு (ஆகிய பெருநாள்) தொழுகைகளில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதி வந்தது (அத்தியாங்கள்) பற்றி அபூவாகித் அல்லைதியிடம், உமர் பின் கத்தாபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நிச்சயமாக கேட்டார்கள். (அதற்கவர்) அவ்விரண்டு (தொழுகையி)லும் “காஃப் வல் குர்ஆனில் மஜீதுவையும், இக்தரபதிஸ் ஸாஅ(த்)து வன்ஷக்கல் கமரு” வையும் ஓதக்கூடியவர்களாக இருந்தனர் எனக்கூறினார்.

அறிவிப்பவர் : உபைதுல்லாஹ் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா

பெருநாள் தொழுகை தொழுமிடத்தில் அத்தொழுகைக்கும் முன்பும், அதற்குப் பின்பும் தொழுவதை விட்டு விட வேண்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 430

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஹஜ்ஜுப்‘ பெருநாள் அல்லது ‘நோன்புப் பெருநாள‘ன்று (வீட்டிலிருந்து) புறப்பட்டு (வந்து பெருநாள் தொழுகை) இரண்டு ரக்அத்து தொழுதனர். அதற்கு முன்போ அதற்கு பிறகோ அவர்கள் தொழவில்லை. அதன் பிறகு பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடனிருக்க பெண்களிடம் வந்து, தர்மம் செய்யுமாறு அவர்களுக்கு கட்டளையிட்டனர்.

பெண்(கள்) தங்கம் மற்றும் வெள்ளியிலான சிறிய வளையம் மற்றும் காதணிகளை போட்ட(னர்)து. கழுத்தில் அணியும் பெரிய மாலைகளையும் போட்ட(னர்)து.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : பெண்கள் போட்டனர். போட்டுக் கொண்டே இருந்தனர் என்ற வாசகம் வேறொரு அறிவிப்பில் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த ஹதீஸில் ஒரு பெண்ணைக் குறிப்பிட்டு மாத்திரம் உள்ளதால் இரண்டு வார்த்தைகளின் பொருளையும் சேர்த்துக் கொள்ளும் முறையில் போட்டது (போட்டனர்) என மொழி பெயர்த்துள்ளேன்.-மொழிபெயர்ப்பு அசிரியர்.

இரண்டு பெரு நாட்களில் பெண்கள் (பெரு நாள் தொழுகைக்காக) புறப்பட்டு வருதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 431

பருவமடைந்த, பருவமடைய இருக்கின்ற திருமணம் தாமதமாகி தந்தை வீட்டிலேயே இருக்கும் பெண்கள் திரைக்கு அப்பாலிருக்கும் பெண்கள் ஆகியோரை ஈதுல் பிஃத்ரு ஈதுல் அள்ஹா ஆகிய (இரண்டு பெரு) நாட்களில் (தொழுகைக்காக) வெளியேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். ஆகவே (அவர்களில்) மாதவிலக்கு வரும் பெண்கள் தொழுகையை தவிர்பார். “நன்மையானவற்றுக்கும் முஸ்லீம்களின் துஆவிற்கும்1 அவர்கள் ஆஜராகவும்” (என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். அப்போது எங்களில் ஒரு பெண்) ‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே! எங்களில் ஒருத்திக்கு முகம், நெஞ்சு, முதுகு ஆகிய பகுதிகளை மறைக்கும் மறைப்புத்துணி இல்லாதிருப்பின்?‘......(என்ன செய்வது? எனக்கேட்டாள்) அதற்கவர்கள் “அவர்களது சகோதரி தனது மறைப்புத்துணியிலிருந்து அவளுக்கு அணிவிக்கட்டும்” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு அ(த்)திய்யா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு : 1 இந்த ஹதீஸில் இடம்பெறும் ‘தஃவத்‘ என்ற அரபிச் சொல்லுக்கு பொருத்தமான பொருள் ‘துஆ‘ என்பதேயாகும். ஏனெனில் ‘துஆ‘வை ‘தஃவத்‘ என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் போது நாம் அதற்கு வேறு பொருள் கொள்வது தவறல்லவா? ‘வதஃவது தின்னூன்‘ என்பதற்கு யூனூஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ‘துஆ‘ என சரியான ஹதீஸில் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் என்பதை கவனத்தில் கொள்க

ஈதுப் பெருநாளன்று சிறு பெண்கள் கூறிய கூற்று பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 432

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். (அப்போது அவ்ஸ் கஜ்ரஜ் கூட்டத்தவர்களுக்கு மத்தியில் அறியாமைக் காலத்தில் நடந்த போர்களில் பாடப்பட்ட பாடல்களை) என்னிடம் இரு சிறு பெண்கள் பாடிக்காட்டிக் கொண்டிருந்தனர். (நுழைந்த நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) படுக்கையில் படுத்து தங்களது முகத்தை (அப்புறம்) திருப்பிக் கொண்டனர். (அது சமயம்) அபூபக்ரு ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் நுழைந்து என்னை விரட்டினர். ஷைத்தானின் (கை தட்டலோடு கூடிய) ராகங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டிலா? எனக்கூறினார்கள். (இதைக்கேட்ட) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அவ்விருவரையும் விட்டு விடுங்கள்‘ எனக்கூறினர். (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் மறந்திருந்த சமயம் (பார்த்து) அவ்விரு பெண்களையும் கிள்ளிவிட்டேன். அவ்விருவரும் வெளியேறிவிட்டனர். அன்று பெருநாளாக இருந்தது. கருப்பர்கள் விளையாட்டுப் போர் சாதனங்களை வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர். (அப்போது) நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை கேட்டிருக்க வேண்டும் அவ்வாறு இல்லையெனில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களே என்னைப்பார்த்து பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக்கேட்டிருக்க வேண்டும். (அதற்கு) நான் ஆம் எனக்கூறினேன். என்னைத் தங்களுக்குப் பின்னால் நிற்க வைத்துக் கொண்டனர். என் கன்னம் அவர்களது கன்னத்தின் மீது இருந்தது. அப்போது அவர்கள் பனீ அர்பிதா அபிஸீனியப் பிள்ளைகளே! நான் சோர்வடைந்து விடும்வரை, உங்கள் விளையாட்டில் ஈடுபடுங்கள் எனக்கூறியவர்களாக இருந்தனர். (நான் சோர்வடைந்துவிட்டதைப் பார்த்து) உனக்குப் போதுமா? என்றார்கள் நான் ‘போதும்‘ எனக் கூறினேன். ‘சென்று விடு‘ எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா

பிரயாணியின் தொழுகை

அமைதியாக இருக்கும் நிலையில் பிரயாணி தொழுகையைக் குறைத்துக் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 433

“நிராகரித்து விட்டார்களே அவர்கள் உங்களைக் குழப்பத்தில் ஆக்கி விடுவார்கள் என நீங்கள் பயந்தால் (நான்கு ரக் அத்து தொழுகையை இரண்டு ரக்அத்து தொழுகையாக) சுருக்கித் தொழுவது உங்கள் மீது குற்றமல்ல” என்ற வசனத்தைப் பற்றி உமர் பின் கத்தாபிடம் நான் கேட்டேன். நிச்சயமாக ஜனங்கள் (பாதுகாப்பு) அபயம் பெற்று விட்டார்கள். (அல்லவா? அவ்வாறிருக்க நான்கை இரண்டாக ஏன் சுருக்கித் தொழ வேண்டும் என்ற கருத்தில் ‘நிச்சயமாக ஜனங்கள் அபயம் பெற்று விட்டார்கள்‘ என்ற கூற்று இடம் பெற்றுள்ளது இதைக் கேட்ட அவர்கள்) நீர் எதைப்பற்றி ஆச்சரியப்பட்டீரோ? அதைப்பற்றி நானும் ஆச்சரியப்பட்டு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் அது தர்மமாகும் உங்கள் மீது அல்லாஹ் அதை தர்மம் செய்துள்ளான். அவனது தர்மத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : யஃலாபின் உமய்யா ரளியல்லாஹ் அன்ஹா

ஹதீஸ் எண் : 434

பிரயாணம் அல்லாத (செந்த ஊர் அல்லது சொந்த ஊர் போன்ற ஊரில் இருக்கும்) போது தொழுகையை நான்கு ரக்அத்தாகவும், பிரயாணத்தில் இரண்டு ரக்அத்தாகவும் பயந்த சமயத்தில் ஒரு ரக்அத்தாகவும் நிறைவேற்ற உங்களது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் நாவின் மூலம் அல்லாஹ் தொழுகையை கடமையாக்கி உள்ளான் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹ் அன்ஹுமா அவர்கள் கூறுகிறார்கள்.

பிரயாணத்தின் போது எந்த அளவில் தொழுகையை குறைத்துத் தொழ வேண்டுமென்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 435

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் மதினாவிலிருந்து மக்காவிற்கு புறப்பட்டோம். (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) திரும்பி வரும்வரை (நான்கு ரக் அத்து தொழுகைகளை) இரண்டிரண்டாக தொழுது கொண்டனர் என ஒருவர் (ஒரு அறிவிப்பவர்) கூறினார். மக்காவில் எத்தனை நாட்கள் தங்கி இருந்தார்களெனக் கேட்டேன்? ‘பத்து நாட்கள்‘ என்றார்.

“மதினாவிலிருந்து ஹஜ்ஜிற்கு நாங்கள் புறப்பட்டோம்” என மற்றொரு அறிவிப்பில் உள்ளது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

‘மினா‘வில் (நான்கு ரக் அத்து தொழுகையை) இரண்டு ரக் அத்தாக சுருக்கிக் கொள்வது‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 437

நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களும், அபூபக்ரு, உமர், உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்) ஆகியோரும் மினாவில் எட்டு அல்லது ஆறு வருடங்கள் (ஹஜ்ஜுக்குப் போகும் போது) மினாவில் பிரயாணியின் தொழுகையை தொழுதனர். இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்கள், மினாவில் இரண்டு ரக்அத்து தொழுதுவிட்டு தங்களது படுக்கைக்கு வறுவர். ‘எனது சிறிய தந்தையே! அதற்குப்பிறகு இரண்டு ரக்அத்து தொழுதால்?------‘ என்றேன். அவ்வாறு செய்வதாக இருப்பின் தொழுகையை நிறைவாக தொழுதிருப்பேன் என்றார்கள் என ஹஃபஸ் அதாவது இப்னு ஆஸிம் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்.

பிரயாணத்தில் இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 438

நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவசரமாக பயணம் புறப்பட்டுவிட்டால் ‘ளுஹரை‘ ‘அஸரின்‘ முதல் நேரம் வரை பிற்படுத்தி அவ்விரு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவார்கள். (அதைப் போலவே) மக்ரிபை பிற்படுத்தி அதையும் இஷாவையும் சேர்த்து செம்மேகம் மறையக்கூடிய சமயத்தில் தொழுவார்கள் என அனஸ்பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

ஊரில் இருக்கும்போது இரு தொழுகைகளை சேர்த்துத் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 439

மழை இல்லாத சமயத்திலும், பயமற்ற நிலையிலும் மதினாவில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ளுஹரையும்‘ அஸரையும்‘, மேலும் ‘மக்ரிபையும்‘ ‘இஷாவையும்‘ சேர்த்துத் தொழுதுள்ளார்கள் என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள்? என்பதாக நான் (வகீஉ) கேட்டேன். அதற்கவர்கள் தங்களது உம்மத்தவர்களை சிரமப்படுத்தாமலிருக்கவே (அவ்வாறு தொழுதார்கள்) எனக் கூறினார்கள் என வகீஉவின் ஹதீஸில் வந்துள்ளது.

இப்னு, அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்களிடம், ‘ஏன் (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) அவ்வாறு செய்ய நாடினார்கள்?‘ என கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ‘அவர்களது உம்மத்தவர்களுக்கு சிரமம் ஏற்படாமலிருக்க நாடினார்கள்‘ எனக்கூறினார்கள் என்பதாக அபீமு ஆவியாவின் ஹதீஸில் வந்துள்ளது.

‘மழையின் போது இருப்பிடத்திலேயே தொழுது கொள்வது‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 440

குளிர் காற்று மழை ஆகியவை உள்ள இரவுகளில் நிச்சயமாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தொழுகைக்கு அழைத்து அதன் இறுதியில் ‘உங்களது இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். (உங்களது) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்‘ எனக் கூறினார்கள். அதன்பிறகு “குளிர் உள்ள இரவில், பயணத்தில் மழையுள்ள இரவில் உங்களின் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் எனக்கூறுமாறு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (தொழுகைக்கு) அழைப்பவருக்கு கட்டளையிடக் கூடியவர்களாக இருந்தார்கள்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு, உமர் ரளியல்லாஹு அன்ஹுமா

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்