Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 17

தொழுகை பற்றிய நூல்
 
வாகனத்தின் பால் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 341

நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது வாகனத்தை குறுக்கிலாக்கி (மறைப்பாக வைத்து) அதன்பால் தொழக்கூடியவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு

மறைப்பிற்கு அப்பால் தொழுது கொண்டிருப்பவருக்கு முன்பு நடந்து செல்லுதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 342

தோலினால் தயாரிக்கப்பட்ட சிவப்பு நிறமுடைய குப்பாவினுள் (கூடாரத்தினுள் இருக்க) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை அவ்ன் பின் அபீஜுஹைபாவின் தந்தை கண்டார்.

ஓளு செய்யும் பாத்திரத்தை பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வெளியே கொண்டு வர நான் கண்டேன். (அப்போது) ஜனங்களெல்லோரும் அப்பாத்திரத்தின்பால் விரைந்து செல்வதையும் கண்டேன். அப்(பாத்திரத்)திலிருந்து எதை யார் பெற்றாரோ? அதை அவர் தடவிக் கொண்டார். அதிலிருந்து கிடைக்கப் பொறாதவர் தன்னுடன் இருந்தவரின் கையின் ஈரத்திலிருந்து எடுத்துக் கொள்கிறார்.

அதன்பின் பிலால் ரளியல்லாஹு அன்ஹுவை நான் கண்டேன். (அவர்) ஒரு ஈட்டியை வெளியில் கொண்டு வந்து அதை நட்டு வைத்தார். (அது சமயம்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சிவப்பு ஆடை (கீழும் மேலும்) அணிந்தவர்களாக (அவ்வாடையை) கிரண்டைகால் வரை உயர்த்தியவர்களாக வெளி வந்து, அந்த ஈட்டியின் பால் (அவ்வீட்டியை மறைப்பாக ஆக்கி) ஜனங்களுக்கு இரண்டு ரக்அத் தொழவைத்தார்கள். (அது சமயம்) ஜனங்களையும் கால்நடைகளையும் ஈட்டிக்கு அப்பால் செல்ல நான் கண்டேன் என அவ்ன் பின் அபீ ஜிஹைபா தன் தந்தை கூறியதாக அறிவிக்கிறார்.

தொழுகையில் இடுப்பில் கைவைத்து கொள்வது தடுக்கப்பட்டதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 343

இடுப்பில் கைவைத்து கொண்டு தொழுவதை நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக தடுத்துள்ளார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தொழுகையில் தனக்கு முன்பாக ஒருவர் துப்பிக்கொள்வது விலக்கப்பட்டதென்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 344

மஸ்ஜிது முன்பாக காரை எச்சிலை நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள். (கண்டதும்) ஜனங்களை நோக்கி வந்து ‘‘உங்களில் ஒருவர் தனது இரட்சகனுக்கு முன்பாக நின்று, அவனுக்கு முன்னால் நின்று காரித்துப்புகிறாரே! அவரின் விஷயம் என்ன? எனக்கேட்டார்கள்.

உங்களில் ஒருவர் அவர் (உங்களால்) வரவேற்கப்பட்டு, (பின்) அவர் முகத்தில் துப்பப்படுவதை அவர் விரும்புவாரா? உங்களில் யாருக்கேனும் துப்ப நேரிட்டால் தனது இடது பக்கம் காலுக்கு கீழே துப்பிக் கொள்ளவும். அவ்வாறு செய்ய சாத்தியமில்லையெனில் இவ்வாறு செய்யவும், (அதாவது) தனது உடையின் ஒரு பகுதியில் துப்பி மறு பகுதியை அதன்மீது வைத்துத் தேய்த்தனர். என அல் காசிம் வர்ணித்துக்காட்டி இவ்வாறு அவர் செய்யவும் என்றார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

தொழுகையில் கொட்டாவி (வரும்போது) அதை அடக்கிக் கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 345

உங்களில் தொழுகையில் யாருக்கேனும் கொட்டாவி வந்தால் இயன்ற அளவு அதை அடக்கிக் கொள்ளவும். (காரணம்) நிச்சயமாக ஷைத்தான் (வாயின் வழியாக) உள்ளே நுழைந்து விடுகிறான்.

முற்றொரு அறிவிப்பில் தனது கையினால் வாயின் மீது (வைத்துத்) தடுக்கவும். காரணம் நிச்சயமாக ஷைத்தான் உள்ளே நுழைந்து விடுகிறான்.

அறிவிப்பவர் : அபூ ஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு

தொழுகையில் (இருக்கும் போது) குழந்தைகளை சுமந்து கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 346

உமாமா பின்த் அபுல் ஆஸை (அதாவது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார் ஜைனபின் மகளை தங்களின் தோளின் மீது சுமந்தவர்களாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனங்களுக்கு இமாமத் செய்ய (அறிவிப்பாளர்) கண்டேன். அவர்கள் ருகூஉ செய்தால் அ(க்குழந்)தை(யை) (கீழே) விட்டு விட்டு, சுஜுதுவிலிருந்து உயர்ந்தால் மீண்டும் திருப்பி (எடுத்து)க் கொள்வார்கள் என அபூக(த்)தாதா அல் அன்ஸாரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

தொழுகையில் (நெற்றியை) தடவிக்கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 347

“பள்ளியில் (தொழும்போது) ஒட்டிக்கொண்டிருக்கும் பொடிக்கற்களை நெற்றியிலிருந்து (துடைத்துக் கொள்வது பற்றி) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூற(கேட்)கப்பட்டது. அவசியமாக நீ செய்(தடவிக்கொள்)வதென்றால் ஒரே முறை மட்டுமே” (செய்யலாம்) எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஜகிப் ரளியல்லாஹு அன்ஹு

காரை எச்சிலை செருப்பி(ன் அடிப்பாகத்தி)ல் துப்பி மறு செறுப்பைக் கொண்டு தேய்த்துக் கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 348

அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் தொழுதேன். (அப்போது ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள்) காரி உமிழ்ந்து (தனது செருப்பைக் கொண்டு) தனது செருப்பினால் தேய்த்துக் கொண்டார்கள் எனக்கூறுகிறார்கள்.

தொழும்போது தலை முடியைக் கட்டிக்கொள்வது தடுக்கப்பட்டது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 349

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்துல்லாஹ் பின் அல் ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு என்பவரை, அவர் தலை (முடி) பின் பகுதியில் சுருட்டிக் கட்டப்பட்டதாக (கொண்டையிடப்பட்டதாக இருக்கும் நிலையில்) அவர் தொழுது கொண்டிருக்கக் கண்டார். அதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்டதுமே எழுந்து (சென்று) அக்கொண்டையை அவிழ்த்து விட்டு விட்டார். அவர் (அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் தொழுகையை முடித்துக் கொண்டு இப்னு அப்பாஸ் அவர்களின் முன் வந்து, என் தலைமுடியை (இவ்வாறு அவிழ்த்து விட) உங்களுக்கு என்ன (அவசியம்) நேர்ந்தது? என்றார். அதற்கு இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், இதற்கு உதாரணம்(கை கால்கள்) கட்டப்பட்ட நிலையில் தொழுபவரைப் போன்றது தான். கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், முடியை முன்னால் சுருட்டி வைத்து தொழுவது தடுக்கப்பட்டதாகும். இது போன்று தான் குடுமியைக் கட்டிக் கொண்டு தொழுவதும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நிச்சயமாக நான் கேட்டிருக்கிறேன் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு

உணவு தயாராக இருக்கும் நிலையில் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 350

இரவு சாப்பாடு வைக்கப்பட்டு(விட்ட) நிலையில் தொழுகை நேரமும் வந்து விட்டால் (மக்ரிபு நேரம் வந்ததுமே அக்கால மக்கள் இரவு உணவை சாப்பிட்டு வந்தனர்.) அந்நிலைக்கொப்பத்தான் மக்ரிபு தொழுகைக்கு முன்பு இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்) மஃரிபு தொழுகையை தொழுமுன் அதை (சாப்பிட) ஆரம்பித்து விடுங்கள். உங்களது இரவு சாப்பாட்டை (முடிப்பதை) விட்டும் அவசரப்படாதீர்கள்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு தொழுகைக்கு செல்லுங்கள். சாப்பாட்டை தயாராக வைத்துக் கொண்டு அதை உண்ணுவதைத் தவிர்த்து விட்டு ஒருவர் தொழ ஆரம்பித்துவிட்டால் அவரது கவனம் சாப்பாட்டின் பக்கமே இருக்கும். நிம்மதியாக அவர் தொழுகையை நிறைவேற்ற முடியாது. ஆகவே தான் இவ்வாறு செய்யுமாறு நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 மக்ரிபு நேரம் வந்ததுமே அக்காலமக்கள் இரவு உணவை சாப்பிட்டு வந்தனர். அந்நாளைக்கொப்பத்தான் மக்ரிபு தொழுகைக்கு முன்பு இரவு சாப்பாட்டை முடித்துக் கொள்ளுங்கள் என நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

(தொழுகையில் செய்யவேண்டிய கடமையான ஒன்றை) மறந்து விட்டதற்காக தொழுகையில் (அதற்காக) ஸஜ்தா செய்ய வேண்டுமென்ற (நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களின் கட்டளை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 351

உங்களில் ஒருவர் அவரது தொழுகையில் சந்தேகப்பட்டு, அவர் தொழுதது மூன்றா? அல்லது நான்கா? என அவருக்கு தெரியாது போய்விட்டால் சந்தேகப்பட்டதை விட்டு விட்டு உறுதியாகத் தெரிவதைவைத்து (விடுபட்டதை) நிறைவு செய்யவும். அதன்பிறகு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்களை அவர் செய்து கொள்ளவும். ஒரு வேளை அவர் ஜந்தாக தொழுதிருப்பாரேயானால் இந்த ஸஜ்தாக்கள் அவர் தொழுகையை இரட்டையாக்கி விடுகிறது. மூன்றுக்கு மேல் நான்கை நிறைவு செய்து அவர் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும் ஷைத்தானுக்கு இழிவை உன்டாக்கி (மண்ணைக் கவ்வ வைத்து) விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸயீதுல் அல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண் : 352

மதியத் தொழுகைகளாகிய லுஹர், அஸர் இவ்விரண்டிலொன்றை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குத் தொழவைத்து இரண்டு ரக்அத்தில் ஸலாம் கொடுத்துவிட்டு, பிறகு பள்ளியின் கிப்லா பகுதியில் இருந்த ஈச்சமரத்தின் அடிப்பாகத்திற்கு வந்து கோபம் கொண்ட நிலையில் அதன்பால் சாய்ந்து கொண்டனர். கூட்டத்திலே அபூபக்கர், உமர் ரளியல்லாஹு அன்ஹுமா இருவரும் இருந்தனர். இது (விடுபட்டது) பற்றி, பேசுவதற்கு (அவ்விருவரும்) பயந்தனர். ஜனங்களெல்லோரும் தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது எனக்கூறிக்கொண்டு துரிதமாக வெளியேறினர். (அவர்களில்) துல்யதைன் என்பவர் எழுந்து வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? எனக்கேட்டனர். (அதைச் செவியுற்ற) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் வலப்பக்கமும் இடப்பக்கமும் நோட்டமிட்டு விட்டு துல்யதைன் என்ன கூறுகிறார் என (மற்றவர்களிடம்) கேட்டார்கள். அதற்கவர்கள் நீங்கள் இரண்டு ரக்அத்தை தவிர தொழவில்லை என அவர் உண்மையே உரைத்தார் என்றனர். (அதன்பிறகு) நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் (விடுபட்ட) இரண்டு ரக்அத்தை தொழுது ஸலாம் கொடுத்து அதற்குப் பிறகு தக்பீர் கூறி ஸஜ்தா செய்து பிறகு தக்பீர் சூறி உயர்ந்து தக்பீர் கூறி ஸஜ்தா செய்த பிறகு தக்பீர் கூறி நிமிர்ந்தனர்.

இன்னும் ஸலாம் கொடுத்தனர். என இம்ரான் பின் ஹுஸைன் அவர்கள் வழியில் எனக்கு அறிவிக்கப்பட்(டது)டேன் என இந்த ஹதீஸை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அறிவித்த முஹம்மது பின் சீரின் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

‘குர்ஆன் ஸுஜுது‘ (ஸஜ்தா திலவாத்து) பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 353

“நிச்சயமாக நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்தனர். ஸஜ்தா உள்ள அத்தியாத்தை ஓதி (அதற்கென) ஸஜ்தா செய்வார்கள். நாங்களும் அவர்களுடன் ஸஜ்தா செய்வோம். எங்களில் சிலருக்கு தனது நெற்றியை வைக்க இடம் கிடைக்காத அளவிற்கு ஆகிவிடும்” என இப்னு அப்பாஸ் உமர் ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்.

ஹதீஸ் எண் : 354

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இஷாத் தொழுகையை நான் (அறிவிப்பாளர்) தொழுதேன். ‘இதஸ்ஸமா உன் ஷக்கத்‘ என்பதை ஓதி அத்தொழுகையின் ஸஜ்தாசெய்தார். (அதற்கு நான்) இதென்ன ஸஜதா எனக்கேட்டேன். (அதற்கவர்) இதை ஓதியதற்க்காக அபுல்காசீம் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் (நான் தொழுத போது) ஸஜ்தா செய்திருக்கிறேன் அவர்களை நான் (மறுமையில்) சந்திக்கும் வரை அதை (ஓதும் பொழுதெல்லாம்) அதனைக் கண்டு தவறாமல் விடாது ஸஜ்தா செய்தவனாகவே இருப்பேன் என கூறியதாக அபூராபிஉ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

ஸுபுஹு தொழுகையில் குனூத் ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 355

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ரு தொழுகையில் கிராஅத்தை முடித்து தக்பீர் கூறி (ருகூஉவிலிருந்து) ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பானா வல(க்)கல் ஹம்து‘ எனக்கூறியவாறு தலையையும் உயர்த்திய பின் நின்றவாறே ‘‘யா அல்லாஹ்! வலீத் பின் அல் வலீதையும், ஸலமாபின் ஹிஷாமையும், அய்யாஷ் பின் அபீரபீஆவையும் மூமின்களில் பலஹீனமானவர்களையும் ஈடேற்றம் பெறச் செய்(காப்பாற்று)வாயாக!

யா அல்லாஹ்! முளர் கூட்டத்தவர் மீது உன் தண்டனையைக் கடினப்படுத்துவாயாக! யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தைப் போன்ற (ஒரு) பஞ்சத்தை அவர்களுக்கு உண்டாக்குவாயாக! யுh அல்லாஹ்! லிஹ்யானையும், ரிஃலானையும், தக்வானையும் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்துவிட்ட உஸய்யாவையும் நீ சபிப்பாயாக! (உன் சாபத்தை அவர்களின் மீது இறக்குவாளாக!) எனக்கூறக்கூடியவர்களாக இருந்தனர்.

“காரியத்தில உமக்கேதுமில்லை, அவர்களது தவ்பாவை அவன் அங்கீகரிக்கும் வரை, அல்லது அவர்களை அவன் தண்டிக்கும் வரை (ஏனெனில்) அவர்கள் நிச்சயமாக அக்கிரமக்காரர்களாக இருக்கின்றனர்.” என்ற இந்த வசனம் இறக்கப்பட்ட பொழுது நிச்சயமாக அதை அவர்கள் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் விட்டு விட்டார்கள் என எங்களுக்கு எட்டியது என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

ளுஹரிலும், அதல்லாத மற்ற நேரங்களிலும் ‘குனூத்‘ ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 356

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையை உங்களுக்கு (நான்) நெருக்கமாக்கிக் காட்டுவேன் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

ளுஹரிலும், இஷாவிலும் ஸுபுஹுத் தொழுகையிலும் அவர்கள் ‘குனூத்‘ ஓதக்கூடியவர்கயாக இருந்தார்கள். விசுவாசிகளுக்கு துஆ செய்பவர்களாகவும் காபிர்களை லஃனத்து செய்பவர்களாகவும் இருந்தனர் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

மஃக்ரிபில் ‘குனூத்‘ ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 357

“நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஸுபுஹு(த்தொழுகையி)லும் மஃரிபிலும் குனூத் ஓதக்கூடியவர்களாக இருந்தனர்.” என அல்பராஉ பின் ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஃபஜ்ரில் இரு ரக்அத்துகள் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 358

ஃபஜ்ரு உதயமாகி (பாங்கு சொல்லப்பட்டு) விட்டால் இலேசான இரண்டு ரக்அத்துகளையல்லாது வேறு எதையும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் தொழமாட்டார்கள் என ஹப்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஃபஜ்ரு இரண்டு ரக்அத்தின் சிறப்பு என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 359

ஃபஜ்ரின் இரண்டு ரக்அத்துகள் துன்யாவையும் அந்த துன்யாவில் உள்ள அனைத்தையம் விட மிகச் சிறந்ததாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஃபஜ்ரின் இரு ரக்அத்துகளில் ஓதுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 360

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ருடைய இரு ரக்அத்துகளில் ‘குல்யா அய்யுஹல் காஃபீருன்‘ அத்தியாத்தையும் ‘குல்வல்லாஹு அஹது‘ அத்தியாத்தையும் ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்