Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 19

தொழுகை பற்றிய நூல்
 
இரவில் எழுந்ததும் தொழுகைக்காக நின்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதும் துஆ

ஹதீஸ் எண் : 381

நடு இரவில் தொழுகத் தயாரானால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘யா அல்லாஹ்! உனக்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக! நீயே வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளியாக இருக்கிறாய், உனக்கே எல்லாப் புகழும்! நீயே வானங்களையும் பூமியையும் நிலை நிறுத்தி வைப்பவன்! உனக்கே எல்லாப்புகழும்! நீதான் வானங்கள் பூமி அவற்றிலிருப்பவை அனைத்திற்கும் இரட்சகன்! நீதான் உண்மையானவன்! உனது வாக்கு உண்மையானது! உனது கூற்று உண்மையானது! உன் சந்திப்பு உண்மையானது! சுவனம் உண்மையானது! நரகம் உண்மையானது! இறுதி நாள் உண்மையானது! யா அல்லாஹ்! உனக்கே நான் முற்றிலும் சிரம்பணிந்தேன். (என்னை நான் உன்னிடமே முழுமையாக ஒப்படைத்துவிட்டேன்)

உன்னைக் கொண்டே நான் ஈமான் கொண்டுள்ளேன். உன்னைக் கொண்டே வழக்குத் தொடர இருக்கிறேன். உன்னிடமே தீர்ப்பைத் தேடிவர இருக்கிறேன். நான் முற்படுத்தியவற்றையும், பிற்ப்படுத்தியவற்றையும் நான் மறைந்திருந்தவற்றையும் நான் பகிரங்கப்படுத்தியவற்றையும், நீ எனக்கு மன்னித்தருள்வாயாக! நீதான் எனது (இலாஹ) ஏகன்! என்னால் வணங்கப்படுபவன், வணங்கப்படுபவன் உன்னையன்றி வேறறெவருமில்லை எனக் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு

இரவுத் தொழுகையின் முறையும், அதன் ரக்அத்துகளின் எண்ணிக்கையும் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 382

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், இரவில் 13 ரகஅத்துகள் தொழுவார்கள். அதில் ஜந்து ரக்அத்தை கொண்டு ‘வித்ரு‘ தொழுவார்கள். அதன் (ஜந்தாவதின் ரக்அத்தில்) கடைசியிலே தவிர (இடையில்) அவற்றில் எந்த ரக்அத்திலும் (இடை இருப்பு) உட்காரமாட்டார்கள், என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

இரவுத் தொழுகை இரண்டு இரண்டு ஆகும், இரவின் கடைசிப்பகுதியில் ‘வித்ரு‘ ஒரு ரகஅத்தாகும், என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 383

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் இரவுத் தொழுகைப்பற்றி நிச்சயமாக கேட்டார், அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், ‘‘இரவுத் தொழுகை இரண்டு இரண்டாகும். உங்களில் ஒருவர் ஃபஜ்ருத் தொழுகையை (தவறிவிடுவதை) பயந்தால் ஒரே ஒரு ரக்அத்து தொழுது விடவும், (ஏனெனில்) அவர் முன்பு தொழுது விட்டாரே அதற்கு (இது) ‘வித்ராக‘ ஆகிவிடும் என கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹுமா

இரவுத் தொழுகை, நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 384

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை இரவுத் தொழுகையில் உட்கார்ந்து எதையும் ஓதக்கூடியவர்களாக நான் காணவில்லை, எதுவரையெனில், அவர்களுக்கு வயதாகிவிட்ட போது, அமர்ந்து ஓதிக்கொண்டிருந்தார்கள், (அவ்வாறே) ஓதிக்கொண்டிருக்கும் அத்தியாத்தில் முப்பது அல்லது நாற்பது ஆயத்து (வசனங்கள்) மீதமிருப்பின் (அப்போது) எழுந்து நின்று அவைகளை ஓதி முடித்து அதன்பின் ருகூஉ செய்வார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றனர்.

இரவு முழுவதும் ஒருவர் தூங்கிவிட்டு அதில் அவர் தொழாமலிருப்பது வெறுக்கத்தக்கதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 385

இரவில் தூங்க ஆரம்பித்து அதிகாலைப் பொழுதை அடையும் வரை தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறப்பட்டது. (அதற்கவர்கள்) அந்த மனிதர் தான் அவரது ஒரு காதில் அல்லது அவரது இரு காதுகளில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கப்பட்டவராவார் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு

தொழுகையில் தூங்கி விழுந்தால் அவர் உறங்கிவிடவும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 386

“உங்களில் ஒருவர் தொழகையில் தூங்கி விழ ஆரம்பித்தால், அவரது தூக்கம் (நீங்கிப்) போகும் வரை அவர் உறங்கிவிடவும். (காரணம்) நிச்சயமாக உங்களில் ஒருவர் தூங்கி விழுந்த நிலையில் தொழுவாரோயானால் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கேட்கப்போய் தன்னையே ஏசிக்கொள்வார்” என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.

ஷைத்தானின் முடிச்சுக்ளை அவிழ்க்கக்கூடியவை என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 387

உங்களில் ஒருவர் தூங்க ஆரம்பித்தால் அவர் தூங்கும் போது அவரது தலைப்பகுதியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகின்றான். ஒவ்வொரு முடிச்சின் மூலமும் நீண்ட இரவு உண்டு என அவரின் மீது அவன் அடிக்கின்றான். (ஆகவே தூங்கிய அவர்) விழித்து அல்லாஹ்வை நினைவு கூறிவிட்டால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது.

அவர் ஒளுச்செய்து விடுவாராயின் அவரை விட்டு இரண்டாவது முடிச்சம் அவிழ்ந்து விடுகிறது. அவர் தொழுது விட்டால் எல்லா முடிச்சுகளும் அவிழ்ந்து விடுகின்றன. சுறுசுறுப்பானவராக நல்ல மனமுடையவராக அவர் காலைப் பொழுதை அடைந்து விடுகிறார். அவ்வாறு இல்லாவிட்டால் தீயமனம் உடையவராக சோம்பேறியாக காலைப் பொழுதை அடைந்து விடுகிறார் என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எத்தி வைக்கிறார்கள்.

இரவில் ஒரு நேரம் உண்டு அதில் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 388

நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு அந்நேரத்திற்கு ஏற்றாற்போல் முஸ்லிமான அடியான்: அல்லாஹ் அவருக்கு அதைத் தந்ததைத்தவிர (வேறு) எந்த நன்மையும் கேட்பதில்லை அது ஒவ்வொரு இரவிலுமாகும் என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு

இரவின் கடைசிப்பகுதியில் ‘துஆ‘, ‘திக்ரு‘ செய்வதை ஆசையூட்டுவது பற்றியும் அவை அந்நேரத்தில் அங்கீகரிக்கப்படும் என்பதைப் பற்றியும் உள்ள பாடம்.

ஹதீஸ் எண் : 389

பரக்கத்துகளை நல்குபவனும், உயர்வானவனுமாகிய அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் இரவின் மூன்றாம் பகுதி முடிந்தபின் முதல் வானத்தின் பால் இறங்குகிறான். (இறங்கிய அவன்)

“நான் தான் அரசன்! நான் தான் அரசன்! என்னை அழைப்பவர் யார்? அவருக்கு நான் பதில் கூறுவேன்! என்னிடம் கேட்பவர் யார்? அவருக்கு அதை நான் கொடுக்கிறேன்! என்னிடம் பாவமன்னிப்பு கேட்பவர் யார்? அவரது பாவத்தை நான் பொறுத்து மன்னித்து விடுகிறேன்! (எனக்கூறுகிறான்) ஃபஜ்ரு உதயமாகும்வரை நிச்சயமாக அல்லாஹ் இவ்வாறு இருந்து கொண்டிருக்கிறான்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இரவுத் தொழுகையின் முழுமையும், அதைத் தொழாமல் தூங்கிவிட்டவர்பற்றியும், நோயாளி அதை நிறைவேற்றுவது பற்றியும் உள்ள பாடம்.

ஹதீஸ் எண் : 390

ஸஅது பின் ஹிஷாம் ரளியல்லாஹ் அன்ஹு என்பவர் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்ய விரும்பி மதினாவிற்கு முன்னோக்கி வந்தார். அங்கு அவருக்குரிய நிலத்தை விற்று அதன் மூலம் போர் கருவிகள் குதிரைகளில் ஆக்கி (வாங்கி) இறப்பெய்தும் வரை ரோமாபுரியுடன் போர் செய்ய விரும்பினார். மதினா வாசிகளில் சில மனிதர்களை (இது சம்பந்தமாக) சந்தித்தார். (அவ்வாறு செய்வதிலிருந்து) அவரை அவர்கள் தடுத்துவிட்டனர். மேலும் ஆறு கூட்டத்தவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருந்தபோது இவ்வாறு செய்ய விரும்பினர். (ஆனால்) அல்லாஹ்வின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களை தடுத்துவிட்(டனர்)டு என்னில் உங்களுக்கு முன்மாதிரி இல்லையா? எனவும் கூறினர் என அவருக்கு தெரிவித்தனர். இவ்விசயத்தை அவர்கள் அவருக்கு தெரிவித்த பொழுது, தலாக் - (விவாகரத்து) செய்திருந்த தனது மனைவியை திருப்பிக்கொண்டார். (மீண்டும் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டார்) அப்பெண்ணை மீண்டும் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொண்டதற்கு அவர்களை சாட்சியாகவும் ஆக்கினார். (அதன்பிறகு) இப்னு அப்பாஸ் இடம் வந்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய ‘வித்ரை‘ பற்றி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் வித்ரை பற்றி பூமியிலிருப்பவர்களில் மிகத்தெரிந்த ஒருவரைப்பற்றி உமக்கு அறிவித்துத்தரட்டுமா? எனக் கேட்டார்கள். (அதற்கு) யார்? எனக் கேட்டார். (அதற்கு) ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா எனக் கூறினார். அவர்களிடம் சென்று (அதைப்பற்றி) அவர்களிடம் கேட்டுவிட்டு அதன்பிறகு என்னிடம் வந்து என்ன திருப்பி (பதில்) கூறினார்கள் என்பதை தெரிவிப்பீராக என்றார்கள். (அதற்கொப்ப) அவர்கள் பால் நடக்க ஆரம்பித்தேன். (அப்போது) ஹக்கீம் பின் அஃப்லஹ் என்பவரிடம் வந்து அவரையும் என்னோடு வர (கூறினேன்) வேண்டினேன். (அதற்கவர்) நான் அவர்களுக்கு நெருக்கமானவர் அல்ல இவ்விரு கூட்டத்தாருக்கு மத்தியில் எதையும் கூறுவதிலிருந்து அவர்களை நான் தடுத்திருத்தேன். அவ்விரு கூட்டத்தவரில் (நான் கூறியதை) தவிர்த்துவிட்டு (அவர்களது முடிவுப்படி) சென்றுவிட்டனர். மேலும் அவரின் மீது சத்தியம் செய்துவிட்டதாகவும் கூறுகிறார். (அதன்பிறகு) அவர் வந்தார்;. (நாங்களிருவரும்) ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹா அவர்கள்பால் நடந்தோம் அவர்களிடம் (உள்ளே செல்ல) அனுமதியும் கேட்டோம். எங்களுக்கு அனுமதியும் வழங்கிவிட்டனர். அவர்களின்பால் நுழைந்தோம். ஹக்கீமா? எனக் கேட்டு அவரைத் தெரிந்தும் விட்டனர். அவர் ஆம்! என்றார். உம்முடன் இருப்பவர் யார்? எனக் கேட்டனர். ஸஅது பின் ஹிஷாம் என்றார். இப்னு பின் ஹிஷாமா? என்றனர். இப்னு ஆமீர் எனக் கூறினார். (அதைக் கேட்டதும்) அவருக்கு அல்லாஹ் அருள் செய்ய வேண்டினர். அவர் விஷயத்தில் நன்மையாகவே கூறினார். ‘உஹது‘ தினத்தன்று தாக்கப்பட்டார் என கதாதா ரளியல்லாஹ் அன்ஹு கூறினார். விசுவாசிகளின் தாயே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் குணங்களைப்பற்றி எனக்கு கூறுங்கள் என நான் கேட்டேன். (அதற்கவர்கள்) நீ குர்ஆனை ஓதவதில்லையா? என்றார்கள். நான் ஆம்! என்றேன். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் குணங்கள் குர்ஆனாக(வே) இருந்தது எனக் கூறினர். அங்கிருந்து எழுந்துவிடவும், நான் இறப்பெய்தும்வரை எதைப்பற்றியும் யாரிடத்திலும் கேட்கக்கூடாது என்றும் நாடினேன். அதன்பிறகு எனக்கு ஏதோ (கேட்க) தோன்றியது. (அப்போது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் இரவு வணக்கம் பற்றி எனக்கு அறிவித்து தாருங்கள் என்றேன். (அதற்கவர்கள்) ‘யா அய்யுஹல் முஜ்ஜமில்‘ என்பதை நீர் ஓதுவதில்லையா? எனக் கேட்டனர். நான் ‘ஆம்! ‘ என்றேன். நிச்சயமாக கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் இரவு வணக்கத்தை விதியாக்கி இருந்தான். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் ஒரு வருடம் இரவில் வணக்கம் செய்தனர். அதன் முடிவை பனிரெண்டு மாதங்கள் வானத்தில் அல்லாஹ் (நிறுத்தி) பிடித்து வைத்து கொண்டான். முடிவாக இந்த அத்தியாயத்தின் இறுதியில் இலகுவானதை அல்லாஹ் இறக்கிவைத்து இரவு வணக்கம் கடமையாக இருந்து பிறகு நஃபிலாக ஆகிவிட்டது எனக் கூறினர். விசுவாசிகளின் தாயே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் ‘வித்ரை‘ பற்றி எனக்கு அறிவித்துக் கொடுங்கள் என்று நான் கேட்டேன். (அதற்கவர்கள்) நாங்கள் (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களது பல் துலக்கும் குச்சியையும் ஒளு செய்வதற்குரிய தண்ணீரையும் அவர்களுக்காக தயாராக்கி வைப்போம். இரவில் எப்பொழுது அவர்களை எழுப்ப அல்லாஹ் நாடினானோ? அப்போது அவர்களை தூக்கத்திலிருந்து எழுப்புவான். (தூக்கம் என்பது சிறு மரணம் என்பது போன்றதாகும்) ஆகவே தான் இறந்தவர்களை எழுப்புவதைப் போன்று எழுப்புவான் என்ற வார்த்தையை உபயோகித்திருக்கிறார்கள்) (அவ்வாறு எழுந்த அவர்கள்) பல் துலக்கி ஒளுவும் செய்து ஒன்பது ரக்ஆத்துகள் தொழுவார்கள். எட்டாவது ரக்அத்தில் தவிர (வேறு எதிலும்) அதில் அமரமாட்டார்கள். அல்லாஹ்வை நினைவுகூறி அவனைப்புகழ்ந்து அவனிடம் பிரார்த்தித்துவிட்டு, ஸலாம் கொடுக்காமல் அதன் பிறது எழுந்து ஒன்பாதவது ரகஅத்தைத் தொழுதுவிட்டு அதன்பின் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூறிவிட்டு, அவனைப் புகழ்ந்து அவனிடம் பிரார்த்தித்துவிட்டு, அதன்பிறகு எங்களுக்கு கேட்பது போன்று உறுதியாக ‘ஸலாம்‘ கொடுப்பார்கள். அவ்வாறு ‘ஸலாம்‘ கொடுத்துவிட்டு அமர்ந்தவாறு இரண்டு ரக்அத் தொழுவார்கள். அவைகள் பதினோரு ரக்அத்துகளாகும் எனதருமை மகனே! எனக்கூறினர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வயதாகியபொழுது, உடம்பில் சதை கூடியபோது “ஏழு ரக்ஆத்” ‘வித்ரு‘ தொழுவார்கள். இரண்டு ரக்அத்தில் முதலில் அவர்கள் செய்தது போன்று செய்தனர். (ஆக) அவைகள் “ஒன்பது” என என்னருமை மகனே! அல்லாஹ்வின் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தொழுகையை தொழுவார்களாயின் அதை நிரந்தரமாக (தொடர்ந்து) செய்ய விரும்புவர். இரவு தொழுகையைத் தொழ முடியாது அவர்களுக்கு தூக்கம் மிகைத்து விட்டால் அல்லது (உடலில்) வலி இருந்தால் மறுநாள் பகலில் பனிரெண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் “ஒரே இரவில் குர்ஆன் முழுவதையும் ஓதிவிட்டார்கனென்றோ? காலைப்பொழுதை அடையும் வரை இரவு முழுவதும் தொழுது கொண்டிருந்தார்களென்றோ? ரமலான் அல்லாத மாதத்தில் முழுமாதமும் நோன்பு நோற்றார்களென்றா? (உறுதியாக) எனக்குத் தெரியாது (எனவும் கூறினார்கள்). ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் இதைக்கேட்டபிறகு) இப்னு அப்பாஸ் ரயிளல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று அதை அவரு (இப்னு அப்பாஸு)க்குத் தெரிவித்தேன். அதைக்கேட்ட (இப்னு அப்பாஸ் ரயிளல்லாஹு அன்ஹு) அவர்கள் உண்மை கூறினர் என்றனர். (அடுத்து) நான் அவர் (ஆயிஷா ரயிளல்லாஹு அன்ஹா)களை நெருங்கக் கூடியவனாக, அல்லது அவர்களிடம் நுழையக்கூடியவனாக இருந்திருப்பின் இவ்விஷயத்தை என்னிடம் நேருக்கு நேர் பேசுகின்ற வரை அவர்களிடம் நான் வந்திருப்பேன் என்றார். (அதற்கு) நீர் (ஆயிஷா ரயிளல்லாஹு அன்ஹா) அவர்களிடம் செல்ல மாட்டீர் என எனக்குத் தெரிந்திருந்தால் இந்த விஷயத்தை உமக்கு நான் தெரிவித்திருக்க மாட்டேன் என்றேன் எனக் கூறினார்.

அறிவிப்பவர்: ஜுராரா ரயிளல்லாஹு அன்ஹு அறிவித்ததாக கதாதா ரயிளல்லாஹு அன்ஹு

குறிப்பு : இப்பெரும் பலனுள்ள விஷயத்தை அங்கே செல்லாததால் நீர் இழக்க நேரிட்டுவிடும் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும், இவ்வாறு பலனுள்ள விஷயங்களைக் கேட்டு தெரிந்து கொள்ள அவர்கள் செல்ல வேண்டுமென்பதையும் கருத்தில் கொண்டு தான் இத்தொடரை அவரிடம் அறிவிப்பவர் கூறினார் என்பதை கருத்தில் கொள்க.

‘வித்ரு‘ தொழுகை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 391

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு இரவிலும், இரவின் முதல் பகுதியிலும், அதன் பகுதியிலும், அதன் கடைசிப்பகுதியிலும் ‘வித்ரு‘ தொழுதிருக்கிறார்கள். அவர்களின் ‘வித்ரு‘ இரவின் கடைசிப்பகுதியிலும் முடிவுறும்‘‘ என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

‘வித்ரு‘ (தொழுகை), ‘ஃபஜ்ரின்‘ இரண்டு ரக்அத்துகள் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 392

இப்னு உமர் அவர்களிடம், ஃபஜ்ரு தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்துகள், அதில் கிராஅத்தை (ஓதுதலை) நான் நீட்ட(மாக இருக்கச் செய்ய) வேண்டுமா? எனக்கூறுங்கள் என நான் கேட்டேன். (அதற்கவர்கள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் இரண்டு ரக்அத்தாகத் தொழுவார்கள். (கடைசியில்) பின் ஒரு ரக்அத் ‘வித்ரு‘ தொழுவார்கள் என்றனர். (அதற்கு) நான் நிச்சயமாக இது பற்றிக் கேட்கவில்லை எனக் கூறினேன். (அதற்கவர்கள்) நிச்சயமாக நீர் விபரமற்றவர்! நான் விஷயத்தை முழுமையாக கூறும்வரை நீ என்னை விட்டுவை (குறுக்கிடாமலிரு)க்க வேண்டாமா? (எனக் கூறிவிட்டு) “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக்அத்தாக தொழுவார்கள். ஒரு ரக்அத் ‘வித்ரு‘ம் தொழுவார்கள். ‘ஃபஜ்ரு‘ க்கு முன்பு இரண்டு ரக்அத்தும் தொழுவார்கள். நிச்சயமாக ‘இகாமத்து‘ அவர்களது இருகாதுகளில் இருப்பதுபோன்று (அதாவது மிக சுருக்கமமாக அந்த இரண்டு ரக்அத்தையும்) தொழுவார்கள் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் ஸீரின் ரளியல்லாஹ் அன்ஹு

யார் கடைசி இரவில் எழுந்திருக்க மாட்டார் என பயந்தாரோ அவர் முதல் இரவிலேயே ‘வித்ரு‘ தொழுது கொள்ளட்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 393

“யார் கடைசி இரவில் எழுந்திருக்க முடியாது என பயப்பட்டாரோ? அவர் முதல் இரவிலேயே ‘வித்ரு‘ தொழுது கொள்ளவும்; யார் அத(இரவி)ன் கடைசியில் எழுந்திருக்க ஆசை (விருப்பம்) கொண்டிருக்கிறாரோ? அவர் கடைசி இரவில் வித்ரு தொழுது கொள்ளவும். நிச்சயமாக இறுதி இரவில் தொழும் தொழுகையில் ‘அருள் மலக்குகள் ஆஜராகிறர்கள். (ஆகவே) அது மிகச்சிறப்பிற்குரியதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹ் அன்ஹு

ஸுபுஹை, (அதிகாலைப் பொழுதை) நீங்கள் அடையுமுன் ‘வித்ரு‘ தொழுது விடுங்கள் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 394

“ஸுபுஹை, (அதிகாலைப் பொழுதை) நீங்கள் அடையுமுன்பே வித்ரை தொழுது விடுங்கள்” என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீது அல்குத்ரீ ரளியல்லாஹ் அன்ஹு

தொழுகையில் குர்ஆன் ஓதுவதன் சிறப்பு பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 395

கொழுத்த பருத்த கர்ப்பமான மூன்று ஒட்டகங்களை அவர் (தம்) குடும்பத்தினர்கள்பால் திரும்புகின்றபோது பெற வேண்டுமென உங்களில் யாரேனும் விரும்புகிறாரா? என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறின(கேட்டா)ர்கள். அதற்கு, நாங்கள் ஆம்! என்றோம். மூன்று வசனங்கள் அதை அவர் தொழுகையில் ஓதுவது, (அது) அவருக்கு கொழுத்த பருத்த கர்ப்பமான மூன்று ஒட்டகங்களை விட மிகச்சிறந்ததாகும் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

ஒரே ரக்அத்தில் ஓதப்படும் இரு அத்தியாயங்களுக்கு நிகரானவைகள் பற்றிய பாடம்

ஹதீஸ் எண் : 396

ஒரு நாள் ஃபஜ்ரு தொழுகையை முடித்துக் கொண்டு (அதிகாலை நேரத்தில்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹ் அன்ஹு அவர்களிடம் சென்று வாயிலில் ஸலாம் கூறினோம் எங்களுக்கு (உள்ளே வர) அனுமதியளித்து விட்டார். (ஆயினும்) நாங்கள் வாசலில் கொஞ்சம் நின்றோம். (இதற்கிடையில்) ஒரு அடிமைப்பெண் வீட்டிலிருந்து வெளியாகி நீங்கள் உள்ளே நுழைய வேண்டாமா? எனக்கூறினாள். (அதைக்கேட்ட) நாங்கள் உள்ளே நுழைந்தோம். அப்போதவர் அமர்ந்தவாறு ‘தஸ்பீஹ்‘ செய்து கொண்டிருந்தார். உங்களுக்கு உள்ளே வர அனுமதி கொடுத்த பின்னரும் நீங்கள் உள்ளே வர தடையாக இருந்தது எது? என கேட்டார். (அதற்கு) இல்லை, ஆயினும் வீட்டில் யாராவது சிலர் உறங்கிக்கொண்டிருப்பார்களோ? என நினைத்தோம் எனக்கூறினோம். இப்னு உம்மு மஃபதுவின் குடும்பத்தினர். (ஸலாமை) மறந்தவர்களென நினைத்தீர்களா? எனக்கூறினார். அதன்பிறகு அவர் ‘தஸ்பீஹ்‘ செய்தவாறு சூரியன் உதயமாகிவிட்டதென எண்ணி எங்கள் பக்கம் வந்தார். அடிமைப்பெண்ணே! சூரியன் உதயமாகி விட்டதா எனப்பார்? என்றார். அப்பெண் பார்த்தபோது சூரியன் உதயமாகிவிட்டிருந்தது. அப்போதவர், இந்த நமது நாளில் (நமது குற்றங்களுக்காக) நம்மைப் பிடிக்காமல் மன்னித்து காலைப்பொழுதை எழச் செய்தானே அந்த அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக! எனக்கூறினார். (நமது பாவங்களின் காரணமாக நம்மை அழித்துவிடாது விட்டு விட்டானே என அவர் கூறியதாக நான் எண்ணுகிறேன் என மஹ்தீ கூறினார்.) சென்ற இரவில் பல நீண்ட அத்தியாயங்களை நான் ஓதினேன் என எங்களில் ஒரு மனிதர் கூறினார். அதற்கு அப்துல்லாஹ் பாட்டு பாடியது போல்1 அதிவேகமாக ஓதினார் எனக்கூறினார். தெரிந்து கொள்! நிச்சயமாக நாம் குர்ஆனை ஓதக்கேட்டிருக்கிறோம். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சேர்த்து ஓதிக்கொண்டிருந்த நீண்ட அத்தியாயங்களில் பதினெட்டையும் ‘ஹாமீம்‘ எனத்தொடங்கும் அத்தியாத்தில் இரண்டையும் நான் மனனம் செய்திருக்கிறேன் (என்றார்.)

அறிவிப்பவர் : அபீவாயில் ரளியல்லாஹ் அன்ஹு

குறிப்பு : 1 குர்ஆனை ஓதும் முறை பற்றி அல்லாஹ் தன் திருமறையிலும் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது சுன்னத்தில் விளக்கி கூறியுள்ள முறைப்படி வசனங்களை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்தி, உயர்த்த வேண்டிய இடங்களில் உயர்த்தி அச்சரங்களை சரியாக உச்சரித்து ஒவ்வொரு வசனமாக நிதானமாக ஓத வேண்டும். இதற்கு மாற்றமாக ஓதியதைக்கேட்ட அவர் பாட்டுபாடியது போன்று எனக்குறிப்பிடுகிறார்.

ரமளான் தொழுகைப்பற்றி வந்துள்ளது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 397

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இரவின் நடுப்பகுதியில், (வீட்டிலிருந்து) வெளியாகி பள்ளியில் தொழுதார்கள். (சில) ஆடவர்கள், அவர்களோடு (அவர்களது தொழுகையைத்) தொழுதனர். காலையில் ஜனங்களெல்லாம் அதுப்பற்றிப் பேசிக்கொண்டனர். அதற்காக அவர்களை விட மிக அதிகமானவர்கள் திரண்டு விட்டனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டாவது இரவிலும் (அறையிலிருந்து) வெளியே வந்து, (தொழுதனர்) ஜனங்களும் அவர்களோடு (அவர்களது தொழுகையைத்) தொழுதனர். அடுத்த நாள் ஜனங்களெல்லாம் அதுபற்றிக் கூறிக்கொண்டனர். மூன்றாவது இரவு பள்ளியில் தொழுபவர்கள் அதிகமாகி விட்டனர். (அறையிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியேறி(த் தொழுக) ஜனங்களும் அவர்களோடு தொழுகையை நிறைவேற்றினர். நான்காவது இரவின் போது பள்ளியில் வந்திருப்பவர்களை தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பள்ளி இயலாமலாகிவிட்டது. கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (அறையை விட்டு) வெளியேறி வரவில்லை அப்போது சில ஆடவர்கள் தொழுகை! எனக்கூறி சப்தமுமிட்டனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ரு தொழுகைக்காக வெளியேறும் வரை வெளியேறி வரவில்லை. ஃபஜ்ரு தொழுகையை நிறைவேற்றிவிட்டு ஜனங்களின் பால் முகத்தைத் திருப்பினர். ‘அஷ்ஹது‘ ஓதிவிட்டு அதன்பிறகு நேற்றிரவு நடந்த உங்களின் விஷயம் எனக்கு மறைந்த(தெரியாத)தல்ல. ஆயினம் உங்கள் மீது இரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டுவிட்டால் அதை நிறை வேற்றுவதிலிருந்து நீங்கள் இயலாதவர்களாகிவிடுவீர்களோ? என நான் பயந்தேன் எனக்கூறினார்கள். பிறிதொரு அறிவிப்பில் அது ரமளானில் நடந்தேறியதாக உள்ளது என வந்துள்ளது.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹ் அன்ஹு

ரமளானில் (வணக்கங்கள்) தொழுவது பற்றியும் அது பற்றி (மனிதர்களுக்கு) ஆர்வமூட்டுவது பற்றியுமுள்ள பாடம்.

ஹதீஸ் எண் : 398

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளான் மாதத்தில் கண்டிப்புடன் தொழுக வேண்டுமென இல்லாமல் (விருப்பப்பட்டு) தொழுவது பற்றி ஆசையூட்டி, “யார் ரமளானில் (அது உண்மை அதை நிறைவேற்றுவதால் நண்மை உண்டு என) நம்பிக்கை கொண்டவராக, தூய நிலையி(முகஸ்துதியையோ, அதல்லாத மற்ற எதையும் விரும்பாம)ல் அல்லாஹ்விற்கென விரும்பி நன்மையைப் பெற தொழுவாரேயானால் அவரது முந்திய பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகிறது” என கூறுவார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இறப்பெய்தினர். காரியம் அவ்வாறே இருந்தது. அதன்பிறகு அபூபக்ரு ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் கிலாபத்திலும், உமர் ரளியல்லாஹ் அன்ஹு அவர்களின் கிலாபத்தின் தொடக்க காலத்திலும் காரியம் அவ்வாறே இருந்தது என அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

ஜும்ஆவின் பாடங்கள்

இந்த சமூகத்தவர், ஜும்ஆ நாளின் விஷயத்தில் நேர்வழி பெற்றிருத்தல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 399

நாம் (இம்மையில்) கடைசியானவர்கள். மறுமைநாளில் முதலாமவர்கள். (அதாவது) நாம்தான் சுவனம் செல்பவர்களில் முதாலவதாக இருப்போம் என்றாலும் ‘நிச்சயமாக அவர்கள் நமக்கு முன்பு வேதம் அளிக்கப் பெற்றவர்களே!‘ நாம் அவர்களுக்குப் பிறகு அவ்வேதத்தை அளிக்கப்பெற்றோம். (எனினும்) அவர்களோ கருத்து வேறுபாடு கொண்டு விட்டனர். (ஆனால்) எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ? அவ்விஷயத்தில் உண்மையின்பால் (அல்லாஹ்) நமக்கு நேர்வழி காட்டி விட்டான். இந்த நாள் தான் அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்ளோ? அதுவாகும். அந்நாளைப்பற்றி அல்லாஹ் நமக்கு நேர்வழிகாட்டி விட்டான். (அதுவே) ஜும்ஆ நாளாகும்! இன்றைய தினம் நம்மவர்களுக்குரியதாகும். நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்கு உரியதாகும். நாளைய மறுதினம் (ஞாயிறு) கிறிஸ்தவர்களுக்கு உரியதாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு கூறுகிறார்கள்.

ஜும்ஆ நாளின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 400

சூரியன் உதயமான நாளில் மிகச்சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் (அந்நாளில்) தான் ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் படைக்கப்பட்டனர். அந்நாளில்தான் சுவனத்தில் நுழைவிக்கப்பட்டனர். (பின்னர்) அதே நாளில் (தான்) அதிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மறுமை நாளானது ஜும்ஆ நாளல்லாது மற்ற நாட்களில் நிலை நிற்காது (வராது) என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு அறிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்