Social Icons

Friday 28 September 2012

43.கடன்

பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2385
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் கலந்து கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘உன் ஒட்டகத்தைப் பற்றி என்ன கருதுகிறாய்? அதை நீ விற்பாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம் (விற்று விடுகிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே நபி(ஸல்) அவர்களுக்கே அதை விற்று விட்டேன். நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தவுடன் மறுநாள் நான் அவர்களிடம் ஒட்டகத்துடன் சென்றேன். அவர்கள் அதன் விலையை எனக்குக் கொடுத்து விட்டார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2386
அஃமஷ்(ரஹ்) அறிவித்தார். நாங்கள் இப்ராஹீம் நகயீ(ரஹ்) அவர்களிடம் ‘ஸலம்’ முறையில் (பிறகு பணம் தருவதாகக் கூறி) பொருளை வாங்கும்போது அடைமானம் வைப்பது குறித்துப் பேசினோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அஸ்வத்(ரஹ்) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதனிடம் குறிப்பிட்ட தவணை(யில் பணம் தருவதாகக்) கூறி உணவு தானியத்தை வாங்கினார்கள். அவனிடம் (அதற்காக) இரும்புக் கவசம் ஒன்றை அடைமானம் வைத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2387
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2388
அபூ தர்(ரலி) அறிவித்தார். நான் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் உஹுது மலையைப் பார்த்தபோது, ‘இந்த மலை எனக்காகத் தங்கமாக மாற்றப்பட்டு, அதிலிருந்து ஒரேயொரு தீனாரும் கூட என்னிடம் மூன்று நாள்களுக்கு மேல் தங்கியிருப்பதை நான் விரும்ப மாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் எடுத்து வைக்கிற தீனாரைத் தவிர’ என்று கூறினார்கள். பிறகு, ‘(உலகில் செல்வம்) அதிகமானவர்கள்தாம் (மறுமையில் நற்பலன்) குறைந்தவர்கள்; ‘(என்) செல்வத்தை இப்படியெல்லாம் செலவு செய்யுங்கள்’ என்று கூறிய(துடன் அவ்வாறே செலவும் செய்த)வனைத் தவிர. (இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஷிஹாப்(ரஹ்), ‘இப்படியெல்லாம்’ என்பதற்கு விளக்கமாக முன் பக்கமாகவும், வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சைகை செய்தார்கள். ஆனால், ‘அப்படிப்பட்டவர்கள் (எண்ணிக்கையில்) குறைவானவர்களே” என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ‘நீ இங்கேயே இரு” என்று சொல்லி, சிறிது தூரம் முன்னால் சென்றிருப்பார்கள். அதற்குள் நபி(ஸல்) அவர்களுடன் யாரோ உரையாடுவதைப் போன்று) ஏதோ ஒரு குரலைக் கேட்டேன். ஆனால், நபி(ஸல்) அவர்கள், ‘நான் திரும்பி வரும் வரை நீ இங்கேயே இரு” என்று கூறியதும் என் நினைவுக்கு வந்தது. நபி(ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் கேட்ட குரல் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(நீங்கள் அந்தக் குரலைச்) செவியுற்றீர்களா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்” என்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, ‘உன் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காமல் (வாழ்ந்து) மரணமடைந்து விடுகிறவர் சொர்க்கம் புகுவார்” என்று கூறினார்கள். நான், ‘இப்படி இப்படியெல்லாம் செய்த வருமா (விபச்சாரக் குற்றமும், திருட்டுக் குற்றமும் புரிந்தவருமா) சொர்க்கம் புகுவார்?’ என்று கேட்டேன்.
ஜிப்ரீல்(அலை) அவர்கள், ‘ஆம், (அவரும் சொர்க்கம் புகுவார்)” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2389
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உஹுது மலை அளவிற்கு என்னிடம் தங்கம் இருந்தாலும் அதிலிருந்து சிறிது என்னிடம் (எஞ்சி) இருக்கும் நிலையில் என் மீது மூன்று நாள்கள் கழிவது கூட எனக்கு மகிழ்ச்சி அளிக்காது; கடனை அடைப்பதற்காக நான் (அதிலிருந்து) எடுத்து வைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2390
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம், அவர்களுக்குத் தான் கொடுத்த (ஒட்டகத்)தைக் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். எனவே, நபித் தோழர்கள் அவரை தண்டிக்க விரும்பினார்கள், அப்போது நபி(ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி, ‘(அவரை தண்டிக்க வேண்டாம்;) விட்டு விடுங்கள்; ஏனெனில், ஒருவர் தனக்குக் கடன் தர வேண்டியவரிடம் கடுமையாகச் பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடமே கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.
நபித்தோழர்கள், ‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களிடம் இருக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்து விடுங்கள். ஏனெனில், நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2391

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒருவர் மரணித்து விட்டார். அவரிடம் (கப்ரில் வைத்து), ‘நீ (உலகில் என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து) வந்தாய்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரின் கடனைத் தள்ளுபடி செய்து) வந்தேன்” என்று கூறினார். (அவரின் இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. என ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2392
ஒருவர் தன்னிடம் நபி(ஸல்) அவர்கள் கடனாகப் பெற்றிருந்த ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்க வந்தார். நபி(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை) நோக்கி, ‘அவருக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அதற்குத் தோழர்கள், ‘அவருக்கு நீங்கள் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதை விட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது” என்று கூறினர். இதைக் கேட்ட அம்மனிதர், ‘(என் உரிமையை) நிறைவாக எனக்கு அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிக்கட்டும்” என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவருக்கு (வயது அதிகமான) அந்த ஒட்டகத்தையே கொடுத்து விடுங்கள். ஏனெனில், (தான் வாங்கிய கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துகிறவரே மக்களில் சிறந்தவராவார்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2393
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (தாம் கடனாக வாங்கிய) ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (ஒரு முறை) அம்மனிதர் தன் ஒட்டகத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்குக் கொடுங்கள்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். தோழர்கள் அந்த மனிதருக்குச் சேர வேண்டிய சிறு வயதுடைய ஒட்டகத்தைத் தேடினார்கள். ஆனால், அதிக வயதுடைய ஒட்டகம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. நபி(ஸல்) அவர்கள், ‘(அதையே) அவருக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். அந்த மனிதர், ‘நீங்கள் எனக்கு நிறைவாக அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பானாக!” என்றார். நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் சிறந்தவர், தான் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2394
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். ”முற்பகல் நேரத்தில் சென்றேன்” என்று ஜாபிர்(ரலி) கூறினார் என நினைக்கிறேன்” என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான மிஸ்அர்(ரஹ்) கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!” என்று கூறினார்கள். என்னிடம் வாங்கிய ஒரு கடனை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (நான் தொழுது முடித்த பின்) எனக்குத் தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தியதுடன் எனக்கு அதிகமாகவும் கொடுத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2395
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். என் தந்தையார் உஹுதுப் போரின்போது, அவரின் மீது கடன் இருந்த நிலையில் (ஷஹீதாகக்) கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி(ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம் பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக் கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்து விடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். எனவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம் பழங்களை நபி(ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை. மாறாக, ‘நாம் உன்னிடம் காலையில் வருவோம்” என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் பரக்கத்துக்காக (அருள் வளத்திற்காக) பிரார்த்தித்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்தினேன். (முழுக் கடனையும் தீர்த்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதமாகி விட்டன.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2396
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். என் தந்தையார் (உஹுதுப் போரில் ஷஹீதாக) மரணித்துவிட்டார்கள்; ஒரு யூதருக்கு அவர் (திருப்பிச் செலுத்த வேண்டிய (கடனாக) முப்பது வஸக்கு (கனி)களை என் பொறுப்பில்விட்டுவிட்டுச் சென்றார்கள். அதைத் திருப்பிச் செலுத்த எனக்கு அவகாசம் தர மறுத்துவிட்டார். எனக்காக (கால அவகாசம் கேட்டு) அந்த யூதரிடம் பரிந்துரை செய்யும்படி அல்லாஹ்வின் தூதரிடம் நான் கேட்டுக் கொண்டேன். இறைத்தூதர்(ஸல்), அந்த யூதரிடம் வந்து அவருக்குச் சேரவேண்டிய கடனுக்குப் பகரமாக என் பேரீச்சந் தோப்பின் கனிகளை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்கள். அந்த யூதர் (அவ்வாறு எடுத்துக் கொள்ள) மறுத்துவிட்டார்.
எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் புகுந்து அதன் மரங்களுக்கிடையே நடந்தார்கள். பிறகு என்னிடம், ‘அவருக்குப் பறித்துக் கொடு. அவருக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடு” என்று கூறினார்கள். நான் இறைத்தூதர்(ஸல்) திரும்பிச் சென்ற பிறகு, பேரீச்சங் கனிகளைப் பறித்து அந்த யூதருக்கு முப்பது வஸக்குகளையும் (நிறைவாகக்) கொடுத்து விட்டேன். அதற்குப் பிறகும் எனக்குப் பதினேழு வஸக்குகள் (அளவுக்குப் பேரீச்சங் கனிகள்) மீதமாயின. பின்னர், நான் நடந்ததைத் தெரிவிப்பதற்காக அல்லாஹ்வின் தூதரிடம் வந்தபோது, அவர்கள் அஸர் தொழுகை தொழுது கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் (ஸலாம் கொடுத்துத்) திரும்பியதும் பேரீச்சங் கனிகளின் மீதுப்பட்டு விட்டதை அவர்களிடம் நான் தெரிவித்தேன். நபி(ஸல்) அவர்கள், ‘இச்செய்தியை கத்தாபின் குமாரரிடம் (உமரிடம்) தெரிவி” என்று கூறினார்கள். எனவே, நான் உமர்(ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்ததும் உமர்(ரலி), ‘இறைத்தூதர் அந்தப் பேரீச்ச மரங்களுக்கிடையே நடந்து சென்றபோதே, அவற்றில் பரக்கத்து (அருள்வளம்) வழங்கப்படும் என்று அறிந்து கொண்டேன்” என்று கூறினார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2397
ஆயிஷா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் பிரார்த்திக்கும்போது, ‘இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்பத் தேடுவதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், ‘மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2398
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒருவர் (மரணமடைந்து) ஒரு செல்வத்தைவிட்டுச் சென்றால் அது அவரின் வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தன்னைத் தவிர வேறு திக்கற்ற) தன் மனiவி மக்களைவிட்டுச் சென்றால் அவர்களைப் பராமரிப்பது நம்முடைய பொறுப்பாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2400
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப் போடுவது அநியாயமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2401
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது, அவர் சற்று கடுமையான வார்த்தைகளைப் பேசினார். இதைக் கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டுவிடுங்கள் பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு” என்று கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2402
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தன் பொருளை அப்படியே (கொடுத்தபோது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக் கொள்ள மற்ற கடன்காரர்களை விட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2403
ஜாபிர்(ரலி) அறிவித்தார். ஒருவர், தான் இறந்த பிறகு தன்னுடைய ஓர் அடிமை விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தார். நபி(ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), ‘இவரை யார் என்னிடத்திலிருந்து வாங்கிக் கொள்வது?’ என்று கேட்டார்கள். நுஐம் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவ்வடிமையை வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமைக்கான விலையை வாங்கி அந்த அடிமையின் எஜமானிடம் கொடுத்துவிட்டார்கள்.
ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்தும்படி கூறி கடன் கொடுப்பதில் தவறில்லை; கடனாளி கடன் கொடுத்தவருக்கு அவர் கொடுதத திர்ஹம்களை விட உயர்தரமானதைக் கொடுத்தாலும் சரியே! ஆனால் கடன்காரர், அவ்விதம் திருப்பிச் செலுத்தும்போது உயர் தரமானதைத் தரவேண்டுமென்று (கடனாளிக்கு) நிபந்தனையிட்டுக் கூடாது” என்று இப்னு உமர்(ரலி) கூறினார்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2404
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூர்ந்தார்கள். அவர், தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் கடன் கேட்டார். அந்த மனிதரும் ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்தி விடவேண்டும் என்னும் நிபந்தனையுடன் அவருக்குக் கடன் கொடுத்தார்
(இது முன்பே கிதாபுல் கஅபாலாவில் சென்றுவிட்டது.)
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2405
ஜாபிர்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) அப்துல்லாஹ் அவர்கள் (உஹுதுப் போரில் ஷஹீதாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (மரணிக்கும் போது) பல குழந்தை குட்டிகளையும் கடனையும் விட்டுச் சென்றார்கள். எனவே, (அந்தக் கடனுக்கு நான் பொறுப்பாளியான காரணத்தால்) என் தந்தையின் கடனிலிருந்து சிறிதளவு தள்ளுபடி செய்து (குறைத்து) விடும்படி கடன்காரர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். அவர்கள் (சிறிதளவும் தள்ளுபடி செய்ய) மறுத்து விட்டார்கள். எனவே, நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று கடன் காரர்களிடம் எனக்காகப் பரிந்துரை செய்யும்படி கேட்டேன். (நபியவர்கள் அவ்வாறே பரிந்துரை செய்தும்) அவர்கள் (சிறிதளவும் தள்ளுபடி செய்ய) மறுத்துவிட்டனர். எனவே, நபி(ஸல்) அவர்கள், ‘உங்கள் பேரீச்சங் கனிகளின் ஒவ்வொரு வகையையும் தனித் தனியாகப் பிரித்து வையுங்கள். ‘இத்க் இப்னு ஸைத்’ என்னும் உயர் ரகப் பேரீச்சம் பழத்தை ஒரு பக்கமும் ‘லீன்’ என்னும் தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழத்தை ஒரு பக்கமும் ‘அஜ்வா’ என்னும் சிறப்பு ரகப் பேரீச்சம் பழத்தை இன்னொரு பக்கமும் தனித்தனியாக எடுத்து வையுங்கள். பின்னர் கடன்காரர்களை வரவழையுங்கள். பிறகு, நான் உங்களிடம் வருகிறேன்” என்றார்கள். நான் அவர்கள் கூறியபடியே செய்தேன். பிறகு நபி(ஸல்) அவர்கள் வந்து பேரீச்ச குவியல்களின் அருகே அமர்ந்து கொண்டு (கடன்காரர்) ஒவ்வொருவருக்கும் அளந்து கொடுக்கலானார்கள். இறுதியில், நிறைவாக (அனைவருக்கும்) கொடுத்து முடித்தார்கள். பேரீச்சம் பழக்குவியல் யாருடைய கரமும் படாததைப் போன்று முன் பிருந்ததைப் போன்றே (சற்றும் குறையாமல்) அப்படியே இருந்தது.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2406
ஜாபிர்(ரலி) அறிவித்தார். (பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் இறைக்கும்) எங்கள் ஒட்டகம் ஒன்றின் மீது வாகனித்தவனாக நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நான் கலந்து கொண்டேன். (திரும்பி வருகையில்) திடீரென ஒட்டகம் களைப்படைந்து என்னுடன் பின்தங்கிவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அதன் பின்பகுதியில் அறைந்து, ‘இதை எனக்கு நீ விற்றுவிடு. மதீனா சென்று சேரும்வரை இதன் மீது சவாரி செய்து நீ வரலாம்” என்று கூறினார்கள். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது, ‘இறைத்தூதர் அவர்களே! சமீபத்தில்தான் திருமணம் நடந்தது” என்று கூறி, நான் என் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘யாரை மணம் முடித்தாய்? கன்னிப் பெண்ணையா? வாழ்ந்த அனுபவமுள்ள (விதவையான அல்லது விவாகரத்து பெற்ற) பெண்ணையா?’ என்று கேட்டார்கள். நான், ‘வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணையே மணமுடித்தேன். (ஏனெனில்,) என் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் (உஹுதுப் போரில் ஷஹீதாகக்) கொல்லப்பட்டுவிட்டார்கள்; (என் சகோதரிகளான) சிறு பெண் குழந்தைகளைவிட்டு சிட்டுச் சென்றார்கள். அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காகவும் ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே நான் மணமுடித்துக் கொண்டேன்” என்று கூறினேன்.
பிறகு நபி(ஸல்) அவர்கள், ‘உன் வீட்டாரிடம் போ!” என்று கூறினார்கள். நான் வீட்டிற்குச் சென்று என் தாய்மாமனிடம் ஒட்டகத்தை விற்றுவிட்டதைக் கூறினேன். அதற்கு அவர்கள் என்னைக் குறை கூறினார்கள். எனவே, நான் ஒட்டகம் களைத்து விட, நபி(ஸல்) அவர்கள் அதைப் (பின்பக்கத்தில்) அறைந்ததையும் கூறினேன். நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தபோது நான் காலை நேரத்தில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒட்டகத்தின் விலையையும் எனக்குக் கொடுத்து, ஒட்டகத்தையும் (எனக்கே) கொடுத்துவிட்டார்கள். மேலும், மக்களுக்குப் போர்ச் செல்வங்களை வழங்கும்போது அதில் என்னுடைய பங்கையும் (எனக்குக்) கொடுத்தார்கள்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2407
இப்னு உமர்(ரலி) அறிவித்தார். ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் வியாபாரத்தில் (அடிக்கடி) ஏமாற்றப்பட்டு விடுகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நீ வியாபாரம் செய்யும்போது (ஒரு பொருளை வாங்கும்போது அல்லது விற்கும் போது) ‘மோசடி கூடாது’ என்று சொல்” என்றார்கள். அதற்குப் பிறகு, அந்த மனிதர் அவ்வாறே கூறிக் கொண்டிருந்தார்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2408
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” (பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான். என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
பாகம் 3, அத்தியாயம் 43, எண் 2409
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளாராவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.
“இவையனைத்தையும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன்” என்று கூறிவிட்டு இப்னு உமர்(ரலி) மேலும் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்கும் பொறுப்பாளன் ஆவான். அது குறித்தும் அவன் விசாரிக்கப்படுவான். எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் (ஏதேனும் ஒரு விஷயத்திற்குப்) பொறுப்பானவர்களே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” என்றும் கூறினார்கள் என நான் நினைக்கிறேன்.

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்