Social Icons

Tuesday 16 October 2012

ஸஹீஹ் முஸ்லிம் 12

 தொழுகை பற்றிய நூல்

மஸ்ஜிதுகளின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 241

“உயர்வான அல்லாஹ்வுக்கு ஊர்களில் மிக விருப்பமான(இடமான)து அதன் பள்ளிகளாகும். உயர்வான அல்லாஹ்விற்கு ஊர்களில் மிக வெறுப்பானது அதன் கடைத்தெருக்களாகும்” என நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

மஸ்ஜித் (தொழுமிடங்)களை நோக்கி அதிக தூரம்(நடந்து) செல்வதின் சிறப்பு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 242

அன்சார்களில் ஒருவரின் வீடு மதினாவில் அதிக தூரத்தில் இருந்தது. அவர் எல்லா நேரத்தொழுகையையும் (தவற விட்டு விடாது) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுபவராக இருந்தார் அதனால் அவர் சிரமப்படுவதாக நாங்கள் கருதி வருத்தப்பட்டோம் என (அறிவிப்பாளர்) கூறுகிறார்.

ஆகவே இன்னவரே! ஓர் கழுதையை நீர் வாங்கி (அதன் மீது நீர் சவாரி செய்து வந்தால்) சுடுமணலின் சூட்டிலிருந்து உனது கால்களையும் இன்னும் பூமியில் ஊர்ந்து திரியும் புழு, பூச்சி, விஷஜந்துக்களின் தீமையிலிருந்து உன்னையும் காப்பாற்றிக் கொள்வாய் என (அறிவிப்பாளராகிய) நான் கூறினேன்.

அதற்கு அவர் நபி ; ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுக்கும் என் வீட்டிற்கும் கயிறுகளால் கட்டப்பட்டிருக்க வேண்டுமென (அதாவது) அருகில் என் வீடு இருக்க வேண்டுமென நான் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! விரும்பவில்லை எனக்கூறினார். இதனால் பெரும் மனக்கஷ்டத்திற்கு உள்ளான நான் முடிவாக இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து கூறினேன். அவரைப்பற்றி நான் கூறியதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அழைத்து இதைப் போன்றே கூறினார்கள். (அப்போது அந்த மனிதர்) தனது அடிச்சுவடுகளின் மூலம் நற்கூலியை ஆதரவு வைப்பதாக உறுதியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார். அதற்கவர்கள் நிச்சயமாக நீ கணக்கிட்டது உனக்கு உண்டு எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபை பின் கஅபு ரளியல்லாஹு அன்ஹு

தொழுகைக்காக நடப்பதன் மூலம் தவறுகள் அழிக்கப்படுகிறது அதன்மூலம் தரங்கள் உயாத்தப்படுகிறது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 243

யார் (ஒருவர்) அவரது வீட்டில் ஒளுச்செய்து விட்டு அதன்பிறகு அல்லாஹ்வின் இல்லங்களில் (பள்ளிகளில்) ஒரு (பள்ளியின்) இல்லத்தின்பால் அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்டவைகளில் ஒரு கடமை(யான தொழுகை)யை நிறைவேற்றச் செல்வாராயின், அவரது (இரு)1 எட்டுகளில் ஒன்று பாவத்தை அழிக்கின்றது. மற்றொன்று அவரது தரத்தை உயர்த்துகின்றது என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 முஸ்லிமில் பிறிதொரு அறிவிப்பில் “இரு எட்டுகள்” எனப் பதிவாகியுள்ளது.

துரிதத்தைக் தவிர்த்து அமைதியாக தொழுகைக்கு வருவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 244

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுது கொண்டிருக்கையில் (அவர்கள்) சில சப்தத்தை செவியுற்றனர். தொழுகையை முடித்துக்கொண்டு உங்களது விஷயம் என்ன? (ஏன் சப்தமிட்டீர்கள்) எனக்கேட்டார்கள். (அதற்கவர்கள்) தொழுகைக்கு அவசரமாக வந்தோம் என்றனர். அதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வாறு செய்யாதீர்கள். தொழுகைக்காக நீங்கள் வந்தால் அவசியம் அமைதியாக வாருங்கள். எதைப் பெற்றுக் கொண்டீர்களோ அதை (இமாமுடன் சேர்த்து) தொழுங்கள். எது உங்களுக்கு முந்திவிட்டதோ அதை (தொடர்ந்து) நிறைவு செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு

பெண்கள் பள்ளிகளுக்கு புறப்பட்டு செல்வது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 245

உங்களில் (பெண்களில்) யாரேனும் பள்ளிக்கு (தொழுக) வந்தால் அவள் நறுமணத்தை உபயோகிக்க வேண்டாம் என எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என ஜைனப் அத்தகஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

பெண்கள் வெளியேறுவதற்கு தடை பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 246

நிச்சயமாக பெண்களின் இன்றைய நிலையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காண்பார்களாயின் பள்ளிக்கு வர பனூ இஸ்ரவேலர்களின் பெண்கள் தடுக்கப்பட்டது போன்று அவர்களுக்கு தடை விதித்திருப்பார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதாக அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் அறிவிக்கிறார்கள்.

பனூ இஸ்ரவேலர்களின் பெண்கள் பள்ளிக்கு செல்வதிலிருந்து தடுக்கப்பட்டிருந்தார்களா? என அம்ராவிடம் நான் கேட்டேன். ‘ஆம்‘ எனக்கூறினார்கள்.

‘பள்ளியில் நுழைகின்ற போது கூறவேண்டியது‘ பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 247

உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால், ‘அல்லாஹும்மஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதி(க்)க‘1 என்றும் அவர் வெளியேறினால் ‘அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின்ஃபள்லி(க்)க‘2 என்றும் கூறவும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுமைத் ரளியல்லாஹு அன்ஹு அல்லது அபூஉஸைத் ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1 யா அல்லாஹ்! உனது அருள்வாயில்களை எனக்கு திறந்தருள்வாயாக. 2 நிச்சயமாக உனது பேரருளை உன்னிடம் நான் கேட்கிறேன்.

பள்ளியினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்ளவும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 248

அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு ஆகிய நான் பள்ளியில் நுழைந்த பொழுது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ அமருமுன் இரண்டு ரக்அத்துகள் தொழுவதிலிருந்து உன்னை தடுத்தது எது? எனக்கேட்டார்கள். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! உங்களையும் ஜனங்களையும் அமர்ந்திருக்க கண்டேன் (அதனால் நானும் அமர்ந்து கொண்டேன்) என நான் கூறினேன்.

“உங்களில் யாரேனும் பள்ளியினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துகள் தொழும்வரை அவர் அமர வேண்டாம்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு

பாங்கு சொல்லப்பட்டபின் பள்ளியிலிருந்து வெளியேறிச் செல்வது தடுக்கப்பட்டதாகும் என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 249

நாங்கள் அபூஹுரைராவுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம். அப்போது பாங்கு கூறுபவர் பாங்கு கூறிவிட்டார். (அதன்பிறகு) பள்ளியிலிருந்து ஒரு மனிதர் எழுந்து நடக்கின்றார். அவர் நடந்து செல்லும்போது, பள்ளியிலிருந்து அவர் வெளியேறும் வரை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பார்வை அவரை தொடர்ந்தது. “அப்போது தெரிந்து கொள்! இந்த மனிதர் அபூல் காஸிம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்துவிட்டார்” என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஷ்ஷஃதாஉ ரளியல்லாஹு அன்ஹு

பள்ளியில் துப்பியதற்கு பரிகாரம் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 250

“பள்ளியில் துப்புவது தவறாகும். அதற்கு பரிகாரம் அதை மறைப்பதாகும்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு

பூண்டு சாப்பிடுவது வெறுக்கப்பட்டதென்றும் அதை உண்ட பின் பள்ளிக்கு வருவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 251

இந்த மரத்(செடியி)திலிருந்து யார் (பூண்டு) சாப்பிட்டாரோ? அவர் பள்ளிக்கு வரவேண்டாம் என கைபர் சண்டையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு மா

வெங்காயம், பூண்டு, வெங்காய இலை ஆகியவற்றை சாப்பிட்டவர் பள்ளியை தவிர்ப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 252

(உங்களில்) எவர் பூண்டு அல்லது வெங்காயத்தை சாப்பிட்டாரோ அவர் நம்மைத் தவிர்க்கவும். அவரது வீட்டிலேயே அவர் இருக்கவும் என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

கீரை வகைகள் உள்ள காய்கறி நிறைந்த ஒரு பாத்திரம் அவர்களிடம் நிச்சயமாக கொண்டுவரப்பட்டது. அதில் ஒரு விதமான வாடையை உணர்ந்தார்கள். (இது என்ன எனக்) கேட்டார்கள். அதிலிருக்கும் கீரை வகைகளைப்பற்றி அவர்களுக்கு சொல்லப்பட்டது. (அதற்கவர்கள்) தனது தோழர்களில் சிலருக்கு அதை சமீபமாக்குங்கள் எனக்கூறினர். அடுத்து அதைப்பார்த்துவிட்டு அதை சாப்பிடுவதை வெறுத்தனர். நீர் அதை உண்ணுவீராக. நிச்சயமாக நான், நீர் பேசாதவனோடு (அல்லாஹ்வுடன்) பேசுகிறேன் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா

வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றின் நாற்றம் யாரிடம் உள்ளதோ அவரை பள்ளியிலிருந்து வெளியேற்றுவது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 253

நிச்சயமாக உமர் பின் கத்தாபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஜும்ஆ நாளன்று குத்பா பிரசங்கம் நிகழ்த்தினார்கள். (அப்போது) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு கூறினார்கள். மேலும் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும் நினைவு கூறினார்கள். (பின்) “நிச்சயமாக நான், ஒரு சேவல் என்னை மூன்று முறை கொத்திவிட்டது போன்று (கனவு) கண்டேன்”, என் தவனை ஆஜராகப் போகிறது (அதாவது மரணம் சம்பவிக்க இருக்கிறது) என்பதைத் தவிர வேறு எதையும் நிச்சயமாக (இதன் மூலம்) நான் உணரவில்லை என்று கூறினார்கள். சில கூட்டத்தவர்கள் நிச்சயமாக நான் எனக்கொரு பிரதிநிதியை ஆக்கவேண்டுமென எனக்குக் கட்டளையிடுகிறார்கள். நிச்சயமாக மகத்துவமுடையவனும், மிகைத்தவனுமான அல்லாஹ், அவனது மார்க்கத்தையோ, அவனது பிரதிநிதிதுவத்தையோ, எதனைக்கொண்டு தனது நபியை அனுப்பிவைத்தானோ அ(ந்த மார்கத்)தையோ வீணாக்கிவிடக் கூடியவனல்லன். என் விஷயத்தில் ஏதேனும் ஒரு காரியம் (மரணம்) துரிதமாக ஏற்பட்டு விடுமேயானால், கிலாபத் என்பது எவர்களைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பொருத்தப்பட்ட நிலையில் இறப்பெய்தி உள்ளார்களோ அத்தகைய இந்த ஆறு நபர்களுக்கு மத்தியில் கலந்தாலோசித்துச் செய்தலாகும்.

நிச்சயமாக சில கூட்டத்தவர்கள் இந்தக்காரியத்தில் (பிரதிநிதியை தேர்தெடுக்கும் விஷயத்தில்) குறை கூறுகின்றனர் என்பதை நான் அறிவேன். நான் அவர்களை இஸ்லாத்திற்காக இந்த என் கையினால் அடித்திருக்கிறேன். அவர்கள் அதையே செய்வார்களானால் அவர்கள் அல்லாஹ்வின் எதிரிகளும், நிராகரிக்கக் கூடியவர்களும், கூடுதலாக வழி கெட்டவர்களுமாவார். அதன் பிறகு கலாலாவை விட மிக முக்கியமான ஒரு விஷயத்தை எனக்குப்பிறகு நிச்சயமாக நான் விட்டுவைக்கவில்லை. எந்த ஒரு காரியத்திலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ‘கலாலா‘ விஷயத்தில் கேட்டதைக் காட்டிலும் வேறு எதையும் திரும்பத்திரும்ப நான் கேட்டதில்லை. (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இவ்விஷயத்தில் எவ்வளவு கடுமை காட்டினார்களோ அதே போன்று வேறு எந்த வஸ்துவிலும் (விஷயத்திலும்) என்னிடம் அவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளவில்லை. (எதுவரையெனில்) எனது நெஞ்சில் தங்களது விரலினால் குத்தும் அளவுக்கு.

உமரே! ‘அந்நிஸா‘ அத்தியாத்தின் கடையிசிலிருக்கும் ‘ஸைப்‘ ஆயத்து வசனம் உமக்குப் போதாதா? எனக்கூறினர். நிச்சயமாக நான் ஜீவித்திருப்பேனேயானால் குர்ஆனை ஓதத் தெரிந்தவரும், குர்ஆனை ஓதத் தெரியாதவரும் எதை வைத்து தீர்ப்பு வழங்குவாரோ அதே தீர்பைக்கொண்டு அதில் நான் தீர்ப்பு வழங்குவேன். அதன்பிறகு, இரட்சகா! நிச்சயமாக நான் நகரங்களின் தலைவர்களின் மீது உன்னை நான் சாட்சி ஆக்குகிறேன். நிச்சயமாக நான் அவர்களுக்கு அந்தத்தலைவர்களை அனுப்பியதெல்லாம், அவர்களுக்கு நீதி வழங்குவதற்காகத்தான். மனிதர்களுக்கு அவர்களின் மார்க்கத்தையும், அவர்களது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டியும், போர்களத்தில் கிடைத்த பொருள்களை அவர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவும், அவர்களுக்கு மத்தியில் உள்ள காரியங்களில் ஏற்பட்ட சிக்கலை (எழுத்து மூலம் அல்லது ஆள் மூலம்) உயர்த்தி அதில் (தீர்ப்பு) கிடைக்கச் செய்வதற்குமே தான்.

அதன்பிறகு ஜனங்களே! நிச்சயமாக நீங்கள் இரண்டு செடிகளை. உண்ணுகின்றீர்கள். அவ்விரண்டையும் கெட்டதாகவே தவிர நான் காணவில்லை. (அது) இந்த வெங்காயமும், பூண்டும் தான் எனக் கூறினார்கள். நிச்சயமாக நான், “அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பள்ளியில் (எந்த) மனிதரிடத்திலாவது இவ்விரண்டின் வாடையை கண்டுவிட்டால், அவரை பகீஃவின்பால் வெளியேற்றக் கட்டளையிடுவதை” கண்டேன். அவ்விரண்டையும் யாரேனும் உண்டால் (முதலில் சமைத்து) அ(தன் நாற்றத்)தை சாகடிக்க(நீக்க)வும் என்றனர்.

அறிவிப்பவர் : மிஃதான் பின் அபீதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு மா

காணாமல் போனவற்றைப்பற்றி, பள்ளியில் தேடுவது தடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 254

யாராவது ஒரு மனிதர் காணாமல் போனதைப் பள்ளியில் தேடக்கேட்டால் அதை அல்லாஹ் உனக்குத் திருப்பிக் கொடுக்காமல் இருப்பானாக! என கேள்விப்பட்டவர் கூறவும். நிச்சயமாக இதற்காக பள்ளிகள் கட்டப்படவில்லை என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

மண்ணறைகளை பள்ளிகளாக ஆக்கப்படுவது தடுக்கப்பட்டது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 255

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (மரணம் இறக்கி வைக்கப்பட்ட போது) அவர்கள் தமது முகத்தின் மீதிருந்த அடையாளமுள்ள போர்வையை (அகற்றி) தூக்கி எறிய ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு மனக்கவலை ஏற்பட்டால் அப்போர்வையை முகத்திலிருந்து நீக்கிவிட்டு “அது அவ்வாறு தான். யூத கிறிஸ்துவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அவர்களின் நபிமார்களின் கப்ருகளைத் தொழுமிடங்களாக ஆக்கிக் கொண்டனர்” எனக்கூறி (இதன் மூலம்) அவர்கள் செய்த செயல் போன்றதை (சமூகத்தவர்கட்கு) எச்சரிக்கை செய்கிறார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு

கப்ருகளின் மீது பள்ளிகள் கட்டுவது தடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 256

நிச்சயமாக உம்மு ஹபீபாவும், உம்முஸலமா ரளியல்லாஹு அன்ஹுமா இருவரும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உருவப்படம் நிறைந்த கிறிஸ்துவ கோயில் ஒன்றை அபிஸீனியாவில் பார்த்துவிட்டு வந்ததைப்பற்றி கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

“நிச்சயமாக அவர்கள். அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் இருந்து, அவர் இறப்பெய்திவிட்டால். அவரது மண்ணறையின் மீது பள்ளியைக் கட்டிவிட்டு அந்த உருவங்களை அதிலே வரைந்து விடுவர். அவர்கள் தான் மறுமை நாளின் போது கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹ்விடம் சிருஷ்டிகளிலேயே கெட்டவர்களாவர்கள்” எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

பூமியை எனக்கு தொழுமிடமாகவும் சுத்தமானதாகவும் (சுத்தம் செய்ய உபயோக்கிப்படும் சாதனமாகவும்) ஆக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 257

“(மற்ற) நபிமார்களை விட ஆறு விஷயங்களைக் கொண்டு நான் சிறப்பிக்கப்படடுள்ளேன். வாக்கியங்களின் சுருக்கங்களை நான் கொடுக்கப்பட்டுள்ளேன். பயத்தைக் கொண்டு உதவியளிக்கப் பட்டுள்ளேன். போர்களத்தில் கிடைத்த பொருட்கள் எனக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளது. பூமியை எனக்கு சுத்தமானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. சிருஷ்டிகள் அனைவரின் பாலும் நான் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன். என் மூலம் நபிமார்கள் இறுதியாக்கப்பட்டார்கள்” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு

தொழுபவர் எதைமறைப்பாக வைத்துக்கொள்வாரோ அதன் அளவு பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 258

உங்களில் யாரேனும் தொழுகைக்குத் தயாரானால் வாகனத்தின் கடைசியில் இருப்பதைப் போன்று அவருக்கு முன்பு இருக்குமேயானால் அதை நிச்சயமாக அவர் மறைப்பாக ஆக்கிக்கொள்வர். வாகனத்தின் கடைசியிலிருப்பதைப்1 போன்று அவருக்கு முன்னால் மறைப்பாக ஆக்கப்படாவிட்டால் அவருக்கு முன்னால் கழுதை, பெண், கருப்பு நிறமுள்ள நாய் ஆகியவை அவரது தொழுகையை கெடுத்து விடுவர். அபூதர்ரே! சுpவப்பு நாய், மஞ்சள் நாய் ஆகியவற்றை விட கருப்பு நாயின் சமாச்சாரம் என்ன? (ஏன் அவ்வாறு சொல்கிறீர்கள்?) என நான் கேட்டேன். (அதற்கவர்) நீ கேட்டது போன்றே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் “கறுப்பு நாய் ஷைத்தானாகும் எனக் கூறினார்கள்” என்றனர்.

அறிவிப்பவர் : அபூதர்ரு ரளியல்லாஹு அன்ஹு

குறிப்பு : 1. ஒட்டகத்தின் மீது அமரும் போது பிடித்துக் கொள்வதற்காக ஒரு குச்சி பின்பகுதியில் கட்டப்பட்டிருக்கும். அதை தான் இங்கு குறிப்பிடப்படுகிறது. அதை அளவை காண்பிக்கும் நிமித்தம் கூறுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்க.

தொழுபவருக்கு முன்பு நடந்து செல்வோரின் செயலில் இருந்து அப்பெருங்குற்றத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள தொழுபவர் தனக்கு முன் ஒரு மறைப்பை வைத்துக் கொள்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டயாமாக்கி உள்ளனர்.

மறைப்பிற்கு சமீபமாக இருப்பது பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 259

“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகின்ற இடத்திற்கும், சுவற்றுக்கும் மத்தியில் ஒரு ஆடு நடந்து செல்லும் அளவிற்கு இடைவெளி இருந்தது” என ஸஹ்ல் அஸ்ஸாயிதீ ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்.

தொழுபவருக்கு முன்னால் குறுக்கே படுத்துக் கொள்ளுதல் பற்றிய பாடம்.

ஹதீஸ் எண் : 260

(தொழுகையை நாய், கழுதை, பெண் ஆகியோர் (முன் செல்வதால்) கெடுத்து விடுகின்றனர் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூறப்பட்டது) அதற்கவர்கள் “எங்களை கழுதைக்கும் நாய்க்கும் ஒப்பாக்கிவிட்டீர்கள்” எனக்கூறிவிட்டு அல்லாஹ்வின் மீது சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், கிப்லாவிற்கும் இடையில் நான் கட்டிலின் மீது குறுக்க படுத்திருந்த1 நிலையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொழுக நிச்சயமாக நான் கண்டிருக்கிறேன்‘”

“எனக்கு ஏதும் தேவை தோன்றும் போது, அதன்பிறகு நான் அங்கு அமர்ந்திருப்பதையும், அதனால் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் சங்டப்படுத்தி விடுவதையும், விட்டு வெறுத்து (அந்த) கட்டிலின் இரு கால்களுக்கு மத்தியில் நுழைந்து வெளியேறி விடுவேன்” என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா

குறிப்பு : 1 தொழுபவருக்கு முன்பு ஆண் பெண் படுத்திருந்தால் அது தொழுகைக்கு எவ்வித இடறும் செய்வதில்லை என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்