Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 13

 தொழுகை பற்றிய நூல்

கிப்லாவை முன்னோக்க வேண்டும்

ஹதீஸ் எண் : 261

நிச்சயமாக ஒரு மனிதர் பள்ளியில் நுழைந்து தொழுதார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பள்ளியில்) ஒரு ஓரத்தில் அங்கே இருந்தனர். “தொழுகைக்காக நீ தயாராகி விட்டால் ஒளுவை நிறைவாக செய்து கொள். அதன்பிறகு கிப்லாவை முன்னோக்கி நின்று (அல்லாஹு அக்பர் என்று) தக்பீர் கூறுவாயாக” என்ற விஷயமும் அதில் உள்ளது.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : கிப்லாவை கண்டிப்பாக முன்னோக்கித்தான் தொழவேண்டும் என்பதை இந்த ஹதீஸில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஃபர்ளான தொழுகையை நிறைவேற்றும் சமயம் ‘கிப்லா பக்கம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

நபிலானவற்றை வாகனங்களில் நிறைவேற்ற நேர்ந்தால் எத்திசையில் வாகனம் செல்கிறதோ அத்திசையில் நோக்கி தொழுவது ஆகும்.

ஷாம் தேசத்தின் பால் முன்னோக்குவதை தவிர்த்து கஃபாவின் பால் கிப்லாவை மாற்றுதல் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 262

“நீங்கள் எங்கிருப்பினும் உங்கள் முகங்களை அதன் (மஸ்ஜிதுல் ஹராமின்) பால் திருப்புங்கள்” என்ற ‘அல்பகரா‘ அத்தியாத்தில் உள்ள வசனம் இறங்கும் வரை பதினாறு மாதங்கள் பைத்துல் முகத்தஸின்பால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் தொழுது வந்தேன். (மேற்கூறப்பட்ட வசனம்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுத பிறகு இறங்கிற்று. (ஆகவே) அக்கூட்டத்திலிருந்த ஒரு மனிதர் (அங்கிருந்து) நடந்தார். (வரும் வழியில்) அன்ஸார்களில் சில மனிதர்கள் இருந்த இடத்திற்கு, அருகாமையில் சென்றடைந்தார் (அப்போது) அவர்கள் தொழுது கொண்டிருந்தனர். (கிப்லா மாற்றப்பட்டு விட்ட) அச்செய்தியை அவர்களுக்குத் தெரிவித்தார். (அதை செவியுற்றதுமே) அவர்களது முகங்களை (அல்லாஹ்வின்) வீட்டின்பால் அவர்கள் திருப்பிக் கொண்டனர் என அல்பரா உபின் ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்.

அறிவிப்பவர் : அல்பராஉ பின் ஆஜிப் ரளியல்லாஹு அன்ஹு

‘தொழுகைக்காக ‘இகாமத்து‘ சொல்லப்பட்டால் அந்த கடமையாக்கப்பட்ட தொழுகையைத் தவிர வேறு தொழுகை இல்லை (கிடையாது)‘ என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 263

தொழுகைகக்காக இகாமத்து சொல்லப்பட்டுவிட்டால் (எந்த) ஃபர்ளான தொழுகைக்காக இகாமத்து சொல்லப்பட்டு விட்டதோ அதைத்தவிர (வேறு) தொழுகை இல்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

இகாமத்து சொல்லப்பட்டுவிட்டால் எப்போது ஜனங்கள் தொழுகைக்காக எழுந்திருக்க வேண்டும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 264

“தொழுகைக்காக இகாமத்து சொல்லப்பட்டுவிட்டால் என்னைப் பார்க்கின்றவரை நீங்கள் (எழுந்து) நிற்க வேண்டாம்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூக(த்)தாதா ரளியல்லாஹு அன்ஹு

இமாம் வெளி(புற)பட்டுவிட்டால் தொழுகைக்கு ‘இகாமத்து‘ கூறவேண்டுமென்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 265

சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்துவிட்டால் பிலால் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பாங்கு கூறுவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தங்களது வீட்டிலிருந்து) புறப்பட்டு வரும் வரை ‘இகாமத்து‘ கூற மாட்டார். ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்பட்டுவிட்டதை அவர்(பிலால் ரளியல்லாஹு அன்ஹு) பார்த்துவிட்ட சமயத்தில்-(பிறகுதான்) -தொழுகைக்காக ‘இகாமத்து‘ சொல்லி விடுவார்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸம்ரா ரளியல்லாஹு அன்ஹு

இகாமத்து சொல்லப்பட்ட பிறகு இமாம் குளிப்பதற்காக வெளியேறிச் செல்லுதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 266

தொழுகைக்காக ‘இகாமத்து‘ சொல்லப்பட்டுவிட்டது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களின் பால் வெளிப்பட்டு வருவதற்கு முன்பு (தொழுகைக்கு) வரிசைகளை (ஸஃபுகளை) நாங்கள் சரிபடுத்திக் கொண்டு நின்று விட்டோம். (அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்து தக்பீர் கூறுவதற்கு முன்பு தங்களுக்குரிய தொழும் இடத்தில் நின்று விட்டதும் (குளிப்பு அவசியம் என்பதை) நினைவு கூறிவிட்டு திரும்பிச் சென்றனர். (எங்களைப்பார்த்து) ‘உங்கள் இடங்களிலேயே நீங்கள் இருங்கள்‘ என எங்களுக்கு கூறினர். (ஆகவே) எங்களின் பால் அவர்கள் (மீண்டும்) வெளிப்பட்டு வரும்வரை நாங்கள் நின்றவர்களாக அவர்களை எதிர்பார்த்து கொண்டிருந்தோம் அவர்கள் உறுதியாகவே குளித்துவிட்டு (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தலையிலிருந்து நீர் சொட்டச்சொட்ட (வந்து) ‘தக்பீர்‘ கூறி எங்களுக்கு தொழுகை நடத்தினர்.

‘‘(இந்த ஹதீஸை) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து கேட்டதாக அறிவிப்பவர் அபூஸலாமா பின் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹுமா

வரிசைகளை (ஸஃபுகளை) சரியாக (நேராக) ஆக்கிக்கொள்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 267

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை(க்கு நிற்கை)யில் எங்களது தோள்புஜங்களை தடவிவிட்டு, “சரியாக்கிக் கொள்ளுங்கள், வித்தியாசப் படாதீர்கள்! (வித்தியாசப்படுவீர்களேயானால்), உங்களது உள்ளங்கள் வித்தியாசப்பட்டுவிடும். உங்களில் அறிவுடையோர் தெளிவுடையோர் என்னை அடுத்து நிற்கட்டும். அதையடுத்த தகுதியிலிருப்பவர்கள்”, பிறகு அதையெடுத்த தகுதியிலிருப்பவர்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக கூறிவிட்டு அபூ மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்: “இன்று நீங்கள் கடும் வேறுபாட்டில் இருக்கிறீர்கள்” எனக்கூறினார்.

அறிவிப்பவர் : அபூ மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு

முதல் வரிசையின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 268

தொழுகையின் அழைப்பிலும், முதல் வரிசையிலும் (கிடைக்கும் சிறப்புகளை) மனிதர்கள் அறிந்து கொள்வார்களேயானால் அதன்பிறகு அதற்காக சீட்டுப் போடுவதை தவிர வேறு வழியைக் காணமாட்டார்கள், (ஆகவே) அதற்காக சீட்டுப்போடுவார்கள். முன்னால் முந்திய நேரத்தில் வருவதன் (பலனை) மக்கள் அறிந்தால் அதன்பால் முந்திவிடுவார்கள். இஷாத் தொழுகையிலும் ஸுபுஹுத் தொழுகையிலும் (கிடைக்கும் நன்மைகளை) அவர்கள் அறிவார்களேயானால், அவ்விரு தொழுகை(யை நிறைவேற்றுவதற்)க்காக நடக்க இயலாதவர்கள் அவர்களது கைகள், கால்களில், அல்லது பின்பாகத்தில் நகர்ந்தவர்களாக வருவர் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

ஹதீஸ் எண் : 269

“ஆண்களின் (ஸஃப்பு) வரிசைகளில் சிறப்புக்குரியது, அவற்றில் முதலாவதாகும். அவற்றில் கெட்டது கடைசியாகும். பெண்களின் (ஸஃப்பு) வரிசைகளில் சிறப்புடையது அவற்றில் கடைசியானதாகும். அந்த வரிசைகளில் கெட்டது முதாலவதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 ஸஃப்பு நிற்கின்ற போது முதலில் ஆடவர்களும், அதையடுத்து சிறுவர்களும், அதன்பிறகு பெண்களும் நிற்க வேண்டும் இவ்வாறுதான் நின்று வந்தார்கள். இந்த அடிப்படையில் தான் ஆடவர்களின் வரிசைகளில் முதலாவதும், பெண்கள் வரிசையில் ஆகக்கடைசியும் சிறப்புக்குரியது எனக்கூறுகிறார்கள். ஆண்கள் வரிசையின் கடைசிக்கு அப்பால் பெண்கள் வரிசையின் முதல் பகுதி தொடங்கி விடுகிறது. அங்கே தீமைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது என்ற அடிப்படையில் தான் ஆண்களின் கடைசி ஸஃப்பும் பெண்களின் முந்திய ஸஃப்பும் தீயது எனக்குறிப்பிடுகிறார்கள்.

ஒவ்வொரு தொழுகையின் போதும் ‘மிஸ்வாக்கு‘ செய்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 270

“விசுவாசிகளுக்கு சிரமம் ஏற்படும் என்று கருதியிருக்காவிடில் (ஜுஹைரின் ஹதீஸில் எனது என வந்துள்ளது) ஒவ்வொரு தொழுகையின் போதும் மிஸ்வாக்குச் செய்யு (பல்துலக்கு) மாறு அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

குறிப்பு : ஹதீஸில் கூறப்பட்ட ‘‘சிவாக்‘‘ எனும் வார்த்தை-சா(க்)க- தேய்த்தான் எனும் முலப்பதத்திலிருந்து வந்ததாகும். பல்லின் அழுக்கை நீக்குவதற்காக உபயோகப்படுத்தப்படும் குச்சியோ, அல்லது அது போன்ற சாதனங்களே ‘மிஸ்வாக்‘ ஆகும். மிஸ்வாக்குச் குச்சி என மக்களால் அறியப்பட்டிருக்கும் அக்குச்சியினால் பல்துலக்குவது விரும்பத்தக்கதாகும். அதல்லாத வேறு வகை குச்சியினால், விரலால் பல்துலக்குவது அனுமதிக்கப்பட்டதாகும். ஆக பல்துலக்குவது குறிப்பாக அக்குச்சியினால் பல் துலக்குவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் மிகக்கூடுதலான நேரங்களில் செய்யப்பட்டு வந்த இறைவனுக்கு மிக விருப்பமான சரியான ஒரு செயலாகும். ஆகவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக விரும்பி செய்த அச்செயலை நாமும் விருப்பத்துடன் செய்ய அந்த அல்லாஹ்வே நமக்கு நல்லுதவியை நல்குவானாக! ஆமீன்.

மேற்கூறப்பட்ட ஹதீஸில் ‘‘ஒவ்வொரு தொழுகையின் போதும்‘‘ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. புகாரியில் ‘ஒவ்வொரு ஒளுவின் போதும்‘ என்ற வார்த்தை பதிவாகியுள்ளது. ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பு முஸ்விமில் பதிவாகியுள்ளது. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்பில் மிஸ்வாக்கினால் பல்துலக்கிவிட்டு பிறகு உளுச்செய்தனர் என்பதும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது. இவையாவும் ஒளுவின் போது தான், என்பதை நமக்கு தெளிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆகவே ஒளுவின் போது மிஸவாக்ச் செய்தது போலவே ஒவ்வொரு தொழுகையின் போது மிஸ்வாக்ச் செய்வதை குறைகானுவதோ அதை அசுத்தமாக கருதுவதோ அல்லது அவ்வாறில்லை எனக்கூறுவதோ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடாது செய்து வந்த செயலுக்கு மாற்றமானதாகும் என்பதை வாசகர்களின் கவனத்திற்கு வைக்கிறோம்.

தொழுகையில் நுழைகின்ற போது கூறுவதின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 271

ஒரு மனிதர் வந்து வரிசையில் (ஸஃப்பில்) நுழைந்தார் அவருக்கு மூச்சு திணறியது அப்போதவர், “அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி”, எனக்கூறிவிட்டார். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்களது தொழுகையை முடித்துக் கொண்டு, சில வார்த்தைகளை உங்களில் கூறியவர் யார்? எனக்கேட்டனர் (அங்கிருந்த) கூட்டத்தினர் (யாரும்) பேசவில்லை. (ஆகவே இரண்டாவது முறையாக) அவ்வார்த்தைகளை கூறியவர் யார்? அவர் தவறாக எதையும் கூறிவிடவில்லை எனக்கூறினர். (அதைக்கேட்ட) ஒரு மனிதர் நான் தொழுகைக்கு வந்தேன், எனக்கு மூச்சு முட்டியது, ஆகவே அதை நான் கூறினேன் என்றார். அதற்கு (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: பன்னிரெண்டு மலக்குகள்-அவர்களில் யார் அதை (அல்லாஹ்வின் சந்நிதானத்தின் பால்) உயர்த்துவது? என்று போட்டியிட்டுக் கொண்டு சென்றதை நிச்சயமாக நான் கண்டேன் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

தொழுகையில் இரு கைகளையும் உயர்த்துவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 272

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்காக (தயாராகி) நின்று விட்டால் தங்களது இரு கைகளையும் இரு தோல்புஜங்களுக்கு சமமாக இருக்கும் வரை உயர்த்திவிட்டு, அதன்பிறகு ‘தக்பீர்‘ கூறுவார்கள் (அடுத்து) ‘ருகூஉ‘ செய்ய நாடுவார்களேயானால், அது போன்றே செய்வார்கள். ருஉவிலிருந்து நிமிர்வார்களேயானால் அது போன்றே செய்வார்கள். ‘ஸுஜுதி‘ லிருந்து தலையை உயர்த்த கூடிய சமயத்தில் அதைச் செய்யமாட்டார்கள் என இப்னு, உமர் ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்.

எதைக் கொண்டு தொழுகையை ஆரம்பிக்கப்படவும், முடிக்கப்படவும் வேண்டுமோ? அது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 273

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தக்பீரைக் கொண்டும் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்” என ஓதுவது கொண்டும், தொழுகையை ஆரம்பிக்கக் கூடியவர்களாக இருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ருகூஉ செய்வார்களாயின், தங்களது தலையை உயர்த்தவோ தாழ்த்தவோ மாட்டார்கள். அவ்விரு நிலைகளுக்கும் மத்தியில் (தலையை இருக்கச் செய்வார்கள்) ‘ருகூஉ‘ விலிருந்து தங்களது தலையை உயர்த்துவார்களாயின, சரியாக (நிலையில்) நிற்கும் வரை ‘ஸஜ்தா‘ செய்ய(ச் செல்ல) மாட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘ஸஜ்தா‘ விலிருந்து தங்களது தலையை உயர்த்துவார்களாயின், சரியாக அமரும் வரை (இரண்டாவது) ‘ஸஜ்தா‘வைச் செய்யமாட்டார்கள். ஒவ்வொரு இரண்டு ‘ரக் அத்‘திலும் அத்தஹிய்யாத்‘தை ஓதக்கூடியவர்களாக இருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இடது காலை விரித்து வைக்ககூடியவர்களாகவும், வலது காலை நட்டு வைக்ககூடியவர்களாகவும் இருந்தனர். ஷைத்தானின்1 இருப்பிலிருந்து தடுக்கக்கூடியவர்களாக இருந்தனர். கீறிக் கிழித்து திண்ணும் வனவிலங்குகள் போன்று ஒரு மனிதர் தனது கொடங்களை விரிப்பதை விட்டும் தடுக்கக் கூடியவர்களாக இருந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது தொழுகை(களை)யை ‘தஸ்லீமை‘ (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத் துல்லாஹி, எனக்கூறி) கொண்டு முடிக்கக் கூடியவர்களாக இருந்தனர். என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்.

குறிப்பு : பின்பகுதியை தரையில் வைத்து, இரு கெண்டை கால்களையும் நட்டவைத்து, இரு கைகளையும் முன்னால் ஊன்றிக் கொள்வது.

தொழுகையில் தக்பீர் கூறுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 274

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்காக தயராகி விட்டால், நிலையில் நிற்கின்ற சமயத்தில் ‘தக்பீர்‘ கூறுவார்கள். அதன்பிறகு ‘‘ருகூஉ‘‘ செய்யும் பொழுது ‘ஸமி அல்லாஹுலிமன் ஹமிதஹ்‘ எனக்கூறுவார்கள். அதன்பிறகு நின்ற நிலையில் ‘ரப்னா வல(க்)கல் ஹம்து‘ எனக்கூறுவார்கள். அதன்பிறகு ‘ஸஜ்தா‘விற்கு செல்லும் சமயத்தில் ‘தக்பீர்‘ கூறுவார்கள். அதன்பிறகு (ஸஜ்தாவிலிருந்து) தங்களது தலையை உயர்த்தும் சமயத்தில் ‘தக்பீர்‘ கூறுவார்கள். அதன்பிறகு (இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தும் சமயத்தில் ‘தக்பீர்‘ கூறுவார்கள். அது போன்றே தொழுகையை முடிக்கும் வரை எல்லாத் தொழுகை (ரக்அத்)களிலும் செய்வார்கள்.

இரண்டாவது ரக்அத்தில் அமர்ந்த பிறகு எழுந்திருக்கும் சமயத்தில் ‘தக்பீர்‘ கூறுவார்கள். என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்து விட்டு (அதன்பின்னர்) “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகைக்கு ஒப்பான (தொழுகை அதைப்போன்ற)தை உங்களுக்கு செய்து காட்டியவனாக இருக்கிறேன்.” (உங்களது தொழுகைகளை விட என் தொழுகை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகைக்கு மிக ஒப்பாக-அதைப்போன்றதாகவே-உள்ளது) என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

தக்பீரைக் கொண்டும், மற்ற செயல்களைக் கொண்டும், இமாமைவிட முந்திச் செல்வது தடுக்கப்பட்டதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 275

இமாமை (விட) முந்திச் செல்லாதீர்கள். (ஆகவே), அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள் “வலள்ளால்லீன்” என அவர் கூறினால் (நீங்கள்) ‘ஆமீன்‘ எனக்கூறுங்கள் அவர் ‘ருகூஉ‘ செய்தால் நீங்களும் ‘ருகூஉ‘ செய்யுங்கள் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு (மார்க்க விஷயங்களை செல்லி) கற்றுத் தரக்கூடியவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

‘மஃமும்‘ (தொழுகை நடத்தும்) இமாமைத்(பின்) தொடர்தல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 276

குதிரையிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஒரு முறை) விழுந்து விட்டார்கள். அவர்களது வலது பாதத்தின் தோலில் அடிப்பட்டு கீரல் ஏற்பட்டு விட்டது. அவர்களை நலம் விசாரிக்க நுழைந்தோம். அப்போது தொழுகை நேரம் வந்துவிட்டது. அமர்ந்தவாரே (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அவர்களுக்கு பின்னால் நாங்களும் அமர்ந்தவாரே தொழுதோம். தொழுகையை அவர்கள் முடித்துக்கொண்டு “இமாம் ஆக்க(நியமிக்க)ப்பட்டது, அவரை பின் தொடரப்படுவதற்காகத்தான். ஆகவே, அவர் ‘தக்பீர்‘ கூறினால் நீங்களும் ‘தக்பீர்‘ கூறுங்கள். அவர் ‘ஸஜ்தா‘ செய்தால் நீங்களும் ‘ஸஜ்தா‘ செய்யுங்கள். அவர் (ருகூவிலிருந்து) நிமிர்ந்தால் நீங்களும் நிமிருங்கள். ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், என அவர் கூறினால் நீங்கள் ‘ரப்பனாவல(க்)கல் ஹம்து‘ எனக்கூறுங்கள். ‘அவர் அமர்ந்து தொழுதால் நீங்களனைவரும் அமர்ந்தே தொழுங்கள்‘ எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

இருகைகளில் ஒரு கையை மறு கையின் மீது தொழுகையில் வைப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 277

தொழுகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுழைந்த (ஆரம்பித்த) போது தங்களது இருகரங்களையும் உயர்த்திக் ‘தக்பீர்‘ கூறினர். (ஹம்மாம் என்பவர், “தங்களது இரு காதுகளுக்கு நேராக” எனக்கூறுகிறார்) அதன்பிறகு தங்களது துணியைக்கொண்டு போர்த்திக் கொண்டனர். அதன்பிறகு வலக்கரத்தை இடக்கரத்தின் மீது வைத்தனர். ‘ருகூஉ‘ செய்ய அவர்கள் நாடிய போது தங்களது இரு கரங்களையும் துணிக்குள்ளிலிருந்து வெளிப்படுத்தி, பிறகு அவ்விரண்டையும் அவர்கள் உயர்த்தி, அதன்பிறகு தக்பீர் கூறி ‘ருகூஉ‘ செய்தனர். ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், எனக்கூறிய போது தங்களது இருகரங்களையும் உயர்த்தினர். (அதையடுத்து) ‘ஸஜ்தா‘ செய்தபொழுது தங்களது இருமுன்கைகளுக்கு மத்தியில் ஸஜ்தா செய்தனர். (இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் செய்ய- வாயில் பின் ஹுஜ்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்டதாக அறிவிக்கிறார்கள்.

தக்பீருக்கும், கிராஅத்துக்கும் இடையில் சொல்லப்படு(துஆ கூறு)வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 278

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள், “வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய வில்லதீஃபதரஸ்ஸமா வா(த்)தி வல் அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரி(க்)கின்”, “இன்னஸலாத்தீ, வநுஸுக்கீ, வமஹ்யாய, வமமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரிக்கலஹு வபிதாலிக்க உமிர்த்து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாஇலாஹ இல்லா அன்(த்)த, அன்(த்)த ரப்பீ, வஅன அப்து(க்)க ளலம்(த்)து நஃபீஸீ வஃதரஃப்த்து பிதன்பீ பஃபிர்லீ துனூபீ, ஜமீஅன், இன்னஹு லாயஃபித்துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லாயஹ்தீ லி அஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த வஸ்ரிஃப் அன்னீ ஸய்யி அஹா லாயஸ்ரிஃப் அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்(த்)த லப்பை(க்)க வஸஅதை(க்)க வல்கைரு குல்லுஹு ஃபீ யதை(க்)க, வஷ்ஷர்ரு லைச இலை(க்)க அன பி(க்)க வஇலை(க்)க தபாரக்த வதஆலை(த்)த அஸ்தஃபிரு(க்)க வஅ(த்)தூபு இலைக்க” எனக்கூறுவார்கள்.

அடுத்து ருகூஉ செய்வார்களோயானால் “அல்லஹும்ம ல(க்)க ர(க்)கஃத்து வபி(க்)க ஆமன(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து, கஷஅல(க்)க ஸம்ஈ, வபஸரீ, வமுக்கீ வஅள்மீ வஅஸபீ” எனக்கூறுவார்கள். (ருகூவிலிருந்து) உயருவார்களானால் “அல்லஹும்ம ரப்பனா ல(க்)கல்ஹம்து, மில்அஸ்ஸமாவா(த்)தி வமில்அல்அர்ளி, வமில்அ மாபைனஹுமா, வமில்அ மா ஷிஃ(த்)த மின் ஷைஇன் பஅது‘‘ எனக்கூறுவார்கள். அடுத்து ‘ஸஜ்தா‘ செய்வார்களேயானால் ‘‘அல்லாஹும்ம ல(க்)க ஸஜத்து, வபி(க்)க ஆமன்(த்)து, வல(க்)க அஸ்லம்(த்)து, ஸஜத வஜ்ஹீலில்லதீ கலக்கஹு வஸவ்வரஹு, வஷக்க ஷம்அஹு, வபஸரஹு, தபாரக்கல்லாஹு, அஹ்ஸனுல் காலிகீன்‘‘ அதன்பிறகு அத்தஹியாத்திற்கும் ஸலாம் கொடுப்பதற்கும் மத்தியில் அல்லாஹும்மஃபிர்லீ மாகத்தம்(த்)து வமா அக்கர்த்து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து வமா அஸ்ரப்(த்)து வமா அன்(த்)த அஃலமு பிஹீ மின்னீ, அன்(த்)தல் முகத்திமு, வஅன்(த்)தல் முஅக்கிரு, லாஇலாஹ இல்லா அன்(த்)த‘‘ எனக்கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அலிபின் அபூதாலிப் ரளியல்லாஹு அன்ஹு

இனியொரு அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை ஆரம்பித்தால் ‘தக்பீர்‘ கூறிவிட்டு அதன்பிறகு ‘‘வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய‘‘ என தொடங்கி இறுதிவரைக் கூறுவார்கள் என வந்துள்ளது.

குறிப்பு : தக்பீருக்குப் பிறகு தொழுகையை ஆரம்பிக்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருசில துஆக்களை ஓதியுள்ளார்கள். அதில் இதுவும் ஒன்று. இந்த நீண்ட துஆவை இரவுத் தொழுகையில் ஓதினார்கள் என்று முஸ்லிமில் பதிவாகியுள்ளது. ‘இரவுத்தொழுகை‘ எனும் வார்த்தை ஃபர்ளல்லாத தொழுகையில் இதை ஓதினார்கள் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்‘ என்பதை உரக்கக் கூறுவதை விட்டுவிடுதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 279

அல்லாஹ்வின் தூதர் அவர்களுடன் அபூபக்ரு, உமர், உஸ்மான் (ரளியல்லாஹு அன்ஹும் அஜ்மஈன்) ஆகியோருடனும் நான் (அனஸ்) தொழுதிருக்கிறேன். அவர்களில் எவரiயும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று (உரத்த சப்தமிட்டு) ஓத நான் கேட்டதில்லை என என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 280

எங்களுக்கு மத்தியில் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்த போது உட்கார்ந்து இருந்தநிலையில் தூங்கிவிழித்து அதன்பிறகு மலர்ந்த முகத்துடன் தங்களது தலையை உயர்த்தினர். (அப்போது) உங்களைச் சிரிக்க வைத்தது எது என நாங்கள் கேட்டோம். அப்போது அவர்கள் கொஞ்சம் முன்பு என்மீது ஒரு அத்தியாயம் இறக்கிவைக்கப்பட்டது எனக்கூறி “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் இன்னா அஃதைனா கல்கவ்தர் பஸல்லி லிரப்பிக்க வன்ஹர் இன்னஷானி அ(க்)கஹுவல் அப்தர்” என்பதை ஓதினர்.

அதன்பிறகு ‘கவ்தர்‘ என்றால் என்ன என உங்களுக்குத் தெரியுமா? எனக்கேட்டனர். அல்லாஹ்வும் அவனது ரசூலும் மிகத்தெரிந்தவர்கள் எனக் கூறினோம். “நிச்சயமாக அது ஒரு ஆறு.” கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய எனது ரட்சகன் அதை எனக்கு வாக்களித்துள்ளான். அதன்மீது (அதில்) நிறைய நன்மைகள் உண்டு. அது ஒரு நீர் தடாகம் என்று உம்மத்தவர்கள் மறுமைநாளின் போது அதன்பால் வருவர். அதன் (நீரை அறுந்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும்) பாத்திரங்கள் வானத்தின் நட்சத்திரங்களின் எண்ணிக்கை கொண்டதாகும். ஒரு அடியான் அதிலிருந்து ஈர்க்கப்படுவான் (விரட்டப்படுவான்). அப்போது நான் என் இரட்சகா! நிச்சயமாக அவர் என் உம்மத்திலுள்ளவர் எனக்கூறுவேன். அதற்கு அவர், உமக்குப்பிறகு மார்க்கத்தில் என்ன புதுமைகளை அவர் உண்டுபண்ணினார் என உமக்குத் தெரியாது என்று (அல்லாஹ்) கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :

உலக காரியங்களில் பித்அத்து (புதியவை)களாவன ஆகாய விமானத்தையும், ரயிலையும், காரையும் பல நவீன மாதிரி தொழும்பள்ளிகள் கட்டுவதையும், அவற்றில் மிக அழகான விலை உயர்ந்த விரிப்புகள், கம்பளங்கள் விரிக்கப்படுவதையெல்லாம் உதாரணமாகக் காட்டி இதை ஏற்கின்ற நாம், இவைகளையெல்லாம் மார்க்க ரீதியில் அனுமதிக்கின்ற நாம், வணக்க வழிபாடுகளில் நாம் விரும்புகின்ற (நம் முன்னோர்களில்) யாரை நாம் பெரியவராகக் கருதுகிறோமோ அவர்கள் காட்டியதாகக் கூறி அவர்கள் செய்த, அல்லது செய்யாத தொழுகைகளையும், நோன்புகளையும் ஏன் ஏற்கக்கூடாது, முந்தியதை ஏற்கின்றவர்கள் பிந்தியதை மறுப்பதேன்? எனக்கேட்கின்றனர். இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகள் என எத்தனை உண்டோ அவை அனைத்துக்கும் அடிப்படை முன்மாதிரியாகக் கொண்டு நாம் பின்பற்றி நடக்க உரியவர்கள் நமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாத்திரமே. “நிச்சயமாக நேர்வழியில் மிகச் சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்வழியே” என்ற அந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றுகிணங்க, அவர்களை மாத்திரமே பின்பற்றுவதை விடுத்து மார்க்கத்தில் மனிதர்களால் வணக்கமாகக் கருதி தொழுகை என்றும், நோன்பு என்றும் திணிக்கப்பட்டவைகளை கண்டிப்பாகத் தவிர்த்து தொழுகை வகைகளில், அவர்கள் காட்டிச்சென்ற தொழுகைகளையும் நோன்பு வகைகளில் அவர்கள் காட்டிச்சென்ற நோன்பு வகைகளையும், ஸலவாத்து வகையில் அவர்கள் கற்றுத்தந்த ஸலவாத்துகளையும் ஏற்று நடந்து, நமது வணக்க வகைகளை அங்கீகரிக்கப்பட்டதாகவும் ஆக்கிக்கொண்டு, நாளை மஹ்ஷர் மைதானத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நீர்தடாகத்தில் நீரருந்தும் பெரும் பேற்றினை பெற்றிட நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹு நல்லுதவி செய்வானாக! ஆமீன். வணக்கங்களில் பிதஅத்களைத் தவிர்த்தால் மட்டுமே அப்பாக்கியம் கிடைக்கும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. நாளை மறுமையில் அதிலிருந்து நீரருந்தவிடாது தடுக்கப்பட்டு துரத்தப்படும் நிலைக்கு ஆளாகுவதிலிருந்து வல்ல அல்லாஹ் என்னையும் உங்களையும் காப்பாற்றுவானாக! ஆமீன்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்