Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 16

தொழுகை பற்றிய நூல்
 
பாங்கைச் செவியுற்றவர் மீது பள்ளிக்கு வருவது கடமை என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 321

கண் பார்வையற்ற ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக என்னை பள்ளிக்கு அழைத்து வரும் உதவியாளர் யாரும் எனக்கில்லை (எனக் கூறி) தனக்கு வீட்டில் தொழுது கொள்ள அனுமதி வழங்குமாறு கேட்கிறார். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், அவருக்கு அனுமதியும் வழங்கிவிட்டனர். அனுமதி பெற்று அவர் திரும்பியபோது அவரை அழைத்து தொழுகையின் அழைப்பை (பாங்கை) செவியுறுகிறீரா? என்று கேட்டனர். அதற்கவர் ஆம்! என்றார். (அதற்கு) பதில் கூறுவீராக! (பள்ளியில் வந்து தொழுவீராக!) என்று கூறினர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு.

ஜமாத்தின் சிறப்பு

ஹதீஸ் எண் : 322

உங்களில் ஒருவர் தனித்துத் தொழுவதை விடவும் ஜமாத்தில் தொழுவது இருபத்தைந்து பங்கிற்கு மேல் அதிகமாகப் பெருவதை விட மிகச்சிறந்ததாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு.

ஜமாத்தில் தொழுவது நேர்வழியின் வழிமுறைகளில் உள்ளதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 323a

யாருடைய நயவஞ்சகத்தன்மை அறியப்பட்டுள்ளதோ அந்த நயவஞ்சகரல்லாத, அல்லது நோய்வாய்ப்பட்டவரல்லாத வேறெவரும் (ஜமா அத்து) தொழுகையை விட்டும் பிந்தமாட்டார் என்பதை எங்களில் நான் நிச்சயமாக கண்டு கொண்டேன்.

வியாதிஸ்தராக இருப்பின் இரண்டு மனிதர்களுக்கு மத்தியில் தொழுகைக்கு வருகின்றவரை அவர் (நடந்து வருவார்) நடப்பார்.

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் நேர்வழியின் வழிமுறைகளை எங்களுக்கு கற்றுத்தந்துள்ளனர். நேர்வழியின் வழிமுறைகளில் உள்ளது தான் நிச்சயமாக எந்தப் பள்ளியில் அதற்காக (தொழுகைக்காக) பாங்கு கூறப்பட்டதோ அதில் தொழுகையை (நிறைவேற்றுவது) என அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

ஜமாத்தில் தொழுவது நேர்வழியின் வழிமுறைகளில் உள்ளதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 323b

ஒருவர் ஜமாத்தில் தொழுவது அவர் வீட்டில் தொழுவதை விடவும், அவரது கடைத்தெருவில் தொழுவதைவிடவும் இருபதுக்கும் மேற்பட்ட தரங்களை அதிகமாக பெற்றுத்தருகிறது. அதாவது அவர்களில் ஒருவர் ஒளுச் செய்து அதை அழகான முறையில் செய்து விட்டு அவர் மஸ்ஜிதுக்கு வந்தார். அவரைத் தொழுகையை தவிர வேறு எதுவும் கிளப்பி வரச் செய்யவில்லை. அவர் தொழுகையைத் தவிர வேறு எதையும் நாடவில்லை. (எனவே இந்நிலையில்) அவருக்கு அதன் மூலம் ஒரு தரம் உயர்த்தப்பட்டதே தவிர, ஒரு குற்றம் அழிக்கப்ட்டதே தவிர அவர் தனது ஒவ்வொரு (கால்) அடியையும் எடுத்து வைப்பதில்லை. (இவ்வாறு அவர்) பள்ளியினுள் நுழையும்வரை (உண்டு), மேலும் தொழுகை அவரைத் தடுத்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் (தொழுது கொண்டிருக்கும்வரை - அவருக்கு நன்மை கிடைத்துக்கொண்டேயிருக்கிறது)

அவர்களில் ஒருவர் எந்த இடத்தில் தொழுதாரோ அந்த இடத்தில் இருக்கும்வரை வானவர்கள் அவரின் மீது ஸலவாத் கூறுகிறார்கள். ‘யா அல்லாஹ்! அவருக்கு நீ அருள் செய்வாயாக! யா அல்லாஹ்! அவரது தவ்பாவை (பாவ மன்னிப்பை) அங்கீகரித்தருள்வாயாக!‘ என அவர் ஒளுவை முறிக்காதவரையிலும் யாரையும் இடைஞ்சல் செய்யாதவரையிலும் இவ்வாறு பிரார்த்தித்த வண்ணம் உள்ளனர் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

இஷாவையும் ஸுப்ஹுவையும் ஜமாத்தில் தொழுவதன் சிறப்பு

ஹதீஸ் எண் : 324

மஃரிபுக்கு உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியினுள் நுழைந்து தனியாக அமர்ந்தார்கள். நானும் (அறிவிப்பாளர்) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது அவர்கள், என் சகோதரரின் மகனாரோ! “ஜமாத்தாக ஒருவர் இஷாத் தொழுகையை தொழுது விட்டால் அவர் பாதி இரவு தொழுதவரைப் போன்றவராவார்”.

“ஸுபுஹுத் தொழுகையை ஒருவர் ஜமாத்தாக தொழுதுவிட்டால் இரவு முழவதும் தொழுதவரைப் போன்றவராவார்.” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ அம்ரத்த ரளியல்லாஹு அன்ஹு

இஷா, ஸுப்ஹுத் தொழுகையை ஜமாத்தில் தொழுவதை விட்டுவிடுவதை கண்டிப்பது (கடினங்காட்டுவது) என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 325

நயவஞ்சகர்களின் மீது மிக கடினமான தொழுகை, இஷாத் தொழுகையும் பஜ்ருத் தொழுகையும் ஆகும். அவ்விரண்டிலும் உள்ளதை (கிடைக்கும் நன்மைகளைப் பற்றி) ஜனங்கள் அறிவார்களேயானால் அவ்விரண்டின்பால் (அதை நிறைவேற்ற) தவழ்ந்து கொண்டாவது வந்து சேருவர்.

ஜனங்களுக்கு தொழுகையை நடத்தித்தர ஒரு மனிதரிடம் நான் கட்டளையிட்டு விட்டு இகாமத்தும் கூறிவிட்டபின்னர் (தொழுகையை ஆரம்பித்த பின்னரும்) தொழுகையை விட்டும் பிந்தி விட்டார்களே அந்த மனிதர்களின்பால் என்னுடன் சில ஆடவர்களை அவர்கள் கையில் விறகுக்கட்டுடன் (இருக்க) அழைத்துச் சென்று (தொழுகைக்கு வராத) அவர்களது வீடுகளை நெருப்பால் எரித்துக் கொளுத்திவிடுவேன். (இவர்களைப் போன்றவர்கள்) தமக்கு (அங்கே) கொடுத்த (ஆதாயம் எலும்பு கிடைக்கிறது என்று அறிவாரேயானால் அத்(இஷாத்) தொழுகைக்கு ஆஜராவார்கள் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என வேறொரு அறிவிப்பில் அதிகமாக கூறியுள்ளார்

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹ் அன்ஹு

ஹதீஸ் எண் : 326

ஒரு மனிதரை (அழைத்து) ஜனங்களுக்குத் தொழுகை வைக்குமாறு நான் கட்டளையிட்டு விட்டு, அதன்பின் ஜும்ஆ தொழுகையை விட்டும் எவர் பிந்திவிடுகிறாரோ அந்த மனிதர்களின் வீடுகளை நான் நெருப்பை வைத்துக் கொழுத்திவிடுவேன் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ தொழுகையை விட்டுவிட்டு பின் தங்கி விட்டக் கூட்டத்தாரைப்பார்த்து (கடுமையாக) கூறினர் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தொழுகையை அழகாகத் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 327

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையை முடித்து கொண்ட பின்னர், “இன்ன மனிதரே! உமது தொழுகையை நீ அழகாக்கிக் கொள்ள வேண்டாமா? தொழக்கூடியவர் தொழுதால், அவர் எவ்வாறு தொழுகையை நிறைவேற்றுகிறார் என உற்று நோக்க வேண்டாமா? ஒருவர் தொழுவதெல்லாம் அவருக்காக (அவரது பாங்கில் நன்மையைச் சேர்த்துக் கொள்ளவதற்காக)த்தான். நிச்சயமாக அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் எனக்கு முன்னால் (இருப்பதைப்) பார்ப்பது போன்றே எனக்குப் பின்னாலிருப்தையும் பார்க்கின்றேன்” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

தொழுகையில் எல்லாச் செயலகளையும் நிதானமாகவும் அதை முழுமையாகவும் செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 328

அல்பரா பின் ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்: முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் அவர்களது தொழுகையை அலசினேன். அவர்களது நிலையை (நிலைக்குப்பிறகு) அவர்களது ருகூஉவை அவர்களின் ருகூஉவிற்குப் பிறகு, நிலையில் சமமாக இருந்ததை, அவர்கள் ஸஜ்தாவை, இரு ஸஜ்தாவிற்கு மத்தியில் அவர்களின் அமருதலை, அவர்களின் ஸஜ்தா, ஸலாம் கொடுத்து திரும்புவதற்கிடையில் உள்ள (எல்லா செயல்களும்) கிட்டத்தட்ட சமமானதாக இருந்ததை நான் பெற்றுக்கொண்டேன் எனக்கூறுகிறார்கள்.

ஹதீஸ் எண் : 329

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தியதை நான் கண்டது போன்று உங்களுக்குத் தொழுகை நடத்துவதில் நான் குறை வைக்கமாட்டேன் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். அனஸ் அவர்கள் ஒரு காரியத்தைச் செய்துவந்தனர். (ஆனால் அதை) நீங்கள் செய்ய நான் காணவில்லை எனக்கூறிவிட்டு, ருகூஉவிலிருந்து (அனஸ் அவர்கள்) தன் தலையை நிமிர்த்துவார்களாயின் நிலையில் சரியாக நின்றுவிடுவர், முடிவாக (அவரின் இந்நிலையைக் கண்டு) கூறக்கூடியவர், அவர் நிச்சயமாக மறந்துவிட்டார் என்றே கூறிவிடுவர். (முதல்) ஸஜ்தாவிலிருந்து அவர் தலையை உயர்த்தினால் ஸ்திரமாக இருந்து விடுவர் (அவ்வளவு அதிக நேரம் அமர்ந்து விடுகிறார் இதனைப்பார்த்து) கூறக்கூடியவர் முடிவாக நிச்சயமாக அவர் (மறுமுறை ஸஜ்தா செய்வதை) மறந்தே விட்டார் எனக்கூறிவிடுவார். என்ற இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான தாபித் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்.

ஹதீஸ் எண் : 330

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எந்த தொழுகை மிகச் சிறப்புக்குரியது? எனக் கேட்கப்பட்டது. (அதற்கு) நீண்ட நிலையுடைய தொழுகை எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு

தொழுகையில் அமைதிகாக்க வேண்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 331

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வீட்டிலிருந்து) வெளியேறி (எங்கள்பால் வந்தனர்) வந்து குதிரைகள் நிலையில்லாது வால்களையும் கால்களையும் (ஆட்டுவதைப்) போன்று உங்களது கைகளை1 உயர்த்தி (ஆட்டக்கூடி)வர்களாக நான் காண நேர்ந்தது ஏன்? (எனக்கேட்டுவிட்டு) தொழுகையில் அமைதிகாருங்கள். அதன்பிறகு (ஒரு சமயம்) வெளிப்பட்டு எங்களின்பால் வந்து எங்களை வட்டமிட்டவர்களாகக் கண்டனர். உங்களை தனித்தனியாக வட்டமிட்டவர்களாக நான் காண நேர்ந்தது ஏன்? எனக்கூறினார்கள். அதன்பிறகு ஒரு சமயம் எங்களின்பால் வெளிப்பட்டு அமரர்கள் தங்களின் இரட்சகனிடத்தில் அணியாக நிற்பது போன்று நீங்கள் அணியில் நிற்க வேண்டாமா? என்றனர். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! அமரர்கள் தங்களது இரட்சகனிடம் அணியில் எவ்வாறு நிற்கிறார்கள் என நாங்கள் கேட்டோம். (அதற்கவர்கள்) முந்திய அணிகளை நிறைவு செய்கிறார்கள் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மற்றொரு அறிவிப்பில் தொழுகையில் ஸலாம் கொடுக்க ‘அஸ்ஸலாமு அலைக்கும்‘, ‘அஸ்ஸலாமு அலைக்கும்‘ என நாங்கள் கூறும் சமயம் எங்களது இரு கைகளை உயர்த்தியவர்களாகக் ஸலாம் கொடுத்துக் கொண்டிருந்தோம். அது தவறானது. அதைச்செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறியபோது தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘குதிரைகள், நிலையில்லாமல் கால்களையும் வால்களையும் ஆட்டுவது போன்று உங்களது கைகளை உயர்த்தி நீங்கள் ஆட்டிக் கொண்டிருக்க நான் பார்த்திருக்கிறேனே! (உங்களை அவ்வாறு செய்ய வைத்தது எது?‘) எனக் கேட்டார்கள். ஆகவே இது ஸலாம் கொடுப்பதற்கு முன்பு கைகளை ஆட்டுவது கண்டித்துக் கூறப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்க.

ஆயினும் ‘அத்தாஹிய்யாத் இருப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தபோது தங்களது ஆள்காட்டி விரலை அசைத்தவாறு துஆ செய்து கொண்டிருக்க நாண் கண்டேன்‘ என வாயில் பின் ஹுஜ்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் அபூதாவுதில் பதிவாகியுள்ளது. ‘அத்தாஹிய்யாத் இருப்பில் தொடக்கம் முதல் கடைசி வரை விரலை அசைத்துக் கொண்டிருப்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. இதை இமாம் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களல்லாத(மற்ற)வர்களும் எடுத்துச் செயல்பட்டிருக்கின்றனர். தொழுகையில் விரலால் சைக்கிணை செய்யலாமா? என அஹ்மது ரஹ்ம(த்)துல்லாஹி அலைஹி அவர்களிடம் கேட்டக்கப்பட்டதற்கு ‘ஆம்! கடினமாக‘ எனக்கூறினர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரலை அசைக்கவேயில்லை என்ற ஹதீஸ் பதிவாகியுள்ள தொடர் நிலை பெற்று நிற்கவில்லை (சரியானதல்ல) என்பதை அபூதாவுதில் உள்ள பலஹீனமான ஹதீஸ்களில் நான் (ஷைக் அல்பானி) தெளிவுபடுத்தியுள்ளேன்.

விரலை சைக்கிணைக்குப் பிறகு வைத்து விடுவதற்கும் (அதாவது) ‘லாயிலாஹா‘ வில் தூக்கி ‘இல்லல்லாஹ்‘ வில் போட வேண்டுமென்பதற்கும் நபிவழியில் (சுன்னத்தில்) எவ்வித ஆதாரமில்லை. இந்த ஹதீஸின் தெளிவிற்கு அது ஒரு மாற்றமானதாகும் என்பதை கருத்தில் கொள்க.

தொழுது கொண்டிருப்பவர்க்கு ‘ஸலாம்‘ கூறப்பட்டால் பதில் சைக்கிணை செய்யலாம் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 332

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தேவையின் நிமித்தம் என்னை அனுப்பி வைத்தார்கள். (அதை முடித்துக் கொண்ட) பின் (வாகனத்தின் மீது) அவர்கள் சென்று கொண்டிருக்க அவர்களிடம் நான் திரும்பி வந்தடைந்தேன். அப்பொழுது (அவ்வாகனத்தின் மீது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள் என்று குதைபா கூறுகிறார்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். என்பால் (ஹதீஸின் சில அறிவிப்புகளில் வந்துள்ளவாறு அவர்களது தலையினால்) சைக்கினை செய்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு என்னை அழைத்து “நிச்சயமாக நீர் சிறிது ஸலாம் கூறினீர் நான் (அப்பொழுது) தொழுது கொண்டிருந்தேன்” எனக்கூறினார்கள். அந்த சமயம் சூரிய அஸ்தமனத்திசையை முன்னோக்கியவர்களாக அவர்கள் இருந்தனர் என ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

தொழுகையில் பேசுவது மாற்றப்பட்டுவிட்டது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 333

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் தொழுது கொண்டிருந்த பொழுது, கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் தும்மினார். (அறிவிப்பாளராகிய நான்) யர்ஹமுகல்லாஹ் எனக்கூறினேன். கூட்டத்திலிருந்தவர்களெல்லாம் தங்கள் பார்வையினால் என்னை எறித்தனர். என் தாய் என்னை இழந்து விட்ட கைசேதமே! உங்கள் காரியமென்ன? என்னை ஏன் அவ்வாறு பார்க்கிறீர்கள்? என நான் கூறினேன். அவர்களது கையால் அவர்களது தொடையில் அடித்துக் கொண்டனர். அவர்களெல்லாம் (அப்பார்வையின் மூலம்) நான் பேசாதிருக்க நினைக்கிறார்கள் என்பதை உணர்ந்த போது நான் (என் மீது) கோபப்பட்டு என் நிலையை மாற்றிக்கொண்டு பேசாதிருந்து விட்டேன். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை முடித்துக்கொண்ட போது, என் தாயும் தந்தையும் அவருக்கு சமர்பணமாக, அதற்கு முன்பும் அதற்கு பின்பும் கற்றுத்தரும் விஷயத்தில் அவர்களை விட அழகான, சிறந்த ஒரு கற்றுத்தருபவரை நான் காணவில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் என்னை விரட்டவோ என்னை அடிக்கவோ, என்னை பேசவோ இல்லை. அதன் பிறகு நிச்சயமாக இந்த தொழுகை, அதில் மனிதர்களின் எந்தப்பேச்சும் சீரான(முறையான)தல்ல (எனினும்) அது தஸ்பீஹும், தக்பீரும் குர்ஆனை ஓதுவதுமாகும் என்றனர். (அல்லது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது போன்று)

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நிச்சயமாக நான் அறியாமை காலத்தை விட்டு புதியவன். நிச்சயமாக அல்லாஹ் இஸ்லாத்தை (மார்க்கமாக) அனுப்பிவைத்தான். எங்களில் சிலர் ஜோசியர்களிடம் வருகின்றனர் எனக்கூறினேன். (அதற்கவர்கள்) நீ அவர்களிடம் சொல்லாதீர் என்றனர். எங்களில் சில ஆடவர்கள் சகுனம் பார்க்கின்றனர் என்று கூறினேன். அது அவர்களின் மனங்களில் ஏற்படக்கூடிய ஒன்றாகும், எனவே (அவர்களை எவ்வித செயல்பாடுகளிலிருந்தும்) தடுத்துவிட வேண்டாம் (எந்த செயல்பாடுகளிலிருந்தும் அது உங்களை நிச்சயமாக தடுத்துவிட வேண்டாம் என இப்னு ஸலா கூறுகிறார்) என்றனர்.

எங்களில் சில ஆடவர்கள் கோடுகளை கிழிக்கக்கூடியவர்களாக இருந்தனர் என்று கூறினேன். அதற்கவர்கள், நபி மார்களில் ஒரு நபி கோடு கிழிக்கக்கூடியவராக இருந்தார். யாரின் கோடு (கிழித்தல்) அக்கோட்டிற்கு ஒத்திருந்ததோ அது தான் எனக்கூறினார்கள். (அந்த நபி போட்ட கோட்டிற்கு ஏற்றவாறு போடுவதற்கு, நமக்கு அது பற்றிய அறிவில்லை, ஆகவே அது நமக்கு நடக்க முடியாத விஷயம் என்று கூறி நடைபெறாத ஒரு காரியத்தை இதற்கு ஒப்பிட்டுக்கூறி செய்ய வேண்டாம் என்பதை விளக்குகிறார்கள்)

என்னிடம் ஒரு அடிமை பெண் இருந்தாள். (அவள்) உஹது மலைப்பக்கமும் ஜவானிய்யா பகுதியிலும் ஆடுகளை மேய்(ப்பது வழக்கம்)த்துக் கொண்டிருந்தாள். ஓரு நாள் சென்று பார்க்கும் பொழுது அவள் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளிலிருந்து ஒரு ஆட்டை ஓநாய் கொண்டு சென்றுவிட்டது. நானும் ஆதமுடைய மக்களில் ஒரு மனிதன் தான், அவர்கள் கைசேதப்படுவது போன்று நானும் கைசேதப்பட்டேன். ஆயினும் (கோபம் மிகுந்ததின் காரணமாக) நான் என் கையை விரித்து அவள் முகத்தில் வேகமாக அடித்து விட்டேன். இவ்விஷயம் (எனக்கு) மிகப்பெரியதாக இருந்ததின் காரணமாக (இது பற்றிக் கூறி கேட்க) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அப்பெண்ணை உரிமை விட்டு விடட்டுமா எனக்கேட்டேன். (அதற்கு) அப்பெண்ணை என்னிடம் கொண்டுவாரும் எனக்கூறினார். (அதற்கிணங்க) நானும் அப்பெண்ணை (அழைத்துக் கொண்டு வந்தேன். அப்பெண்ணிடம் அல்லாஹ் எங்கிருக்கிறான்? எனக் கேட்டனர். (அப்பெண்) வானத்தில் எனக்கூறினாள். (உடனே) அப்பெண்ணை உரிமை விட்டுவிடுவீராக! நிச்சயமாக அவள் விசுவாசங் கொண்டவளாக இருக்கிறாள் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஅவியா பின் அல்ஹகம் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் அர்ஷின் மீது சரியாக உயர்ந்திருக்கிறான் என்பதே குர்ஆன் ஹதீஸ்களின் தெளிவு. தனது சிருஷ்டிகளில் எதற்கும் ஒப்பற்ற அவனை சரியாக புரிந்து கொள்ளாது தூணிலும் இருக்கிறான் துரும்பிலுமிருக்கிறான் எங்கும் வியாபித்திருக்கிறான்,அமைந்து இருக்கிறான் அர்ஷின் மீது சரியாக அமர்த்திருக்கிறான் என்றெல்லாம் பொருள் கூறவோ கருத்துக் கூறவோ நமக்கு யாருக்கும் அல்லாஹ் உரிமை தரவே இல்லை. காரணம்:- ‘குல்ஹுவல்லாஹு‘ அத்தியாத்தின் இறுதியில் அவனுக்கு நிகராக எவரும் இல்லை என்றும், அவனைப் போன்று எதுவுமே இல்லை என்றும் தன்னைப்பற்றி அல்லாஹ் தெளிவாக கூறியிருக்க அவனுக்கு ஒரு உவமையை கற்பித்து மனதில் வந்த அல்லது கேள்விப்பட்ட எல்லாப் பொருளையும் விட்டுவிட்டு, ‘‘அல்லாஹ் அவனுக்கே உண்டான தகுதிக்கொப்ப அர்ஷின் மீதிருக்கிறான் எனக்கூறியும் கொள்கையாகக் கொண்டுமிருப்பதே சரியானதாகும். ஆகவே குர்ஆன் ஹதீஸ்களில் தெளிவில் நிருபனமான, ஸஹாபா ரளியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன் அவர்களும் அவர்களைப்பின்பற்றிய முந்திய நல்லவர்களான ஸலபுஸ்ஸாலிஹின்களின் கொள்கையாகும், இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹ் அலைஹி அவர்களிடம் அல்லாஹ் அர்ஷின் மீதிருப்பதைப் பற்றிக் கேட்கப்பட்டதற்கு அவன் அர்ஷின் மீதிருக்கிறான் என்பது அறியப்பட்டதாகும் எவ்வாறு என்பது யாருக்கும் தெரியாததாகும். எவ்வாறு என்ற கேள்வியே ‘பித்அத்‘தாகும், அல்லாஹ் அர்ஷின் மீதிருக்கிறான் என்பதை கொள்கையாக ஏற்று நம்பிக்கை கொள்வது கடமையாகும் எனக்கூறினார்கள். அவ்வாறே நமது ஈமானிருக்க அல்லாஹ் நல்லுதவி செய்வானாக!.

ஹதீஸ் எண் : 334

“இறைவனுக்காக பணிந்தவர்களாக (தொழுகையில்) நில்லுங்கள்” என்ற வசனம் இறங்கும் வரை தொழுகையில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம், ஒருவர் அவர் அருகில் தொழுகையில் இருப்பவரோடும் பேசிக்கொண்டிருப்பார். (இவ்வசனம் இறங்கியபின்) வாய் பொத்தி பேசாதிருக்குமாறு நாங்கள் கட்டளையிடப்பட்டோம். பேசுவதிலிருந்து தடுக்கப்பட்டு விட்டோம் என ஜைது பின் அர்க்கம் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்.

தொழுகையில் தேவைக்காக தஸ்பீஹ் கூறுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 335

(தொழுகையில் தவறு ஏற்பட்டு விட்டால் அதை நினைவுபடுத்த) “தஸ்பீஹ் (கூறுவது) ஆடவர்களுக்கும், கைதட்டுவது1 பெண்களுக்குரியதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 பெண்கள் கைதட்டுவது நம் வழக்கத்தில் கைதட்டுவது போன்றதல்ல. மாறாக ஒரு கையின் மேல்பகுதியின் மீது மறு கையின் உள்பகுதியினால் தட்டவேண்டும்.

தொழுகையில் இருக்கும் போது வானத்தின் பால் பார்வையை உயர்த்துவது தடுக்கப்பட்டது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 336

“தொழுகையில் துஆ செய்யுமிடத்து அவர்களது பார்வைகளை வானத்தின்பால் உயர்த்துகிறார்களே அந்த சமூகத்தவர்கள் (அதை) முடித்துக் கொள்ள(விட்டுவிட)வும். அல்லது அவர்களது பார்வைகள் பறிக்கப்பட்டுவிடலாம்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

தொழுது கொண்டிருப்பவருக்கு முன் செல்வது கடினமான குற்றம், என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 337

ஜைதுபின் காலித் அல்ஜுஹனீ ரளியல்லாஹு அன்ஹு என்பவர் அபூஜுஹைம் என்பவரிடம் “தொழுது கொண்டிருப்பவருக்கு முன்னால் நடந்து செல்வதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (அவர்) என்ன கேள்விப்பட்டார்” என்பதை கேட்டுவர புஸ்ரு பின் ஸயீது என்பவரை அனுப்பினார்.

“தொழுது கொண்டிருப்பவருக்கு முன் செல்பவர் தன் மீது என்ன தண்டனை உண்டு எனத் தெரிந்து கொள்வாரானால், தொழுபவருக்கு முன் அவர் கடந்து (குறுக்கே) செல்வதைவிட, நாற்பதுகள் நிற்பது அவருக்குச் சிறந்ததாக இருக்கும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஜுஹைம் கூறினார்.

(நாற்பது என்பது) நாற்பது நாட்களா? நாற்பது மாதமா? அல்லது நாற்பது வருடங்களா, எனக்குத் தெரியவில்லை என அபுந்நள்ரு கூறுகிறார்.

அறிவிப்பவர் : புஸ்ருபின் ஸயீது ரளியல்லாஹு அன்ஹு

தொழுது போது குறுக்கே செல்வதை தடுப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 338

தொழும் போது ஜனங்கள் (குறுக்கே) நடந்து செல்வதிலிருந்து (தடுப்புக்கு) மறைத்துக் கொள்ளும் மறைப்பை (வைத்து) ஆக்கியதன் பின் ஒரு சமயம் ஜும்ஆ நாளன்று நான், அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் இருக்க அவர் (அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு) தொழுது கொண்டிருக்கும் போது பனூ அபீ முஜத் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு வாலி மனிதர் வந்து (தொழுது கொண்டிருந்த) அவருக்கு முன் தாண்டிச் செல்ல முயன்றார். (தன் முன் அவர்) செல்லாது தடுப்பதற்க்காக (அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு) அவர்கள், அவரது தொண்டைக் குழியில் தட்டிணார்கள். (அவர் சுற்றும் முற்றும்) பார்த்தார்(இருப்பினும் அவருக்கு) வெளிளேற வேறு வழி கிடைக்கவில்லை. (எனவே) அவர் திரும்பி வந்து (மீண்டும் அவரை கடந்து செல்ல முயன்ற போது) முந்திய தடவையை விட மிகக்கடுமையாக அவரது குரல் வலையில் (கையை வைத்து) தட்டி(ள்ளி)னார். தள்ளப்பட்ட அவர் நிலையாக நின்று விட்டார். (நின்றவாறு) அபூஸயீதுல் குத்ரியிடம் சண்டையும் போட்டார். அப்பொழுது அவரை அங்கிருந்த மக்கள் (சண்டையிடுவதிலிருந்து) அவரைத் தடுத்தனர். (அடுத்து) மர்வான் அவர்களிடம் நுழைந்து அவர் (தனக்கு) நிகழ்ந்த(விபரத்தை)க்கூறி முறையிட்டார்.

அடுத்து அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு மர்வானிடம் நுழைந்தார் (வந்தார்) என அறிவிப்பாளர் கூறுகிறார். மர்வான், அவரிடம் உமக்கும் உன் சகேதரரின் மகனுக்கும் (இடையில்) என்ன நடந்தது, அவர் உம்மைப்பற்றி (இங்கு) முறையிட்டுக் கொண்டு வந்தார் எனக்கூறினார். அதைக்கேட்ட அபூஸயீதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்

“உங்களில் யாரேனும் தொழுதால், ஜனங்களிலிருந்து (தன்னை மறைத்துத்(தடுத்)துக் கொள்ளும்) ஒரு மறைப்பை ஆக்கிக் கொள்வார். அவர் அவ்வாறு மறைப்பை ஆக்கியதன் பின் யாரேனும் அவருக்கு முன் (அவரை) கடந்து செல்ல (முயற்சித்தால்) அவரது தொண்டைக்குழியில் கையைவைத்துக் தட்ட(ள்ள)வும். அவர் மறுத்தால் அவரைக் கொல்லவும்”. நிச்சயமாக அவர் ஷைத்தானாகும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸாலிஹ் அஸ்ஸமான் ரளியல்லாஹு அன்ஹு

தொழுபவர் மறைத்துக்1 கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 339

நாங்கள் தொழுது கொண்டிருக்கும் போது எங்களுக்கு முன் கால்நடைகள் நடந்து சென்று கொண்டிருக்கும். (எனவே) அது பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்க(ளிடம் கேட்டோம்)ளுக்குக் கூறினோம். (அதற்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) வாகனத்தின் பின் பகுதியிலிருக்கும் குச்சி போன்றது உங்களில் ஒருவருக்கு முன்பாக, இருக்க, எது அவருக்கு முன்பாக நடந்து சென்றாலும் (அது) அவருக்கு எவ்வித இடையூறும் செய்யாது (அவருடைய தொழுகை வீணாகாது) என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

குறிப்பு : 1 தடுப்பை (மறைப்பை) ஆக்குவதன் நோக்கம்-தொழுபவர் தன் பார்வையை உள்ளடக்கிக் கொள்வதற்கும், தொழுபவருக்கு சமீபமாக செல்பவரை தடுப்பதற்காகும்.

ஈட்டியின் தலைப்பகுதியை மறைப்பாக வைத்து அதன்பால் தொழுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 340

பெருநாளன்று (தொழுகையை நடத்திதர) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே வருவார்களாயின் அவர்களுக்கு முன்பாக ஈட்டியின் தலைப்பாகம் நட்டு வைக்கப்படும்.

அதன்பால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், ஜனங்களெல்லோரும் அவர்களுக்குப் பின்னாலும் (நின்று) தொழுவார்கள். பயணத்திலும் அது போன்றே செய்வார்கள். அங்கிருந்து (அதை அடிப்படையாக வைத்துத்) தான் தலைவர்களும் (அவ்வாறு செய்ய) எடுத்துக் கொண்டார்கள்.

குறிப்பு : வாகனத்தில் தொழுபவர் தனக்கு முன் செல்பவரைத் தடுக்க மறைப்பாக ஆக்கித் தொழுதல் என்பதே இதன் கருத்து.

ஹதீஸ் எண் 340ல் ஈட்டியின் தலைப்பகுதியை மறைப்பாக வைத்து தொழுதுள்ளனர் என உள்ளது. இவையாவற்றுக்கும் கருத்து இவைகளை மறைப்பாக வைத்து தொழுதுள்ளனர் என்பதே அல்லாமல் ஈட்டிக்கோ மாட்டுக்கோ அல்லது மறைப்பாக ஆக்கப்படும் பொருள்களுக்கோ வணக்கமல்ல என்பதை கவனத்தில் கொள்க!

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்